Published:Updated:

சாத்தான்குளம்... வேகமெடுக்கும் விசாரணை... திசை திருப்பும் சக்திகள்!

சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்

காதல் விவகாரம்... செல்போன் மர்மம்... சாதிச்சாயம்... மனநோயாளி நாடகம்

சாத்தான்குளம்... வேகமெடுக்கும் விசாரணை... திசை திருப்பும் சக்திகள்!

காதல் விவகாரம்... செல்போன் மர்மம்... சாதிச்சாயம்... மனநோயாளி நாடகம்

Published:Updated:
சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்
சாத்தான்குளம் போலீஸார்மீதான இரட்டைக் கொலை வழக்கை நாடே உற்றுக் கவனிக்கிறது. சி.பி.சி.ஐ.டி போலீஸின் கைது நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.

இதை முன்வைத்து கடந்த இதழில் சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரையில், ‘ஆரம்ப ஜோரில் கைது, சிறையில் அடைப்பு என்றெல்லாம் வேகம் காட்டுவார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு மக்கள் இதை மறக்க ஆரம்பித்ததும், தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நீர்த்துப்போகும் அளவுக்கான சாட்சிகள், காரணங்களையெல்லாம் எடுத்துவைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் போகச் செய்துவிடுவார்கள்’ என்று எழுதியிருந்தோம். ஆனால், மக்கள் மறக்க ஆரம்பிப்பதற்கு முன்னதாக... இப்போதே இந்த வழக்கை திசை திருப்பி நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் சி.பி.சி.ஐ.டி தரப்பிலிருந்து கசியவிடப்படும் தகவல்களைப் பார்ப்போம்...

`பென்னிக்ஸ் குடும்பத்தினர்’
`பென்னிக்ஸ் குடும்பத்தினர்’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செல்போன் மர்மம்... காதல் விவகாரம்!

பென்னிக்ஸ் கடையை மூடாமல் இருந்ததால்தான் அவரின் தந்தைக்கும், சிறப்பு உதவி காவல் ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அந்தச் சிறப்பு உதவி ஆய்வாளர், சம்பவ இடத்திலிருந்து சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் செல்போனில் சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்ரீதர், “மரக்கடைக்காரனா... அவன்கிட்ட ஏற்கெனவே ஒரு விவகாரம் இருக்குது. ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வா” என்று உத்தரவு போட்டுள்ளார்.

உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் டீம் அங்கு சென்று ஜெயராஜை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தது. அங்கு விசாரணை நடக்கும்போது ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்களிடம், “அவன்கிட்ட ஒரு வீடியோ சிக்கியிருக்கு. அதைப் பத்தி அவன் சொல்ற வரைக்கும் விடாதீங்க” என்று சொல்லியிருக்கிறார். ‘நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஒரு வி.ஐ.பி-யின் செல்போனில் இருந்த ரகசிய விவகாரம் பென்னிக்ஸ் கைக்குச் சென்றிருக்கிறது; அதை வாங்கவே ஸ்ரீதர் முயன்றுள்ளார்’ என்று சி.பி.சி.ஐ.டி தரப்பில் சொல்கிறார்கள். கூடுதலாக, வி.ஐ.பி ஒருவரின் பேத்தியை பென்னிக்ஸ் காதலித்தார்; அதனால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஒரு காதல் விவகாரத்தையும் கசியவிடுகிறார்கள்

அன்றிரவு நடந்தது என்ன?

பென்னிக்ஸுக்கு நெருக்கமான நண்பர்கள் ஏழு பேர். அவர்களில் இருவர் வழக்கறிஞர்கள். அவர்களிடம், `இந்தத் தகவல்கள் உண்மையா?’ என்று கேட்டோம். “பென்னிக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், எங்க ஏழு பேர்கிட்டதான் நெருக்கமாக இருப்பான். நாங்க தினமும் அவன் செல்போன் கடைக்குப் போவோம். டீ சாப்பிடுவோம். எங்களுக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருந்ததில்லை.

செல்போன் வீடியோ அவன்கிட்ட சிக்கியிருக்கு, காதல் விவகாரம், கட்சிப் பின்னணி... இப்படி போலீஸ் கசியவிடுற தகவல்கள் எங்களுக்கும் வருது. இவை எல்லாமே வதந்தி. முழுக்க முழுக்கப் பொய். இட்டுக்கட்டி வழக்கை திசை திருப்புகிறார்கள். தவிர, அந்த ஸ்டேஷன்ல இதுக்கு முன்னாடியும் எந்தக் காரணமும் இல்லாமல் பலரையும் இப்படி வெறித்தனமா அடிச்சிருக்காங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பென்னியோட அப்பா ஜெயராஜை ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போனதும், எங்களில் ரெண்டு பேர் ஸ்டேஷனுக்குப் போயிட்டோம். அங்கே நடந்ததை நேரில் பார்த்தோம். ஸ்டேஷனில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், பென்னியை அடிக்கும்போது பென்னி, அவர் கையைத் தடுத்தான். பென்னி ஜிம்முக்கெல்லாம் போற ஆளு. நல்ல உடல்வாகு. கையை தடுத்ததுல எஸ்.ஐ நிலை தடுமாறிட்டார். அந்தக் கோபத்தில், ‘போலீஸையே அடிக்கிறியா’னு எல்லாரும் சேர்ந்து பென்னியை அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்களையெல்லாம் வெளியே தள்ளி கதவைப் பூட்டிட்டாங்க. இரவு முழுவதும் நாங்க வெளியே காத்திருந்தோம். விடிய விடிய அவங்களோட கதறல் சத்தத்தைக் கேட்கச் சகிக்கலை. எங்களால் அழுறதைத் தவிர அப்போ எதுவும் செய்ய முடியாமப் போயிருச்சு... இந்த வருத்தம் சாகற வரைக்கும் எங்களுக்கு இருக்கும்” என்று கண்கலங்கியவர்கள், தொடர்ந்து பேசினார்கள்.

ஜெயராஜ்,  பென்னிக்ஸ்
ஜெயராஜ், பென்னிக்ஸ்

“பென்னிக்ஸ், ஜெயராஜ் ரெண்டு பேரும் இறந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டதும், பதறி அடிச்சிக்கிட்டு நாங்கதான் ‘ரெண்டு பேர் மரணத்திலும் சந்தேகம் இருக்குது’ன்னு உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு பென்னியின் அம்மா செல்வராணி பெயரில் புகார் மனு தயார் செய்து கொடுத்தோம். அவங்க இறப்புக்கு நீதி கிடைக்கணும்னு முதன்முதலில் சாத்தான்குளம் பஜாரில் உள்ள காமராஜர் சிலை முன்னால போராட்டம் செய்து, தரையில் உட்கார்ந்ததும் நாங்கதான்.

இத்தனையும் சொன்ன நாங்க, அவங்க ரெண்டு பேரின் மரணத்துக்குப் பின்னால் முக்கியப் பிரமுகர் இருக்கிறார் என்றால், அதையும் வெளியிட்டிருப்போமே. ஆனால், சிலர் இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சியாக தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். ரெண்டு பேரோட இறப்புக்கு நீதி கிடைக்க ஆரம்பத்துல இருந்தே நாங்க பல வழிகளிலும் போராடுகிறோம். அதனால, போலீஸ் தரப்பு எங்களை எதிரியாகப் பார்க்குது. தொடர்ந்து அச்சுறுத்தல்களும் வருது. அதனால, நாங்க எங்கேயும் தனியாகப் போறதே இல்ல” என்றார்கள் பதற்றத்துடன்!

சாதிச்சாயம்!

இன்னொரு பக்கம் போலீஸ் தரப்பில் இந்த வழக்கை, சாதிரீதியாகத் திசை திருப்பி நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர் வினிலாவுக்கு ஆதரவாக பனங்காட்டுப்படை கட்சி இருப்பதாகச் சர்ச்சை கிளம்பியது. இது குறித்து அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாரிடம் கேட்டோம். “இருவரின் மரணத்துக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இருவரையும் பரிசோதனை செய்து சிறையில் அடைக்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிக்கை அளித்த மருத்துவர், நேரில் பார்க்காமலேயே ரிமாண்ட் செய்ய உத்தரவிட்ட மாஜிஸ்ட்ரேட், தாக்குதல் நடத்திய காவலர்கள், சிறை அதிகாரிகள் என இந்தக் கொடூர சம்பவத்துக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். சாதி என்பதைத் தாண்டி நீதிதான் இந்த விஷயத்தில் முக்கியம்” என்றார் உறுதியாக.

செல்வகணபதி ராஜா - கண்ணன் - ஜேக்கப் - எலிசா - முருகேஷ்ராஜா
செல்வகணபதி ராஜா - கண்ணன் - ஜேக்கப் - எலிசா - முருகேஷ்ராஜா

இது குறித்துப் பேசிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஜான் பாண்டியன், “சிலர் இந்த விவகாரத்தை சாதிரீதியாகக் கொண்டு சென்றுவிட்டார்கள். குறிப்பாக, வணிகர் சங்கத்தினர் இந்தப் பிரச்னைக்காக கடையடைப்பு நடத்தி, தீவிரம் காட்டினார்கள். இதற்கு முன்பு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்துக்குச் சென்றவர்கள்மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி, ஏழு அப்பாவிகளைக் கொன்றார்கள். அப்போதெல்லாம் வணிகர் சங்கம் மட்டுமல்ல... நீதிமன்றம்கூட தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்யவில்லையே” என்று படபடத்தார்.

மனநோயாளி நாடகம்

பாலகிருஷ்ணன் சிறையில் மிகவும் அமைதியாக இருக்கிறார். யாருடனும் பேசுவதில்லை. அதேசமயம் ரகுகணேஷ் குறித்து அவரின் குடும்பத்தினர் திட்டமிட்டு, சில தகவல்களைப் பரப்பு கிறார்கள். ‘அவன் மன உளைச்சலில் இருந்தான். அதுக்கான மாத்திரை யெல்லாம் எடுத்துக் கிட்டிருந்தான்’ என்று ரகுகணேஷின் அம்மா கூறிவருவதாகத் தகவல் கிடைத்தது. நாம் அவரிடமும் பேசினோம். “ரகுகணேஷ் மன உளைச்சலுக்காக எந்த மருத்துவரைப் பார்த்தார், என்ன நடந்தது?’ என்று கேள்விகளைக் கேட்டோம். அவரிடம் பதில் இல்லை. அமைதியாகிவிட்டார். `மனநிலை சரியில்லாமல் இப்படிச் செய்துவிட்டதாக இட்டுக்கட்டவே இப்படி ஒரு நாடகம்’ என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அந்த ஐந்து பேர்!

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் ‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பினர் தாக்கியதாகச் சர்ச்சை உள்ளது. ஜெயராஜின் மனைவி செல்வராணி தன் புகாரிலும் ஜேக்கப், எலிசா, கண்ணன், செல்வகணபதி ராஜா, முருகேஷ்ராஜா என அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர்கள்மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தநிலையில் அவர்களைத் தேடிக் கிளம்பினோம். ஆனால், அனைவரது செல்போன் எண்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன.

கடும் முயற்சிகளுக்குப் பிறகு அந்த ஐந்து பேரின் முகவரிகளைக் கண்டுபிடித்தோம். அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்றோம். நெடுங்குளத்தைச் சேர்ந்த ஜேக்கப், தஞ்சை நகரத்தைச் சேர்ந்த எலிசா, அமிர்தவிளைநகரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரின் வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள முருகேஷ் ராஜாவின் வீட்டில் அவரின் வயதான பாட்டி மட்டுமே இருந்தார். பாட்டியிடம் பேசியபோது, அவருக்குச் சரியாகக் காது கேட்கவில்லை. அதனால், அங்கிருந்து மேலசாத்தான்குளம், கிருஷ்ணன்கோயில் தெருவைச் சேர்ந்த செல்வகணபதி ராஜாவின் வீட்டுக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திகொண்டதும், வீட்டுக்குள் அழைத்துப் பேசினார் அவரின் தந்தை ராமகிருஷ்ணன்.

“என் பையன் பாலிடெக்னிக் ரெண்டாவது வருஷம் படிக்கிறான். இன்னும் ஒரு வருஷப் படிப்பு இருக்கு. `கொரோனா ஊரடங்கு நேரத்துல தன்னார்வலர்கள் தேவை’னு சாத்தான்குளம் தாலுகா ஆபீஸுலருந்து சொன்னாங்க. அதனால அந்தக் குழுவுல அவன் சேர்ந்தான். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மாதிரியான வேலைகளைப் பிரிச்சுக் கொடுப்பாங்களாம். பாதுகாப்புப் பணிக்காக ஸ்டேஷன்ல இருந்து கூப்பிட்டா போவான். இப்போ என் மகன் மீது பழி விழுந்திருச்சு. ரொம்ப வேதனையா இருக்கு” என்று விம்மி அழுதார். தன் மகன் கொரோனா தன்னார்வலர் என்பதற்கான அடையாள அட்டையையும் அவர் நம்மிடம் காட்டினார்.

‘போலீஸ் ஆசை’ காட்டிய எஸ்.ஐ-க்கள்!

மேற்கண்ட ஐந்து பேரின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். “செக்போஸ்ட் சோதனைகள், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல்னு ஒவ்வொருத் தருக்கும் ஒவ்வொரு வேலையைக் கொடுத்தாங்க. கொஞ்ச நாளிலேயே ஸ்டேஷன் முழுக்க நல்லாப் பழகிட்டாங்க. எஸ்.ஐ ரகு கணேஷ், ஒரு பைக்குல முன்னால போவார். ரெண்டு பைக்குகள்ல அஞ்சு பேர் அவர் பின்னாலயே போகணும். ரகுகணேஷ் தன்னை ‘சிங்கம்’னு சொல்லிக்குவார். இவங்களுக்கு ஆரஞ்சு கலர்ல யூனிஃபார்ம் மாதிரி டீ-ஷர்ட்களை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் வாங்கிக் கொடுத்தார்.

பென்னிக்ஸின் நண்பர்கள்...
பென்னிக்ஸின் நண்பர்கள்...

ஒருகட்டத்துல அவங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாலும் செய்யற அளவுக்கு மாறிட்டாங்க. போலீஸ் கட்டிங், கையில காப்புனு கெட்டப்பையும் மாத்திக்கிட்டாங்க. ‘எதுக்குடா இப்படி ஸ்டேஷனே கதின்னு கிடக்குறீங்க’ன்னு கேட்டா, ‘ரகுகணேஷ் சாரும், பாலகிருஷ்ணன் சாரும் அடுத்த செலக்‌ஷன்ல எங்களை போலீஸ் ஆக்கிடுறோம்னு சொல்லியிருக்காங்க’னு சொன்னாங்க. போலீஸ் வேலை ஆசையைக் காட்டித்தான் அந்தப் பசங்களை இப்படி மாத்திட்டாங்க” என்று வருத்தப்பட்டனர்.

வாக்குவாதம் மட்டுமே காரணமா?

இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே எழுப்பப்படும் ஒரு சந்தேகம், ‘போலீஸிடம் வாக்குவாதம் செய்ததற்காகவா இப்படி வெறித்தனமாகத் தாக்கி கொலை செய்வார்கள்?’ என்பதே. இந்தக் கேள்விக்கு விடை தேடி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் கடைகள் அமைந்துள்ள தெருக்களில் பலரிடமும் விசாரித்தோம். ஜெயராஜை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றதற்கு முந்தைய நாளில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள் அங்கிருப்பவர்கள். முந்தைய நாளன்று கடைகளை மூடச் சொல்லி போலீஸார் மைக்கில் அறிவித்திருக்கிறார்கள். அதைக் கேட்ட ஜெயராஜ், ‘மணல் கொள்ளையர்கள், கொலைகாரங்க கிட்டலாம் கனிவு காட்டுற போலீஸ் நம்மகிட்டதான் வீரத்தைக் காட்டுவாங்க’ என்று சொன்னதுடன், தடித்த வார்த்தைகளையும் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. அதை, அங்கிருந்த யாரோ இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரிடம் சொன்னாராம். இதன் பின்னணியிலேயே தாக்குதல் நடந்திருக்கிறது என்கிறார்கள்.

இதற்கிடையே இருவரையும் லத்தியால் மட்டுமல்ல, இரும்பு ராடாலும் தாக்கியுள்ளார்கள். நீதிபதி பாரதிதாசன் ஸ்டேஷனில் விசாரித்துக்கொண்டிருந்தபோது, அந்த இரும்பு ராடை மறைக்கவே ஒரு காவலர் தப்பி ஓடிச் சென்றார் என்றும் சொல்கிறார்கள்.

காரணம் எதுவாக இருப்பினும் நடந்துள்ளது மனிதத்தன்மையற்ற கொடூரம். அதே சமயம் இந்த வதந்திகளைத் தாண்டி உண்மைகளை வெளிக்கொண்டுவந்து மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டிய பொறுப்பு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு உள்ளது. காவலர்களைக் காப்பாற்றவோ, அதிகாரவர்க்கத்தினரை அமைதிப்படுத்தவோ எந்தச் சமசரத்துக்கும் அவர்கள் ஆளாகக் கூடாது.

சிறைக்குள் அத்துமீறிய ஸ்ரீதர்!

ஸ்ரீதரைக் கைது செய்த போலீஸார் முதலில் அவரை தூத்துக்குடி மாவட்டம், பேரூரணிச் சிறையில் அடைத்தார்கள். அங்கு அவரது அத்துமீறல்களைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள் சிறைக் காவலர்கள்.

ஸ்ரீதர் சிறைக்கு அழைத்துவரப்படும் முன்பே ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறைக்குள் வருபவர்களுக்கு நடக்கும் வழக்கமான பரிசோதனைக்கு ஸ்ரீதர் ஒத்துழைக்கவில்லை. சிறைக்குள் தனக்குத் தனி அறை வேண்டும் என்றும் கேட்டுள்ளார். சிறை கண்காணிப்பாளரும், அவருக்குத் தனி அறையை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

இரவில் அறைக்கதவை மூடி வைக்க வேண்டும் என்பது சிறை விதி. ஆனால், ஸ்ரீதர் தனது அறையை மூடக் கூடாது என்று பிரச்னை செய்துள்ளார். “நான் உள்ளே அடைந்து கிடக்க முடியாது. தூக்கம் வரவில்லையென்றால் வெளியே நடமாடுவேன். நான் இன்ஸ்பெக்டர் என்பதை மறந்துவிடாதே” என்று மிரட்டியிருக்கிறார். ஆனால், காவலர்கள் கண்டுகொள்ளவில்லை. நள்ளிரவிலும் பலமுறை, “அறைக்குள் காற்று வரவில்லை; மூச்சு அடைக்கிறது... நான் வெளியே வந்தால் உங்களைச் சும்மா விட மாட்டேன்” என்றெல்லாம் சத்தம் போட்டுள்ளார். மேலும், “என்னை மதுரைச் சிறைக்கு மாற்றுங்கள்; இங்கு எனக்குப் பாதுகாப்பு சரியில்லை” என்று கத்தியிருக்கிறார்.

ஜூலை 4-ம் தேதி மாலை மதுரைச் சிறைக்கு மாற்றுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, ஐந்து பேரையும் மதுரை மத்தியச் சிறைக்கு போலீஸ் வாகனத்தில் கொண்டு சென்றிருக்கிறார்கள். செல்லும் வழியிலும் பாதுகாப்புக்கு வந்த ஆய்வாளரிடம் அவர், “உன் செல்போனைக் கொடு. நான் ஒரு போன் பேசணும்” என்று கேட்டாராம். அதற்கு ஆய்வாளர், “யாருக்கு பேசணும்?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஸ்ரீதர், “என்னைவிட ஜூனியர்... நீ எனக்கு ஆர்டர் போடுறீயா?” என்று ஏக வசனத்தில் பேசினாராம்.

நீதிபதிகள் மாற்றம்... வழக்கமான நடைமுறையே!

சாத்தான்குளம் வழக்கைத் தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளான பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் விசாரணையையும் கண்காணித்தனர். இவர்களில் பி.என்.பிரகாஷ், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஆர்வம் காட்டியதாலேயே பிரகாஷ் மாற்றப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையும் விசாரித்தோம். உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை. நீதிபதி மாற்றம் என்பது ஒரு மாதத்துக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட விஷயம் என்றார்கள் நேர்மையான முன்னாள் நீதிபதிகள் சிலர்.