சினிமா
தொடர்கள்
Published:Updated:

“மிச்சமிருக்கிற வாழ்க்கையையாவது வாழ்ந்து பாக்கணும்!”

விடுதலையான அறுவர்
பிரீமியம் ஸ்டோரி
News
விடுதலையான அறுவர்

என் வாழ்நாளுக்குள்ள மகனைப் பார்த்திட மாட்டேனோன்னு உயிர் கிடந்து அடிச்சிக்கிடுச்சு. இந்த 31 வருடங்களும் வெளியில் சொல்லமுடியாத அளவுக்குத் துயரை அனுபவிச்சிருக்கோம்.

மிக நீண்ட போராட்டம் ஒன்று முடிவுக்கு வந்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிலமாதங்களுக்கு முன்பு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சிறையிலிருந்த பிற அறுவரையும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட நளினியும் ரவிச்சந்திரனும் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், முருகன் உள்ளிட்டோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்திய சட்டப்படி, உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்கள் இந்தச் சிறப்பு முகாமில் அடைக்கப்படுவது வழக்கம். நால்வரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்களா, அல்லது முகாமிலே தடுத்து வைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு விரைவில் விடை தெரிந்துவிடும்.

சுமார் 31 ஆண்டுகள் மரணத்துக்கும் உயிர்த்தலுக்குமான தொடர் போராட்டம். ஒரு பக்கம் விடுதலைக்கான குரலும் இன்னொருபக்கம் எதிர்ப்புமாக வெளிச்சம் வாய்க்குமா, வாய்க்காதா என்று உளம்வாடிக் கிடந்தவர்களை, கவர்னர்களின் காலதாமதம், சிறை நன்னடத்தை எனப் பல காரணங்களை முன்வைத்து அவர்களே எதிர்பாராத ஒரு தருணத்தில் விடுவித்திருக்கிறது நீதிமன்றம். நெகிழ்ச்சியில் தத்தளிக்கின்றன அவர்களின் குடும்பங்கள்.

“மிச்சமிருக்கிற வாழ்க்கையையாவது வாழ்ந்து பாக்கணும்!”

சாந்தன் கைது செயயப்பட்டபோது அவருக்கு வயது 21. இப்போது 53. யாழ்ப்பாணத்திலிருக்கும் அம்மா தில்லையம்பலம் மகேஸ்வரி, கைதாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தன் மகனைப் பார்த்தது. விடுதலையாகி செய்தித்தாள்களில் வந்த புகைப்படத்தில்தான் முகம் பார்க்கிறார். அடையாளம் தெரியாத அளவுக்கு முதுமை அப்பியிருக்கிறது, சாந்தனின் முகத்தில். அதைக்கண்டு தாயின் கண்கள் கசிகின்றன.

‘‘என் வாழ்நாளுக்குள்ள மகனைப் பார்த்திட மாட்டேனோன்னு உயிர் கிடந்து அடிச்சிக்கிடுச்சு. இந்த 31 வருடங்களும் வெளியில் சொல்லமுடியாத அளவுக்குத் துயரை அனுபவிச்சிருக்கோம். யுத்தம் ஒரு பக்கம், சிறையில் இருக்கிற மகன் ஒரு பக்கம் என வாழ்க்கை சின்னாபின்னமாயிருச்சு. எல்லாம் சேர்ந்து 2013-ல் என் கணவர் மாரடைப்பால் இறந்துட்டார். சாந்தன் தெய்வ பக்தி மிக்கவன். ‘அய்யர்' என்றுதான் இங்கு எல்லோரும் அவனை அழைப்பாங்க. எல்லாருமே வாழ்க்கையில பாதியைத் தொலைச்சுட்டோம். சாந்தன் விடுதலையாகுறான் என்று கேள்விப்பட்டதும் உள்ளம் நிறைஞ்சுபோச்சு. பார்வை துலங்கிட்டதுமாதிரி தெரியுது. உறவுக்காரங்களெல்லாம் வீட்டுக்கு வந்து சந்தோஷமா பேசுறாங்க. கடவுள் என் மகனைப் பார்க்கிற கொடுப்பினையை எனக்குக் கொடுத்திருக்கான். அவன் என்னைப் பார்த்து அம்மான்னு சொன்னால் தாங்குவேனா தெரியாது’’ - தில்லையம்பலம் மகேஸ்வரியின் கண்கள் கலங்குகின்றன.

அம்மாவைத் தேற்றுகிறார் சாந்தனின் தம்பி மதிசுதா. ‘‘நிச்சயம் அண்ணா விடுதலையாவார்னு தெரியும். இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நம்பலே. செங்கொடி அக்காவுக்கு இந்த நேரத்துல கண்ணீரால நன்றி சொல்லணும். அண்ணன் சிறைக்குப்போன பிறகு அம்மாவும் அப்பாவும் அவரைப் பார்க்கவேயில்லை. 2014-க்குப் பிறகுதான் வழக்கறிஞர்கள் தொடர்பே எங்களுக்குக் கிடைச்சுச்சு. 2017-ல முதல்முதலா அண்ணாவை சிறையில சந்திச்சேன். ‘அம்மாவுக்குச் செய்யவேண்டிய எந்தக் கடமையையும் செய்யாம விட்டேனடா'ன்னு வருத்தப்பட்டார். அம்மாவை அழைச்சுட்டுப்போக நிறைய முயற்சி எடுத்தோம். தொடர்ந்து விசா மறுக்கப்பட்டுச்சு. அண்ணா தன் இளமை முழுவதையும் தொலைச்சுட்டார். மூத்த உறவுகள் எல்லாம் பெரும்பாலும் காலமாகிட்டாங்க. இன்னைக்கிருக்கிற புதிய தலைமுறை உறவுகள் யாரையும் அண்ணாவுக்குத் தெரியாது. இப்போ, வெளியில் வந்திடுவார்னு எதிர்பார்த்தோம். முகாம்ல வச்சட்டாங்க. அடுத்து என்ன நடக்கும்னு தெரியலே’’ என்கிறார் மதிசுதா.

நளினி -  பிரேமா -  தமிழ்க்கோ
நளினி - பிரேமா - தமிழ்க்கோ

ராபர்ட் பயஸுக்கும் யாழ்ப்பாணம்தான் பூர்வீகம். மனைவி பெயர் பிரேமா. பயஸ் கைது செய்யப்படும்போது மகன் பிறந்து நான்கு மாதமாகியிருந்தது. ராபர்ட் பயஸின் மகன் தமிழ்க்கோ நம்மிடம் பேசினார்.

‘‘அப்பாவோட சேர்த்து அம்மாவும் நானும் சிறைக்குப் போனோம். அதுக்கப்புறம் எங்களை மட்டும் சிறப்பு முகாமுக்குக் கொண்டுபோய் கொஞ்சநாள் வச்சிருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிட்டாங்க. அப்பா வழி உறவுகள் ஆதரவுலதான் இருந்தோம். இறுதி யுத்தத்துல முள்ளிவாய்க்கால்ல சிக்கினோம். யுத்தம் முடிஞ்சதும் எங்களைத் தடுப்பு முகாம்கள்ல அடைச்சாங்க. மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளியில வந்தோம்.

நாலு மாதக்குழந்தையா அப்பா பத்தி எந்த நினைவுகளும் எனக்கு இல்லை. அம்மாவும் தாத்தாவும் சொல்லக்கேட்டதுதான். இப்போ எனக்கு 32 வயசு. 19 வயசுல முதல்முறையா அப்பாவை சிறையில சந்திச்சேன். என்னைப் பார்த்ததும் கண்கலங்கி, சின்னக்குழந்தையைத் தூக்குற மாதிரி தூக்க முயற்சி செஞ்சார். அன்னைக்கு பிப்ரவரி 11-ம் தேதி. அப்பாவோட பிறந்தநாள். ‘பச்சைக்குழந்தையா உன்னை விட்டுட்டு வந்துட்டேன். அப்பாவா உனக்கு செய்யவேண்டிய எதையும் செய்யலே... சீக்கிரமே வருவேன்...'னு அப்பா சொன்னார்.

ரவிச்சந்திரன் -  தில்லையம்பலம் மகேஸ்வரி, மதிசுதா
ரவிச்சந்திரன் - தில்லையம்பலம் மகேஸ்வரி, மதிசுதா

இலங்கையில அப்பா பத்தித் தெரிஞ்சுக்கிட்டு ராணுவம் அடிக்கடி வீட்டுக்கு வந்து விசாரிச்சு தொந்தரவு பண்ணதால, உறவுக்காரங்க என்னை நெதர்லாந்துக்கு அனுப்பி வச்சாங்க. இங்கே வந்து சட்டபூர்வமா தங்குற உரிமைகள் வாங்கினேன். அப்பாவைப் பார்க்க அம்மாவுக்கு விசா தரணும்னு நீதிமன்றம் சொல்லியும்கூட தரலே. தமிழ்நாட்டுல எனக்குத் திருமணம் செய்து வைக்க அப்பா பரோல் வாங்கி ஏற்பாடுகளெல்லாம் செஞ்சுட்டார். கொரோனாவால எனக்கு விசா கிடைக்கலே. அதனால அவரோட அந்த ஆசையும் நிறைவேறாமப்போயிடுச்சு.

இன்னைக்கு விடுதலை, நாளைக்கு விடுதலைன்னு இருபது வருடங்களா செய்தி வரும் போகும்... எதுவும் நடக்கலே. இந்தமுறை எப்படியும் நீதிமன்றம் விடுவிச்சிடும்னு சொன்னாங்க. வழக்கம்போல இதுவும் நடக்காதுன்னு நினைச்சோம். நடந்திடுச்சு. இந்த உண்மையைத் தாங்கமுடியலே. ஓன்னு கதறி அழுதேன். அம்மாகிட்ட வீடியோ கால்ல பேசினேன். அம்மா சிரிச்சு அப்போதான் பார்த்தேன். அப்பா கைதாகும்போது அம்மாவுக்கு 21 வயது. இப்போ 53. அப்பாவும் அம்மாவும் 2 ஆண்டுகள்கூட நிறைவாழ்க்கை வாழலே. அம்மா இதுநாள் வரைக்கும் பட்ட துயரத்துக்கு மருந்தா இறைவன் அப்பாவை அனுப்பி வச்சிருக்கார். அப்பாவையும் அம்மாவையும் நெதர்லாந்துக்கு அழைச்சுக்கப் போறேன்’’ என்கிறார் தமிழ்க்கோ.

ஜெயக்குமாருக்கும் யாழ்ப்பாணம்தான் பூர்வீகம். போர் நெருக்கடியில் தமிழகம் வந்தவர், குடியாத்தத்தைச் சேர்ந்த சாந்தியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். மூன்றே ஆண்டுகளில், ராஜீவ் கொலை வழக்கில் ஜெயக்குமாருடன் சாந்தியையும் கைது செய்தது காவல்துறை. அப்போது பார்த்திபனுக்கு வயது 2.

‘‘அஞ்சு வயசு வரைக்கும் நான் சிறையிலதான் இருந்தேன். அதுக்குமேல அங்கே வச்சுக்க முடியாதுன்னு என்னை மட்டும் வெளியில அனுப்பிட்டாங்க. குடியாத்தத்துல பாட்டி வீட்டுலயும் சேத்துக்கலே. மதுரை, திருச்சி, சென்னைன்னு ஆதரவு கிடைக்காம அலைஞ்சு அல்லல்பட்டிருக்கேன். எட்டு வருஷம் கழிச்சு அம்மா ரிலீஸான பிறகுதான் எனக்கு ஆதரவு கிடைச்சுச்சு. அப்பா மேல எனக்கு நிறைய கோபம் இருக்கு. எங்களை நிராதரவா விட்டுட்டார். யாரும் வீடு வாடகைக்குக் கொடுக்கக்கூட தயாராயில்லை. ஒரு உறவுக்காரர், ‘நீங்க யார்ன்னு வெளியில தெரியாம இருக்கணும்'னு சொல்லி வீடு கொடுத்தார். 22 வருஷமா அந்த வீட்டுலதான் இருக்கோம்.

அம்மா விடுதலையானபோது அவங்களுக்கு 30 வயது. 30 வயசுல ஒரு பெண் தனிச்சு வாழ்றது எவ்வளவு சிரமம்னு வாழ்ந்து பாத்தவங்களுக்குத்தான் தெரியும். இப்போ அப்பா விடுதலையாயிட்டார்னு தெரிஞ்சதும் ஹவுஸ் ஓனர், வீட்டைக்காலி பண்ணச் சொல்லிட்டார். எனக்குக் கல்யாணமாகி ரெண்டு பிள்ளைங்க. எல்லாரையும் வச்சுக்கிட்டு நடுத்தெருவுல நிக்குறேன். எங்கே போனாலும் நிராகரிப்புதான். என் திருமணம் நிச்சயதார்த்தம் வரைக்கும்போய் நின்னுபோயிருக்கு.

அப்பப்போ போய் அப்பாவை சிறையில பாத்துட்டு வருவேன். கொரோனா வந்தப்புறம் அதுவும் முடியலே. இப்பவும் அப்பா ரிலீஸாகிட்டார்னு டிவியைப் பாத்துதான் தெரிஞ்சுக்கிட்டோம். சிறைக்குப் போனப்போ எங்களை உள்ளேகூட விடலே. நானும் அம்மாவும் வாசல்லயே நின்னு அப்பாவைப் பார்த்தோம். எங்கே கூட்டிக்கிட்டுப் போறாங்கன்னுகூட தெரியாது. போகும்போது கையாட்டினார். முகாம்ல வச்சிருக்காங்கன்னு செய்தியைப் பாத்துதான் தெரிஞ்சுக்கிட்டோம். அடுத்து என்ன செய்யணும்னுகூட எங்களுக்குத் தெரியலே. நாங்க எப்பவும் இருக்கிறமாதிரிதான் இப்பவும் இருக்கோம்...’’ என்று ஆதங்கமாகப் பேசுகிறார் பார்த்திபன்.

ஜெயக்குமாரின் மனைவி சாந்தி வியாசர்பாடியில் தன் வீட்டுக்கருகில் பெட்டிக்கடை நடத்தினார். கொரோனாவுக்குப் பிறகு அதுவுமில்லை.

‘‘நிறைய கனவுகளோடதான் எங்க திருமணம் நடந்துச்சு. எல்லாமே ஒரு நாள்ல முடிஞ்சுபோச்சு. எந்தப்பாவமும் செய்யாம பிள்ளையையும் ஜெயில்ல வச்சிருக்கவேண்டிய கொடுமை... போனது போனதுதானே... இனிமே என்ன வரப்போகுது...? வாலிபனா போனவர் முதியவரா வெளியே வர்றார். எப்படியும் வந்திடுவார்னு நம்பினேன். பேரப்பிள்ளைகெல்லாம் இருக்காங்க. அவர்கிட்ட காமிக்கணும். இங்கே இருக்க விரும்புறாரா, யாழ்ப்பாணம் போக விரும்புறான்னு அவர்தான் முடிவு பண்ணணும். அவர் எப்படி வாழணும்னு நினைக்கிறாரோ அப்படி வாழட்டும்...’’ கண்கலங்குகிறார் சாந்தி.

வழக்கமாக ரவிச்சந்திரன் பரோலில் வந்தால் வீட்டில் ஒரே போலீஸ் தலைகளாகத் தெரியும். இப்போதுதான் இறுக்கம் தளர்ந்திருக்கிறது. மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.

‘‘நாங்க அனுபவிச்ச தண்டனையைக் காட்டிலும் எங்க குடும்பம் அனுபவிச்ச வலிதான் ரொம்பப்பெரிசு. சிறை நிறைய கற்றுக்கொடுத்துச்சு. உள்ளே இருந்தபடியே எங்கள் நியாயத்துக்காகப் போராடினோம். நிச்சயம் வெளியில போயிடுவோம்னு நம்பிக்கை இருந்துச்சு.

அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. எங்கேயும் போக முடியாது. யார்கிட்டேயும் பேச முடியாது. திருமண வீடோ, துக்க நிகழ்ச்சிகளுக்கோ போயி ஆத்மார்த்தமா கலந்துக்க முடியாது. அப்பவும் போலீஸ் போட்டோ பிடிப்பாங்க, வீடியோ எடுப்பாங்க‌. எல்லாத்தையும் எனக்காக சகிச்சுக்கிட்டாங்க அம்மா. பேரறிவாளன் விடுதலையானபோதே மகிழ்ச்சியாவும் நம்பிக்கையாவும் இருந்துச்சு. சிறை, ஒரு வாழ்க்கைமுறையைப் பழக்கப்படுத்தியிருக்கு. அதுக்குள்ள இருந்து வெளியில வர போராட வேண்டியிருக்கு. முன்னால எழுதுன கவிதைத்தொகுப்பை வெளியிடணும். சிறை மறுசீரமைப்பு, சிறைவாசிகள் உரிமை, நடத்தைகள் பத்தி ஒரு புத்தகம் எழுத விருப்பம் இருக்கு. விடுதலைன்னு செய்தி வந்தவுடனே செங்கொடி நினைவுதான் வந்துச்சு. எவ்வளவு பெரிய தியாகம். அந்தத் தங்கையை வாழ்நாள் முழுவதும் நினைவில் தாங்கியிருப்பேன்...’’ என்கிறார் ரவிச்சந்திரன்.

நளினி முகத்தில் இப்படியொரு புன்னகையை இதுவரை பார்த்திருக்க முடியாது. ‘‘சரியா பத்து நாள் இருக்கும், ஜெயில்ல இருந்து முருகனை நான் கையைப் பிடிச்சு வெளியில இழுத்துட்டு வர்ற மாதிரி ஒரு கனவு. அம்மாகிட்ட சொன்னேன். அவங்ககிட்ட இருந்து பெரிசா ரியாக்‌ஷன் இல்லை. முதன் முறையா ஒரு கதையைக் கேட்டா ரியாக்‌ஷன் வரும். பல தடவை கேட்டா என்ன ரியாக்‌ஷன் வரும்? ஆனா அந்தக் கனவு வந்ததுல இருந்து மனசு உற்சாகமா இருந்துச்சு. கடைசியில என் கனவு பலிச்சிடுச்சு’’ - சந்தோஷமாகப் பேசுகிறார்.

‘‘இந்த வழக்குல அதிகம் பாதிக்கப்பட்டது எங்க குடும்பம்தான். நான், கணவர், அம்மா, தம்பி, வயித்துல இருந்த என் குழந்தைன்னு ஐந்து ஜீவன்கள் சிறைவாசம் அனுபவிச்சோம். விவரம் தெரியாத வயசுல அம்மா அப்பாவைப் பிரிஞ்ச என் மகளை இந்த நிமிஷம்கூட நாங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து சந்திக்க முடியலை. அம்மாவும் தம்பியும் ஒரு கட்டத்துல சிறையில இருந்து வெளியில வந்தாங்க. ஆனாலும் வெளியிலயுமே அவங்க ஒரு நரக வாழ்க்கையைத்தான் வாழ்ந்திட்டிருந்தாங்க.

விடுதலை தொடர்பான பேச்சுகள் எழுந்து, இன்னைக்கு நாளைக்குன்னு அது இழுத்துக்கிட்டே போனப்ப நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலவையா இருந்தது. அதேநேரம் ஜெயில் அனுபவங்கள் அபரிமிதமான மன தைரியத்தையும் கொடுத்திருந்திச்சு. இன்னொரு பக்கம் ஆன்மிக சிந்தனையும் பக்க பலமா இருக்க, வெளியில வந்து கொஞ்ச நாளாச்சும் வாழ்ந்திடுவோம்கிற நம்பிக்கை எங்கிட்ட கடைசி வரை இருந்தது.

ஒரு பெரிய தலைவருடைய மரண வழக்குல கடைசியில மனிதாபிமான அடிப்படையிலதான் தீர்ப்பு வந்திருக்கு. அதே மனிதாபிமானக் கருணை, மிச்சமிருக்கிற எங்க வாழ்க்கையை வாழ்வதற்கும் கிடைக்கும்னு நம்பறோம். தமிழ்நாட்டுல கணவர், அம்மா, தம்பின்னு குடும்பத்துடன் இருக்கணும்னு ஆசைதான். நிறைய பேருக்கு இங்க நன்றி சொல்ல வேண்டியிருக்கு. என் மகள் லண்டனுக்குக் கூப்பிடுறா. என்ன செய்யறதுன்னு இன்னும் முடிவெடுக்கலை...’’ என்கிறார் நளினி.

31 ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட பாதி வாழ்க்கை. சிறையின் நான்கு சுவர்களுக்குள் வாழ்நாளின் பாதியைக் கழித்தவர்களுக்கு எதிர்காலம் நிறைவாக அமையட்டும்!

*****

ராஜீவ் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் பேசினோம்.

“மிச்சமிருக்கிற வாழ்க்கையையாவது வாழ்ந்து பாக்கணும்!”

‘‘ஏறக்குறைய இரட்டை ஆயுள் தண்டனையை நிறைவுசெய்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடுதலையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் மனநிலையில் யாரும் இருக்கமுடியாது. எங்களைப் பொறுத்தவரை, கடந்தகால கசப்புகளை மறந்து எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துச் செயல்பட வேண்டும். நான்கு இலங்கைத்தமிழர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள நடைமுறைச் சிக்கல். இவர்கள் இலங்கை செல்ல விரும்பினால் பெரிய பிரச்னை இருக்கப்போவதில்லை. ஆனால் நான்குபேரும் அதை விரும்புவார்களா என்பதுதான் கேள்வி. அங்கு சென்றால் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். எவ்வளவு காலம் அங்கே சிறையில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று சொல்லமுடியாது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி, நீதவான் முன்பு ஆஜர்படுத்தாமலே ஒருவரை 18 மாதங்கள் சிறைப்படுத்த முடியும். நளினியும் முருகனும் பிரித்தானியாவுக்குச் செல்ல வாய்ப்புண்டு. ஆனால் அதிலும் முருகன் எந்தக் கடவுச்சீட்டில் பயணம் செய்வது என்பதில் பிரச்னையுண்டு. முருகனுக்கு இந்தியக் கடவுச்சீட்டு கிடைப்பதில் தடை இருக்க வாய்ப்புண்டு. ஆனால் நளினியைத் திருமணம் செய்துள்ளபடியால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டபூர்வமாக முருகனுக்கு இந்தியக் கடவுச்சீட்டு தரப்படவேண்டும். திருமதி சோனியாகாந்திக்கு எந்த அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டதோ, அதே உரிமை முருகனுக்கும் இருக்கிறது...’’ என்றார் அவர்.

****

“மிச்சமிருக்கிற வாழ்க்கையையாவது வாழ்ந்து பாக்கணும்!”

பேரறிவாளனை விடுதலை செய்த அதே காரணங்களை முன்வைத்துதான் இந்த அறுவரையும் விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். சிறைவாசலில் நின்று எல்லோரையும் வரவேற்ற பேரறிவாளனிடம் பேசினோம்.

‘‘மிகப்பெரிய மனநிறைவு. என்னைப் பொறுத்தவரை மே 18 தீர்ப்பிலேயே இவர்களுக்கான கதவும் திறந்துவிட்டது. இதற்கு ஏதோவொரு வகையில் நான் சிறையில் நடத்திய சட்டப்போராட்டமும் அம்மா வெளியே நடத்திய போராட்டங்களும் காரணமாக அமைந்திருக்கின்றன. நீதியரசர் கே.டி.தாமஸ் Miscarriage of Justice என்றார். தடா சட்டத்தின் அனர்த்தங்கள்தான் இந்தத் துயரங்களுக்கெல்லாம் காரணம். கொடூரமான கறுப்புச் சட்டம். இந்த விடுதலையில் தமிழக அரசுக்கு மிக முக்கியப்பங்கு இருக்கிறது...’’ மகிழ்ச்சியாகப் பேசுகிறார் பேரறிவாளன்.