Published:Updated:

பாழடைந்த... விற்கப்பட்ட.. காலனியாக்கப்பட்ட... (அ)சமத்துவபுரம்!

சமத்துவபுரம்!
பிரீமியம் ஸ்டோரி
சமத்துவபுரம்!

வேலூர் அருகே பொய்கை ஊராட்சியிலிருக்கும் சமத்துவபுரம், 23 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத் தில்தான் முழுமையாகச் சீரமைக்கப்பட்டிருக்கிறது

பாழடைந்த... விற்கப்பட்ட.. காலனியாக்கப்பட்ட... (அ)சமத்துவபுரம்!

வேலூர் அருகே பொய்கை ஊராட்சியிலிருக்கும் சமத்துவபுரம், 23 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத் தில்தான் முழுமையாகச் சீரமைக்கப்பட்டிருக்கிறது

Published:Updated:
சமத்துவபுரம்!
பிரீமியம் ஸ்டோரி
சமத்துவபுரம்!

தென்காசி மாவட்டம், பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினப் பள்ளிக் குழந்தைகளுக்கு பெட்டிக்கடைக்காரர் மகேஸ்வரன் என்பவர் தின்பண்டம் கொடுக்க மறுத்து விரட்டிய வீடியோ சமீபத்தில் வைரலானது. விவகாரம் பெரிதானதும் விழித்துக்கொண்ட அதிகாரிகள், சாதியப் பாகுபாடு காட்டியவர்களைக் கைதுசெய்திருக்கிறார்கள். அரசின் துரித நடவடிக்கை பாராட்டப்படவேண்டியதுதான். ஆனால், சமூக ஊடகங்களில் வைரல் ஆகாத, ஆயிரக்கணக்கான கொடுமைச் சம்பவங்கள் அன்றாடம் தமிழகமெங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன. வீடியோ வெளிச்சம் பெறாத பல இடங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தாண்டவமாடுகின்றன. இந்தச் சாதியப் பாகுபாட்டின் அடிவேரில் மருத்துவம் செய்ய வேண்டும் என்கிற நோக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டதுதான் சமத்துவபுரம். ஆனால், இன்று அந்தச் சமத்துவபுரங்கள் தன் அடிப்படைத்தன்மையை இழந்து நிற்கின்றன!

தமிழ்நாட்டில் கடுமையாகச் சாதிக் கலவரங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. அனைத்துச் சாதியினரும் ஏற்றத்தாழ்வற்று ஒற்றுமையாக, ஒரே வளாகத்துக்குள் கூடி வாழ வேண்டும் என்கிற நோக்கில், பெரியாரின் கனவுத் திட்டமான ‘சமத்துவபுரம்’ திட்டத்துக்கு உயிர் கொடுத்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆகஸ்ட் 17, 1998-ல், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் தொடங்கப்பட்டது. அப்போது அந்த விழாவில் பேசிய கருணாநிதி, “தமிழர்கள் அனைவரும் ஒரே சமுதாயமாக வாழ வேண்டும். அதற்கு மாவட்டம்தோறும் சமத்துவபுரங்கள் போதாது. இந்த மாநிலமே சமத்துவபுரமாக மாற வேண்டும்” என்றார். சமத்துவபுரம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், கருணாநிதியின் கனவுத் திட்டம் எப்படி இருக்கிறது என்று அறிய களமிறங்கியது ஜூ.வி டீம். கிடைத்த தகவல்கள் நம்மைக் கலங்கடித்தன!

பாழடைந்த... விற்கப்பட்ட.. காலனியாக்கப்பட்ட... (அ)சமத்துவபுரம்!

கருவை மரங்களும் காட்டுச் செடிகளும்... பாழடைந்த சமத்துவபுரங்கள்!

கருணாநிதியால் திறக்கப்பட்ட மேலக்கோட்டை பெரியார் நினைவுச் சமத்துவபுரத்துக்குச் சென்றோம். நுழைவுவாயிலில் புதிதாக பெயின்ட், தெருக்களுக்குப் புதிதாக பேவர் பிளாக் சாலை, அனைத்து வீடுகளிலும் மராமத்துப் பணிகள், மக்களிடையே சகோதரத்துவம் எனச் சிறப்பாக இருந்தது. கருணாநிதியின் கனவு பலித்தது போன்ற ஒர் உணர்வோடு, அங்கிருந்து 10 கி.மீ தொலை விலுள்ள உலகாணி ஊராட்சிச் சமத்துவபுரத்துக்குச் சென்றோம். காத்திருந்தது அதிர்ச்சி!

கருவை மரங்களும், காட்டுச்செடிகளும் சாலையில் மொத்தமாக மூடி திகிலூட்டியது உலகாணி சமத்துவபுரம். தண்ணீர் வசதி, சாலை வசதி, தொடக்கப்பள்ளி, ரேஷன் கடை என அரசு குறிப்பிட்டிருக்கும் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் பாழடைந்துபோயிருந்தது. இதேநிலைதான் உசிலம்பட்டி, திருவாதவூர், வாடிப்பட்டி, குட்லாடம்பட்டி சமத்துவபுரங் களிலும். தேனி மாவட்டத்திலுள்ள சீலையம்பட்டி சமத்துவபுரம், மெயின்ரோட்டிலிருந்து 4 கி.மீ தூரத்தில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. பஸ் வசதி இல்லாததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்துதான் பிரதான சாலைக்குச் செல்கிறார்கள். ரேஷன் கடை கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. பொதுக்கழிப்பறை, தெருவிளக்கு என அடிப்படை வசதிகளே இல்லை. நீர்தேக்கத் தொட்டி பயனற்றுக் கிடக்கிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை மட்டும் உரிய பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வீடுகளும் இடியும் நிலையில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. மற்றச் சமூக வீடுகள் விற்கப்பட்டிருக்கின்றன.

சேலம் மாவட்டம் நடுவலூரிலுள்ள சமத்துவ புரத்தில் 100 வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் அடிப்படை வசதியில்லை என்றும், வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுவதாகவும் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில், ரூப நாராயண நல்லூர் சமத்துவ புரக் குடியிருப்பில் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் வந்துசேர்வதில்லை என்கிறார்கள். மேற்கூரை இடியும் தறுவாயிலுள்ள வீடுகளில்தான் அந்த மக்கள் வசித்துவருகிறார்கள்.

பாழடைந்த... விற்கப்பட்ட.. காலனியாக்கப்பட்ட... (அ)சமத்துவபுரம்!

கந்துவட்டி, சாதியக் கொடுமை... விற்கப்பட்ட வீடுகள்!

வேலூர் அருகே பொய்கை ஊராட்சியிலிருக்கும் சமத்துவபுரம், 23 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத் தில்தான் முழுமையாகச் சீரமைக்கப்பட்டிருக்கிறது. ஜூன் மாத இறுதியில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அந்த வழியாகப் பயணப்பட்டார். அப்போது ‘சமத்துவபுரம் முதல்வர் பார்வையில் பட்டுவிடுமோ?’ என்கிற அச்சத்தில், வீடுகளுக்குப் புதிய வர்ணம் பூசி, தார்ச்சாலை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள். ஆனால், இதுவரை அந்த மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை.

‘ஒரு சமத்துவபுரத்தில் மொத்தம் 100 வீடுகள்’ என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் 5 சென்ட் நிலம் ஒதுக்கப்படும். குடியிருப்பில், 40 சதவிகிதம் பட்டியலினத் தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலா 25 சதவிகிதம், மீதமுள்ள 10 சதவிகிதம் இதர பிரிவினருக்கும் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இப்படி ஒதுக்கப்படும் வீடுகளை மற்றவர்களுக்கு விற்க முடியாது. ஆனால், கடன் கொடுமை, சாதியப் பாகுபாடு காரணமாகப் பத்திரத்தில் எழுதிக் கொடுத்து வீடுகளை விற்கும் அவல மெல்லாம் பல இடங்களில் அரங்கேறியிருக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம், லிங்கம்பட்டி, ராசாபட்டி பகுதிகளிலுள்ள சமத்துவபுரங்களில், பெரும்பாலும் பட்டியலின மக்கள்தான் வசிக்கிறார்கள். இந்த மக்களில் பலருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்திருக்கும் கந்துவட்டிக்காரர்கள், வட்டி செலுத்த முடியாதவர்களிடமிருந்து மிரட்டி வீட்டை எழுதி வாங்கியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி சமத்துவபுரத்தில், சாதியப் பாகுபாடு நிலவுவதால், அங்குள்ள பட்டியல் சமூகத்தினரில் சிலர் வீடுகளை வெளியாட்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர். வள்ளியூர் சமத்துவபுரத்தில் சில வீடுகளில் குடிகாரர்களின் சச்சரவு, பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடு வோரின் தொந்தரவும் இருந்ததால், அருகில் வசித்தவர்கள் வாடகைக்குக் கொடுத்துவிட்டும் மொத்தமாக எழுதிக்கொடுத்துவிட்டும் சென்றதாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகிலுள்ள கலிங்கராஜபுரம் சமத்துவபுரத்தில், சுமார் 50 சதவிகிதத்துக்கும் மேல் பயனாளிகள் தங்கள் வீட்டை விற்பனை செய்துள்ளனர். அவற்றில் பெரும்பாலும் மீனவர்கள் வாங்கி வசிப்பதால், அது மீனவக் குடியிருப்பாகவே மாறிப்போயிருக்கிறது.

“அது எஸ்.சி காலனிங்க...” காலனியாக்கப்பட்ட சமத்துவபுரங்கள்!

சாதியப் பாகுபாட்டைப் போக்குவதற்காகத்தான் சமத்துவபுரமே கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சமத்துவபுரங்களே ‘காலனி’ எனப் பல பகுதிகளில் அழைக்கப்படுகின்றன. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்திலுள்ள பெருமாள்பட்டி சமத்துவபுரத்தில், பல சமூக மக்கள் ஒன்றாக வசித்தாலும் அது ‘காலனி சமத்துவபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. அந்தச் சமத்துவபுரத்துக்கு வந்துகொண்டிருந்த மினி பஸ் வசதியும் நிறுத்தப்பட்டிருப்பதால், பேருந்து நிறுத்தத்துக்கு மக்கள் 2 கி.மீ தொலைவு நடக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக, ஒருவர் பின் ஒருவராகக் குடியிருப்பைவிட்டு வெளியேறி வருகிறார்கள். அந்த மக்களின் இடம் மற்றும் தொகுப்பு வீடு சேர்த்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீதபற்ப நல்லூர் சமத்துவபுரம், ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பாகத்தான் பஸ் நிறுத்தத்தை அந்த மக்கள் போராடிப் பெற்றனர். நூலக, சமுதாயக்கூட கட்டடங்கள் இருந்தாலும், அவை எதுவுமே செயல்பாட்டில் இல்லை. அந்தச் சமத்துவபுரத்தைச் சுற்றுவட்டார மக்கள், ‘அது எஸ்.சி காலனிங்க’ என்றே சொல்கிறார்கள். அதன் நுழைவாயில் பகுதிகள், வாகனங்கள் நிறுத்துமிடமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகூட இல்லாமல் அந்தச் சமத்துவபுர மக்கள் அல்லாடுகிறார்கள். அதேபோல, தேனி மாவட்டம் பிச்சம்பட்டி, தேக்கம்பட்டி சமத்துவபுரங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல், முற்றிலுமாகப் பட்டியலின மக்கள் மட்டுமே வசிக்கும் குடியிருப்புகளாக மாறியிருக்கின்றன.

பாழடைந்த... விற்கப்பட்ட.. காலனியாக்கப்பட்ட... (அ)சமத்துவபுரம்!

சாதி ஒழிப்புத் திட்டமா... வீட்டு வசதித் திட்டமா... அவலங்களுக்கு யார் காரணம்?

சமத்துவபுரத்துக்கான நிலம் கையகப் படுத்துவதற்கு 9 ஏக்கர் பரப்பளவுள்ள அரசு நிலத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். அந்த நிலம், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 2 கீ.மீ தூரத்துக்குள் இருக்க வேண்டும் என்பது விதி. பல கிராமங்களில், ஊரிலிருந்து குறைந்தது ஒரு கி.மீ தொலைவில்தான் பட்டியலின மக்களின் குடியிருப்புகள் இருக்கின்றன. எனவே, அரசு அமைக்கும் சமத்துவபுரங்களையும் ஒதுக்குப்புறத்திலுள்ள ஒரு காலனியாகவே உளவியல்ரீதியாக மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றனர். ‘ஊரும் சேரியும் பிரிந்துகிடப்பதை ஒழிக்க வேண்டும்’ என்று முழங்கியவர் பெரியார். அவர் நினைவில் உருவாக்கப்பட்டுள்ள சமத்துவபுரங்களின் அடிப்படையே இந்த உளவியலால் ஆட்டம் கண்டிருப்பது உண்மை.

ஊரக வளர்ச்சித்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளிடம் பேசினோம். “குடியிருப்பில், ‘அருகருகே இருக்கும் வீட்டினர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது, இட ஒதுக்கீட்டின் படியே வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும்’ என்று விதிமுறைகள் உள்ளன. 1996-2001-ல் 145 சமத்துவபுரங்கள், 2006-2011-ல் 93 சமத்துவபுரங்கள் என தி.மு.க ஆட்சிக்காலத்தில் மொத்தம் 238 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. இதனால், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகளுக்கு, சமத்துவபுரத்தில் மக்களை நிரப்புவது ஓர் அழுத்தமாக மாறியது. எனவே, ‘குடியிருப்புகளுக்கு உரிய நபர்கள் கிடைக்காதபட்சத்தில், இட ஒதுக்கீட்டைத் தளர்த்திக்கொள்ளலாம்’ என்ற விதிமுறையை அதிகாரிகள் தங்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதனால், பெரும்பாலான சமத்துவபுரங்கள் ‘பட்டியலின மக்களின் குடியிருப்புகள்’ ஆகிவிட்டன. சமத்துவபுரம் திட்டம், சாதி ஒழிப்புத் திட்டமா அல்லது வீட்டு வசதித் திட்டமா என்ற அடிப்படைப் புரிதலே அதிகாரிகளுக்கு இல்லை. அரசாங்கமும் அதை எடுத்துச் சொல்லத் தவறிவிட்டது.

பாழடைந்த... விற்கப்பட்ட.. காலனியாக்கப்பட்ட... (அ)சமத்துவபுரம்!

சமத்துவபுரங்களை உரிய வகையில் மக்களிடம் எடுத்துச் செல்லாததும், அது அமைக்கப்பட்டபோது கவனத்தில் கொள்ளாமல்விட்ட சில முக்கிய விஷயங்களும் அதன் நோக்கத்தைக் கெடுத்துவிட்டன. சமத்துவபுரம் அமைக்க நீர் ஆதாரம் குறைவான நிலங்களான புன்செய் நிலங்களையே அரசு தேர்ந்தெடுத்ததால், அங்கு தண்ணீர் கிடைப்பதில்லை. 2006-க்குப் பிறகு உருவாக்கப்பட்ட சமத்துவபுரக் குடியிருப்புகளின் வீடுகள் 17,000 ரூபாய்க்கெல்லாம் அவசர அவசரமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம், கொஞ்ச காலத்துக்குள்ளேயே விரிசல்விடத் தொடங்கிவிட்டன. அடிப்படை வசதிகள் இல்லாதது, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருப்பது போன்ற காரணங்களால் சமத்துவபுரங்களில் வசிப்பவர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க இதில் செய்த தவறுகளைப்போலவே, அ.தி.மு.க-வும் தனது ஆட்சிக்காலத்தில், சமத்துவபுரங்களை மொத்தமாகத் தூக்கிக் கிடப்பில் போட்டுவிட்டது. ஊரக உள்ளாட்சித்துறையின்கீழ் வரும் சமத்துவபுரங்களையும், அங்கு வாழ்ந்த மக்களையும் அரசின் கொள்கை விளக்கக் குறிப்பிலிருந்தே அ.தி.மு.க அரசு நீக்கியது. ஒரு நல்ல சமத்துவபுரத்தை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பள்ளிக்கல்வித்துறை, உணவு வழங்கல்துறை, மின்துறை, கூட்டுறவுத்துறை என ஆறு துறைகள் ஒன்றிணைந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அப்படியாக அரசுத் துறைகள் செய்யத் தவறிய பணிகளால் சமத்துவபுரம் மொத்தமும் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க அரசு சமத்துவபுரத்தை மொத்தமாக மறந்துபோனது. கான்கிரீட் வீடுகளில் புது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று கனவுகளோடு குடியேறிய மக்கள், கண்ணீரோடுதான் வாழ்ந்துவருகிறார்கள்” என்றனர் வேதனையுடன்.

நவீன தீண்டாமையில் அ-சமத்துவபுரங்கள்!

சமத்துவபுரங்களின் இந்தப் பிரச்னைகள் குறித்து அமைச்சர் பெரியகருப்பனிடம் கேட்டோம். “கடந்த பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட எந்த வேலையும் சமத்துவபுரங்களில் நடைபெறவில்லை. கட்டி முடிக்கப்பட்ட ஐந்து சமத்துவபுரங்களிலுள்ள வீடுகளைக்கூட மக்களுக்குக் கொடுக்கவில்லை. இது தொடர்பாகச் சட்டசபையில் நானே பேசியிருக்கிறேன். தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே, அந்த ஐந்து சமத்துவபுரங்களையும் புனரமைப்பு செய்து, மக்களுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். அதுமட்டுமின்றி, 190 கோடி ரூபாய் செலவில் 149 சமத்துவபுரங்களிலுள்ள வீடுகள் முதல் சாலைகள் வரை அனைத்தையும் சரிசெய்து கொடுக்கும் வேலைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. மற்ற சமத்துவபுரங்களிலும் அடுத்த ஆண்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெரியகருப்பன்
பெரியகருப்பன்

ஒருசில சமத்துவபுரங்களில் பட்டியலின மக்கள் அதிகம் வசிப்பதாக எனக்கும் தகவல் வந்தது. பல மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விற்பனை செய்திருக்கிறார்கள், வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். இதை எப்படிச் சரிசெய்வது என ஆலோசனை நடத்தப்படுகிறது. சமத்துவபுரங்களை எந்த நோக்கத்தில் கலைஞர் உருவாக்கினாரோ, அதே நோக்கத்தில் அது செயல்பட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்துவருகிறது. சமத்துவபுரத்தில் அனைத்து சமுதாய மக்களும் சமத்துவமாக, சகோதரத்துவத்துடன் வாழ்வதை தி.மு.க அரசு உறுதிசெய்யும்” என்றார்.

தீண்டாமைச் சம்பவங்கள் ஒரு பக்கம் அதிர்வைக் கிளப்பும் நிலையில், சாதி ஒழிப்பின் ஓர் அங்கமாக உருவாக்கப்பட்ட சமத்துவ புரங்களிலும் நவீன தீண்டாமை அரங்கேறியிருப்பது வருத்தமளிக்கிறது. நமது நேரடி விசாரணையில் பல சமத்துவபுரங்கள், அ-சமத்துவபுரங்களாக மாறியிருப்பதைக் கண்டோம். ‘சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்படும்’ என்ற அறிவிப்போடு தி.மு.க அரசு கழன்றுகொள்ள முடியாது. எந்த நோக்கத்துக்காகச் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டனவோ, அந்த ‘சமூகநீதி’ நோக்கம் சிதைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு, தி.மு.க அரசுக்குக் கூடுதலாகவே இருக்கிறது.

தன் பொறுப்பை உணர்வதோடு, அதைச் செயல்படுத்தவேண்டிய அதிகாரிகளுக்கும் இதைப் புரியவைப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

பாழடைந்த... விற்கப்பட்ட.. காலனியாக்கப்பட்ட... (அ)சமத்துவபுரம்!

எங்கும் எதிலும் தீண்டாமை!

தென்காசி தீண்டாமைக் கொடுமை என்பது, தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் கொடுமைகளில் ஒரு சிறு துளிதான். வெளிச்சத்துக்கு வராமல் நடந்துகொண்டிருக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்குக் கணக்கில்லை!

விருதுநகர் அருகேயுள்ள எல்லிங்க நாயக்கன்பட்டியில், ஆதிக்கச் சமூகத்தினர் நடத்திவரும் டீக்கடைகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘பேப்பர் கப்’களிலும், பிற சமூகத்தினருக்கு சில்வர் டம்ளர்களிலும் ‘டீ’ வழங்கப்படுகிறது. தேனி மாவட்டம், டொம்புச்சேரியைச் சேர்ந்த பட்டியலின மாணவ, மாணவிகள் போடியிலுள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்கள் உப்புக்கோட்டை, பெருமாள்கவுண்டன்பட்டி வழியாக போடிக்கு அரசுப் பேருந்தில் சென்றுவருகிறார்கள். அவர்களைப் பேருந்தில் ஏறவிடாமல், ஏறினால் இருக்கையில் அமரவிடாமல் தடுப்பதாகத் தீண்டாமைக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. “தேனி கலெக்டர், போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தீண்டாமைக் கொடுமை இன்னமும் தொடர்கிறது” என்கிறார்கள் டொம்புச்சேரி மாணவர்கள்.

திருச்சி வையம்பட்டி அருகேயுள்ள தெற்கு அம்மாபட்டி கிராமத்தில், பட்டியலினச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கையைக் குவிக்கச் சொல்லி தண்ணீர் ஊற்றும் கொடுமை இன்னமும் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திலும் சாதியப் பாகுபாடு நிலவிவருகிறது. ஒரு கிராமத்தில், ஒரு வாரம் மாற்றுச் சமூக மக்களும், அதற்கு அடுத்த ஒரு வாரம் பட்டியல் சமூக மக்களும் எனப் பிரித்துத்தான் வேலைகள் வழங்கப்படுகின்றன. அதிலும், மாற்றுச் சமூக மக்கள் வாழும் பகுதிகளிலுள்ள ஓடைகள், தெருக்கள், கால்வாய்களைப் பட்டியலின மக்கள் சரிசெய்கிறார்கள். ஆனால், பட்டியல் சமூக மக்கள் வாழும் பகுதிகளில், மாற்றுச் சமூகத்தினர் வேலை செய்வதில்லை.

அரக்கோணம் கும்பினிப்பேட்டை அரசுப் பள்ளியில் படிக்கும் பழங்குடியினக் குழந்தைகளிடம் ஆசிரியர்களே பாகுபாடு காட்டுவதால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. ஆனாலும், வருகைப் பதிவேட்டில் அந்தக் குழந்தைகள் தினமும் வந்து செல்வதாக மட்டும் பதிவுசெய்யப்படுகிறது. நம்மிடம் பேசிய பெண்ணியச் செயற்பாட்டாளர் சுகந்தி வினோதினி, “அரக்கோணம் அருகிலிருக்கும் தணிகைப்போளூர் அரசுப் பள்ளியில் பயிலும் நரிக்குறவ இனப் பிள்ளைகளுக்கும் இதே நிலைதான்” என்கிறார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்திலுள்ள கொக்கம்பட்டியில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள், மாற்றுச் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குள் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என்கிற கட்டுப்பாடு இருக்கிறது. அதே ஒன்றியத்தில் வரும் பாகநத்தம் கிராமத்திலும் இதே பிரச்னைதான். கடவூர் ஒன்றியத்திலுள்ள பூலாம்பட்டி, மாமரத்துப்பட்டி பகுதிகளிலும் பட்டியல் சமுதாய மக்களுக்குச் செருப்பு அணிந்து செல்ல, டூ வீலர்களில் பயணிக்கத் தடை இருப்பதாகச் சொல்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். சின்னமநாயக்கன்பட்டி கிராமத்திலுள்ள சமுதாயக் கூடத்தை, அங்குள்ள பட்டியல் சமுதாய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் தனித்தனிச் சுடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை மக்கள் பிரதிநிதிகளே ஒதுக்குவதுதான் வேடிக்கை. வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் ஆதிக்கச் சமூகத்தினர் இதுவரை தேர்தலை நடத்தவிடாமல் தடுத்துள்ளனர். ‘இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்படாத வரை தேர்தலையும் நடத்தவிடக் கூடாது’ எனப் பெரும்பான்மைப் பிரிவினர் ஊர்கூடி முடிவுசெய்திருக்கிறார்கள். இப்படியாக எங்கும் எதிலும் தீண்டாமைக் கொடுமை பற்றியெரிகிறது!