ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

வாடகைத்தாய் முறை... சட்டம் முதல் சவால்கள் வரை!

வாடகைத்தாய் முறை
பிரீமியம் ஸ்டோரி
News
வாடகைத்தாய் முறை

தொழில்முறை வாடகைத்தாய் முறையை முற்றிலும் ஒழிப்பது சரியா... உறவினர்கள் யாரும் வாடகைத்தாயாக முன் வராத நிலையில் தம்பதியரின் நிலை என்ன

குழந்தை பெற்றுக்கொள்வதற்கான உடல் தகுதி குறைந்த தம்பதியர், வாடகைத்தாய் முறை (Surrogacy) மூலம் பெற்றுக்கொள்ள முடியும். உலகின் பல நாடுகளில் இம்முறைக்குத் தடை இருக்கும் நிலையில் இந்தியாவில் சட்ட பூர்வ அனுமதி இருக்கிறது. முக்கிய விதிமுறை களுடன் கூடிய வாடகைத்தாய் முறை சட்டம் இந்த ஆண்டு அமலுக்கு வந்தது. வாடகைத்தாய் முறை குறித்து பல்துறை சார்ந்தவர்கள் தங்களின் கருத்துகளை இக்கட்டுரையில் முன் வைக்கின்றனர்.

சாந்தகுமாரி
சாந்தகுமாரி

முரண்களுக்கெல்லாம் தீர்வென்ன?

வாடகைத்தாய் முறைக்கென இயற்றப் பட்டிருக்கும் சட்டம் குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. சாந்தகுமாரியிடம் கேட்டோம்...

“திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியரே வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். குழந்தை பெற்றுக் கொள்வதற்கான உடல்தகுதி இல்லை என்கிற தகுதிச் சான்றிதழைப் பெற்ற பிறகு, தேசிய வாடகைத்தாய் வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். குழந்தை வேண்டும் தம்பதியரில் கணவர் 26 - 55 வயதுக்குள்ளும், மனைவி 23 - 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வாடகைத்தாயாக கருவைச் சுமக்கி றவர்கள் குழந்தை வேண்டும் தம்பதி யருக்கு உறவினராக இருக்க வேண்டும். அவரது வயது 35 - 45க்குள் இருக்க வேண்டும். அவருக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்க வேண்டும்.

குழந்தை பெற்றுக்கொடுப்பதோடு அக்குழந்தைக்கும் தனக்குமான உறவு முடிந்தது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே வாடகைத்தாயாக வர முடியும். சட்டபூர்வ இணையரே இம்முறையில் குழந்தை பெற்றெடுக்க முடியுமே தவிர திரு நங்கையர், தன்பாலின ஈர்ப்பாளர்கள், தனித்து வாழ்வோர் இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஏழ்மையின் காரணமாக வாடகைத்தாயாக வரும் பெண்கள் மற்றும் கருமுட்டையை விற்பனை செய்யும் பெண்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுகின்றனர். வணிகமயாவதால் ஏற்படும் இத்தகைய பிரச்னைகள் காரண மாகவே, குழந்தை வேண்டும் தம்பதியரின் உறவினரே வாடகைத்தாயாக இருக்க முடியும் என்கிற அம்சம் இச்சட்டத்தில் சேர்க்கப் பட்டிருக்கிறது” என்றவர், இச்சட்டத்தில் முரண்படுகிற அம்சங்களையும் விளக்கினார்.

“தொழில்முறை வாடகைத்தாய் முறையை முற்றிலும் ஒழிப்பது சரியா... உறவினர்கள் யாரும் வாடகைத்தாயாக முன் வராத நிலையில் தம்பதியரின் நிலை என்ன... அரசியலமைப்புச் சட்டத்தின் வாழ்வதற்கான உரிமையில் குழந்தைப்பேறும் அடங்கியுள்ள நிலையில் திருமணமாகாதவர்கள், அதற்கான வாய்ப்பற்றவர்கள் இம்முறை மூலம் குழந்தை பெறக்கூடாது என்று சொல்வது எப்படிச் சரியாகும்... அதே போல், தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் ஏன் இம்முறை மூலம் குழந்தை பெறக்கூடாது...” என்கிறார் சாந்தகுமாரி.

வாடகைத்தாய் முறை... சட்டம் முதல் சவால்கள் வரை!

குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கருவைக் கலைத்துவிடலாம்

வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெறுவதற்கான மருத்துவத் தொழில்நுட்பம் குறித்து மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர் பி.கல்பனாவிடம் கேட்டோம்...

“புற்றுநோய் போன்ற காரணங்களால் கர்ப்பப்பை நீக்கப்பட்ட, பிறப்பிலிருந்தே கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாத பெண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள சாத்தியமே இல்லை என்கிற நிலையில்தான் வாடகைத்தாய் முறை பரிந் துரைக்கப்படும். கணவரின் விந்தணுவையும், மனைவியின் கருமுட்டையையும் எடுத்து In Vitro Fertilization (IVF) முறை மூலம் சோதனைக் குழாயில் கருவை உருவாக்கி வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் பொருத்திவிடுவோம். மனைவியின் கருமுட்டை தரமற்றதாக இருந்தால் தானம் பெற்றுக் கொள்ளலாம். கணவருடைய விந்தணுக்களில் தரமான விந்தணுவைத் தேர்ந்தெடுத்து ஊசி மூலமாக கரு முட்டைக்குள் செலுத்துவோம். வாடகைத்தாய்க்கு செய்யும் ரத்தப் பரிசோதனையிலேயே குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் தெரியவரும். கருவை உட்செலுத்திய 16 - 20 வாரங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் மரபு ரீதியான குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கருவைக் கலைத்து விடலாம்” என்றவரிடம் கருவை உட்செலுத்தும் முன் வாடகைத்தாய்க்கு மேற்கொள்ளும் பரிசோதனைகள் குறித்துக் கேட்டதற்கு...

பி.கல்பனா
பி.கல்பனா

“ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு இருக்கிறதா என்றும், ரத்தப் பரிசோதனை மூலம் ஹெபடைடிஸ் சி, ஹெச்.ஐ.வி போன்ற பாலியல் தொற்றுகள் இருக்கின்றனவா என்றும் பார்ப்போம். நல்ல உடல்நலத்துடன் இருப்பவரே வாடகைத்தாயாகத் தேர்வு செய்யப்படுவார்” என்கிறார் கல்பனா.

கவுன்சலிங் அவசியம்

“இயற்கையாகவே கருவை வயிற்றில் சுமக்கிற தாய்க்கு அக்குழந்தை மீது அன்பு, ஆசை, பொசசிவ்னெஸ் எல்லாம் இருக்கும். வாடகைத்தாய்க்கும் இவை யெல்லாம் பொருந்தும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத் துவர் ஜெயக்குமார்...

“வாடகைத்தாய்க்கு முதலிலேயே உளவியல் ஆலோசகர்கள் மூலம் கவுன்சலிங் கொடுக்கப்படும். அவர்கள் வாடகைத்தாய் மட்டுமே. குழந்தையை நல்ல முறையில் ஈன்றெடுத்துக் கொடுப்பது மட்டுமே அவர்களது பணி என்பது புரிய வைக்கப்படும். அதே நேரம், யாரோ ஒருவரின் குழந்தையைத்தானே சுமக்கிறோம் என்கிற மன நிலைக்கும் அவர்கள் செல்லக்கூடாது. குழந்தையைச் சுமக்கிற காலகட்டத்தில் அக்குழந்தையின்மீது அக்கறை செலுத்தவும் வேண்டும், பெற்றுக்கொடுத்த பிறகு அக் குழந்தையைப் பிரியவும் தயாராக இருக்க வேண்டும். இயல்பாகவே பிரசவத்துக்குப் பிறகு எதிர்கொள்கிற ‘போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்’ (Postpartum Depression) ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை தேவை. வாடகைத்தாயாக கருவைச் சுமப்பவரின் குடும்பம் அதனைப் புரிந்து ஏற்றுக்கொள்வதும் முக்கியம்” என்கிறார் ஜெயக்குமார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

வணிகரீதியிலான வாடகைத்தாய் முறையை ஆதரிக்க வேண்டும்

வாடகைத்தாய் முறையில் ஏமாற்றப்படும் பெண் களுக்காக சென்னையில் பணியாற்றி வரும் ‘இந்திய சமுதாய நலவாழ்வு' நிறுவனத்தின் செயலாளரான ஹரிஹரன்...

“வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறையை ஆதரிக்க வேண்டும். பணத்தேவைக்காகவே வாடகைத்தாயாக குழந்தையைச் சுமக்க ஏழைப்பெண்கள் முன் வருகின்றனர். அவர்கள் யாருக்குக் குழந்தையைப் பெற்றுத் தரப் போகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால், வாடகைத்தாய் யார் என குழந்தை வேண்டும் தம்பதியருக்குத் தெரியும். வாடகைத்தாய் முறைக்கு உலக அளவில் சென்னைதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

வாடகைத்தாய் முறை... சட்டம் முதல் சவால்கள் வரை!

அனுமதியுள்ள நாடுகளில் இம்முறையில் குழந்தையைப் பெற 75 - 80 லட்சம் ரூபாய் வரையிலும் செலவாகிறது. இதுவே சென்னையில் 20 லட்ச ரூபாயே போதுமானது. செலவு மூன்றில் ஒரு பங்காகிறது என்பதோடு வெற்றி விகிதம் அதிகம் என்பதால் பலரும் சென்னையை நோக்கி வருகின்றனர்.

வாடகைத்தாயாக வருகிற படிப்பறிவில்லாத ஏழைப்பெண்களை இடைத்தரகர்கள் எளி தில் ஏமாற்றி பாதிக்குப் பாதி பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். 10 ஆண்டு களுக்கும் மேலாக இடைத்தரகு முறையை ஒழிக்கும் வேலையைச் செய்தோம். அனைத்து மருத்துவ மனைகளிலும் இதற்கென கவுன்சலர்களை நியமிக்கும்முறை கொண்டு வரப்பட்டது. குழந்தையைப் பெற்றுக் கொடுத்த பிறகு வாடகைத்தாயிடமே நேரடியாக பணத்தைக் கொடுத்து விடுவர்.

தற்போது கொண்டு வரப் பட்டிருக்கும் வாடகைத்தாய் முறைக்கான சட்டம் வரவேற்கத் தக்கது என்றாலும் வணிக ரீதியான வாடகைத்தாய் முறை யைத் தடுப்பதற்கு பதிலாக அதனை முறைப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.

ஹரிஹரன்
ஹரிஹரன்

ஏழ்மையில் இருக்கும் பெண்கள் பணத்தேவைக்காக விரும்பித்தான் வாடகைத்தாயாக இருக்க முன் வருகிறார்கள். அவர்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டலைத் தடுத்தாலே போதும். வாடகைத்தாயாக இருப்பதற்கென உரிய தொகையை நிர்ணயம் செய்து முறையாக அவர்களுக்கு அது கிடைக்கும்படி செய்ய வேண்டும். பேசிய பணம் முறையாகக் கொடுக்கப்படுகிறதா... விருப்பத் துக்கு மாறாக வாடகைத்தாய் முறைக்குள் அவர்கள் தள்ளப் படுகிறார்களா... என்பதை அரசு கண்காணித்து முறைப்படுத்துவது தான் சிறந்ததாக இருக்கும்” என்கிறார்.