Published:Updated:

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்
பிரீமியம் ஸ்டோரி
பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

“இப்போது ஏதோவொரு வீடியோ வெளிவந்துவிட்டதால், அதைவைத்து ஒரு குறிப்பிட்ட கட்சியில் மட்டும்தான் இது போன்ற பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக நினைத்துவிடாதீர்கள்

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

“இப்போது ஏதோவொரு வீடியோ வெளிவந்துவிட்டதால், அதைவைத்து ஒரு குறிப்பிட்ட கட்சியில் மட்டும்தான் இது போன்ற பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக நினைத்துவிடாதீர்கள்

Published:Updated:
பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்
பிரீமியம் ஸ்டோரி
பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

‘அட்ஜெஸ்ட்மென்ட்’ என்கிற வார்த்தையை எதிர்கொள்ளாமல் ஒரு பெண் திரைத்துறையில் போராடி ஜெயிப்பது முடியாத காரியம் என்பதுதான் பொதுப்பார்வை. “சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் இந்த ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ பிரச்னை அதிகம்” என்கிறார்கள் அரசியலில் இயங்கிவரும் பெண்கள். சமீபத்தில் பா.ஜ.க பிரமுகர் கே.டி.ராகவன், ஒரு பெண்ணிடம் பாலியல்ரீதியாக வீடியோ காலில் பேசிய விவகாரத்தில், அவர்மீது புகார் எழுந்தது. குற்றச்சாட்டை மறுத்த அவர், தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இந்தச் சர்ச்சை பற்றி எரிந்துகொண்டிருந்தபோதே, பா.ஜ.க மாநிலத் தலைவரான அண்ணாமலை பேசியதாக வெளியான ஒரு ஆடியோவில், “பெண்களை எப்போதும், எதற்காகவும் தனியே எனது அறைக்குள் அனுமதிப்பதில்லை. எப்போதும் ஒரு பையன் அறைக்குள் நிற்கும்படியாகப் பார்த்துக்கொள்கிறேன். எனது அறையின் கதவு திறந்திருக்கும்படியும், கண்ணாடிக் கதவை டிரான்ஸ்பரன்ட்டாகவும் மாற்றிவிட்டேன்” என்று பேசியிருந்தது பெண்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு அறைக்குள் அரசியல் குறித்து ஓர் ஆணும் பெண்ணும் தனியே பேசிக்கொள்ள முடியாத நிலையில்தான் தமிழக அரசியல் இருக்கிறதா?

“இப்போது ஏதோவொரு வீடியோ வெளிவந்துவிட்டதால், அதைவைத்து ஒரு குறிப்பிட்ட கட்சியில் மட்டும்தான் இது போன்ற பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக நினைத்துவிடாதீர்கள். எல்லாக் கட்சிகளிலும் இது போன்ற சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது” என்று பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை நம்மிடம் மனம் திறந்து பேசினார்கள் தமிழகத்தின் மிக மூத்த பெண் அரசியல்வாதிகள் சிலர். நாகரிகம் கருதி, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை நாம் தவிர்த்துவிட்டோம்.

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

கெஸ்ட் ஹவுஸுக்கு வாம்மா!

“2021 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தபோது, தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளில் ஒன்றின் வேட்பாளராகும் முயற்சியிலிருந்தார், எழுத்தால் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அந்தப் பெண் பிரமுகர். ஏற்கெனவே கட்சித் தலைமைக்கு அவர் நன்கு அறிமுகம் என்றாலும், ‘அறிமுகம் மட்டுமே சீட்டைப் பெற்றுத் தராது’ என்று வகுப்பெடுத்தார் ஒரு சீனியர் தலைவர். அந்த சீனியரின் ஆலோசனைப்படி, அன்றைக்குக் கட்சியின் இரண்டாவது முகமாக அறியப்பட்ட தலைவரைச் சந்தித்தார் அந்தப் பெண் பிரமுகர். ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ என்கிற வார்த்தைக்கான அர்த்தம் அப்போதுதான் அவருக்குப் புரிந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்!

அதே கட்சியில் சீட் பெற்றுவிட்ட ஒரு பெண் பிரமுகருக்குத் தேர்தல் செலவுக்குச் சுத்தமாக வழியில்லை. செலவுக்காகப் பெண் பிரமுகர் திண்டாடுவதைத் தெரிந்துகொண்ட கட்சியின் டெல்லி பிரமுகர் ஒருவர், தனது உதவியாளர் மூலம் தொகையைக் கொடுத்து அனுப்பினார். பணம் சென்று சேர்ந்த அடுத்த நாளே டெல்லியிலிருந்து போன் கால் வந்தது. ‘என்னம்மா... எதிர்பார்த்தது வந்து சேர்ந்துடுச்சா... உங்க மாவட்டத்துக்குப் பக்கத்து மாவட்டத்துலதான் எனக்குச் சுற்றுப்பயணம் இருக்கு. முடிச்சுட்டு நைட்டு அரசு கெஸ்ட் ஹவுஸ்ல தங்குறேன். அங்கே வாம்மா...’ என்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தார் அந்த டெல்லி பிரமுகர். ‘பெண் உரிமை, பெண் பாதுகாப்பு என்று மேடைக்கு மேடை முழங்கும் இவரா இப்படி?’ என்று நொந்தபடி, தலைமைக்கு விஷயத்தைக் கொண்டுபோயிருக்கிறார்.

இப்படியான சம்பவங்கள் ஏராளம், ‘பாலிட்டிக்ஸ்ல வளர்ச்சியடையணும்னா, இப்படியான அட்ஜெஸ்ட்மென்ட்டுகள் சகஜம். இதெல்லாம் எல்லாரும் பண்றதுதான்’ என்று புதியவர்களை மூளைச்சலவை செய்து, முக்கியத் தலைவர்களுக்கு ஆள் பிடித்துத் தரவே ஒவ்வொரு கட்சிக்குள்ளும் இதற்கென ஆட்கள் இருக்கிறார்கள்.

அடுக்கடுக்கான புகார்கள்... தப்பிக்கும் அறிவுஜீவி!

அறிவுஜீவி அரசியல்வாதியாக அறியப்பட்ட தேசியக் கட்சியின் தலைவர், பாலியல் விஷயத்தில் வீக் என்பது அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்டதுதான். கட்சியின் கடைக்கோடி உறுப்பினராக இருந்த ஒரு பெண், கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்தத் தலைவரின் கண்ணில் பட்டார். அடுத்த நாளே தலைவரிடமிருந்து அழைப்பு. அந்தப் பெண்ணைத் தன் அதிகாரத்தாலும் அச்சுறுத்தலாலும் ஆட்படுத்திக் கொண்டார் அந்தத் தலைவர். அரசியலில் மட்டுமல்ல, இதர துறைகளைச் சேர்ந்த பெண் பிரபலங்களும் அந்தத் தலைவரிடம் சிக்கிப் பரிதவித்திருக்கிறார்கள். ‘இவரால் கட்சிக்குக் கெட்ட பெயர்’ எனப் பல மூத்த தலைவர்களே அடுக்கடுக்கான புகாரளித்தும், டெல்லியிலுள்ள தன் பலத்தால் இதுவரை தப்பித்துவருகிறார் அறிவுஜீவி.

அதே கட்சியைச் சேர்ந்த ஒரு பெண், அரசியல் களத்தில் சந்தித்த அவமானங்கள் சொல்லி மாளாது. தன்னுடைய போராட்ட குணத்தால் டெல்லியின் கவனத்தை ஈர்த்தார். அவரின் அரசியல் வளர்ச்சி பிடிக்காமல், அடுக்கடுக்கான பாலியல் சர்ச்சைகளை அவர்மீது சிலர் எழுப்பினார்கள். குறிப்பாக, சமூக வலைதளங்களில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல், தீவிரமாகக் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு, இன்று டெல்லி வரை நகர்ந்திருக்கிறார். சமரசம் செய்துகொள்ளாமல் அரசியலில் நிலைத்து நிற்கும் பெண்களுக்கு அவர் ஓர் உதாரணம்!

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

மனைவியே சொன்ன குற்றச்சாட்டு!

அரசியலில் பெண்களுக்கெல்லாம் ஒரு ‘ரோல் மாடலாக’ இருந்தவர் ஜெயலலிதா. அவர் கட்சியிலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் இருந்தன. டிசம்பர், 2003-ல் சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அப்போது கண்ணீருடன் ஜெயலலிதா முன்னால் வந்து நின்ற பெண் ஒருவர், ‘என் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த நிர்வாகி என்னைத் தவறான நோக்கத்தோடு அணுகுகிறார்’ என்று வெடித்துத் தீர்த்தார். கண்கள் சிவந்த ஜெயலலிதா, குற்றச்சாட்டுக்குள்ளான அந்த நிர்வாகியின் பதவியை அப்போதே பறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாநில அளவில் கட்சிப் பொறுப்பும் அளித்தார். அதேபோல, ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்த ஒருவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்த அமைச்சரின் மனைவியே இந்தக் குற்றச்சாட்டை வைத்ததால், அடுத்த நாளே அந்தப் பிரமுகரின் அமைச்சர் பதவி காலியானது. தன் காதுக்கு வரும் பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்திலும், ஜெயலலிதா சமரசம் செய்துகொண்டதில்லை. பெண்கள் இன்னும் உச்ச பதவிகளை அடையும்போது பெண்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கும்” என்றனர் அந்த மூத்த பெண் அரசியல்வாதிகள்.

“நீங்க அழகா இருக்கீங்க... ஒத்துழைப்பு கொடுங்க!”

ரெட்டைக்குழலாகப் புகையும் கட்சியின் தலைமைக்கு நெருக்கமாக இருந்த மாம்பழ ஊரின் வி.ஐ.பி., கொங்கு மண்டலப் பெண் பேச்சாளர் ஒருவரைக் கட்சிக் கூட்டத்துக்குப் பேச அழைத்தார். கூட்டம் முடிந்து ஓய்வெடுக்கச் சென்ற பெண் பேச்சாளரின் அறைக்குள், திடீரென நுழைந்து “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... இனி நீங்கதான் எல்லாக் கூட்டத்துலயும் பேசணும்” என அசடு வழிந்தபடியே “கொஞ்சம் ஒத்துழைங்க...” என்று நெருங்கியிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட பெண் பேச்சாளர், அந்த வி.ஐ.பி-யைத் தள்ளிவிட்டுவிட்டு அறையிலிருந்து வெளியேற முயன்றிருக்கிறார். வி.ஐ.பி-யும் விடாமல் மல்லுக்கட்ட, பெரும்பாடு பட்டு அங்கிருந்து தப்பித்திருக்கிறார் அந்தப் பெண் பேச்சாளர். கட்சியில் தலைமையிடம் எடுத்துச் சென்றும்கூட இன்றுவரைக்கும் அந்தப் பெண் பேச்சாளருக்கு நியாயம் கிடைக்கவில்லை.

தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு தடாலடித் தலைவர் செய்த அடாவடி இன்னும் மோசம். சில மாதங்களுக்கு முன்பு, அவரது தொகுதியைச் சேர்ந்த பெண் கட்சிக்காரர் ஒருவர், கட்சி வேலையாக அவரைச் சந்தித்துப் பேச சென்னை வந்திருக்கிறார். விவரங்களைக் கேட்டுக்கொண்டே வந்த தடாலடித் தலைவர் திடீரென சபலமாகி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். கோபமடைந்த அந்தப் பெண், தலைவரின் கையைத் தட்டிவிட்டதுடன், கடுமையாகத் திட்டிவிட்டு அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த விவகாரம் கட்சித் தலைமைக்குச் சென்றும்கூட நடவடிக்கை இல்லை. தடாலடிப் பேர்வழி அதை அப்படியே அமுக்கிவிட்டார்.

இந்த அட்ஜஸ்ட்மென்ட் அரசியலில் சிக்கித்தவிக்கும் பெண்கள் ஒருபுறம், அதில் போராடித் தன்னையும் தன் கனவுகளையும் சாத்தியப்படுத்திக் கொள்ளும் பெண்கள் மற்றொரு புறம். இந்த இரண்டுக்கும் வெளியே இது போன்ற பாலியல் அச்சுறுத்தல்களால் பின்னோக்கிப் போய் தன் கனவுகளைத் தொலைத்துவிட்ட பெண்கள் ஆயிரக் கணக்கானோர். பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த அரசியல் களத்தில் என்னதான் தீர்வு?

விசாகா கமிட்டி எங்கே?

பத்து ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவது ‘பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013’-ன்படி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஊருக்கே உபதேசம் செய்யும் அரசியல் கட்சிகள், இதில் விதிவிலக்காக இருப்பது என்ன நியாயம்? பாலியல் அத்துமீறல் புகாரெழுந்தால், கட்சிக்குள்ளேயே ஒரு குழு அமைத்துவிட்டு, நாளடைவில் அதை மறந்துவிடுவது வழக்கமாகி விட்டது.

2016-ல் தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளில் ஒன்றின் மாவட்ட நிர்வாகி ஒருவர், அந்தக் கட்சியின் மகளிரணி நிர்வாகியைப் பாலியல்ரீதியாகக் கட்டாயப்படுத்திய வீடியோ சர்ச்சையானது. ‘மகளிரணி நிர்வாகி தலைமையில், ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சர்ச்சையை ஆறப் போட்டார்கள். ஆண்டுகள் பல கடந்தும் அந்த விசாரணை அறிக்கை என்னவானது... சம்பந்தப் பட்ட மாவட்ட நிர்வாகி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது மட்டும் இன்றுவரைக்கும் தெரியவில்லை. ஆனால், அந்த மாவட்ட நிர்வாகியோ மீண்டும் மீண்டும் தேர்தலில் நின்று ஜெயித்து, பதவியிலிருக்கிறார்.

பெண்கள் வீட்டைக் கடந்து பொதுவெளிக்கு வருவதே இந்த 21-ம் நூற்றாண்டிலும் சவாலாகத்தான் இருக்கிறது. அதுவும் அரசியல் போன்ற அதிகாரம் மிகுந்த துறைக்குள் வருவதோ பெரும் சாதனை. சமூகத்தின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கும் அரசியல் களத்திலேயே ஒரு பெண் பாலியல் அச்சுறுத்தலுக்கும் சுரண்டலுக்கும் ஆளாகிறாள் எனும்போது, பெண்களுக்கான பாதுகாப்பை, நீதியை யாரிடம் கேட்பது?

அரசியலில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது!

******

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

அரசியல் கட்சியிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும்!

“பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலுமே இருக்கிறது. இதற்காக இந்தத் துறையே வேண்டாம் எனப் பெண்கள் ஒதுங்கிச் செல்ல முடியாது. தனக்கு எதிராக நடக்கும் இது போன்ற குற்றங்களைச் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடம் தைரியமாகச் சொல்ல வேண்டும். தலைமையும் அதற்குத் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக, பிற துறைகளில் இருப்பதுபோல அரசியல் கட்சியிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். இந்திய நாடாளுமன்றத்திலேயே விசாகா கமிட்டி இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி, பெண்கள் அரசியலைவிட்டு ஒதுங்கக் கூடாது. அதிக அளவிலான பெண்கள் அரசியல் களத்துக்குள் வரும்போது இது போன்ற குற்றங்களும் குறையும்.”

- கனிமொழி, எம்.பி., மகளிரணிச் செயலாளர், தி.மு.க.

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

இந்நிலை அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறது!

“ஆண்கள் எதிர்பார்க்கிற விஷயங்களுக்கு ஒத்துழைக்காத பெண்களுக்கான வாய்ப்புகளை மறுக்கிற, தடுக்கிற நிலை அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறது. ஆனால், எங்கள் கட்சியில் இது குறித்துப் புகாரளிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதை நியாயமாக விசாரிக்க, விசாரணைக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் விசாரித்து, தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். எங்கள் கட்சி உறுப்பினர்கள் இருவர், என்னைப் பற்றி முகநூலில் தவறாக எழுதியது குறித்து, டிசிப்ளினரி கமிட்டியில் புகாரளித்து, அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, பெண்கள் சார்ந்த புகார்களை மிகவும் சென்சிட்டிவாகத்தான் அணுகுகிறோம்!’’

- வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ., தேசிய மகளிரணித் தலைவர், பா.ஜ.க.

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

பாலியல் சுரண்டலை ஆதரித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது!

“அரசியல், ஆண்களின் உலகமாகத்தான் இன்றளவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபராகவே இன்னும் ஒரு பெண் வர முடியவில்லையே... தற்போது பா.ஜ.க-வில் நடந்தது போன்ற சம்பவங்கள் பெண்களுக்கு ஒரு பயத்தைக் கொடுத்துவிடுகின்றன. அதனால்தான், அனைத்துக் கட்சிகளிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறோம். பெண்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், கட்சிகளுக்குத்தான் இன்னும் மனத்தடைகள் இருக்கின்றன. தேர்தலில் சீட் கொடுப்பதிலிருந்து, முக்கியமான பொறுப்புகளை அளிப்பதுவரை அதிகமாக யோசிக்கிறார்கள். அரசியல் கட்சிகள், கட்சியின் தலைவர்கள் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும். ஆனால், நாம் தமிழர் கட்சியின் சீமான், பா.ஜ.க-வின் கே.டி.ராகவனுக்கு ஆதரவாக வரிந்து பேசியிருக்கிறார். ஒரு கட்சியின் தலைவரே பாலியல் சுரண்டலை ஆதரித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.’’

- ஜோதிமணி, எம்.பி., காங்கிரஸ்.

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

கட்சித் தலைமை கவனமாக இருக்க வேண்டும்!

“பா.ஜ.க-வில் தற்போது நடந்திருக்கும் சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்றைய சூழலில், பெண்கள் பல சவால்களைக் கடந்து அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களைக் கட்சித் தலைமை எப்படி அரசியல்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பா.ஜ.க-வில் அந்த கவனம் இல்லை என்று தெரிகிறது.’’

- பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

பாலிடிக்ஸ்! பாலியல் பாதுகாப்பு? தொடரும் அவலம்

சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்!

“மற்ற துறைகளில் இருப்பதுபோலக் குறைந்தபட்ச ஒழுங்கமைப்பு, சட்டப் பாதுகாப்பு இவையெல்லாம் அரசியல் மற்றும் சினிமாதுறைகளில் இல்லை. பாலியல்ரீதியான சீண்டல்கள், வன்முறைகள் நிகழும்போது உடனடியாக அவற்றைப் பெண்கள் பொதுவெளிக்குக் கொண்டுவந்துவிட வேண்டும். அதற்கு எதிரான சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதனால் சில இழப்புகள் ஏற்படும். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படியே கடந்துசெல்வது என்பது, மோசமான சூழல் இருப்பதை நாமே ஏற்றுக்கொண்டதுபோலாகிவிடும். ஒவ்வொரு துறையிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் பாலியல் குற்றங்கள் நடப்பதற்குக் காரணமாக இருக்கிறது. அரசியல் கட்சிகளிலும் அதுதான் நடக்கிறது.’’

- ஓவியா, சமூகச் செயற்பாட்டாளர்.