அரசியல்
அலசல்
Published:Updated:

சுவாதி, ராம்குமார் வழக்குகளும்... வலுக்கும் சந்தேகங்களும்! - விளக்கமளிக்குமா தமிழக காவல்துறை?

ராம்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ராம்குமார்

ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவல் மீண்டும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாநில மனித உரிமை ஆணையம், ராம்குமார் வழக்கில் சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.

பல சந்தேகங்களையும், திடுக்கிடும் திருப்பங்களையும் கொண்டிருந்தது இன்ஜினீயர் சுவாதி கொலை வழக்கு. அந்த வழக்கில் கைதான ராம்குமார், புழல் சிறையில் மின் வயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. தற்போது ராம்குமார் வழக்கில் மாநில மனித உரிமை ஆணையம், 10 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கவும், சுதந்திரமான விசாரணை நடத்தவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. இதுதான் மீண்டும் ராம்குமார் வழக்கில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது!

சுவாதி, ராம்குமார் வழக்குகளும்... வலுக்கும் சந்தேகங்களும்! - விளக்கமளிக்குமா தமிழக காவல்துறை?

சுவாதி கொலை... ராம்குமார் தற்கொலை?

``கடந்த 2016-ம் ஆண்டு, ஜூன் 24-ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினீயர் சுவாதி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் ஜூலை 1-ம் தேதி தென்காசி மாவட்டம், செங்கோட்டை, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைதுசெய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், 2016, செப்டம்பர் 18-ம் தேதி மின் வயரைக் கடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகச் சிறை நிர்வாகம் தெரிவித்தது. அது தொடர்பான வழக்கு புழல் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என அவரின் தந்தை பரமசிவம், வழக்கறிஞர் ராம்ராஜ் இருவரும் தெரிவித்தனர். அதோடு ‘என்னுடைய மகன் ராம்குமார் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார்’ என்று அவரின் தந்தை பரமசிவம் குற்றம்சாட்டியதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த நிலையில்தான், ராம்குமாரின் வழக்கை சுமோட்டோவாக மாநில மனித உரிமை ஆணையம் கையிலெடுத்து விசாரித்தது. அதன் உறுப்பினரான ஓய்வுபெற்ற நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், “ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். ராம்குமாரின் தந்தைக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சிறையிலுள்ள கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்.

சுவாதி, ராம்குமார் வழக்குகளும்... வலுக்கும் சந்தேகங்களும்! - விளக்கமளிக்குமா தமிழக காவல்துறை?

அடுத்து என்ன..?

இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சர்ஜத் நைனா முகமதுவிடம் பேசினோம். ``நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை வழக்கில், ராம்குமார் கைது செய்யப்பட்டபோதே பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவல் மீண்டும் சந்தேகத்தை வலுக்கச் செய்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாநில மனித உரிமை ஆணையம், ராம்குமார் வழக்கில் சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. எனினும், ராம்குமார் மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையிலிருக்கிறது. அதனால், மாநில மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை, தமிழக அரசு ஏற்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. மேலும், மாநில மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைக்கு மேல்முறையீடு செய்ய வழியிருக்கிறது. கூடுதலாக, ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையைச் சுட்டிக்காட்டியிருக்கும் மாநில மனித உரிமை ஆணையம், சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது நல்ல விஷயம்தான். இந்தப் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக ஆணையத்தில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தை ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதனால், ராம்குமாரின் மரணம் எப்படி நடந்தது என்று தமிழக காவல்துறை விளக்கமளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

சர்ஜத் நைனா முகமது
சர்ஜத் நைனா முகமது

புழல் காவல் சரக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``சிறை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி 174-ன் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினோம். ராம்குமாரின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எந்தத் தகவலையும் வெளியில் சொல்வது சரியாக இருக்காது” என்றனர்.

மறுவிசாரணை வேண்டும்!

ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜிடம் பேசினோம். “சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்குத் தொடர்பு இல்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறேன். இப்போது மனித உரிமை ஆணையம், இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது. இதை மிக முக்கியமான உத்தரவாகப் பார்க்கிறோம். மேலும், 10 லட்ச ரூபாய் இழப்பீடு குறித்த பரிந்துரையைவிட, மறுவிசாரணை நடத்தச் சொல்லியிருப்பதையே இந்த வழக்கில் எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம். அரசு விரைவாக ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் சட்டத்தின் உதவியை நாடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.

ராம்ராஜ்
ராம்ராஜ்

தமிழக அரசு, விரைந்து உண்மையை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்!