Published:Updated:

அத்துமீறும் மாணவர்கள், அடக்க முடியாத ஆசிரியர்கள்... தீர்வுதான் என்ன?

அத்துமீறும் மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
அத்துமீறும் மாணவர்கள்

அவள் விகடனின் முன்னெடுப்பு

அத்துமீறும் மாணவர்கள், அடக்க முடியாத ஆசிரியர்கள்... தீர்வுதான் என்ன?

அவள் விகடனின் முன்னெடுப்பு

Published:Updated:
அத்துமீறும் மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
அத்துமீறும் மாணவர்கள்

அண்மைக்காலமாக பள்ளி மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதுபோன்ற ஒழுங்கீனங்கள் காலங்காலமாக இருக்கவே செய்கின்றன. ஆனால், இன்றைக்கு அனைத்தையும் படம்பிடிக்க முடியக்கூடிய சூழல் இருப்பதாலும், அதைப் பார்த்து ரசிக்க ஒரு கூட்டம் இருப்பதாலும் உடனுக்குடன் பரப்பப்பட்டு, பதற்றச்சூழலை ஏற்படுத்துகின்றன. அதற்காக, ஒழுங்கீன செயல்களை நியாயப்படுத்த முடியாது. அது துளியளவாக இருந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியமே. ஆனால், அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்... எதைச் செய்தால், அதைத் தடுத்து நிறுத்தமுடியும் என்கிற கேள்விகளுக்குத்தான் தெளிவான விடைகளே இல்லை!

அத்துமீறும் மாணவர்கள், 
அடக்க முடியாத ஆசிரியர்கள்...
தீர்வுதான் என்ன?

வீடியோக்கள் பரப்பப்பட்ட சமயத்தில் பரபரப்பாகப் பேசி இந்தப் பக்கம் ஈர்க்கப்பட்ட பலரும், தற்போது வெவ்வேறு பஞ்சாயத்துகளுடன் வெவ்வேறு பக்கங்களுக்கு மடை மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால், மாணவர்கள் சார்ந்த விஷயம் அப்படியேதான் நீடித்து நிலை கொண்டிருக்கிறது. ‘நாம் என்ன செய்யப்போகிறோம்... எதைச் செய்தால், அதைத் தடுத்து நிறுத்தமுடியும்?’ என்கிற கேள்விகளை ஒதுக்கித்தள்ள முடியாத சூழலில் முதல் கட்டமாக இந்த விஷயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கியது ‘அவள் விகடன்’.

அத்துமீறும் மாணவர்கள், 
அடக்க முடியாத ஆசிரியர்கள்...
தீர்வுதான் என்ன?

இதற்காக மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் ஆலோசகர், வழக் கறிஞர், காவல்துறை உயரதிகாரி அடங்கிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வை விகடன் அலுவலகத்தில் அண்மையில் நடத்தினோம். அக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கியமான கருத்துகள் உங்கள் பார்வைக்கு...

அத்துமீறும் மாணவர்கள், 
அடக்க முடியாத ஆசிரியர்கள்...
தீர்வுதான் என்ன?

தி.பரமேசுவரி, தலைமை ஆசிரியை மற்றும் எழுத்தாளர், வாணியம்பாடி

‘`ஒழுங்கீன செயல்களை மாணவர்கள் மீதான குற்றச்சாட்டாக மட்டுமே பார்க்க முடியாது. புறச் சூழல்களும் காரணமாவதைப் பார்க்க வேண்டும். இன்று பெற்றோர் மற்றும் மாணவர்களின் சிந்தனையில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. மாணவர் களை சமாளிப்பது ஆசிரியர்களுக்கு கடினமாக இருக்கிறது. 40 நிமிட பாட வேளையைக்கூட முழுமையாக அவர்களால் கவனிக்க முடிவ தில்லை. எனவே பாட வேளையின் கால அளவை மாற்றியமைக்க வேண்டும். முன்னெப் போதோ உருவாக்கப்பட்ட கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டங்களை இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி யமைத்தால்தான் மாணவர்களை சரியாக வழிநடத்த முடியும்.

கொரோனா தொற்று காரணமான ஒன்றரை ஆண்டுக்காலத்தில் குடும்பம் மற்றும் சமூக சூழலே மாறியிருக்கிறது. அத்தகைய சூழலைக் கடந்து வருகிற மாணவர்களை உடனே பாடங்களுக்குள் கொண்டு செல்வது சரியாக இருக்காது. தேர்வு தரும் அழுத்தமும் அதிகரித்திருக்கிறது. பல லட்சம் பேர் படிக்கும் அரசுப்பள்ளிகளில் சில மாணவர் களின் ஒழுங்கீன செய்கையை மட்டும் வைத்து இதைப் பொதுமைப்படுத்த வேண் டாம்.’’

அத்துமீறும் மாணவர்கள், 
அடக்க முடியாத ஆசிரியர்கள்...
தீர்வுதான் என்ன?

வேலு, ஆசிரியர், ஆரணி

``பெற்றோருடைய பொறுப் பின்மையால்தான் மாணவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். எத்தனையோ பள்ளிகளில் தலைமை ஆசிரியர் முடி திருத்தம் செய்த செய்திகளைப் படித்திருப் போம். எந்த ஒழுங்கும் இல்லாமல் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் பெற்றோர். அனைவரும் தேர்ச்சி என்கிற முறையே சிக்கலாக இருக்கிறது. படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி எனும்போது அவர்களுக்கு படிப்பின் மீது எப்படி பற்று வரும்?

யோகா பயிற்சியும், நன்னெறிக் கல்வியும் தீவிர மாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். உச்சபட்ச ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகிற மாணவர்களை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தால்தான் சமூகத்தில் பயம் வரும். ஒழுக்கமின்றி நடக்கிற மாணவர்களுக்கு புத்தகத்தைத் தவிர இலவசங்கள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் பெற்றோருக் கும் பயம் வரும்.’’

அத்துமீறும் மாணவர்கள், 
அடக்க முடியாத ஆசிரியர்கள்...
தீர்வுதான் என்ன?

ஆதிலட்சுமி, வழக்கறிஞர், சென்னை

‘`ஒழுங்கு மீறுவதை ஹீரோயிசமாக நினைக்கும் குழந்தைகளின் எண்ணத்தை மாற்ற வேண்டும். பிரச்னைகளைக் கடந்து ஆசிரியர்களும் மாணவர் களுடன் அன்பான அணுகுமுறையில் ஈடுபட வேண்டும். புழல் சிறையில் உள்ள கைதிகள் படிக்கிறார்கள், மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிக்கிறார்கள். சிறையால் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறபோது பள்ளிக் கூடத்தால் முடியாதா? ஒரு மாணவன் தவறு செய்கிறான் என்றால் அவனை மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டுமே தவிர அதனைப் பெரிதாக்கத் தேவையில்லை.’’

அத்துமீறும் மாணவர்கள், 
அடக்க முடியாத ஆசிரியர்கள்...
தீர்வுதான் என்ன?

பகலவன், காவல்துறை துணை ஆணையர், திருவல்லிக்கேணி சரகம், சென்னை

‘`செல்போன் மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காகப் பயன்படுத்திய செல்போனுக்கு ஒரு கட்டத்தில் பிள்ளைகள் அடிமையாகி விட்டனர். ஓடியாடி விளையாடக்கூடிய மாணவப் பருவத்தில் அவர்கள் செல்போனில் மூழ்கியிருக்கிறார்கள். செல்போன் வழியே அவர்களுக்கு எல்லாமும் அறிமுகமாகிறது. அதன் விளைவைத்தான் நாம் இந்த வீடியோக்களில் பார்க்கிறோம்.

அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. பெரும் குற்றவாளிகளுக்குக்கூட கடும் தண்டனைகள் வழங்கப் படாமல் அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில்தான் சிறைச்சாலைகள் இயங்கி வருகின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுகிற மாணவர்களை அன்பால் மாற்ற முடியும். ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவரும் அதற்கு முன் வர வேண்டும்.’’

அத்துமீறும் மாணவர்கள், 
அடக்க முடியாத ஆசிரியர்கள்...
தீர்வுதான் என்ன?

சித்ரா அரவிந்த், உளவியல் ஆலோசகர், சென்னை

``இன்று குழந்தை வளர்ப்பு முறை மாறியிருக்கிறது. ஒரே குழந்தை என அதிக செல்லம் கொடுத்து கண்டிக்காமல் விடுகிறார்கள். சமூகப் பொறுப்பின்மையுடன் நடந்துகொள்ள இதுவும் ஒரு காரணம். புறச்சூழல் ஏற்படுத்துகிற தாக்கத்தில் சினிமா, ஊடகங்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. போதைப் பழக்கங்கள் பலவித உளவியல் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. உளவியல் காரணிகளையும் சிந்தித்து அதற்கேற்றபடியான கற்பித்தல் முறையைக் கொண்டு வருவது அவசியம்.’’

அத்துமீறும் மாணவர்கள், 
அடக்க முடியாத ஆசிரியர்கள்...
தீர்வுதான் என்ன?

கீதா நாராயணன், சமூக செயற்பாட்டாளர், சென்னை

‘’சமூகத்தில் நல்ல முன்னு தாரணங்கள் இல்லாததால்தான் இன்றைய தலைமுறை இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது. நட்பை பேணுதல், குழுவாக இணைந்து பணியாற்றுதல் என எந்தப் பண்புகளும் அற்ற தலைமுறை இன்று உருவாகி வருகிறது. இணைய வெளியில் செக்ஸ், வன்முறை இரண்டும் அதிகளவில் இருக்கிறது. அதனைப் பார்த்து வளர்கிறவர்களது எண்ணவோட்டம் வன்முறைக்குப் பழகுகிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் கவுன்சலிங் சென்டர் அமைப்பது மட்டுமே தீர்வாகாது. மாணவனின் குடும்ப சூழலை ஆராய்ந்து அச்சூழல் அம்மாணவனுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டறிந்து அதற்கேற்றபடி அவனை வழி நடத்துகிற ‘கேஸ் வொர்க் சென்டர்’ தான் தேவை.

தமிழ்நாட்டில் குடிகாரர்களின் எண்ணிக்கையும், திருமணம் தாண்டிய உறவுகளும் அதிகரித்து வருகின்றன. இவ்விரு காரணிகளால் பாதிக்கப்படும் குழந்தைகள்தான் நடத்தை தவறி இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.’’

இது முதற்கட்டம்தான், இதை அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டு சென்று, உருப்படியாக ஏதாவது ஒரு தீர்வைக் கண்டறிய முடியுமா? அப்படிக் கண்டறிந்தால் அதை அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டு செல்வது எப்படி? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறியும்வரை... தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்போம் - உங்களோடு கைகோத்து!

வாசகர்களாகிய நீங்களும் இந்தப் பிரச்னை குறித்த உங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாணவர்கள் Vs ஆசிரியர்கள்

அவள் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை - 600 002

மின்னஞ்சல்: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism