Published:Updated:

மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!

மொய்விருந்து
பிரீமியம் ஸ்டோரி
மொய்விருந்து

பெரும்பாலும் தனிநபர்கள் நடத்தும் மொய்விருந்துகளில் சைவ விருந்து. நான்கைந்து பேர் சேர்ந்து நடத்தினால் அசைவ விருந்து நடக்கும். இந்த மொய்விருந்தில் போடப்படும் சைவ, அசைவ உணவுகளுக்கு இணையேயில்லை.

மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!

பெரும்பாலும் தனிநபர்கள் நடத்தும் மொய்விருந்துகளில் சைவ விருந்து. நான்கைந்து பேர் சேர்ந்து நடத்தினால் அசைவ விருந்து நடக்கும். இந்த மொய்விருந்தில் போடப்படும் சைவ, அசைவ உணவுகளுக்கு இணையேயில்லை.

Published:Updated:
மொய்விருந்து
பிரீமியம் ஸ்டோரி
மொய்விருந்து

``என்னாது... பத்துக் கோடியா?’’ என்று திகைத்துப் போய்விட்டார்கள் கேள்விப்பட்டவர்கள். போதாக்குறைக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வேறு அறிக்கைவிட, கடந்த வாரம் தமிழகத்தில் பேசுபொருளானது, பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் ரூ.10 கோடி மொய் வாங்கிய விவகாரம்.

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையான பேராவூரணி, நெடுவாசல், ஆலங்குடி, பட்டுக்கோட்டை வட்டாரங்களில் ஆடி, ஆவணி மாதங்களில் மொய்விருந்து விழா நடக்கும். கொரோனாவால் இரண்டாண்டுகள் இல்லாமல்போயிருந்த மொய்விருந்துகள் இப்போது வேறு வேறு பெயர்களில் களைகட்டியுள்ளன. ஆடி, ஆவணி என்றில்லாமல் வருடம் முழுக்க நடத்தப்படும் மொய்விருந்துகளால் சம்சாரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

அசோக்குமார்
அசோக்குமார்

அதென்ன மொய்விருந்து..? இப்படிக் கேட்டால், ‘‘சின்னக்கவுண்டர் படத்தில் சுகன்யா நடத்துமே, விஜயகாந்த்கூட விருந்து சாப்பிட்டு இலைக்குக்கீழே பணம் வைத்துவிட்டுச் செல்வாரே... அதுதானே’’ என்பார்கள் சிலர். அது அதீதச் சித்திரிப்பு. மொய்விருந்து என்பது மிகப்பெரும் பொருளாதாரப் பரிவர்த்தனை. ஒருகாலத்தில் உறவுகளுக்குள் நடந்துவந்த இந்த மொய்க் கலாசாரம் இன்று ஜாதி, மதம் கடந்து பந்தமாக விரிவடைந்திருக்கிறது.

‘‘நல்லது, திட்டமிட்டு நடக்கும். கெட்டது திடீர்னு நடந்திடும். அந்தமாதிரி நேரத்துல பணமில்லாமத் தவிக்கக்கூடாதுங்கிறதுக்காக உறவுக்காரங்க தங்களால முடிந்த பண உதவியைச் செய்வாங்க. கொடுத்தவர் வீட்டுல அப்படி துக்கம் நடந்தா, உதவி வாங்கினவர் அவரால ஆனதைச் செய்வார். அப்படி ஆரம்பிச்சது, சுபகாரியங்கள்ல மொய் போடுற வழக்கமா மாறுச்சு. அது அப்படியே வளர்ந்து தனியா மொய்விருந்துன்னே நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. பத்து வருஷம் முன்னாடி வரைக்கும் இது நல்லவிதமாத்தான் போச்சு. புள்ளைங்க படிப்பு, கல்யாணம், தொழில் தொடங்குறதுன்னு வட்டியில்லாக் கடன் மாதிரி முதலீடா உதவுச்சு. இன்னைக்குத் தொழில்மாதிரி ஆயிடுச்சு’’ என்கிறார் பேராவூரணியைச் சேர்ந்த மாமுண்டி.

மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!
மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!
மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!

முன்பெல்லாம் ஒருவர் மட்டுமே மொய்விருந்து நடத்துவார். இன்று பத்துப் பேர், இருபது பேர் சேர்ந்து நடத்துகிறார்கள். நாள் குறித்ததும் பத்திரிகை அடிப்பார்கள். ‘விருந்துண்டு மொய் பெய்து விழாவைச் சிறப்பிக்க வேண்டும்' என்று அச்சிடப்பட்ட பத்திரிகையை தங்களுக்கு வரவு செலவு இருக்கும் எல்லாக் குடும்பங்களுக்கும் வழங்குவார்கள். பெரும்பாலும் வீடுகளுக்குள் வீசிச்செல்வார்கள்.

பெரும்பாலும் தனிநபர்கள் நடத்தும் மொய்விருந்துகளில் சைவ விருந்து. நான்கைந்து பேர் சேர்ந்து நடத்தினால் அசைவ விருந்து நடக்கும். இந்த மொய்விருந்தில் போடப்படும் சைவ, அசைவ உணவுகளுக்கு இணையேயில்லை. மொய்விருந்து நடத்துவதற்கென்று இந்தப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான விழா அரங்கங்கள் உண்டு. அவற்றைக் கடந்தாலே கறிக்குழம்பு வாசம் உள்ளே இழுக்கும். அரங்கத்தின் முகப்பில் மொய்ச்சட்டிகளையும் நோட்டுகளையும் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் மொய்யை எழுதிவிட்டு விருந்து சாப்பிடச் செல்வார்கள். விருந்தில் இடம் பிடிப்பது பெரும்பாடு. கறி பரிமாறுவதில் பிரச்னைகள் ஏற்பட்டதால் இப்போதெல்லாம் கப்புக் கறிதான். ஒரே சீராக எல்லோருக்கும் கப்புகளை கவிழ்த்துச் செல்வார்கள்.

மொய் செய்தவர், எத்தனை ஆண்டுகள் கழித்து விழா நடத்துகிறாரோ அதற்கேற்றவாறு ‘புதுநடை' என்ற பெயரில் அதிகமாகப் போடவேண்டும் என எழுதப்படாத விதி உண்டு.

மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!
மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!

‘‘80-களில்தான் இந்தத் தொழில்முறை மொய் விருந்து விழாக்கள் தொடங்குச்சு. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருத்தர் மொய்விருந்து நடத்தலாம். அதற்கு முன்னாடி நடத்தினா போதிய அளவுக்கு மொய் வராது. அவர்மேல இருக்கிற நம்பகத்தன்மையும் போயிடும். கிட்டத்தட்ட இது கடன்மாதிரிதான். வங்கிகள்ல கடன் வாங்கணும்னா சொத்து வேணும். மொய்விருந்துக்கு நம்பிக்கையும் நாணயமும் போதும். மொய்விருந்தால பல குடும்பங்கள் நல்லா வந்திருக்கு. நிறைய பேர் வந்த மொய்ப்பணத்தை வச்சுத் தொழில் தொடங்கி செட்டிலாகியிருக்காங்க. அப்பல்லாம் ஒருத்தர் ரெண்டு பேர் சேர்ந்து விழா நடத்துவாங்க. இப்போ 30 பேர் வரைக்கும் சேர்ந்து நடத்துறாங்க. அதுதான் சிக்கலா மாறியிருக்கு. 30 பேரோடவும் ஒருத்தருக்கு வரவு செலவு இருந்தா அவர் பாடு திண்டாட்டம்’’ என்கிறார் ஆலங்குடி தமிழரசன்.

மொய்விருந்து விழாக்களில் விருந்து முடியும்முன்பாக அரங்கத்துக்குப் போய் மொய்யை எழுதிவிட வேண்டும். சற்று தாமதித்தாலும் ‘உடன் பின் வரவு' என்று தலைப்பிட்டு அதற்குக் கீழே எழுதிவிடுவார்கள். அது மிகப்பெரிய கௌரவக் குறைச்சல். ஒரே நேரத்தில் நிறைய பேர் சேர்ந்து விழா நடத்துவதால் பலரால் மொய் செய்யமுடிவதில்லை. ஒருநாள் பார்த்துவிட்டு மறுநாளே அவர்கள் வீட்டுக்கு மொய்ப்பணம் கேட்டு ஆள் அனுப்பிவிடுவார்கள். ஓரிருமுறைக்குள் பணத்தைக் கொடுக்காவிட்டால் அசிங்கப்படுத்துவதும் உண்டு. இதற்கு அஞ்சியே பலர் ‘போட்ட மொய் மட்டும் போடவும்' என்று வாங்கிக்கொண்டு இதிலிருந்து வெளியேறிவிட்டனர். கடன் வாங்கி மொய் செய்பவர்கள் பெரும் சுழலுக்குள் சிக்கிவிடுகிறார்கள். சிலர் தற்கொலை வரைக்கும் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!
மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!

பத்தாண்டுகளுக்கு முன்புவரை குறைந்தபட்ச மொய் என்பது 50 ரூபாயாக இருந்தது. இப்போது 500 ரூபாய். அதிகபட்சம் 1 லட்சம் வரைக்கும் மொய் செய்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு லட்சம் மொய் வாங்கினால் பெரிய விஷயம். இப்போது ஒரு கோடியெல்லாம் சர்வசாதாரணம். உச்சமாக எம்.எல்.ஏ அசோக்குமார் 10 கோடி ரூபாய் மொய் வாங்கியிருக்கிறார்.

சிலநாள்களுக்கு முன் 2.5 கோடி ரூபாய் மொய் வாங்கிய நெடுவாசலைச் சேர்ந்த பார்த்திபனிடம் பேசினோம். ‘‘தாத்தா காலத்துல இருந்து எங்களுக்கு மொய் வரவு செலவு இருக்கு. பத்து வருஷம் முன்னாலதான் நான் இதுக்குள்ள வந்தேன். சென்னையில ஒரு எம்.என்.சி கம்பெனியில வேலை செய்றேன். சம்பாதிக்கிற பணத்தை ஏதோ ஒரு வகையா சேமிக்கலாமேன்னு யோசனையிலதான் மொய் செய்ய ஆரம்பிச்சேன். 2017-ல்ல நான் மொய்விருந்து நடத்தினப்ப, 70 லட்சம் வந்துச்சு. நான் போட்டிருந்ததைவிட ரெண்டு மடங்கு. இப்போ, 2.5 கோடி கிடைச்சிருக்கு. இதுல நான் செஞ்சதுன்னு பாத்தா 40 சதவிகிதம். மீதி எல்லாம் நான் திரும்பச் செய்ய வேண்டியது’’ என்கிறார்.

நெடுவாசல் வட்டாரத்தில் உறவின்முறை என்ற பெயரில் 11 கிராம மக்கள் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். இவர்கள் யார் யார் என்றென்றைக்கு மொய் விருந்து நடத்துவது என்று முறைப்படுத்தி, பட்டியலே வெளியிட்டுவிடுவார்கள். முன்பே பட்டியல் கிடைத்துவிடுவதால் மக்கள் பணத்தைப் புரட்டித் தயாராக வைத்துக்கொள்வார்கள்.

மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!
மொய்விருந்து என்பது வட்டியில்லாக் கடன்!

‘‘1965-ல என்னோட கல்யாணத்துக்கு அப்பா மொய் பிடிச்சார். 7,000 ரூபா வசூலானதுல கல்யாணச் செலவு போக மிச்சமிருந்த 5,000-த்துல ஒரு ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுட்டார். இன்னைக்கு அதோட மதிப்பு 25 லட்சத்துக்கு மேல. மொய்ப் பணத்தை ஆதாயம் தரக்கூடிய தொழில்ல முதலீடு செய்திடணும். அப்பதான் அதுல வர்ற வருமானத்த வச்சு திரும்பச் செலுத்த முடியும். எங்க வீட்ல மூன்றாவது தலைமுறையா மொய் செய்றோம்’’ என்கிறார் 80 வயது கருப்பையன்.

மொய்விருந்து வந்துவிட்டால் பத்திரிகை அடிக்கும் அச்சகங்கள், சமையல்காரர்கள், மளிகை வணிகம், பிளக்ஸ் பேனர் நிறுவனங்கள் எல்லாம் கொழிக்கும். படித்த இளைஞர்களுக்கு மொய் எழுதும் வேலை கிடைக்கும்.

‘‘1980-ல இருந்து மொய் எழுதுற வேலை செய்றேன். அப்போல்லாம் எங்ககிட்ட தேதி வாங்கிட்டுத்தான் விருந்துக்கு நாளே குறிப்பாங்க. மொய் எழுதி, கணக்கு முடிச்சு ஒப்படைச்சா 1,200 ரூபா சம்பளம். இடையில கூல்ட்ரிங்ஸ் வரும். கடைசியா விருந்துல செம கவனிப்பு இருக்கும். இப்போ நிறைய மொய் வாங்குறவங்க மெஷினே கொண்டு வந்திடுறாங்க. பஸ்ல கண்டக்டர் டிக்கெட் கிழிச்சுக் கொடுக்கிற மாதிரி மொய் போட்டவுடனே அந்த மெஷின் ரசீதே கொடுத்துடுது. அதனால இப்போ வேலை குறைஞ்சுபோச்சு...’’ என்கிறார் மாமுண்டி.

கொரோனா லாக்டௌனால் இரண்டாண்டுகள் மொய்விருந்துக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மொய்விருந்து என்ற பெயரில் நடத்தாமல் காதணி விழா வரவேற்பு, வீட்டுக்குப் பால் காய்ச்சும் விழா வரவேற்பு, பூப்புனித நீராட்டு விழா வரவேற்பு என்றெல்லாம் விழா நடத்தி மொய் வசூலித்தார்கள். சிலர் திருமணமான பெண்களுக்குக்கூட பூப்புனித நீராட்டு விழா நடத்தி மொய் வாங்கியது சுவாரஸ்யம்.

கஜா புயல் தஞ்சை, புதுக்கோட்டைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைத்துவிட்டது. பெரும் பொருளாதார பலமாக இருந்த தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதால் வருமானம் பாதிக்கப்பட்டது. அதுவும் மொய் விருந்தில் எதிரொலிக்கிறது. ஆலங்குடி பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 5,000க்கும் மேற்பட்டவர்கள் மொய்விருந்து நடத்தினார்கள். இப்போது இரண்டாயிரத்துக்கும் குறைவானவர்களே நடத்துகிறார்கள்.

தமிழரசன், பார்த்திபன், மாமுண்டி , கருப்பையன்
தமிழரசன், பார்த்திபன், மாமுண்டி , கருப்பையன்

மொய்யாக வரும் பணத்துக்கு வருமான வரி இல்லை என்பதால் மொய் விருந்து மூலம் கறுப்பை வெள்ளையாக்குறார்கள் என்று ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை என்கிறார்கள் பேராவூரணிக்காரர்கள். மொய்விருந்து என்பது ஒருவகை சேமிப்பு; பொருளாதாரப் பரிவர்த்தனை. இதை முறைப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை!