Published:Updated:

இலங்கை: கடனில் மூழ்கும் கண்ணீர்த் தீவு!

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

- கருணாகரன்

இலங்கை: கடனில் மூழ்கும் கண்ணீர்த் தீவு!

- கருணாகரன்

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

ஒரு காலம் யுத்தத்தினால் நெருக்கடிபட்டுக்கொண்டிருந்த இலங்கை, இப்பொழுது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கிறது. ‘யுத்தம் முடிந்துவிட்டது. இனி வருவது நல்ல காலம்தான்’ என்று நம்பியவர்களின் கனவிலே மண் விழுந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எல்லாத் துறைகளையும் பாதித்திருக்கிறது. சாதாரண சமையலுக்கான எரிவாயுவில் தொடங்கி மின்வெட்டு வரை நீண்டுகொண்டிருக்கிறது. தினமும் ஏழு, எட்டு மணி நேரம் மின்வெட்டு. எரிபொருள்களை நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம், நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால் பொருள் விநியோகம், பொதுப் போக்குவரத்து எல்லாமே முடங்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. பள்ளி மாணவர்களுடைய பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கே தாளில்லை என்ற நிலை. தாளில்லாத காரணத்தினால் தேர்வுகளை ஒத்திப்போட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இதைவிட உணவு, மருந்து, உடை போன்ற அத்தியாவசியப் பொருள்கள் உட்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கட்டுப்பாடில்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. அரசின் விலைக் கட்டுப்பாட்டு அதிகார சபை செயலிழந்துவிட்டது. இதனால் எந்தப் பொருளையும் எந்த விலைக்கும் விற்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இலங்கை: கடனில் மூழ்கும் கண்ணீர்த் தீவு!
இலங்கை: கடனில் மூழ்கும் கண்ணீர்த் தீவு!
Eranga Jayawardena

விலையேற்ற அறிவிப்பு வருவதற்கு முன்பு பொருள்கள் தலைமறைவாகிவிடுகின்றன. எல்லாமே பதுக்கப்படுகின்றன. பதுக்கலைக் கட்டுப்படுத்துவதற்கு வழியில்லை. பதுக்குவதன் நோக்கமே செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி, தேவையை அதிகரிப்பதாகும். இதன் மூலம் ஒரு சிறிய தரப்பு பெரும் லாபம் சம்பாதிக்கிறது. இந்தப் பதுக்கல் மாபியாக்களின் கைகளிலேயே இன்று அனைவருடைய வாழ்க்கையும் தீர்மானிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனுடைய பின்னணியில் அரசாங்கத்தின் ஆட்களே உள்ளனர் என்ற விமர்சனங்களும் உள்ளன.

‘ஒவ்வொரு நாளும் கெட்ட சேதிகளே கிடைக்கும் காலமாகிவிட்டதா?’ என்று எண்ணும் அளவுக்குத் தினமும் அதிர்ச்சியான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த அளவுக்கு யுத்த காலத்தில்கூட நிலைமை மோசமடைந்திருக்க வில்லை.

இந்த மாதிரியான சூழலில் அரசாங்கமே மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில், பொறுப்பில், கடமையில், வழிமுறையைக் காண்பதில் இருக்க வேண்டும். ஆனால், அரசாங்கமோ என்ன செய்வதென்று தெரியாத தடுமாற்றத்தில் உள்ளது. சரியாகச் சொன்னால், அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது எனலாம். இதை நிரூபிக்கின்ற விதமாகவே நிதி அமைச்சர் உட்பட அரசாங்கத் தரப்பில் உள்ள அத்தனை பிரதானிகளின் பேச்சும் குழப்பமானதாக உள்ளது.

இலங்கை: கடனில் மூழ்கும் கண்ணீர்த் தீவு!
Eranga Jayawardena
இலங்கை: கடனில் மூழ்கும் கண்ணீர்த் தீவு!
Eranga Jayawardena

“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை எப்போது தீரும் என்பதற்கு இப்பொழுது பதிலளிக்க முடியாது. ஆனால், அரசாங்கம் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ.

ஆனால், இந்தப் பொருளாதார நெருக்கடி எப்படி ஏற்பட்டது? இதைத் தீர்ப்பதற்கான உண்மையான, சரியான வழிமுறைகள் என்ன? இப்பொழுதுள்ள உண்மையான நிலைமை என்ன என்பதைக் குறித்தெல்லாம் விளக்க அரசாங்க மட்டத்திலும் சரி, அரசுக்கு வெளியே எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள் தொடக்கம் நாட்டிலும் நாட்டிற்கு வெளியிலும் உள்ள பொருளியல் நிபுணர்கள் வரையில் யாருமே தயாரில்லை. இதைப்பற்றிப் பேசுவதற்குப் பலருக்கும் அச்சம். அப்படிப் பேசினாலும் அதைக் கேட்டுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்குக் காதில்லை என்பது துயரமானது.

ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலைக்கு பலரும் ராஜபக்ஸ சகோதரர்களின் ஆட்சியே காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை மறுக்க முடியாது. ஆனால், இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களுக்கும் சம பங்குண்டு.

1970இன் முற்பகுதியில் தென்னிலங்கையில் ஜே.வி.பியின் கிளர்ச்சி தொடங்கியது. அதிலே இளைய தலைமுறையினர் ஆயிரக்கணக்கில் போராட்டக்களத்திலே குதித்தனர். அவர்களை அடக்குவதற்கென்று அரச படை எந்திரம் பெருப்பிக்கப்பட்டது. முப்படைகளுக்குமான ஆட்சேர்ப்புத் தொடக்கம் நிதி ஒதுக்கீடு வரை தேச வளம் பெருவாரியாகச் செலவானது.

இலங்கை: கடனில் மூழ்கும் கண்ணீர்த் தீவு!
Eranga Jayawardena

• அதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம், மறுபடியும் 1987இல் மீள் எழுச்சியடைந்த ஜே.வி.பியின் போராட்டம் என கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல், நாடு அரசியல் கொந்தளிப்புகளால் அலைக்கழிக்கப்பட்டது, அழிந்தது. அரசியல் பொருளில் விளக்குவதானால் முழுமையான உள்நாட்டு நெருக்கடியால் – போரினால் - சீரழிந்தது.

அதற்கு முன், நானூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்நியரால் சுரண்டப்பட்ட நாடு இலங்கை. சுதந்திரம் பெற்ற 20 ஆண்டுகளுக்குள்ளேயே தொடங்கிய அரசியற் கொந்தளிப்பும் நெருக்கடியும் 50 ஆண்டுகளுக்கும் மேலும் நீடித்தது என்றால் விளைவு எப்பிடியிருக்கும்?

மறுபக்கத்தில் கேள்விக்கிடமில்லாத நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சிமுறையில் ஜனாதிபதிக்குக் கிடைத்த அதிகாரத்தின் காரணமாக, நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித் தரக் கூடிய பல வளங்கள் வீணடிக்கப்பட்டன. உதாரணமாக, அரச நிலத்தை முறையற்ற விதமாக தனிப்பட வழங்கியமை, வானொலி, தொலைக்காட்சிக்கான அலைவரிசை உரிமங்களை வழங்கியமை, அரச அதிகாரிகளுக்கான வரிவிலக்கு மற்றும் அதிகரித்த சலுகைகளை வழங்கியமை, தேர்தல் வாக்குகளுக்காக அரசுக்குச் சுமையேற்றும் வகையில் பணி நியமனங்களை வழங்கியமை, அளவுக்கதிகமான வகையில் தேவையற்றவர்களுக்கும் உதவித்திட்டங்களை வழங்கியமை, அதிகரித்த மானியங்கள், தொடர்ச்சியாகவே பற்றாக்குறையான வரவு செலவுத்திட்டங்களில் துண்டு விழும் அளவுக்கு வெளிநாட்டுக் கடன்களை அதிகரித்தமை, இந்தக் கடன்களுக்கான வட்டிக்கு மேலும் கடன் பெற்றமை, கீழிருந்து மேல் வரை எல்லா அடுக்குகளிலும் நிறைந்திருக்கும் ஊழல் என ஏராளம் தொடர் காரணங்கள்.

இலங்கை: கடனில் மூழ்கும் கண்ணீர்த் தீவு!

இந்தத் தவறுகளை மறைப்பதற்கு இனவாதத்தையும் போரையும் அரசு தொடர்ச்சியாகப் பயன்படுத்தியது. மறுவளத்தில் உள்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை மறுதலிக்கும் விதமாக நவதாராளவாதத்தை அனுமதித்தது. அதனால், இலங்கையின் பெருமளவு உற்பத்தித்துறைகள் வீழ்ச்சியடைந்தன. இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு அதிக பங்களிப்புச் செய்த தேயிலை, ரப்பர், தென்னை ஆகியவற்றின் உற்பத்திகள் வீழ்ச்சியடைந்து சேவைப் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது. குறிப்பாக சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் அக்கறை செலுத்துதல் என அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான உபாயங்கள் வகுக்கப்பட்டன. இலங்கையின் மொத்த சனத்தொகையில் பத்தில் ஒரு பங்கினர் மத்திய கிழக்கு மற்றும் மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் வேலை செய்து டொலரை இலங்கைக்குக் கிடைக்கச் செய்து வந்தனர். கொரோனா நெருக்கடி இவர்களை நாடு திரும்ப வைத்தது. இதனால், இவர்கள் மூலமாகக் கிடைத்த அந்நியச் செலாவணி முடங்கியது. இதைப்போலவே கூடுதலான வருவாயை ஈட்டித்தந்த இன்னொரு துறையான சுற்றுலாவும் நெருக்கடிக்கு உள்ளாகியது. இதனால் வருடத்துக்கு ஏழு பில்லியன் டொலர்கள் அண்ணளவாக இழக்கப்பட்டது.

இலங்கையின் மொத்த வருவாயில் மூன்றாவது பெரிய பங்களிப்பைச் செய்வது சுற்றுலாத்துறையே. மொத்த உற்பத்தியில் 10 வீதம். 2019-ல் 7.5 பில்லியன் வருவாயைத் தந்த சுற்றுலாத்துறை 2021 -ல் 2.8 ஆகச் சுருங்கியது. ஆண்டொன்றுக்கு 12 லட்சம் பேர் வருகை தருகின்ற நிலை மாறி 2022-ல் 12 ஆயிரம் பேர் மட்டுமே வருகை தருவதாக மாறியிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 2019-ல் 6-8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது இப்பொழுது 1.6 என மாறியுள்ளது. இன்னொருபுறம் அரசாங்கமோ தங்கள் விருப்பத்துக்கு ரூபாய்த் தாள்களை அச்சிட்டுக்கொண்டேயிருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய வங்கியின் இரண்டு ஆளுநர்கள் பதவி விலகியிருக்கிறார்கள். பணவீக்கம் 16.8 சதவிகிதமும் வேலையின்மை 52 சதவிகிதமும் அதிகரித்திருக்கின்றன.

இப்படி பல வழிகளிலும் தொய்வையும் தளர்வையும் நோக்கிச் சரிந்துகொண்டிருந்த பொருளாதாரம் இன்று மிக மோசமான நிலைக்குள்ளாகியிருக்கிறது. ஆனால் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்குவோம் என்று ராஜபக்ஸக்கள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். யுத்தத்தில் புலிகளை வெற்றி கொண்டதைப்போல பொருளாதார நெருக்கடியிலும் தம்மால் வெற்றியடைய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால் நிலைமை அப்படியாக இல்லை.

இலங்கை: கடனில் மூழ்கும் கண்ணீர்த் தீவு!

கடந்த வாரம் இந்தியாவிற்குப் பயணம் செய்த நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் ரூபாயைக் கடனாகப் பெற்றிருக்கிறார். இது உடனடியாகச் சில நெருக்கடிகளைத் தீர்க்க உதவும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் உதவப்போவதில்லை.

டொலர் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் துறைமுகங்களில் பொருள்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டுமானால் IMF- சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்ல வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அப்படிச் செல்ல வேண்டியிருந்தால் அது பல நிபந்தனைகளுக்குட்பட்டே ஆக வேண்டும். அந்த நிபந்தனைகள் இலங்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கவே செய்யும்.