Published:Updated:

கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை... பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கையில் எங்கள் பேராசிரியர் வாட்ஸ்அப்பில் என்னிடம் வரம்பு மீறிப் பேசினார். பேரதிர்ச்சி அடைந்தேன்.

கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை... பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கையில் எங்கள் பேராசிரியர் வாட்ஸ்அப்பில் என்னிடம் வரம்பு மீறிப் பேசினார். பேரதிர்ச்சி அடைந்தேன்.

Published:Updated:
பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

சென்னை, கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர், அந்தப் பள்ளியின் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தந்த சிறார்வதை பற்றிய பிரச்னை சமீபத்தில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. நாடு முழுக்க இந்த விஷயம் பேசு பொருளானதை யடுத்து, அரசுத் தரப்பிலிருந்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பொதுமக்கள் தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் குவிய ஆரம்பிக்கவே, தைரியம் பெற்றிருக்கும் மாணவிகள், பெண்கள் எனப் பலரும் பல்வேறு கல்வி நிலையங்களில் நடந்த, நடக்கின்ற பாலியல் தொல்லைகளை இப்போது வெளியில் சொல்ல ஆரம்பித் திருக்கின்றனர். அடுத்தடுத்து வழக்குகளும் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், மாணவர்கள் மீதான சிறார்வதைக்கான தீர்வுகளை, பல தரப்பிலிருந்தும் முன்வைக் கிறார்கள் இவர்கள்...

நானே சாட்சி!

தனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் தான் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதையும், இன்றைய மாணவிகளுக்கு அது தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் பகிர்ந்துகொள்கிறார் கோவையைச் சேர்ந்த வித்யா விஜயராகவன்.

“கல்லூரியில் முதலாமாண்டு படிக்கையில் எங்கள் பேராசிரியர் வாட்ஸ்அப்பில் என்னிடம் வரம்பு மீறிப் பேசினார். பேரதிர்ச்சி அடைந்தேன். வகுப்பில் கண்டிப்புடன் நடந்துகொண்ட, கண்ணியமானவர் என்று நம்பும்படியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. பள்ளிக்காலத்திலிருந்தே இதுபோன்ற சீண்டல்களைப் பார்த்து வருகிறேன், ஆளாகியும் இருக்கிறேன். அப்போது அதை என் பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்கள் அதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ளவே யில்லை. ‘யாரும் பார்க்கலையில்ல’ என்றுதான் கேட்டார்கள். அவர்கள் கவலை எல்லாம், இது வெளியே தெரிந்தால் என் பெயர் கெட்டுவிடும், திருமணத்தில் பிரச்னை ஏற்படும் என்பதாகவே இருந்தது.

தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராகப் பணியாற்றிய போது அரசுப் பள்ளி மாணவர்களிடம் உரையாடுகையில், அவர்கள் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்களைப் பற்றியெல்லாம் சொன்னதைக் கேட்டு மேலும் அதிர்ந்து போனேன்.

நாளை என் தங்கைகளுக்கு இதுபோன்ற சீண்டல்கள் ஏற்படும் நிலையில், என் பெற்றோர் செய்த தவற்றை நான் செய்ய மாட்டேன்; சட்ட ரீதியான நடவடிக்கைக்குச் செல்வேன். வெளியே சொல்ல மாட்டார்கள் என்பதே குற்றச்செயலுக்கான தைரியத்தைக் கொடுக் கிறது, அதை அதிகரிக்க வைக்கிறது” என்கிறார் வித்யா.

கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை... பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

பெற்றோர் குழந்தையிடம் தொடர்ச்சியாக உரையாட வேண்டும்!

“பாலியல் சார்ந்த வெளிப்படையான உரையாடல் மூலம்தான் இதைக் களைய முடியும்” என்கிறார் ராணிப்பேட்டை அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரும், கவிஞருமான தி.பரமேசுவரி.

“பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிற ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இன்னொரு பக்கம், இக் குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற் கான செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியம். ஆசிரியர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட வேண்டும். சில தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்துகிற ஆசிரியர் மட்டுமல்லாமல் மற்றுமோர் ஆசிரியரும் இணைப்பில் இருப்பார். இடையிடையே அவர் வந்து வகுப்பைக் கண்காணிப்பார். இது வரவேற்கப் பட வேண்டிய முன்னுதாரணம்.

கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை... பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதில் பெற்றோருக்கு அதிகப் பொறுப்புணர்வு இருக்கிறது. அவர்கள் குழந்தை வளர்ப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதாலேயே அங்கு பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான வெளிப்படையான உரையாடல் இல்லாமல் போகிறது. ‘நல்ல’ பள்ளியில் சேர்த்து விடுவதிலும், அவர்கள் ‘நல்ல’ மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். பள்ளியில் என்ன நடந்தது என்று கூடப் பிள்ளைகளிடம் கேட்பதில்லை. அதற்கு அறியாமையும் ஒரு காரணம். இந்தச் சூழல்களால்தான் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் தாமதமாகவே வெளிப் படுத்தப்படுகின்றன. பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் தொடர்ச்சியாக உரையாட வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை மேலும் தீவிரப் படுத்த வேண்டும்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு அவர்கள் உடல் சார்ந்த புரிந்துணர்வை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தும்போதுதான், அவர்கள் வெளிப்படையான உரையாடலுக் குள் வருவார்கள். இந்த வெளிப்படைத் தன்மையே பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அனைத்துப் பள்ளிகளிலும், பாலியல் குற்றங்களை விசாரிக்கும் குழு அமைக்கப்பட வேண்டும். தொடர் உரையாடலும் தீவிர கண்காணிப்பும் அவசியம்’’ என்கிறார் பரமேசுவரி.

கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை... பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

70 சதவிகிதக் குழந்தைகள் தெரிவித்தது!

“பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளை மேலும் கடுமை யாக்க வேண்டும்’’ என்கிறார், பாலியல் சீண்டலுக்கு ஆளான குழந்தைகள் மத்தியில் பணியாற்றி வரும் ‘வெளிச்சம்’ அமைப்பைச் சேர்ந்த ஷெரின்.

“குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் சிறார் வதைகள் பற்றிப் பாதிக்கப்பட்ட குழந்தைகளிட மிருந்தே கேட்டிருக்கிறேன். நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அவை குரூரமானவை. பள்ளிகளில் தண்டனை என்கிற பெயரில் கையைத் தூக்கச் சொல்லி விட்டு மார்பகத்தில் கிள்ளுவது, பின்புறத்தில் கையால் அடிப்பது எனப் பலவிதங்களில் அத்துமீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

ஒரு வகுப்பில் பாலியல் குறித்துப் பேசியபோது, 70 சதவிகிதக் குழந்தைகள் தாங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். பதின்ம வயதில் குழந்தைகளின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களிடம் அத்துமீறு கின்றனர். அதுவே, கல்லூரிகளில் இன்டர்னல் மதிப்பெண், புரொஜக்ட் என அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலுறவுக்கு இணங்க மிரட்டு கின்றனர். முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவிகளை அவர்களது வழிகாட்டி மிரட்டு வதும் நடக்கிறது. ஆக, பள்ளி முதல் பிஹெச்.டி வரை பெண்களுக்கு இந்தத் தொல்லை.

ஒரு சிறுமியை சிறார்வதைக்கு உட்படுத்துவது ஆணுக்கு அந்த நேரத்துக் கிளர்ச்சி மட்டுமே. ஆனால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உளவியல், உடல்ரீதியாக அது வாழ்நாள் வலியாக மாறிவிடுகிறது. குழந்தைகள் மீது பாலியல் வன் முறைகளை நிகழ்த்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அளவுக்குத் தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும்” என்கிறார் ஷெரின்.

சட்டம் மட்டும் போதாது... சமூக மாற்றம் தேவை!

`பாலியல் குற்றங்கள் நிகழும் போதெல்லாம் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்கிற குரலும் எதிரொலிக்கிறது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் இக்குற்றங்களை எவ்விதம் கையாள்கின்றன?' - சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணனிடம் கேட்டோம்.

``18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங் களுக்கு எதிராக ‘போக்சோ' (POCSO - The Protection of Children from Sexual Offences) சட்டம் இயற்றப் பட்டிருக்கிறது. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தில் பாலியல் வன்முறைக்கெதிரான சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. அவற்றின் படி, பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல, அதற்கான முயற்சிகள் மேற்கொள்வதும் பாலியல் குற்றம்தான். மேலும், தொடுதல், வரம்பு மீறிப் பேசுதல், உடல் மொழியில் சைகை செய்தல் என அனைத்துமே பாலியல் குற்றங்கள் தாம்.

இதையும் தாண்டி முக்கியமான அம்சங்களைக்கொண்டு போக்சோ, பணியிடங்களில் பாலியல் தொந்த ரவுக்கு எதிரான சட்டம் என நிறையச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அதில் தெளிவான வரையறை இருக்கிறது.

18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைக்குப் பாலுறவுக்குச் சம்மதம் தெரிவிக்கும் உரிமை இல்லை. எனவே, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணைத் திருமணம் செய்து உறவுகொண்டால்கூட அது பாலியல் வன்முறையாகக் கருதப்பட்டு ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். ‘போக்சோ’ சட்டத்தின்படி குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை, மரண தண்டனைவரை விதிக்கப் படுகிறது. தொடுதல், சமிக்ஞை செய்தல் மற்றும் பாலுறவு சார்ந்து பேசுதல் ஆகிய வற்றுக்கு 3 - 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. பாலியல் குற்றச்செயலைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர் எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டு மானாலும் வழக்கு தொடர்ந்து தனக்கான நீதியைப் பெற முடியும். பாலியல் குற்றங்களைப் பொறுத்தவரை அது நிகழ்த்தப்பட்டபோது அதை வெளிப்படுத்துவதற்கான பக்குவமும், சூழலும் இருந்திருக்காது. ஆகவே, அதை எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டு மானாலும் சொல்லலாம். செல்போன் உரையாடல்களின் ஆடியோ பதிவு, எழுத்து வடிவ உரையாடல் எனில் அதன் ஸ்க்ரீன்ஷாட் போன்றவைகூட சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சூழ்நிலை சாட்சிகளும் இதில் முக்கிய இடம் பெறுகின்றன. என்றாலும், இந்தச் சட்டங்கள் மட்டும் போதாது, சமூக மனநிலையில் மாற்றங்கள் உருவாக வேண்டும்’’ என்கிறார் சரவணன்.

கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை... பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்கால நடுக்கம்!

சிறார் வதையை நிகழ்த்துபவர்களின் உளவியல் பற்றியும், பாதிக்கப்படும் குழந்தை களின் உளவியலில் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் பேசுகிறார் சேலத்தைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி.

“பீடோஃபீலியா (Pedophilia) என்கிற உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 10 - 13 வயது டைய குழந்தைகளை சிறார் வதை செய்ய விழைவார்கள். பெண்கள்மீது இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. இவர்கள் ஒருவித மன நோயாளிகள். இவர்களின் சதவிகிதம் குறைவு என்றாலும், ஆசிரியப் பணியில் இதுபோன்றவர்கள் இருக்க நேரும்போது, அது மிக ஆபத்தாகி விடுகிறது.

இன்னொரு பக்கம், பள்ளிகளில் சிறார்வதை செய்யும் ஆசிரியர்கள் அனைவரும் பீடோஃபீலியாக்கள் இல்லை. இயல்பான ஆண்களுக்குள்ளும் இருக்கும் பாலியல் வன்மம், கல்வி நிலையங்களில் குழந்தைகளைக் குறிவைக்கிறது. குழந்தைகளை, மாணவர்களை மிரட்டி வழிக்குக் கொண்டு வர முடியும், அதோடு அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள் என்கிற சாதகத் தன்மைதான் குழந்தைகள் மீதான இவர்களின் வன்முறை களுக்கு ஆதாரமாய் இருக்கிறது.

மறுபக்கம், சிறார் வதைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு எதிர்காலத்திலும் அதன் தாக்கம் தொடரும். மனச்சோர்வு, பதற்றம், பயம் போன்ற பிரச்னைகளுக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் கடந்த காலத்தை விசாரிக்கும்போது, அவர்களில் பெரும் பாலானவர்கள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எனத் தெரிய வருகிறது.

இவர்களால் திருமணத்துக்குப் பிறகுகூட முழுமையான தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது. கணவனே நெருங்கி வந்தாலும் பதற்றத்துக்கு ஆளாவார்கள். Post traumatic stress disorder என்று சொல்லப்படக்கூடிய உளவியல் பிரச்னைகளுக்கு இவர்கள் ஆட்படுகின்றனர். பொதுவாக சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்களில் சிக்கி உயிர்பிழைத் தவர்கள்தான் இப்பிரச்னைக்கு ஆட்படுவர். எனில், குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறை ஒரு பேரிடருக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆண் குழந்தைகள் சிறார் வதைக்கு ஆட்படுகையில் பிற்காலத்தில் அவர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களாக, தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொள் பவர்களாக, குரூரமானவர்களாக மாறுகிறார்கள். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல பாலியல் குற்ற வாளிகளாகவும் மாறுவர்.

சிக்மண்ட் ஃப்ராய்ட் காலத்தில் இருந்தே உளவியல் இதை ஆராய்ந்து வருகிறது. பாலியல் வன்முறையால் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட வர்களை மாத்திரைகள், ஆற்றுப் படுத்துதல் மற்றும் சில பயிற்சிகள் மூலம் சீரான நிலைக்குக் கொண்டு வர முடியும். இதை ஆரம்பத்திலேயே பொருட்படுத்தி அவர்களுக்கான சிகிச்சையை வழங்கும்போது எதிர் காலத்தில் பல மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்” என்கிறார் மோகன வெங்கடாஜலபதி.

குழந்தைகள் மீதான சிறார்வதை குறித்து நெடுங்காலமாகப் பேசிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், தீர்வு... இதுவரையிலும் கிடைத்தபாடில்லை.

ஆக, இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக குழந்தைகளை மனதளவில் தயார்படுத்துவதும், குழந்தைகளின் குரல்களுக்கு பெற்றோர், உற்றார், உறவினர், அதிகாரவர்க்கம் என அனைத்துத்தரப்பும் செவிமடுக்க ஆரம்பிப்பதும்தான் தீர்வுக்கான முதல்படியாக இருக்கும்.

இனியாவது செவிமடுப்போம்!

*****

கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை... பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

உண்மையின் பிரதிபலிப்பு!

‘ராட்சசன்’ படத்தில் மாணவி களின் அச்சத்தை சாதகமாக்கிக் கொண்டு அவர்களிடம் அத்துமீறும் ‘இன்பராஜ்’ எனும் ஆசிரியர் கதாபாத்திரம், சமீபத்தில் வெளிப்பட்ட கல்வி நிலைய பாலியல் வன்முறைகள் குறித்த பதிவுகளில் அடிக்கோடிட்டுப் பேசப்பட்டது. ‘`அந்த கேரக்டர் உண்மையின் பிரதிபலிப்பு’’ என்கிறார் அதன் இயக்குநர் ராம்குமார்.

“ ‘ஆசிரியர் இன்பராஜ்’ கதாபாத்திரம், முழுக்க முழுக்க உண்மையில் இருந்து எழுதப்பட்டது. ‘ராட்சசன்’ படத்துக்காகப் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் பலவற்றைத் தேடி வாசித்தேன். நான் கேட்டறிந்த, செய்திகளில் படித்த பாலியல் குற்றச் சம்பவங்களோடு ஒப்பிடுகையில் ‘இன்பராஜ்’ கதாபாத்திரம் மூலம் நான் காண்பித்தது மிகவும் சிறிய அளவுதான்.

யார் மிரட்டலுக்கு பயப்படுகிறார்களோ அவர்களைத்தான் குற்றவாளிகள் குறிவைக் கிறார்கள். அந்த வகையில் சில சூழ்நிலைகளில் மாணவ சமுதாயம், அடக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஆசிரியர் சமுதாயத்துக்கு ஈஸி டார்கெட் ஆகிறது. பாலியல் குற்றங்களைத் தடுப்பது பற்றிய உரையாடல் இன்னும் வலுப்பெற வேண்டும். அப்போதுதான் பாதிக்கப் படும் குழந்தைகள் மற்றும் பெண்களின் குரல் அதற்கு எதிராக உயரும்” என்கிறார் ராம்குமார்.

கல்வி நிலையங்களில் பாலியல் தொல்லை... பெற்றோர், மாணவர்கள், சட்டம் செய்ய வேண்டியது என்ன?

இணையவழி கற்றலுக்கு மாற்று யோசிக்க வேண்டியது அவசியம்! - கல்வியாளர் உமா மகேஷ்வரி

இந்தச் சம்பவங்களை அடுத்து இணைய வழி வகுப்புகளை முறைப்படுத்தும் உத்தரவுகளை தமிழக அரசு வெளி யிட்டுள்ளது. இணையவழியாக நடத்தப் படும் வகுப்புகள் பள்ளியால் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தொடங்கி மாணவ மாணவிகள் புகார்கள் தெரிவிக்க ஹெல்ப்லைன் உருவாக்கப்பட வேண்டும் என்பதுவரை இந்த உத்தரவுகளில் அடக்கம். இந்த உத்தரவுகளின் அவசியம் மற்றும் அவற்றின் நடைமுறை சாத்தியங்கள் குறித்து கல்வியாளர் உமா மகேஷ்வரியிடம் பேசினோம்.

‘‘ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகளின் பிரச்னை களைக் கேட்டறிந்து தீர்வளிக்க உளவியல் ஆலோசகர் நிச்சயம் அவசியம். சில பள்ளிகளில் மட்டுமே உளவியல் ஆலோசகர்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். பெரும் பாலான அரசுப் பள்ளிகளில் அவர்களுக்கான இடம் இன்று வரையில் இல்லை. வீட்டில் மாணவர்கள் பாதுகாப்பாகத் தான் இருப்பார்கள் என்று இருந்துவிடாமல் இணையவழி கல்வியானாலும் மாணவர்களுடன் உளவியல் ஆலோ சகர்கள் தொடர்ந்து இணைப்பில் இருப்பது அவசியம்.

இணையவழியாக நடத்தப்படும் வகுப்புகள் பள்ளியினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும் சொன்னது தனியார் பள்ளிகளுக்கே பொருந்தும் நிலையில் உள்ளது. ஏனென்றால், இணையவழி கல்வியை அரசு மாணவர்களால் இன்னுமே முழுவதுமாக பெற முடியவில்லை. இணையவழி கல்விக்கு மாற்றாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களால் தான் அரசுப் பள்ளி குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

இணையவழி கற்றலுக்கு மாற்று யோசிப்பது இந்தக் காலகட்டத்தில் அவசியமாகிறது. பன்னிரண்டாவது படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினியோடு, பாடத் திட்டத்தை பென் டிரைவில் அளித்திருப்பது போல மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் கொடுப்பது அவசிய மாகிறது. ஒருவிதத்தில் மாணவர்களுக்கு நிகழும் ஆன்லைன் பாலியல் சீண்டல்களுக்கும் இது தீர்வாக அமையலாம்’’ என்கிறார் கல்வியாளர் உமா மகேஷ்வரி.