Published:Updated:

கமிஷனுக்காகவே கஷ்டப்பட்டு தீட்டிய திட்டங்கள்! - விழிபிதுங்கும் கோவை மக்கள்...

காந்திபுரம் மேம்பாலம்
பிரீமியம் ஸ்டோரி
காந்திபுரம் மேம்பாலம்

நெரிசல் அதிகம் இருக்கும் சத்தி சாலையில் இப்போதுவரை மேம்பாலம் கொண்டுவரப்படவில்லை.

கமிஷனுக்காகவே கஷ்டப்பட்டு தீட்டிய திட்டங்கள்! - விழிபிதுங்கும் கோவை மக்கள்...

நெரிசல் அதிகம் இருக்கும் சத்தி சாலையில் இப்போதுவரை மேம்பாலம் கொண்டுவரப்படவில்லை.

Published:Updated:
காந்திபுரம் மேம்பாலம்
பிரீமியம் ஸ்டோரி
காந்திபுரம் மேம்பாலம்

தடுக்கி விழுந்தால் பாலம் என்கிறரீதியில், கோவை மாவட்டத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சகட்டுமேனிக்கு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. ஏற்கெனவே ஐந்து பாலங்கள் இருந்த நிலையில், கடந்த ஆட்சியில் 15 புதிய பாலங்கள் கட்டவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஏழு பாலங்களுக்கான கட்டுமானப் பணிகள் தொடரும் நிலையில், தி.மு.க ஆட்சியில் மேலும் மூன்று பாலங்கள் கட்டும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. பெரு முதலாளிகளின் நலனுக்காகவும், அரசியல்வாதிகளின் கமிஷனுக்காகவுமே பல திட்டங்கள் அவசர கதியில் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது.

திட்டங்களில் குளறுபடி ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி. தி.மு.க ஆட்சிக்கு வந்தும் அது ஓயவில்லை. சிங்காநல்லூர், காளப்பட்டி, சாய்பாபா காலனி பகுதிகளில் மேம்பாலம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் துடியலூர், சரவணம்பட்டி, கணபதி டெக்ஸ்டூல், சுந்தராபுரம் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. இது போதாதென்று மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகளும் நடக்கின்றன.

அவினாசி சாலை மேம்பாலம்
அவினாசி சாலை மேம்பாலம்
திருச்சி சாலை மேம்பாலம்
திருச்சி சாலை மேம்பாலம்

கோவை வழக்கறிஞர் லோகநாதன், “நெரிசல் அதிகம் இருக்கும் சத்தி சாலையில் இப்போதுவரை மேம்பாலம் கொண்டுவரப்படவில்லை. சாலைகள் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தாலே போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க முடியும். பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. சுற்றுவட்டச் சாலைகளை அமைத்தாலும், நெரிசல் குறையும். அதையும் செய்வதில்லை. தொழில்நுட்பம் அதிகமுள்ள மெட்ரோ ரயில், மாநகரப் பகுதிகளுக்கு பயனளிக்கக்கூடிய திட்டம். ஆனால், கோவையில் மினி பஸ் செல்லாத கிராமப் பகுதியில்கூட மெட்ரோ பாதையை அமைத்துவருகின்றனர். இதனால் யாருக்கு என்ன பயன்... கிராமப் பகுதி வருவாய் ஆவணங்களில், இப்போதே சர்வே எண்களில் `மெட்ரோ’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஆத்திர அவசரத்துக்கு நிலத்தை விற்க முடியாத சூழல் நிலவுகிறது. திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டு வராமல், ஆட்சியாளர்கள் பயன்பெறுவதற்காகவே குறுகிய சிந்தனையுடன் செயல்படுகின்றனர்” என்றார்.

மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், “எல்லா திட்டங்களுக்கும் கமிஷனே அடிப்படையாக இருக்கிறது. கமிஷன் போக, மீதித் தொகையில் எப்படி திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும்... மேம்பாலம் கட்டும் ஒப்பந்தத்தை, அனுபவம்மிக்க நல்ல நிறுவனங்களிடம் ஒப்படைத்து தாமதப்படுத்தாமல் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும். மெட்ரோ திட்டத்தைக் காரணம் காட்டி, மற்ற விஷயங்களைத் தவிர்க்க முடியாதுதான். அதேநேரத்தில், மெட்ரோ திட்டத்தின் நிலை குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அடுத்தடுத்து அமையவிருக்கும் பாலங்களால் மெட்ரோ திட்டம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. புதிதாகப் பாலம் கட்டிவிட்டு, மெட்ரோவுக்காக இடிக்கிற நிலையும் வந்துவிடக் கூடாது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி, மக்களிடம் கருத்து கேட்டுச் செயல்படுத்தினால்தான் அது எல்லா வகையிலும் சரியானதாக இருக்கும்” என்றார்.

காந்திபுரம் மேம்பாலம்
காந்திபுரம் மேம்பாலம்
உக்கடம் மேம்பாலம்
உக்கடம் மேம்பாலம்

“கோவையைப் பொறுத்தவரை ஆவாரம்பாளையம், பீளமேடு, எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மேம்பாலங்களில் நிலம் கையகப்படுத்துதலில் பிரச்னை நிலவுகிறது. வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக மேம்பாலப் பணிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தவே ரூ.1,000 கோடி தேவைப்படும். அவ்வளவு தொகைக்கு எங்கே செல்வார்கள்... மக்களிடம் கருத்தே கேட்காமல் திட்டங்களை நிறைவேற்றுவது எப்போதும் ஆபத்துதான். கோவைக்கு ‘மெட்ரோ லைட்’ திட்டம் கொண்டுவருவதாகக் கூறுகின்றனர். சென்னை மெட்ரோ திட்டத்த்ில் ஒரே நேரத்தில் 30,000 பேர் பயணிக்கலாம். கோவையில், ஒரே நேரத்தில் சுமார் 8,000 பேர் போகும் வகையில் திட்டமிட்டுவருகின்றனர். கோவைவாசிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், தினசரி வந்துசெல்பவர்கள் எனக் கணக்கிட்டால் மக்கள்தொகை 50 லட்சத்துக்கு மேல் செல்லும். 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அப்படியிருக்கையில் மெட்ரோ லைட் திட்டம் எப்படி முழுப் பயன் தரும்?

கோவைக்குப் பாலங்களைவிட உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம், எய்ம்ஸ் போன்ற உயர் மருத்துவமனைகள்தான் அவசியம். சென்னை, பெங்களூருக்கு அடுத்து ஐடி நிறுவனங்கள் கோவையில் வளர்ந்துவருகின்றன. அதிலும் அரசு கவனம் செலுத்துவதில்லை. அதிலெல்லாம் லாபம் கிடைக்காது என்பதால் பல ஆயிரக்கணக்கான கோடிகளை தங்களுக்குப் பயனளிக்கும் மேம்பாலம் போன்ற திட்டங்களில் போடுகின்றனர். இனியாவது மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நிலுவையிலுள்ள பாலங்கள் எப்போது முடியும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டோம். “திருச்சி சாலை, கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் முழுமையாக முடியவில்லை. இன்னும் சின்னச் சின்ன வேலைகள் உள்ளன. புதிதாக அமையவுள்ள மேம்பாலங்களுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அதனால் ஜூலை மாதத்தில் அதற்கான பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

லோகநாதன், ஈஸ்வரன், சமீரன்
லோகநாதன், ஈஸ்வரன், சமீரன்

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், “உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகளை 2023, ஜூலை மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். பணிகள் நடைபெறும் இடத்தில் போக்குவரத்துக்கான மாற்றுப் பாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தைக் கையகப்படுத்தி, அந்த வழியிலுள்ள கட்டமைப்புகளை அகற்றி வாகனங்களுக்கு அகலமான பாதை ஏற்படுத்தப்படும். புதிய திட்டங்களை உருவாக்கும்போது, உரிய கவனம் மற்றும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரானவுடன் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும். போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து நிலம் கையகப்படுத்தப்படும்” என்றார்.

கமிஷனை மட்டுமல்லாமல், மக்கள் நலனைப் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள் ஆட்சியாளர்களே..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism