Published:Updated:

போதை... மோதல்... உளச்சிக்கல்... பாதை மாறும் பள்ளி மாணவர்கள்!

பள்ளி மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பள்ளி மாணவர்கள்

ஆசிரியர்களும் போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், அவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

போதை... மோதல்... உளச்சிக்கல்... பாதை மாறும் பள்ளி மாணவர்கள்!

ஆசிரியர்களும் போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், அவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

Published:Updated:
பள்ளி மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பள்ளி மாணவர்கள்

பள்ளி வளாகத்துக்குள்ளேயே அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் ஒரு மாணவன்... ஆசிரியரிடம் ஆபாசமாகப் பேசியும், தாக்கவும் முற்பட்டிருக்கிறான் ஒரு மாணவன்... வகுப்பறையில்வைத்தே சக மாணவிக்குத் தாலி கட்டியிருக்கிறான் ஒரு மாணவன்... வகுப்பறை மேசைகளை உடைப்பது, பள்ளிச் சீருடையில் மது அருந்துவது, சாலையில் மாணவிகள் குழுவாக மோதிக்கொண்டது எனத் தமிழகம் சமீபமாகக் கண்டுவரும் காட்சிகள் அதிர்ச்சிக்குரியவை...

“கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகள் இயங்கவில்லை. அதனால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மோதல் போக்கைக் கையாள்கிறார்கள். அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, கவுன்சலிங் கொடுப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். மாணவர்களுடைய தவறான போக்குகளைத் தடுப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” - சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசிய சொற்கள் இவை...

அமைச்சரின் பேச்சில் வெளிப்பட்ட மாணவர்கள் குறித்த கவலைக்கும் பதற்றத்துக்கும் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் நிகழ்ந்தேறியிருக்கின்றன. போதைப்பொருள் பயன்படுத்துவது, மோதலில் ஈடுபடுவது, விபரீதமான செயல்களில் இறங்குவது எனப் பாதை மாறும் பள்ளி மாணவர்களின் நிலை, நாளுக்கு நாள் கவலையளிக்கிறது. ஏன் திடீரென இத்தனைச் சம்பவங்கள்... என்ன காரணம் அதன் பின்னணியில்... அரசுப் பள்ளி மாணவர்களிடம் மட்டும்தான் இத்தகைய பிரச்னைகளா... எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்... என்ன தீர்வு?

போதை... மோதல்... உளச்சிக்கல்... பாதை மாறும் பள்ளி மாணவர்கள்!
போதை... மோதல்... உளச்சிக்கல்... பாதை மாறும் பள்ளி மாணவர்கள்!

மாணவர்களைச் சீரழிக்கும் போதை கலாசாரம்!

செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்த களத்தூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சிலர், அரசுப் பேருந்தில் பயணித்தபடி மது குடித்த விவகாரம் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவம், செங்கல்பட்டு எல்லையோடு மட்டும் முடிந்துவிடவில்லை. மணப்பாறை, திருச்செங்கோடு, கரூர் எனத் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் மது குடிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிரவைத்தன. ‘21 வயது நிரம்பாத எவருக்கும் மது விற்கப்படாது’ என அனைத்து டாஸ்மாக் வாசல்களிலும் பலகைகள் தொங்கும் நிலையில், 17 வயதுகூட நிரம்பாத மாணவர்களிடம் மது பாட்டில்கள் எப்படி வந்தன... மது மட்டுமல்ல, கஞ்சாப் பழக்கத்துக்கும் மாணவர்கள் பலர் அடிமையாகியிருக்கிறார்கள். தமிழகம் முழுக்க மாணவர்களை மட்டுமே குறிவைத்து கஞ்சா வியாபாரம் செய்வதற்கென சில குழுக்கள் இயங்குகின்றன. காக்கிகள் சிலரின் ஒத்துழைப்புடனேயே நடப்பதால், இந்த விபரீதத்தைத் தடுக்க வழியில்லை.

நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “மாணவர்கள் ஈடுபடும் பல குற்றங்களுக்கு போதைதான் அடிப்படைக் காரணியாக இருக்கிறது. வழக்கமான மது, கஞ்சா போன்ற பொருள்களைத் தாண்டி பவுடர்களாக, சாக்லேட்டுகளாக, ஸ்டேஷனரிப் பொருள்களாக... என நம்மால் கற்பனைகூட செய்ய முடியாத பல வடிவங்களில் மாணவர்களுக்குப் போதைப்பொருள்கள் கிடைக்கின்றன. இந்த விஷயத்தில் உளவுத்துறை முழுமையாகத் தோற்றுவிட்டது என்பதே என் கருத்து. பள்ளிக்கூடத்தைக்கூடப் பாதுகாப்பான இடமாக வைத்துக்கொள்ள முடியவில்லை; மாணவர்களுக்குக்கூட உரிய பாதுகாப்பை வழங்க முடியவில்லை என்றால் இந்த அரசின் பணிதான் என்ன?

ஆசிரியர்களும் போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், அவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து யோசிக்க வேண்டும். தண்டனை கொடுத்தால் சரியாகிவிடும் என்று யோசிப்பது தவறு. போதையால் உண்டாகும் பாதிப்புகள் குறித்துப் பக்குவமாக எடுத்துச்சொல்ல வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும், மாணவர்களுக்குப் படிப்பு மட்டுமல்லாமல் இலக்கியம், கலை, விளையாட்டு உள்ளிட்ட அழகியல் மற்றும் மகிழ்ச்சிகரமான செயல்பாடுகளின்மீது ஆர்வத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்’’ என்றார்.

போதை... மோதல்... உளச்சிக்கல்... பாதை மாறும் பள்ளி மாணவர்கள்!
போதை... மோதல்... உளச்சிக்கல்... பாதை மாறும் பள்ளி மாணவர்கள்!

மோதல்... அடிதடி... அத்துமீறும் மாணவர்கள்!

நெல்லை மாவட்டம், பள்ளக்கால் புதுக்குடி அரசுப் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டதில், செல்வசூர்யா என்கிற மாணவன் கல்லால் அடித்துத் தாக்கப்பட்டு மரணமடைந்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தலைமை ஆசிரியரை பீர் பாட்டிலை உடைத்துக் குத்த முயன்றிருக்கிறார். அதேபோல, கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடி அரசு உதவி பெறும் பள்ளியில், ஆசிரியரை அவமதிக்கும்விதமாக மாணவர்கள் அவரைச் சுற்றி ஆட்டம்போட்டதும், அவரை நாற்காலியைத் தூக்கி அடிக்கப்போவதும், “போட்டுப் பார்த்துடுவோமா... ஒழுங்கா வீடு போகமாட்டே” என ஆசிரியரிடம் மாணவன் அத்துமீறிப் பேசுவதுமான காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

சினிமா உண்டாக்கும் தவறான பிம்பங்களால், ஒருசில கல்லூரி மாணவர்களிடம் மட்டுமே இருந்துவந்த இந்த ‘ஹீரோயிச’ச் செயல்பாடு, தற்போது பள்ளி மாணவர்களிடமும் தொற்றிக்கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவன், தன்னுடன் படிக்கும் சக மாணவிக்குப் பள்ளி வளாகத்தில்வைத்தே தாலி கட்டியிருக்கிறார். மாவட்டக் கல்வி அலுவலர் அன்பழகன் தலைமையில் தற்போது விசாரணை நடைபெறுகிறது. மாணவர்களின் கட்டுப்பாடற்ற, ஒழுக்கமற்ற இந்த மனநிலையால், செயல்களால் கல்விச்சூழல் ஆபத்தான ஒரு நிலையை நோக்கிச் சென்றுகொண்டி ருக்கிறது என்று கவலைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.

நம்மிடம் பேசிய அரசுப்பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி, “கொரோனா காலகட்டத்தில் தங்களைவிட அதிக வயதுடையவர்களுடன் பழகி பல்வேறு பழக்கவழக்கங்களை மாணவர்கள் கற்றுக்கொண்டுவிட்டனர். ஆனால், மாணவர்கள் செய்கிற எந்தத் தவறும் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. நாம் சொன்னால்கூட, ‘என் குழந்தை தவறு செய்ய மாட்டான்’ என ஆசிரியர்களிடமே சண்டைக்குச் செல்கிறார்கள். பாடம் நடத்துவது, தேர்வுவைப்பது எனத் தங்கள் வேலைகளை முடிப்பதில் மட்டுமே ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடிகிறது. அலுவலக உதவியாளர்கள் இல்லாமல், பல பள்ளிகளில் அந்த வேலையையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியிருக்கிறது. பாடங்களை முழுமையாக நடத்தாத நிலையில், திடீரென பொதுத்தேர்வு, சிலபஸ் குழப்பங்கள் என ஆசிரியர்களுக்கு அழுத்தம் அதிகரித்ததால், அந்த அழுத்தத்தை மாணவர்கள்மீது சுமத்துகிறார்கள் சில ஆசிரியர்கள். ஓர் ஆசிரியரை மாணவன் அச்சுறுத்தும்போது, மற்ற ஆசிரியர்கள் கண்டுகொள்வது இல்லை. கால மாறுதல்களுக்கு ஏற்ப மாணவர்களிடம் மாற்றம் வரும்போது, ஆசிரியர்களும் மாற வேண்டும்” என்றார்.

போதை... மோதல்... உளச்சிக்கல்... பாதை மாறும் பள்ளி மாணவர்கள்!
போதை... மோதல்... உளச்சிக்கல்... பாதை மாறும் பள்ளி மாணவர்கள்!

பேரிடர் காலத்தின் விளைவு... மனஅழுத்தத்தில் மாணவர்கள்!

இந்தப் பிரச்னையில் பெற்றோர், ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் ‘கொரோனா மிகப்பெரும் பாதிப்பை, தமிழகக் கல்விச் சூழலில் ஏற்படுத்தியிருக்கிறது’ என்பது. நம்மிடம் பேசிய மனநல மருத்துவர் பூங்கொடி, “ஊரடங்கு தாக்கம்தான் மாணவர்களின் தற்போதைய அத்துமீறல்களுக்கு முதன்மையான காரணம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது என்பது படிப்பதற்காக மட்டுமல்ல. காலையில் எட்டு மணிக்குப் பள்ளியில் இருக்க வேண்டும் என்கிற நேர மேலாண்மையில் தொடங்கி ஒழுக்கம், கீழ்ப்படிதல், பொறுப்பு எனப் பல்வேறு விஷயங்கள் அதில் அடங்கியிருக்கின்றன. ஐந்து வயதிலிருந்து தொடங்கும் இந்தப் பழக்கம் திடீரென கொரோனாவால் தடைப்பட்டது. இந்த கொரோனா காலம், தேவைக்கதிகமான சுதந்திரத்தையும் தனிமையையும் மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. தவிர, கடந்த இரண்டு ஆண்டுகள் முழுமையாக மொபைலில் வீடியோ கேமிலும், சினிமாவிலும்தான் மாணவர்கள் மூழ்கியிருந்தனர். அனைத்து வீடியோ கேம்களிலும், அடிப்பது, வெட்டுவது, கொலை செய்வது என வன்முறைகளே பிரதானமாக இருக்கின்றன. அடுத்தவர்களைத் துன்புறுத்துவது மிகச் சாதாரண விஷயமாகவும் வேடிக்கையாகவும் பழக்கப்பட்டுவிட்டது. சின்ன விஷயங்களுக்குக்கூட விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் போய்விட்டது. இரண்டு ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளிவர முடியாத ஒரு பேரிடர் காலத்தை எதிர்கொண்ட மாணவர்களுக்கு முறையான கவுன்சலிங் வழங்கப்படவில்லை. பள்ளி திரும்புவதற்கான போதிய அவகாசத்தைக் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு சிலபஸையும் குறைக்கவில்லை. அதனால்தான் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாகி வன்முறையைக் கையிலெடுக்கிறார்கள்” என்றார் விரிவாக.

போதை... மோதல்... உளச்சிக்கல்... பாதை மாறும் பள்ளி மாணவர்கள்!

குறிவைக்கப்படும் அரசுப் பள்ளிகள்... தனியார் பள்ளிகள் காரணமா?

`அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும்தான் இப்படியான பிரச்னைகளில் ஈடுபடுகிறார்களா... தனியார் பள்ளி மாணவர்கள் குறித்து இப்படியான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளிவருவதில்லையே?’ என்கிற கேள்விகளும் எழாமல் இல்லை. “அரசுப் பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமாகச் செயல்படுகிறார்கள்” என்கிற பிரசாரத்துக்குப் பின்னால், பல்வேறு விவகாரம் ஒளிந்திருக்கிறது என்கிறார் குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன்.

நம்மிடம் பேசியவர், “கொரோனாவுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடியின் காரணமாக, கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக அரசே சொல்கிறது. இதில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாததால், அரசுப் பள்ளிகளில் சேர்ந்த எண்ணிக்கைதான் அதிகம். இது ஒரு பாசிடிவ்வான விஷயம். ஆனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், விஷயங்களைப் பூதாகரப்படுத்தி பரப்புகிறார்களோ என்கிற சந்தேகம் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் இது போன்ற விஷயங்கள் நடக்கவே இல்லையா... தனியார் பள்ளிகள் அனைத்தும் ஒழுக்கமாக இருப்பதுபோலவும், அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள்தான் ஒழுங்கீனமானவர்களாக இருப்பதுபோலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. அது தவறு. இந்த விஷயத்தில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று பார்க்காமல் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் அத்துமீறுவதைப்போல வீடியோக்கள் யாருக்காவது கிடைத்தால், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளிடம்தான் அதை ஒப்படைக்க வேண்டுமே தவிர பொதுவெளியில் பகிரக் கூடாது. குழந்தைகள்மீது உண்மையான அக்கறை, கரிசனம் உடையவர்கள் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு முன்பாக சமூகத்தில், சினிமாவில், ஆன்லைனில் ஏராளமான தவறுகள்தான் அதிகமாக இருக்கின்றன. தவறுகளும் தவறானவர்களும்தான் பெரும்பாலும் ரோல்மாடல் ஆக்கப்படுகிறார்கள். எனவே கவர்ச்சியாக இருக்கும் அதைத்தான் இளம் மாணவர்கள் தேர்வுசெய்வார்கள். சமூகத்தில் நிலவும் ஆயிரக்கணக்கான தவறான விஷயங்களைச் சரிசெய்யாமல், மாணவர்களை மட்டும் குற்றம் சுமத்துவது அடிப்படையில் தவறான ஒரு விஷயம். அவர்களை இந்த வயதில் நெறிப்படுத்த வேண்டுமே தவிர, கட்டுப்படுத்தக் கூடாது. அதேவேளையில், சாதிக்கயிறு உள்ளிட்ட விஷயங்கள் மிகவும் ஆபத்தான ஒரு கலாசாரம். மாணவர்கள் மதிக்கும்படியும் நேசிக்கும்படியும் அவர்களுக்கு ரோல்மாடல்களாக இருக்க ஆசிரியர்கள் முயல வேண்டும்” என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேவநேயன், நந்தகுமார், பூங்கொடி, உமா மகேஸ்வரி
பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேவநேயன், நந்தகுமார், பூங்கொடி, உமா மகேஸ்வரி

இந்தக் குற்றச்சாட்டு குறித்து, தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நந்தகுமாரிடம் பேசினோம்.

“இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. அரசுப் பள்ளிகளில் நடப்பது எங்களுக்கு எப்படித் தெரியும்... நாங்களா மாணவர்களைத் தூண்டிவிடுகிறோம்... தனியார் பள்ளிகளில் அது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால், மாணவர்களைக் கண்டிப்போம், பெற்றோருக்குத் தகவல் கொடுப்போம். `டி.சி கொடுப்போம்’ என்று சொல்லி மிரட்டுவோம். தயவு தாட்சண்யமெல்லாம் பார்க்க மாட்டோம். நாங்கள் மாணவர்களின் பையை தினமும் சோதனை செய்கிறோம். கழிவறை தவிர, பள்ளியில் அனைத்துப் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இது அரசுடைய கையாலாகாத்தனம். கொரோனாவுக்குப் பிறகு, அரசுப் பள்ளிகளில் 16 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்பதே பொய்யான தகவல். ஆறு லட்சம் பேர்கூட புதிதாகச் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஒரேயோர் அரசு ஆசிரியர் நியமனம்கூட நடைபெறவில்லை. மாணவர்களின் கல்விக்கு உத்தரவாதமே இல்லை. தேர்வுகள் நடத்துவதிலும் நிலையான கொள்கையில்லை. தேர்வு வினாக்கள் அவுட் ஆக்கப்படுவதைப் பாதுகாக்க அரசுக்கு யோக்கியதை இல்லை. அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த நிலைக்குக் காரணமே அரசுதான். கட்டப்பட்டிருக்கும் ஆசிரியர்களின் கைகளை அவிழ்த்துவிட வேண்டும். கண்காணிப்பு, கட்டுப்பாடு, பயம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இல்லை. இதுதான் நிஜம். இந்தப் போக்குப் பிடிக்காததால்தான், அரசுப் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளுக்கு, தனியார் பள்ளிகளைக் குறை சொல்கிறார்கள். தனியார் பள்ளிகளுக்கு எதிராக அரசே சதித்திட்டம் தீட்டுகிறது!” என்றார்.

மாணவர்களிடம் ஏற்பட்டிருக்கும் இந்த உளச் சிக்கலைத் தீர்க்க, சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாகிறது அரசு. மாதம்தோறும், பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு நடைபெறும் என அறிவித்திருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். அதேவேளையில் கொரோனாவுக்குப் பிறகு வகுப்புக்கு வரும் மாணவர்களை எப்படிக் கையாள வேண்டும் என ஆசிரியர்களுக்கு முதலில் மனநல மருத்துவர்களின் மூலமாகப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக மாணவர்களை கலை, இலக்கியம், விளையாட்டு என மகிழ்ச்சியான வழியில் ஆற்றுப்படுத்தவும், பக்குவப்படுத்தவும் அரசு திட்டமிடுவதாக அறிவித்திருக்கிறது. வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல், முழுமையாக இவை செயல்வடிவம் பெற வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism