Published:Updated:

தமிழகத்துக்குத் தேவையா இரண்டாம் தலைநகரம்?

மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை

இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கிராமப்புற வாழ்க்கை மீது மக்களுக்கான நம்பிக்கை குறைந்துவருகிறது.

தமிழகத்துக்குத் தேவையா இரண்டாம் தலைநகரம்?

இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கிராமப்புற வாழ்க்கை மீது மக்களுக்கான நம்பிக்கை குறைந்துவருகிறது.

Published:Updated:
மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை
சில வருடங்களாக அடங்கிக்கிடந்த இரண்டாவது தலைநகரக் கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. இப்போது அமைச்சர்களே அந்த விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். ஆர்.பி.உதயகுமாரும், செல்லூர் ராஜுவும் மதுரைக்காகக் குரல் கொடுக்க, வெல்லமண்டி நடராஜன் திருச்சிக்குக் குரல் கொடுக்கிறார். உண்மையில், இரண்டாம் தலைநகரம் என்பது அவசியமா? அதனால் மக்களுக்குப் பயனுண்டா? இருவேறு தரப்பிலிருந்து எழுந்த குரல்கள் இவை...

நிச்சயம் தமிழகத்துக்கு இன்னொரு தலைநகரம் தேவை!
ஜெயராம் வெங்கடேசன்
ஒருங்கிணைப்பாளர், அறப்போர் இயக்கம்


“ஆளுங்கட்சி அமைச்சர்கள், திடீரென தேர்தல் நெருங்கும் சமயத்தில் இரண்டாவது தலைநகரக் கோரிக்கையைக் கையில் எடுத்ததற்கு ஓட்டு அரசியல் காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த அரசியல் பூச்சை அகற்றிவிட்டு ஆய்வு செய்தால், நிச்சயம் தமிழகத்துக்கு இன்னொரு தலைநகரம் தேவை.

இரண்டாவது தலைநகரம் ஏன் என்பதற்கு நான்கு காரணங்களை நான் முன்வைக்கிறேன். முதல் காரணம், அதிகாரப் பரவல். தமிழகத்தைப் பொறுத்தவரை, மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய அதிகாரம் அளிக்கப்படவில்லை. சென்னையிலிருந்து வரும் உத்தரவுகளை நிறைவேற்றும் அமைப்பாகத்தான் ஆட்சியர் அலுவலகம் இயங்குகிறது. எல்லா அதிகாரங்களும் சென்னையில் குவிந்து கிடக்கின்றன. சென்னையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பெரும் ஆதிக்க மனோபாவம் இருக்கிறது. பிற நகரங்களில் பணியாற்றுபவர்கள் இரண்டாம் நிலை அதிகாரிகளாகவே கருதப்படுகிறார்கள். இன்னொரு தலைநகரம் உருவாக்குவதன் மூலம் இந்தச் சூழல் மாறும்.

இரண்டாவது காரணம், மக்கள் அதிகார மையங்களை எளிதாக அணுகமுடியும். மதுரைக்கு உயர்நீதிமன்றம் வருவதற்கு முன்பு வழக்கு, வாய்தாவுக்கெல்லாம் சென்னைக்குத்தான் தென்மாவட்ட மக்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். இப்போது, மதுரையிலேயே எல்லாம் முடிந்துவிடுகிறது. தலைநகரமாகும் போது, நகரத்தின் அந்தஸ்து உயரும். உயர் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். விரைந்து முடிவுகள் எடுக்கமுடியும். அடிப்படையான விஷயங்கள் மதுரைக்குள்ளாகவே முடிந்து போகும். சென்னைக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

தமிழகத்துக்குத் தேவையா இரண்டாம் தலைநகரம்?

மூன்றாவது காரணம், அதிகாரிகள் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொள்ள முடியும். மக்களுக்கு நெருக்கமாக இருந்து பணியாற்றமுடியும். இரண்டாம் தலைநகர் அமைக்கப்பட்டால், அமைச்சகங்களை இரண்டு நகரங்களிலும் பிரித்து அமைக்கலாம். விவசாய அமைச்சகம், சென்னையில் இருப்பதைக் காட்டிலும் மதுரையிலோ, திருச்சியிலோ அமைவது தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களுக்கு நெருக்கமாக இருக்கும். காவிரிப்படுகையிலோ, தென் மாவட்டங்களிலோ இருக்கும் பிரச்னைகளை உயர் அதிகாரிகள் நேரடியாகக் களத்திற்கே சென்று புரிந்துகொள்ள முடியும்.

நான்காவது காரணம், வளர்ச்சி. பெரிய நிறுவனங்களெல்லாம் முதலீடு செய்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும் தலைநகரைத்தான் குறிவைக்கின்றன. அதற்குக் காரணம், அலுவல் செயல்முறைகளை அங்கே எளிதாக முடிக்கமுடியும். மதுரை போன்ற நகரத்தை இரண்டாவது தலைநகரமாக்கினால், அந்தப் பகுதியின் முக்கியத்துவம் கூடும். பெரிய நிறுவனங்கள் அந்த நகரத்தையும் அதையொட்டிய பிற நகரங்களையும் நோக்கிச் செல்லும். வேலைவாய்ப்புகள் பெருகும்.

இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கிராமப்புற வாழ்க்கை மீது மக்களுக்கான நம்பிக்கை குறைந்துவருகிறது. அரசின் பார்வை கிராமங்கள் மேல் விழாததால் மக்கள் சென்னை நோக்கிக் குவிந்துகொண்டே இருக்கிறார்கள். விடுமுறை நாள்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களைப் பார்த்தாலே இதுபுரியும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஒரு புறம் பெரிதாகிக்கொண்டே போக, இன்னொரு பக்கம் அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள். இரண்டாம் தலைநகரை உருவாக்கி வளர்ப்பதன்மூலம், மக்கள் சென்னை நோக்கிக் குவிவது குறையும்.

தலைநகரம் என்றால், புதிதாகக் கட்டடங்கள் கட்டுவது மட்டுமல்ல. பல மாநிலங்களில் அப்படி உருவாக்கப்பட்ட தலை நகரங்கள் எந்தப் பயனையும் தரவில்லை. சரியான திட்டமிடல் வேண்டும். மாநிலத்தின் நிர்வாக அலுவலகங்களை இரண்டு தலைநகரங்களிலும் பகிர்ந்து அமைக்கவேண்டும். சுற்றுலா வந்து செல்வதுபோல, குறிப்பிட்ட சீசனில் மட்டும் அதிகாரிகளும் அமைச்சர்களும் வந்துசெல்லக்கூடாது. தொலைநோக்கோடு திட்டங்களை உருவாக்கவேண்டும்.

முக்கியமாக, இரண்டாம் தலைநகரம் என்பது அரசியல் பிரச்னையல்ல; நிர்வாகப் பிரச்னை. அந்தப் புரிதலோடு இதைச் செய்யவேண்டும். குறிப்பாக, இப்போதே செய்ய வேண்டும்!

தேவையில்லாத வீண் செலவு!
ஆர்.பூர்ணலிங்கம்
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி


இதுவரையில் மனித சமூகம் எதிர்கொண்டிராத ஒரு மாபெரும் பேரிடர் இப்போது நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இதிலிருந்து விடுபட்டு மீண்டும் இயல்புநிலையை அடைவதற்கான போராட்டங்கள் பல நிலைகளில் நடந்துவருகின்றன. முழுமையாக இதில் கவனம் செலுத்தித் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, தேவையின்றி தலைநகர மாற்றம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள், சென்னையின் வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சிலகாலம் ஊட்டியில் தலைமைச் செயலகத்தை நடத்தி னார்கள். ஜம்மு-காஷ்மீர் ஒரே மாநிலமாக இருந்தபோது, கடும் குளிர் நிலவும் காலங்களில் ஜம்முவையும், கோடைக்காலத்தில் ஸ்ரீநகரையும் தலைநகராக வைத்திருந்தார்கள். மாநிலப் பிரிவினையின்போது, விதர்பா பகுதியைச் சேர்ந்த மக்கள் புறக்கணிப்படுவதாக எழுந்த பிரச்னை காரணமாக, மகாராஷ்டிராவில் நாக்பூரை இரண்டாம் தலைநகரமாக்கி, சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்துகிறார்கள். இதெல்லாம்கூட காலத்தின் தேவையாக இருக்கலாம்.

மதுரை
மதுரை

ஆனால் தமிழகத்துக்கு இன்னொரு தலைநகரை உருவாக்க வேண்டிய தேவை என்ன? தலைநகரம் என்பது அரசு நிர்வாகத்தை ஒருங்கிணைக்கும் இடம். அவ்வளவுதான். அதனால் மட்டுமே அது பெரிய நகரமாகிவிடும் என்பதில்லை.

சென்னை என்பது தானாக வளர்ந்த தலைநகரம். தரைவழி, நீர்வழி, வான்வெளித் தொடர்புகள், நிர்வாகத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை ஆங்கிலேயர்களே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தலைநகரம் என்பது ஒரு கூடுதல் அந்தஸ்துதானே தவிர, சென்னை வளர்ந்ததென்பது இயல்பானது. அதற்கு அதன் நிலச்சூழலும் தட்பவெப்பமுமே முக்கியக்காரணம்.

மதுரையையோ திருச்சியையோ இரண்டாம் தலைநகரமாக மாற்றுவதால் என்ன நிகழ்ந்து விடும்? மகாராஷ்டிராவில் நாக்பூரை இரண்டாம் தலைநகரமாக்கியதால் என்ன பலன்? மும்பையின் வளர்ச்சியில் கால்பங்கைக்கூட அந்த நகரம் எட்டிப் பிடிக்கவில்லை. சட்டசபை நடக்கும் காலத்தில் உயர் அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் நாக்பூரில் போய் தங்கிவிட்டு வருகிறார்கள். மும்பையில் எப்படி சட்டமன்றம் நடக்குமோ அப்படித்தான் நாக்பூரிலும் நடக்கிறது. அதனால், நேரடியாக அந்த நகருக்கோ மக்களுக்கோ பயனென்று எதுவுமில்லை.

அதேபோல, தலைநகரமாக்கி தலைமைச் செயலகத்தைக் கொண்டுபோவதால் மதுரைக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஒரு நகரம் வளர்ச்சியடைய வேண்டும் என்றால், தொழில்வளம் பெருகவேண்டும். உலகத்தோடு தொடர்பு கொள்ள வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதையெல்லாம் இரண்டாம் தலைநகராக்கித்தான் செய்யவேண்டும் என்பதல்ல.

இன்று தொழில்நுட்பம் பெரிய வளர்ச்சியை எட்டிவிட்டது. இந்த வளர்ச்சியை அரசாங்கம் முறையாக உபயோகிக்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, இ-நிர்வாகம் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. அதை ஆக்கபூர்வமாகச் செய்யவேண்டும். தொழில் தொடங்குவதற்கான அனுமதி முதல் எல்லா விஷயங்களையும் முழுமையாக ஆன்லைனுக்குக் கொண்டு வரவேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு பாஸ்போர்ட் எடுப்பதென்பது மிகப்பெரிய வேலையாக இருந்தது. அலைய வேண்டும். இப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். பதினைந்து நிமிடத்தில் வேலை முடிந்துவிடுகிறது. எல்லாத் துறைகளிலும் அப்படியான மறுமலர்ச்சி வரவேண்டும்.

30 வருடங்களுக்கு முன்னால் தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருவதென்பது சிரமமான வேலை. சாலைகள் நன்றாக இருக்காது. போக்குவரத்து வசதிகளும் குறைவு. இன்று தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் ஓர் இரவில் சென்னைக்கு வந்துவிட முடியும். அதனால் சென்னை தலைநகரமாக இருப்பது பிரச்னையல்ல.

மதுரையை மேம்படுத்த வேண்டும் என்றால், ஒரு பெரிய ஐ.டி பார்க்கை அங்கு தொடங்கலாம். பெரிய தொழில்களை நிறுவலாம். சர்வதேசத் தொடர்புகளை மேம்படுத்தலாம். மத்திய, மாநில கல்வி நிறுவனங்களை அங்கு கொண்டு வரலாம். அதன்மூலம் அந்த நகரம் பெரு வளர்ச்சியடையும். மதுரை மட்டுமல்ல. கோவை, திருச்சி, கன்னியாகுமரி என எல்லா நகரங்களும் இதுபோன்று வளர்ந்தால்தான் தமிழகம் வளமாக இருக்கும்.

ஒரு தலைநகரை உருவாக்குவதென்பது எவ்வளவு பெரிய செலவு? குறைந்தபட்சம் ஏதேனுமொரு பருவத்தில் சட்டமன்றம் நடக்கும் என்றால்கூட அதற்குக் கட்டடம் கட்டவேண்டும். ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் எம்.எல்.ஏக்-கள் தங்க வீடுகள் கட்டுவார்கள். ஆவணங்களை அள்ளிச்செல்ல வேண்டும். எல்லோரும் சென்றுவர போக்குவரத்துச் செலவு... மிகக்குறைவாகத் திட்டமிட்டால்கூட 500 கோடி ஆகலாம். இதனால் மதுரைக்கு என்ன லாபம்..?

ஏற்கெனவே தமிழகத்தின் நிதிநிலை மிகவும் கவலைதரும் நிலையில் இருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு இன்னும் மோசமாகிவிட்டது. மின்வாரியத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன். எல்லாத் துறைகளிலும் இதேநிலைதான். நிதிநிலை மீண்டு இயல்புக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். இந்தச்சூழலில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது மிக அவசியம்.

தொலைதூர மாவட்டங்களின் சிரமத்தைக் குறைக்க அரசாங்கம் அதிகாரத்தை அடுத்தடுத்த படிநிலைகளில் பகிர்ந்தளிக்க வேண்டும். ஊழல், முறைகேடுகள் நடக்காதவாறு முறைப்படி கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவில் வேலைகளை முடிக்கவேண்டும்.

விதிகளையும் வழிமுறைகளையும் முறைப்படுத்த வேண்டும். எளிதாக்க வேண்டும். தொழில்கள் கொண்டுவரப்பட வேண்டும். இப்போது மதுரை மக்கள் கேட்கவேண்டியது இவற்றைத்தான். அரசும் இவற்றைத்தான் செய்யவேண்டும்!மக்கள் என்ன சொல்கிறார்கள்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

மிழகத்துக்கு இரண்டாவது தலைநகரம் தேவையா? தேவையென்றால் உங்கள் சாய்ஸ் எந்த நகரம் என்று விகடன் டாட் காமில் ஒரு சர்வே நடத்தினோம். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அந்த சர்வேயின் முடிவுகள்!

தமிழகத்துக்குத் தேவையா இரண்டாம் தலைநகரம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்.ஜி.ஆரின் இரண்டாவது தலைநகரம்

மிழகத்தில் இரண்டாம் தலைநகரம் குறித்த விவாதம் 1983-லேயே தொடங்கிவிட்டது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், ‘திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும்’ என்றார். அந்தக் குரல் எழுந்தது எப்படி? பிறகு ஏன் அடங்கிப்போனது? - மூத்த அரசியல் தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்டோம்.

தமிழகத்துக்குத் தேவையா இரண்டாம் தலைநகரம்?

“எம்ஜிஆர் எப்போதும் தனியாக சாப்பிட மாட்டார். நான்கைந்து நிர்வாகிகளோடு சேர்ந்து பேசிக்கொண்டேதான் சாப்பிடுவார். அப்படியான ஓர் உரையாடலில்தான் சென்னையைத் தாண்டி இன்னொரு தலைநகரம் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை உதித்தது. இது தொடர்பாக அமைச்சர்களிடமும் விவாதித்தார். அதை அத்தனை அமைச்சர்களும் ஆமோதித்தார்கள். ஒருவர்கூட ஆட்சேபிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமே மாற்றுக்கருத்துகளை முன்வைத்தன. அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கும் முன்பாக எம்ஜிஆருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் திருச்சியைத் தலைநகராக்கும் திட்டமும் முடங்கிப்போனது” என்றார் அவர்.

தமிழகத்துக்குத் தேவையா இரண்டாம் தலைநகரம்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism