Published:Updated:

செம்மரக் கடத்தலில் இரு மாநில அரசியல்... கோடிகளில் புரளும் தமிழக ‘டான்’கள்!

செம்மரம்
பிரீமியம் ஸ்டோரி
செம்மரம்

ஆந்திர செம்மரக்கட்டை கடத்தலில் முக்கிய மானவை இரு பெரும் சமூகப் பின்னணியைக் கொண்ட ‘டீம்’கள்தான்.

செம்மரக் கடத்தலில் இரு மாநில அரசியல்... கோடிகளில் புரளும் தமிழக ‘டான்’கள்!

ஆந்திர செம்மரக்கட்டை கடத்தலில் முக்கிய மானவை இரு பெரும் சமூகப் பின்னணியைக் கொண்ட ‘டீம்’கள்தான்.

Published:Updated:
செம்மரம்
பிரீமியம் ஸ்டோரி
செம்மரம்

செம்மரக் கடத்தலில் தி.மு.க ஒன்றியக் குழு தலைவரின் கணவரே (`கட்டை’ பெருமாள்) கைதாகியிருப்பது, மீண்டும் இந்தப் பிரச்னையைப் பேசுபொருளாக்கியிருக்கிறது. ஆந்திரா, சித்தூர் வனப்பகுதியில் தமிழகத் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும் வேலூர், திருவண்ணாமலை, சேலம் பகுதியிலிருந்து மரம் வெட்டச் சென்றதாக தொடர்ந்து தமிழகத் தொழிலாளர்கள் வழக்கில் சிக்குகிறார்கள். ஆந்திராவிலும் பலர் கட்டைகளுடன் பிடிபடுவ தும் தொடர்கதையாக இருக்கிறது. ஆனால், இப்படியான கூலிகளே பெரும்பாலும் சிக்குகிறார் களே ஒழிய பெரும்புள்ளிகள் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்.

அவர்களைப் பற்றியும், அவர்களது நெட்வொர்க் பற்றியும் நமது நிருபர்குழு திரட்டிய தகவல்களின் தொகுப்பு இங்கே...

செம்மரக் கடத்தலில் இரு மாநில அரசியல்... கோடிகளில் புரளும் தமிழக ‘டான்’கள்!

கடத்தலுக்கான காரணம்

`சிவப்பு சந்தனம்’ என்றழைக்கப்படும் செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் பயங்கர கிராக்கி. ஆந்திர வனப்பகுதியில் ஒரு டன் செம்மரக் கட்டையை வெறும் ஒன்றரை லட்சத் துக்கு வாங்கி, அதைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டால், விலை ரூ.15 லட்சம்! அப்படியே வெளிநாடுகளுக்குக் கடத்திவிட்டால் ஒரு டன் கட்டை ஒரு கோடி ரூபாயாக மாறிவிடுகிறது. இந்த ‘ரேட் கிராப்’தான் செம்மரக் கட்டை கடத்தலுக்கான முக்கியக் காரணம். செம்மரம் வெட்டப்படுவது ஆந்திராவாக இருந்தாலும், அதற்கான அசைன்மென்ட்களில் பல தமிழ்நாட்டிலிருந்துதான் கொடுக்கப்படுகின்றன.

ஆந்திர செம்மரக்கட்டை கடத்தலில் முக்கிய மானவை இரு பெரும் சமூகப் பின்னணியைக் கொண்ட ‘டீம்’கள்தான். ஆந்திர அரசியலில் செல் வாக்குமிக்க இவர்களின் கண்ணசைவில் தான், ஓட்டுமொத்தக் கடத்தல் நெட்வொர்க்கும் இயங்குகிறது. ஆந்திர வனப்பகுதியில் எங்கு செம்மரம் வெட்டினாலும் அதன் சத்தம் இவர் களின் காதுக்குக் கேட்கும். அந்த அளவுக்கு வனத் துறையிலும், காவல்துறையிலுமே ஆள்வைத் திருக்கிறார்கள். இவர்களை மீறி ஓரடி செம்மரக் கட்டைகூட ஆந்திர வனப்பகுதியிலிருந்து வெளியில் வராது. இவர்களின் புரோக்கர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுதான் தமிழ்நாட்டு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், தொழிலதிபர் களும் கடத்தல் பிசினஸில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, பிரிக்கப்படாத வேலூர் மாவட்டம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள்தான் கட்டை பிசினஸின் மையப்புள்ளி.

செம்மரக் கடத்தலில் இரு மாநில அரசியல்... கோடிகளில் புரளும் தமிழக ‘டான்’கள்!
செம்மரக் கடத்தலில் இரு மாநில அரசியல்... கோடிகளில் புரளும் தமிழக ‘டான்’கள்!

நான்கு ‘ரூட்’கள் - தடையேதுமில்லை!

செம்மரக்கட்டைகளை லாரிகளில் ஏற்றாமல், சொகுசு கார்கள், ஆம்புலன்ஸ், காய்கறி லோடு லாரிகளிலேயே கடத்திவருகிறது இந்தக் கும்பல். அவர்களுக்கு உதவுவதற்கு ஆந்திரா, தமிழ்நாடு காவல்துறை, வனத்துறை, சுங்கத்துறையில் நிறைய கறுப்பு ஆடுகள் இருக்கின்றன. அதனால் தான், ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் வழியே கட்டைகள் கடல் தாண்ட முடிகிறது.

செம்மரங்களைப் பாதுகாக்கவும், கடத்தல் காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் ஒரு சிறப்புப் பிரிவு ஆந்திர காவல்துறையில் உருவாக்கப்பட்டது. காட்டுச் சாலைகளில் கடுமையான கெடுபிடி இருக்கிறது. ஆனால், பல ஆயிரம் சதுர கி.மீட்டர் விரிந்து கிடக்கும் அந்த வனப்பகுதிகளிலிருந்து எந்த ரூட்டில், எப்படி யெல்லாம் கட்டைகளைக் கடத்தலாம் என்பதில் பி.ஹெச்.டி-யே முடித்திருக்கிறார்கள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

திருப்பதியிலிருந்து நெல்லூர் வழியாக விஜயவாடா, கடப்பாவுக்கு ஒரு ரூட் இருக்கிறது. இந்த ரூட்டில் போலீஸ், வனத்துறையின் கெடுபிடி அதிகமிருப்பதால், அதை எப்போதாவது தான் தேர்வு செய்கிறது கடத்தல் கும்பல். இரண்டாவதாக, திருப்பதியிலிருந்து திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு ஒரு ரூட் இருக்கிறது. மூன்றாவதாக திருப்பதியிலிருந்து ரேணிகுண்டா, புத்தூர், நகரி, திருத்தணி, அரக் கோணம் வழியாகவும் ஒரு ரூட் இருக்கிறது. நான்காவதாக திருப்பதியிலிருந்து ரேணிகுண்டா, காளஹஸ்தி, தடா, பாதிரிவேடு, கும்மிடிப் பூண்டிக்கு ஒரு ரூட் உள்ளது. இந்த நான்கு ரூட்டு களைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் கடத்தல்காரர்கள். இங்கெல்லாம் வாகனச் சோதனை நடத்தி செம்மரங்களைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால், ஆந்திராவிலிருந்து திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு வரும் பாதைகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் அவர்களுக்கு ஆட்களுண்டு. கூடவே, போலீஸாரைக் குழப்பும் வகையில், செம்மரக் கட்டைகளைக் கொண்டுவரும் வாகனங்களுக்கு முன்பு எக்ஸ்கார்டுபோல டூ வீலர்களும் கட்சிக் கொடி கட்டப்பட்ட சொகுசு வாகனங்களும் அணிவகுத்துச் செல்லும்.

செம்மரக் கடத்தலில் இரு மாநில அரசியல்... கோடிகளில் புரளும் தமிழக ‘டான்’கள்!
செம்மரக் கடத்தலில் இரு மாநில அரசியல்... கோடிகளில் புரளும் தமிழக ‘டான்’கள்!

தமிழக ‘டான்’கள்!

செம்மரக்கட்டை பிசினஸில் ஆந்திர ‘டான்’களோடு சேர்ந்துகொண்டு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் கோலோச்சிவருகின்றனர். அவர்களில் போயஸ் கார்டனுக்குப் பெண் கொடுத்தவர் முக்கியமானவர். அடுத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் இருவர். வேலூர் மாவட்டத்தில் தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஒருவர், நடனக்கலைஞர் ஒருவர், ‘கட்டை’ என்ற அடைமொழியுடன் வலம்வரும் நபர், திருத் தணியில் புல்லட் வண்டியில் வலம்வரும் ஒருவர், வெளிநாடுகளில் கட்டை பிசினஸில் ஈடுபடும் சென்னை ராயபுரத்திலுள்ள முஸ்லிம் பிரமுகர் ஒருவர்... எனக் கடத்தல் டான்களின் பட்டியலில் உள்ளனர்.

செம்மரக்கட்டை பிசினஸின் வருமானத்தை அறிந்து வாயைப் பிளந்து, வேலையை ராஜினாமா செய்துவிட்டு கட்டை பிசினஸில் இறங்கிய முன்னாள் காவல்துறை அதிகாரியும் இந்தப் பட்டியலில் உண்டு. இந்தத் தகவல்களை நமக்குத் தெரிவித்ததே காவல்துறையினர்தான். ஆனால், ஆந்திர, தமிழக காவல்துறை பெயர் தெரிந்தும் இவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கூலிக்கு மரம் வெட்டச் சென்றவர்கள், டிரைவர்கள், புரோக்கர்கள் மீதுதான் வழக்குகள் பதிவாகின்றன.

இது குறித்து வழக்கறிஞரும், சமூக ஆர்வலரு மான அருளிடம் பேசினோம். “செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகி ஏராளமான தமிழர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர், கடப்பா, ராஜமுந்திரி, திருப்பதி ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரச்னையின் வீரியம் தெரியாமல் திருவண்ணாமலை மாவட்ட அப்பாவி மலைவாழ் மக்கள்தான் அதிகமாக சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். இவர் களை ஆசைகாட்டி அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் போலீஸிடமோ, வனத்துறையினரிடமோ சிக்கிக்கொண்டாலும் சட்ட, பண பலத்தால் தப்பிவிடுகிறார்கள். ஆந்திர வனத்துறை சட்டத்தின்படி செம்மரங்களை வெட்டிக் கடத்தினால் ஆயுள் தண்டனை வரை விதிக்கப் படுகிறது. மேலும் செம்மரக் கடத்தல் வழக்கில் சிக்கும் தமிழர்களுக்கு ஆந்திர மாநில நீதிமன்றங் களில் ஜாமீன் கிடைப்பதில்லை. எனவே, மலைக்கிராம மக்களுக்குப் போதிய விழிப்பு உணர்வை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

கடத்தலுக்கு மூளையாக இருக்கும் அரசியல், அதிகாரப்புள்ளிகளை ஒடுக்காமல், செம்மரங் களைப் பாதுகாக்கப்போவதாக ஆந்திர அரசு சொல்வது ‘அக்மார்க்’ அயோக்கியத்தனம்!

செம்மரக் கடத்தலில் இரு மாநில அரசியல்... கோடிகளில் புரளும் தமிழக ‘டான்’கள்!

யார் இந்த ‘கட்டை’ பெருமாள்?

சித்தூரிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கடத்திவரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை, ஆந்திர போலீஸார் சேஸிங் செய்து பிடித்தனர். அப்போது கைதானவர்கள்தான் திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த `கட்டை’ பெருமாளும், ஆரணியைச் சேர்ந்த வேலுவும். யார் இந்த `கட்டை’ பெருமாள் என்று விசாரித்தால், `அவர்தாங்க திருவண்ணாமலையின் ‘புஷ்பா’ ‘ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

‘‘திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம், போளூர், ஜமுனா மரத்தூர் சுற்றுவட்டாரத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக செம்மரக்கட்டைகளைக் கடத்துவதற்காக ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்திவைத்திருப்பவர் ‘கட்டை’ பெருமாள். இவர்மீது ஒரு கொலை உட்பட 12 வழக்குகள் உள்ளன. இவரின் மனைவி சாந்தி, போளூர் ஒன்றியக்குழுத் தலைவர். தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவரின் செல்ல மகன் பெருமாளுக்கு தோஸ்த்.

பத்தாம் வகுப்பு வரை படித்த பெருமாள், ஒருகாலத்தில் செம்மரம் வெட்ட ஆந்திராவுக்குக் கூலித் தொழிலாளியாகச் சென்றவர். கடத்தல் நெட்வொர்க்குடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு ஆரணி பைபாஸ் சாலையில் பங்களா டைப் வீடு, சந்தவாசல் அருகே பெட்ரோல் பங்க், பினாமிகள் பெயரில் பிளாட்டுகள், நான்கைந்து சொகுசு கார்கள் என்று இவரின் வாழ்க்கையே மாறிவிட்டது. கடத்தல் சங்கிலியின் 6, 7-வது கண்ணியாக இருக்கும் `கட்டை’ பெருமாளிடமே இவ்வளவு பணம் புரள்கிறது என்றால் செம்மரக்கட்டைக் கடத்தலின் ‘டான்’களின் பின்னணி எப்படியிருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism