அரசியல்
அலசல்
Published:Updated:

மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!

நியாய விலைக்கலை
பிரீமியம் ஸ்டோரி
News
நியாய விலைக்கலை

நியாய விலைக்கலை... 8,957 டன் பறிமுதல்... 10,433 வழக்குகள்... 12,613 கைதுகள்... 126 குண்டாஸ்

கடந்த மே மாத இறுதியில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், “தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்குத் தொடர்ந்து அரிசி கடத்தப்படுகிறது. ஏழு வழித்தடங்கள் வழியாக, கார், பைக், லாரிகள் மூலம் அரிசியைக் கடத்துகிறார்கள். அந்த அரிசி ஆந்திராவிலுள்ள ஆலைகளில் பாலிஷ் செய்யப்பட்டு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. எனது சொந்தத் தொகுதியான குப்பம் தொகுதியில், கடந்த 16 மாதங்களில் 13 அரிசிக் கடத்தல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்” என எழுதியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் அந்தக் கடிதம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!
மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!

“ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் அறிவுரை கூறுவது, இந்த அரசின் நிர்வாகச் சீர்கேட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகக் குற்றம்சாட்டினார். இதே குற்றச்சாட்டை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் முன்வைத்தனர். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில்தான் கடத்தலும் நடந்து கொண்டிருக் கிறது. இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும், தமிழகமெங்கும் 399.7 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 416 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில், கால்நடைத் தீவனம் எனப் பொய் சொல்லிப் பதுக்கிவைத்திருந்த 4.5 டன் ரேஷன் அரிசி, திருச்சி லால்குடியில் 556 அரிசி மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 34 டன் ரேஷன் அரிசி, மயிலாடுதுறையிலிருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திச் செல்ல முயன்ற 11 டன் ரேஷன் அரிசி, வேலூரிலிருந்து ஆந்திரா -வுக்குக் கடத்தவிருந்த 10 டன் ரேஷன் அரிசி எனப் பிடிபட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை அடுக்குவதற்கே தனி குடோன் கட்ட வேண்டும்.

ரேஷன் அரிசிக் கடத்தல் என்பது புதிதல்ல. கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், புதிய ஆட்சி வந்து ஓராண்டுக்குப் பிறகும்கூட, கடத்தல்கள் தொடர் -வதும் அதிகரிப்பதும் பெரும் சர்ச்சையாகியிருக் கிறது. இந்த ரேஷன் அரிசிக் கடத்தலின் உண்மை நிலை என்ன... எப்படி, எதற்காகக் கடத்தப் படுகிறது... கடத்தலின் பின்புலத்தில் இருப்பவர் கள் யார் யார்... இப்படிப் பல கேள்விகளுடன் விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல்களெல்லாம் நம்மை மிரளவைத்தன.

மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!
மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!

கிடங்கு, கடை... கடத்தலில் இரண்டு வகைகள்!

ரேஷன் அரிசிக் கடத்தல் வழக்கில் பலமுறை கைதாகி, தற்போது வெளியிலிருக்கும் சிலர் நம்மிடம் பேசினார்கள். “இரண்டு வகைகளில் ரேஷன் அரசி கடத்தப்படுகிறது. முதலாவது, நேரடியாக நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளிலிருந்து கடத்திச் செல்வது. கிடங்குக்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் கடத்தலுக்கு முன்பாகவே பேசிவைத்துவிடுவோம். ரேஷன் அரிசி சாக்கு மூட்டைகளில் அரசின் முத்திரை வைக்கப்பட்டிருக்கும். அதற்காக, கடத்தலுக்கு முதல் தினமே எங்களுடைய சாக்கு -களைக் கிடங்கு அதிகாரிகளிடம் கொடுத்து விடுவோம். நாங்கள் செல்லும்போது, அரிசி சாக்கு மாற்றித் தயாராக இருக்கும். போனதும், லோடு ஏற்றுவதுபோல ஏற்றிக் கொண்டு சென்றுவிடுவோம். தமிழ்நாடு முழுவதும் 286 கிடங்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிடங்கிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படும். சில கிடங்குகளில் நேர்மையான அதிகாரிகளும் பணியாற்று கிறார்கள். அவர்களை நாங்கள் தொந்தரவு செய்வதில்லை.

இரண்டாவது, ரேஷன் கடைகளிலிருந்தே அரிசியைக் கடத்துவது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் இருபது கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. வாரத்துக்கு இரண்டிலிருந்து நான்கு அரிசி மூட்டைகள்தான் கிடங்கு களிலிருந்து ரேஷன் கடைகளுக்கு வரும். அரிசி அட்டை வைத்திருந் தும் அரிசி வாங்காதவர்களின் பெயரில் கணக்கெழுதி, மாதம் சில மூட்டை அரிசியை ரேஷன் கடை ஊழியர்கள் கைமாற்றி விடுவார்கள். இதற்கு, கிலோவுக்கு 7 ரூபாய் வீதம் அவர்களுக்கு கமிஷன் அளிக்கப்படுகிறது. இது போக, பெரும்பாலான ரேஷன் கடைகளில், பொதுமக்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களிடமிருந்து அரிசியை வாங்குவதற்கென தனியாக ஏஜென்ட்டுகள் வாசலிலேயே இருப்பார்கள். அவர்கள், கிலோவுக்கு 5 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியை வாங்கிக்கொள்வார்கள். இப்படி வாங்கப்படும் ரேஷன் அரிசி, கிலோ 10 ரூபாய்க்கு சப் ஏஜென்ட்டிடம் விற்கப்படும். ஒவ்வொரு வருவாய் கோட்டத்திலும், பத்து சப் ஏஜென்ட்டுகள் இருப்பார்கள். மெயின் டீலர்கள் வாரத்துக்கு ஒரு முறை சப் ஏஜென்ட்டுகளிடம் சென்று மொத்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கிக்கொள்வார்கள். அப்படி வாங்கிக் கடத்தும்போதுதான் டன் கணக்கில் சிக்குகின்றன.

ஒரே குடையின் கீழ் இந்தக் கடத்தல் நடைபெறுவதில்லை. மாவட்டம்தோறும் பல டீம்கள் உண்டு. அவர்கள் எங்கு செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என ரூட் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். செக் போஸ்ட்டில் யாரை கவனிக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் முன்பாகவே தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். எங்காவது திடீர் சோதனை நடக்கிறது, மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றால், முன்னரே தகவல் வந்துவிடும். உடனடியாக, சாலையோரத் தில் பாதுகாப்பாக வண்டியை நிறுத்திவிட்டு, எல்லாம் சரியானதும் செல்வோம். சில சமயங் களில் சிக்கிக்கொள்ள நேரிடும். கைதானாலும் யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டோம். நம்மைக் கடத்தச் சொன்னவர்களே பெயிலில் எடுத்துவிடுவார்கள். இந்த ரேஷன் அரிசிக் கடத்தலில், ஒரு டிரிப் சென்றுவந்தால் 10,000 ரூபாய் வரை கிடைக்கும்” என்றனர் விரிவாக.

மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!
மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!

கேரளா... கர்நாடகா... ஆந்திரா... கடத்தல் வழிகள்!

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தமிழ்நாடு ரேஷன் அரிசிக்குப் பெரிய மார்க்கெட் இருக்கிறது. கிலோ 40 ரூபாய் கொடுத்துக்கூட வாங்குவதற்கு ஆட்கள் தயாராக இருப்பதால், இந்தக் கடத்தல் பிசினஸ் கொடிகட்டிப் பறக்கிறது. நம்மிடம் பேசிய குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிலர், “சென்னையிலிருந்து சூலூர்பேட்டை, நெல்லூர், தடா வழிகளிலும், கும்பிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாகவும் ஆந்திரா, கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, கம்பம் பள்ளத்தாக்கு வழிகளில் கேரளாவுக்கும், கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடகாவுக்கும் அரிசி மூட்டைகள் கடத்தப்படுகின்றன. திருத்தணி, திருவள்ளூர் பகுதிகளிலிருந்து கடத்துபவர்கள், பெங்களூரு நெடுஞ்சாலையை அதிகமாகப் பயன்படுத்து கிறார்கள். லாரி, மினி லாரி, ஆட்டோ, பைக் எனத் தொடங்கி ரயில் வழி வரை இந்தக் கடத்தல் நடக்கிறது.

சென்னையிலிருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு ரயிலில் ரேஷன் அரிசியைக் கடத்துவதற்கென ஒரு கும்பல் இயங்குகிறது. அந்தக் கும்பலில் சுமார் 500 பேர் வரை இருக்கிறார்கள். அதிகாலையில் ரயில் மூலம் சென்னைக்குள் வரும் இவர்கள், சப் ஏஜென்ட்டுகளிடமிருந்து ரேஷன் அரிசியைத் தலைக்கு 25 கிலோ வீதம் வாங்கிக்கொள்வார்கள். பேசஞ்சர் ரயிலில், ஆந்திராவுக்கும் கர்நாடகா வுக்கும் அரிசியுடன் பயணிப்பார்கள். இவர்கள் மூலமாக மட்டுமே, தினமும் 10 டன் அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.

மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!
மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!

பாலிஷ் செய்தால் தனி ரேட்... அப்பள கம்பெனி முதல் அன்னதானத் திட்டம் வரை!

இந்த ரேஷன் அரிசி கடத்தலில், ரைஸ் மில் அதிபர்களுக்கும் கோடிகளில் கொட்டுகிறது பணம். ரேஷன் அரிசியை பாலிஷ் செய்வதற் கெனவே மாவட்டம்தோறும் பல ரைஸ் மில்கள் செயல்படுகின்றன. காஞ்சிபுரம், ரெட் ஹில்ஸ் பகுதிகளில் இப்படியான ரைஸ் மில்களின் எண்ணிக்கை அதிகம். ஏஜென்ட்டுகளிடமிருந்து கிலோ 15 ரூபாய் வீதம் ரேஷன் அரிசியை வாங்கி, பாலிஷ் செய்வார்கள். ஒரு மணி நேரத்தில், 30 முதல் 40 டன் வரை பாலிஷ் செய்ய முடியும். பாலிஷ் செய்தவுடன் அரிசியின் பழுப்பு நிறம் மாறி, புதுப்பொலிவுடன் ஜொலிக்கும். பார்ப்பதற்கு, நயமான பொன்னி அரிசி போன்ற தோற்றத்துக்கு வந்துவிடும். அந்த அரிசியைப் பெரிய நிறுவனங்களின் பெயர்களில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பிவிடுவார்கள். பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்குத் தனி ரேட். தமிழகத்திலேயே, கிலோ 50 ரூபாய் வரைகூட விற்கப்படுகிறது. இதன் மூலம், ரைஸ் மில் அதிபர்களுக்கு மாதம்தோறும் கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. தங்களுக்கு அரசால் விலையில்லாமல் வழங்கப் படும் அரிசியையே, தங்களை அறியாமல் அதிக விலைக்கு வாங்கி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

தீபாவளி சிட் ஃபண்ட் கட்டுபவர்களுக்குப் பல நிறுவனங்கள் கொடுக்கும் அரிசியில், 99 சதவிகிதம் பாலிஷ் செய்யப்பட்ட ரேஷன் அரிசி -தான். இது தவிர, சின்னச் சின்ன முறுக்கு, அப்பளம், மாவு கம்பெனிகளுக்கும் ரேஷன் அரிசியே சப்ளை செய்யப்படுகின்றன. நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கோழிப் பண்ணைகளில், தீவனமாகவும் ரேஷன் அரிசி தான் பயன்படுத்தப்படுகிறது. இதற்கெல் லாம் உச்சமாக, தமிழ்நாடு அரசால் பல கோயில் களில் வழங்கப்படும் அன்னதானத் திட்டத்திலும், பாலிஷ் செய்யப்பட்ட ரேஷன் அரிசிதான் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. நயமான அரிசியைக் கொள்முதல் செய்ததாகக் கணக்கு காட்டி இந்து சமய அறநிலையத்துறையின் சில அதிகாரிகளும், அரிசி சப்ளையர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்” என்றனர் விரிவாக.

மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!
மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!
ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்
ஆபாஷ்குமார்
ஆபாஷ்குமார்

மிரளவைக்கும் புள்ளிவிவரம்... கறுப்பு ஆடுகள் உடந்தை!

சமீபத்தில் மதுரையில் ஆய்வு நடத்திய உணவுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாட்டில் உணவுப்பொருள் கடத்தல் தொடர்பாக, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு, 11,121 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித் திருந்தார். “கூட்டுறவுத்துறையில் சில கறுப்பு ஆடுகள் இருப்பதால், ரேஷன் அரிசிக் கடத்தல் நடைபெறுகிறது. அரிசிக் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அரிசிக் கடத்தலைத் தடுக்க 400 பேர்கொண்ட குழு கண்காணித்து வருகிறது” என்றார் ராதாகிருஷ்ணன்.

உண்மையிலேயே, ரேஷன் அரிசிக் கடத்தல் தொடர்பாகப் பதிவான வழக்குகள், கைப்பற்றப்பட்ட அரிசியின் அளவு என்ன என விசாரித்தோம். நமக்குக் கிடைத்த தரவுகளின்படி, தி.மு.க ஆட்சி அமைந்த 7 மே 2021-லிருந்து 21 அக்டோபர் 2022 வரை, 8,957 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அரிசிக் கடத்தல் தொடர்பாக மட்டும் 10,433 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. 12,613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 126 பேர் மீது குண்டாஸ் பாய்ந்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் நம்மை மிரளவைத்தது நிஜம்.

மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!

நம்மிடம் பேசிய சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “Essential Commodity Act 1955-ன்படி, உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் அதிகபட்சமாக ஏழு வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். 5,000 ரூபாய்க்குக் குறையாமல் அபராதம் விதிக்கவும் விதி இருக்கிறது. இரண்டாவது முறையாகக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆறு மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையும், தொடர்ச்சி யாகக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள்மீது குண்டாஸ் பாய்ச்சவும் வழிவகை இருக்கிறது. கடுமையாகச் சட்டமிருந்தும், கடத்தலை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. பல இடங்களில் மாட்டுவதும், கைதுசெய்யப்படுவதும் கண்துடைப்புக்காகத் திட்டமிட்டே நடக்கின்றன. மாதம் ஒரு பகுதியில் எனப் பேசி, கடத்தல் நெட்வொர்க்கில் இருப்பவர்கள் காவல்துறையில் மாட்டுவதுபோல செட் செய்துவிடுவார் கள். இதற்குக் காவல்துறை, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு, சிவில் சப்ளைஸ் பிரிவிலுள்ள சில கறுப்பு ஆடுகளும் உடந்தை. அரசு சாட்டையைக் கையில் எடுத்தால் மட்டுமே, இந்தக் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி விழும்” என்றார்.

இறுதியாக, ரேஷன் அரிசிக் கடத்தல் குறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி ஆபாஷ்குமாரிடம் பேசினோம். “கடந்த 7.05.2021 முதல் 21.10.2022 வரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மொத்தம் 10,433 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில், 89,573 குவின்டால் அரிசி பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது. உணவு கடத்தல் தொடர்பாக 12,613 பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். 126 பேர்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2,592 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் நாடு முழுவதுமே உணவுப் பொருள்கள் கடத்துவதைக் கட்டுப்படுத்த, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக, ரேஷன் அரிசியை பாலிஷ் செய்யும் தொழிலில் ஈடுபட்ட பல ரைஸ் மில்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!
மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!
மிரளவைக்கும் ரேஷன் அரிசிக் கடத்தல்!
பாலீஸ் செய்யப்பட்ட ரேஷன் அரிசி
பாலீஸ் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

கடந்த ஆட்சியில் இருந்த அதே எண்ணிக்கை ஆட்களைக்கொண்டே, மாநில எல்லைகளில் தற்போது கைது எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்திருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே ஒருசில சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. கடத்தலுக்குத் துணைபோகும் அதிகாரிகள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப் படும். கண்டிப்பாக, கூடிய விரைவில் ரேஷன் அரிசி உள்ளிட்ட எந்த உணவுப்பொருள் கடத்தல், பதுக்கல் சம்பவங்களும் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்” என்றார் உறுதியாக.

இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப் பட்டுவரும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. பல மாநிலங்களும், பல்வேறு உலக நாடுகளும்கூட நமது பொது விநியோகத் திட்டத்தை மெச்சி யிருக்கின்றன. அதேசமயம், ரேஷன் அரிசிக் கடத்தலிலும் முதலிடத்தை நோக்கித் தமிழகம் பயணிப்பது வருத்தத் துக்கும் வேதனைக்கும் உரிய விஷயம். போதைக் கடத்தல் கும்பல்களிடம் இருப்பதுபோல பெரிய நெட் வொர்க்கெல்லாம் இந்தக் கடத்தலில் இல்லை. ஆனால், இதில் ஈடுபடுகிறவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு, புழங்கும் பணம், பொருளின் தேவை, முக்கியத்துவம் ஆகியவைதான் இந்தக் குற்றம் தொடர்ந்து நடக்கவும் அதிகரிக்கவும் காரணமாக இருக்கின் றன. விஷயத்தின் வீரியத்தை உணர்ந்து தமிழக அரசு விரைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!