Published:Updated:

பதுக்கல்தான் காரணமா? - உயரும் நூல் விலை... நசுங்கும் ஜவுளித்துறை...!

நூல்
பிரீமியம் ஸ்டோரி
நூல்

இதற்கு முன்பு இந்த மாதிரியான சூழலை நாங்கள் சந்தித்ததே இல்லை. மத்திய அரசு பருத்தி ஏற்றுமதியை மட்டுமின்றி, ‘யான்’ (Yarn) ஏற்றுமதியையும் தற்காலிகமாகத் தடைசெய்ய வேண்டும்

பதுக்கல்தான் காரணமா? - உயரும் நூல் விலை... நசுங்கும் ஜவுளித்துறை...!

இதற்கு முன்பு இந்த மாதிரியான சூழலை நாங்கள் சந்தித்ததே இல்லை. மத்திய அரசு பருத்தி ஏற்றுமதியை மட்டுமின்றி, ‘யான்’ (Yarn) ஏற்றுமதியையும் தற்காலிகமாகத் தடைசெய்ய வேண்டும்

Published:Updated:
நூல்
பிரீமியம் ஸ்டோரி
நூல்

எப்போதும் பரபரப்பாக இயங்கும், ‘டாலர் சிட்டி’ திருப்பூர் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கொரோனா பேரிடரைக் கடந்துவந்த தொழில்துறையினரை பேரிடியாகத் தாக்கிக்கொண்டிருக்கிறது பருத்தி நூல் விலை உயர்வு. அனைத்து ரக நூல்களும் 100 சதவிகித விலை உயர்வைச் சந்தித்திருப்பதால் ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள், விசைத்தறி உற்பத்தியாளர்கள் என்று மொத்த ஜவுளித்துறையுமே அசாதாரண சூழ்நிலையில் இருக்கின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடைத்துறையில் சுமார் 20,000 நிறுவனங்கள் உள்ளன. இவற்றை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் பேர் உள்ளனர். நூல் விலை பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றன. இதனால் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.350 கோடி வர்த்தகம் பாதிக்கும்.

பதுக்கல்தான் காரணமா? - உயரும் நூல் விலை... நசுங்கும் ஜவுளித்துறை...!

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், “கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு காரணமாக, கடந்த 18 மாதங்களாக நாங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பு இந்த மாதிரியான சூழலை நாங்கள் சந்தித்ததே இல்லை. மத்திய அரசு பருத்தி ஏற்றுமதியை மட்டுமின்றி, ‘யான்’ (Yarn) ஏற்றுமதியையும் தற்காலிகமாகத் தடைசெய்ய வேண்டும். நம் போட்டி நாடுகளுக்கே பருத்தியை ஏற்றுமதி செய்து, உலக அளவில் ஆடை உற்பத்தியில் தோற்றுக்கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் விளைகிற பருத்தியை நம்மால் பயன்படுத்த முடியவில்லை என்கிற நிலை இருக்கிறது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவில் 3.5 கோடி பேல் பருத்தி உற்பத்தியாகிறது. அசாதாரண சூழலைத் தவிர்க்க, அதில் 1.5 பேல் பருத்தியை இந்திய பருத்திக் கழகம் வாங்கிவைக்க வேண்டும். சீனா போன்ற நாடுகள் இது போன்ற நடைமுறையைத்தான் பின்பற்றுகின்றன. குறு, சிறு நிறுவனங்கள் கீழே விழுந்துவிட்டால், அவற்றை மீண்டும் கட்டமைப்பது மிகவும் கடினம் என்பதை அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

“கடந்த ஆண்டு ரூ.200-க்கு விற்ற நூல் இப்போது ரூ.450-க்கு விற்கிறது. திருப்பூரில் மொத்தம் 90 சதவிகிதம் குறு, சிறு நிறுவனங்களும், 10 சதவிகிதம் கார்ப்பரேட்களும் இத்தொழிலை நம்பியுள்ளன. இப்போது 90 சதவிகித குறு, சிறு நிறுவனங்களை 10 சதவிகித கார்ப்பரேட்கள் நசுக்கிவருகின்றன. கார்ப்பரேட்டில் ஒரே கூரையின்கீழ் எல்லா வேலைகளும் நடக்கும். குறு, சிறு நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொரு நிறுவனம் செய்யும். அடுத்தடுத்த நெருக்கடிகளால் 50 சதவிகித நிறுவனங்கள் அழிந்துவிட்டன. மீதமிருப்பவர்களும் கடும் நெருக்கடியில் தவித்துவருகிறோம். 70 சதவிகிதம் உள்நாட்டு வியாபாரமும், 50 சதவிகித ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மட்டுமல்ல... ஈரோடு, கரூர், சேலம் என்று ஜவுளித்துறையை நம்பியுள்ள பல்வேறு மாவட்ட மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முன்பு திருப்பூரில் எங்கு பார்த்தாலும், ‘வேலைக்கு ஆள் தேவை’ என்ற போர்டுகள்தான் காணப்படும். இப்போது எங்கு பார்த்தாலும், ‘கட்டடம் வாடகைக்கு விடப்படும்... வீடு வாடகைக்கு விடப்படும்...’ என்ற போர்டுகள்தான் தென்படுகின்றன. வாரத்தில் ஆறு நாள்கள் வேலை செய்தால்தான் விலைவாசியைத் தாக்குப்பிடித்து இங்கு ஓட்ட முடியும். தற்போது வாரத்துக்கு 3-4 நாள்கள் வேலை இருப்பதே கடினமாக இருக்கிறது. இதனால் கடன் மேல் கடன் வாங்கி வட்டி கட்டவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) நிர்வாகி முத்துரத்தினம்.

பதுக்கல்தான் காரணமா? - உயரும் நூல் விலை... நசுங்கும் ஜவுளித்துறை...!

“குறு, சிறு நிறுவனங்கள் பணப் பற்றாக்குறையால் தத்தளித்துவருகின்றன. கொரோனா காலத்தில் அரசு 30 சதவிகிதம் வரை கடன் வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்ததுபோல, தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு ஜவுளித்துறையினருக்கு 50 சதவிகிதம் கடன் வழங்க வேண்டும். விலை உயர்வுக்கு, பதுக்கலும் ஒரு காரணம். பருத்தி விலை உயர்வால் விவசாயிகளுக்கும் பெரிய லாபமில்லை; எங்களுக்கும் லாபமில்லை. தரகர்கள்தான் பயனடைகிறார்கள். எனவே, பருத்தியை அத்தியாவசியப் பட்டியலில் கொண்டுவருவதுடன், அதை நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி நூற்பாலைக்குத் தர வேண்டும்” என்கின்றனர் இத்துறையினர்.

ராஜா சண்முகம்
ராஜா சண்முகம்

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் இது பற்றிப் பேசினோம். “பருத்திக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்று ஏற்கெனவே கோரிக்கைவைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்தது. மத்திய நிதியமைச்சர் சமீபத்தில் கோவை வந்தபோது, தொழில்துறையினர் சந்தித்தனர். அப்போது மத்திய அமைச்சர், ‘பஞ்சுக்கு வரி குறைக்க வேண்டும் எனக் கேட்டீர்கள். அதைச் செய்துவிட்டோம். இதை நம்பி விவசாயத்திலிருந்து ஜவுளித்துறை வரை பல்வேறு நபர்கள் உள்ளனர். ஒருவர் வைக்கும் கோரிக்கையை, இன்னொருவர் வேண்டாம் என்பார்கள். எனவே, அனைவரும் கலந்து பேசி என்ன தீர்வு வேண்டும் என ஒன்றாக வாருங்கள். நிறைவேற்றித் தருகிறோம்’ எனக் கூறியிருக்கிறார். இறக்குமதியாகும் பஞ்சு பதுக்கிவைக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது. பஞ்சை விவசாயிகளிடமிருந்து இந்திய பருத்திக் கழகமே வாங்கித் தருவதற்கான பேச்சுவார்த்தையையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்றார்.

முத்துரத்தினம்
முத்துரத்தினம்

தமிழ்நாடு கைக்கறி துணி நூல் அமைச்சர் காந்தி, “ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம். இதுவரை முதல்வர் பல்வேறு முறை மத்திய அரசுக்குக் கடிதமாக எழுதிவிட்டார். கடந்த முறை டெல்லி சென்றபோது பிரதமரிடம் நேரிலும் வலியுறுத்தியிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயலை நானும் நேரில் சந்தித்து, கோரிக்கை வைத்திருக்கிறேன். அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்” என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இது வெறும் ஈரோடு, திருப்பூர் பிரச்னையல்ல. ஒட்டுமொத்த தமிழக, இந்திய பொருளாதாரத்துடன் தொடர்புடைய பிரச்னை. எனவே ஒருவர்மீது ஒருவர் புகார் வாசிக்காமல், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism