Published:Updated:

ஒமிக்ரான்... “இது கொரோனா வைரஸின் முடிவுகாலமாகக்கூட இருக்கலாம்!”

ஒமிக்ரான்
பிரீமியம் ஸ்டோரி
ஒமிக்ரான்

- நம்பிக்கையூட்டும் ஆராய்ச்சியாளர்கள்...

ஒமிக்ரான்... “இது கொரோனா வைரஸின் முடிவுகாலமாகக்கூட இருக்கலாம்!”

- நம்பிக்கையூட்டும் ஆராய்ச்சியாளர்கள்...

Published:Updated:
ஒமிக்ரான்
பிரீமியம் ஸ்டோரி
ஒமிக்ரான்

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்று, கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்குக் சற்றே ஓய்வளித்திருக்கிறது. பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதால், குறைந்த அளவிலேயே தினசரி பாதிப்பு எண்ணிக்கை இருக்கிறது. இந்த நிலையில்தான், `ஒமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா உலக நாடுகளை மிரட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த ஒமிக்ரான் வைரஸால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கடந்த நவம்பர் 24-ம் தேதி அன்று, `ஒமிக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் (B.1.1.529) தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வைரஸ், ஒரு முறை அல்லது இரு முறை உருமாறினால் பெரிய அளவில் பிரச்னை இல்லை. ஆனால், ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் சுமார் 50 முறை உருமாறும் தன்மை கொண்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நம்மிடமிருக்கும் தடுப்பூசிகள், கொரோனா வைரஸின் ‘ஸ்பைக் புரோட்டீன்’ பகுதியைக் குறிவைத்தே செயல்படுகின்றன. இந்த ஒமிக்ரான், அந்த ஸ்பைக் புரோட்டீன் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 30 முறை உருமாறும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒமிக்ரான்... “இது கொரோனா வைரஸின் முடிவுகாலமாகக்கூட இருக்கலாம்!”

இதையடுத்து, `ஒமிக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறது உலக சுகாதார நிறுவனம். `பழைய கொரோனா வைரஸ்களைவிட ஒமிக்ரான் வீரியமானது. பல மடங்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தும்’ என்ற வதந்திகள் பரவிவரும் நிலையில் நம்பிக்கை அளிக்கும்விதமாக, ``தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர் களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. அறிவியல் ஆதாரமில்லாமல் பரவிவரும் வதந்திகள் அனைத்தும் பொய்’’ என்று மறுத்துவருகிறார்கள் தொற்றுநோய் நிபுணர்கள்.

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானாவில் பரவத் தொடங்கிய ஒமிக்ரான், ஒரே வாரத்தில் ஹாங்காங், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, செக் குடியரசு, இஸ்ரேல், இத்தாலி, ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து நமீபியா, ஜிம்பாப்வே உட்பட ஒன்பது தென்னாப்பிரிக்கப் பிராந்திய நாடுகளுடனான விமானப் பயணங்களை ரத்து செய்தது அமெரிக்கா. தொடர்ந்து பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் இதேபோல பயணத்தடைகளை விதித்தன. இந்தியா, டிசம்பர் 1-ம் தேதி முதல் தென்னாப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் தனிமைப்படுத்துதல் விதிகளை அமல்படுத்தியிருக்கிறது. புதிய வகை வைரஸைக் கண்டறிய இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

``பெல்ஜியத்தில் கண்டறியப்பட்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸுக்கும், தென்னாப் பிரிக்காவில் கண்டறியப் பட்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதனால், இந்தப் புதிய பரவலுக்குத் தென்னாப்பிரிக்கா மட்டுமே காரணமில்லை” என்கிறார்கள் தென்னாப்பிரிக்கத் தலைவர்கள். ``தொற்று கண்டறியப்பட்ட ஒரே வாரத்தில் ஆராய்ச்சி செய்து புதிய வகை கொரோனா பற்றி உலக சுகாதார நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்ததற்காக தென்னாப் பிரிக்கா, போட்ஸ்வானா நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், பூஸ்டர் டோஸ்களுக்காகத் தடுப்பூசிகளைச் சேமித்து வைத்துக்கொள்கின்றன. பல சர்வதேச அமைப்புகள் வலியுறுத்திய பிறகும், ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்க வளர்ந்த நாடுகள் மறுத்துவிட்டன. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, ஏழை நாடுகளில் கொரோனா பலமுறை உருமாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஒமிக்ரான் பரவலுக்குக் காரணமே வளர்ந்த நாடுகள்தான் என்றும் சொல்லப்படுகிறது.

ஷாஹித் ஜமீல்
ஷாஹித் ஜமீல்

இந்தியாவின் பிரபல வைரலாஜிஸ்ட் ஷாஹித் ஜமீல், ``இந்தியாவில், டெல்டா வகை கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால், பெரும்பாலான இந்தியர்களுக்கு எதிர்ப்பாற்றல் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 67 சதவிகித இந்தியர்களுக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்திருக்கிறது. எதிர்ப்பாற்றல் கொண்டவர்களை ஒமிக்ரான் உள்ளிட்ட புது வகை கொரோனா வைரஸ்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. நம்மிடம் இருக்கும் தடுப்பூசிகள், ஒமிக்ரானுக்கு எதிராக ஓரளவு செயல்படக்கூடியவையே’’ என்று கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிஃபித் (Griffith) பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர் ஹாமிஷ் மெக்கல்லம், ``தென்னாப்பிரிக்கா விலிருந்து ஒமிக்ரான் வைரஸ் பற்றி வந்திருக்கும் முதற்கட்ட தகவல்களை வைத்துப் பார்க்கும்போது அது லேசான பாதிப்புகளையே ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது. எனவே, இது கொரோனா வைரஸின் முடிவுகாலமாகக்கூட இருக்கலாம். பொதுவாக, ஒரு வைரஸ் மனித உடலில் குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தினால், அந்த வைரஸுக்கு முடிவுகாலம் வந்துவிட்டது என்றே கருதப்படுகிறது’’ என்று பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஹாமிஷ் மெக்கல்லம்
ஹாமிஷ் மெக்கல்லம்

``முதல் அலை, இரண்டாம் அலைகளில் கொரோனா வைரஸ் பற்றிக் கிடைத்த அனுபவங்களும், தடுப்பூசிகளும் நம்மிடம் இருக்கின்றன. அதனால், மூன்றாம் அலை வரும் முன்பே தடுத்துவிடலாம். ஒமிக்ரான் பெரிய அளவில் பரவினால்கூட, இரண்டாம் அலைபோல அதிக அளவு உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தாது. எனவே, ஒமிக்ரான் குறித்து அச்சப்பட வேண்டாம்... அதே நேரத்தில் அலட்சியமும் கொள்ள வேண்டாம். கொரோனா விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் ஒமிக்ரான் வைரஸிடமிருந்து எளிதாகத் தப்பிக்கலாம்’’ என்கிறார் இந்தியத் தொற்றுநோய் நிபுணர்கள்!

ஆம், அச்சம் வேண்டாம் மக்களே... அலட்சியமும் தவிர்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism