Published:Updated:

தீ விபத்து, மண் சரிவு, குடிநீர்த் தட்டுப்பாடு... மிரட்டும் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

பசுமைத் தளம்
பிரீமியம் ஸ்டோரி
பசுமைத் தளம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது உண்மை. அதனால்தான், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு தனிக்குழுவே அமைத்திருக்கிறது

தீ விபத்து, மண் சரிவு, குடிநீர்த் தட்டுப்பாடு... மிரட்டும் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது உண்மை. அதனால்தான், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு தனிக்குழுவே அமைத்திருக்கிறது

Published:Updated:
பசுமைத் தளம்
பிரீமியம் ஸ்டோரி
பசுமைத் தளம்

சேலம் மாவட்டத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ‘பசுமைத் தளம்’ திட்டத்தால், தீ விபத்து, மண் சரிவு, குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியவை ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!

சேலம் எருமாபாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 20.45 கோடி மதிப்பீட்டில் ‘பசுமைத் தளம்’ அமைக்கப்பட்டுவருகிறது. பசுமைத் தளம் எனும் இந்தப் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்லவும், சைக்கிளிங் செல்லவும் வசதிகள் செய்யப்படவிருக்கின்றன. இது குறித்துப் பேசுகிற சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், ‘‘மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்காமல், இரண்டையும் சேர்த்து அதன்மீது பசுமைத் தளம் அமைக்கப்படுகிறது. இதனால், குப்பையின் அழுத்தம் அதிகரித்து, உள்ளிருந்து மீத்தேன் காஸ் வெளியாகி வெடிக்கக்கூடும் அல்லது பெரிய அளவில் தீ விபத்து ஏற்படலாம். நாளடைவில் மண்சரிவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளின் மீது தார்ப்பாய் போட்டு மூடுகிறார்கள். எனவே, மரம், செடிகளை வளர்க்க முடியாது. மேலும் மண்ணுக்குள் செல்லும் மழைநீரையும் தார்ப்பாய் தடுத்துவிடுவதால், வருங்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது’’ என்றார்.

பியூஸ் மனுஷ்
பியூஸ் மனுஷ்

மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் நம்மிடம் பேசும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது உண்மை. அதனால்தான், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு தனிக்குழுவே அமைத்திருக்கிறது. பசுமைத் தளம் திட்டத்தில் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைமை இருக்குமானால், அதற்குக் காரணமான அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

தீ விபத்து, மண் சரிவு, குடிநீர்த் தட்டுப்பாடு... மிரட்டும் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சிபி சக்கரவர்த்தி, “பல ஆண்டுகளாகச் சேர்ந்த குப்பைகளால் சுற்றுப்பகுதிகளில் காற்று மற்றும் குடிநீர் மாசு ஏற்படுவதாக நிறைய புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் முறையாக ஆய்வுசெய்து, அதன் பின்னரே பசுமைத் தளம் அமைக்கும் பணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. எனவே, இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சுற்றுவட்டார மக்களுக்கு மாசு இல்லாத சுத்தமான காற்று கிடைக்கும். குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறக்கூடிய நைட்ரஜன் வாயுவை நான்கு பக்கங்களிலும் குழாய் அமைத்து வெளியேற்றும் வசதி செய்யப்படுகிறது. எனவே, தீ விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை. அடுத்து பசுமைத் தளம் அமைக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் நிச்சயம் உயரும்” என்றார்.

ராமச்சந்திரன்
ராமச்சந்திரன்
கிறிஸ்துராஜ்
கிறிஸ்துராஜ்

மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நம்மிடம், “இந்தத் திட்டத்தில் இருக்கக்கூடிய குறைகள் தொடர்பாக ஆய்வுசெய்து அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை ஆய்வுசெய்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவினரும் திட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்கள். ஆனால், இது குறித்தெல்லாம் இப்போது நாங்கள் எதையும் தெரிவிக்க முடியாது’’ என்றார்.

ஒரு திட்டத்தில் ஏன் இவ்வளவு குளறுபடிகள்... மக்கள் வரிப்பணத்தையும் இயற்கையையும் வீணடிக்காமல், உரிய ஆய்வுசெய்து விரைவில் நடவடிக்கை எடுக்குமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism