Published:Updated:

டாய்லெட் பிரச்னை... பேசக்கூடாத விஷயமா?

 விஜயலட்சுமி விக்ரம்
பிரீமியம் ஸ்டோரி
விஜயலட்சுமி விக்ரம்

உடைத்துப் பேசலாம்... சிக்கல் தீர்க்கலாம்!

டாய்லெட் பிரச்னை... பேசக்கூடாத விஷயமா?

உடைத்துப் பேசலாம்... சிக்கல் தீர்க்கலாம்!

Published:Updated:
 விஜயலட்சுமி விக்ரம்
பிரீமியம் ஸ்டோரி
விஜயலட்சுமி விக்ரம்

வெளியில் சாப்பிட பயம்... பயணம் செய்ய பயம்... விருந்துக்குச் செல்ல பயம்... இப்படி எல்லாம் ‘பயமயமாக’ வாழ்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ‘எனக்கு வெளி சாப்பாடு அலர்ஜி... டிராவல் பண்ணும்போது சாப்பிடாம இருந்தாதான் நிம்மதி...’ இப்படி அதற்கு காரணங்களும் இருக்கும் பலரிடம்.

ஆனால், உண்மையான காரணம் ஒன்றுதான்... ‘சாப்பிட்ட உடனே பாத்ரூம் வரும்... வெளியிடங்களில் கழிவறை வசதியை எதிர்பார்க்க முடியாது...’ என்பது மட்டும்தான்.

ஒரு மனிதன் இயற்கை உபாதைகளை முறையாக வெளியேற்றினால்தான் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்றே அர்த்தம். ஆனால், அது பற்றி வெளியில் சொல்ல பெரும்பாலான வர்கள் தயங்குகிறார்கள், அசிங்கமென நினைக்கிறார்கள்.

``சில வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் நானும் இப்படித்தான் இருந்தேன். பொய்கூட சொல்லியிருக்கேன். ஆனா, இன்னிக்கு அதே விஷயம் பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்தற துல தீவிரமா இருக்கேன்’’ என்கிறார் விஜய லட்சுமி விக்ரம். பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர்.

மருத்துவக் கட்டுரைகளில் ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable Bowel Syndrome) என்ற வார்த்தையைப் படித்திருப்பீர்கள். இது என்னவென்றே தெரியாமல் கடந்தும் போயிருப்பீர்கள். `இரிட்டபுள் பவல் சிண்ட் ரோம்' பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்தான் விஜயலட்சுமி. இதை சுருக்கமாக ‘ஐபிஎஸ்’ (IBS) என்று அழைப்பார்கள்.

குடல் மற்றும் வயிறு தொடர்பான இந்தப் பிரச்னை அப்படி என்னதான் செய்யும்... அறிகுறிகள் எப்படியிருக்கும்... இதிலிருந்து மீள முடியுமா?

சொந்த அனுபவங்களையே கேள்விகளுக் கான பதில்களாகத் தருகிறார் விஜயலட்சுமி.

‘` `விஜிக்கு சாப்பிட்ட உடனே பாத்ரூம் வரும்... யார் வீட்டுக்குப் போனாலும் பாத்ரூம் வரும்...’னு சின்ன வயசுலேருந்தே என்னை பலரும் கிண்டல் பண்ணியிருக்காங்க. எங்கேயாவது ஊருக்கு டிராவல் பண்ண ணும்னா பாத்ரூம் இருக்குமாங்கிறதுதான் எனக்கும் எங்கம்மாவுக்கும் பெரிய பயமா இருக்கும். ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் ‘சாப்பிட்டா பாத்ரூம் வருமே’ங்கிறதுதான் என் மண்டைக்குள்ள ஓடிட்டிருக்கும். சாப்பிடாமலே இருப்பேன். யாராவது கேட்டா, ‘எனக்கு பீரியட்ஸ், வயிறு வலி, அதான் சாப்பிடலை’னு சொல்லி சமாளிப் பேன். டீன்ஏஜ்ல பீரியட்ஸை பத்தி பேசறதுல எனக்குத் தயக்கம் இருந்ததில்லை. ஆனா பாத்ரூம் போறது பத்தி பேசறது தர்ம சங்கடமான விஷயமா இருந்திருக்கு...’’ வாசிக்கிற பலரையும் இதே அனுபவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிற வார்த்தை களுடன் பேச ஆரம்பிக்கிறார் விஜி.

“ `யாருக்கும் இப்படியெல்லாம் பாத்ரூம் வராது, அதை பத்தி நினைக்காதே... நினைக்காட்டா பாத்ரூம் வராது’னு ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்துல எல்லாரும் எனக்கு மனசுல தான் பிரச்னைனு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. நானும் அதை நம்ப ஆரம்பிச்சிட்டேன். என்னோட ரெண்டு கர்ப்பங்களின் போதும் இந்தப் பிரச்னை இன்னும் மோசமாச்சு.

‘பிரெக்னெசியில பல பெண்களுக்கு இப்படி இருக்கிறது சகஜம்தான். குழந்தை பிறந்ததும் சரியாயிடும்’னு டாக்டர்ஸ் சொன்னாங்க. என் பொண்ணுக்கு ஆறு வயசிருந்தபோது நாங்க ஒரு ட்ரிப் போனோம். பாதிப் பயணத்துல எனக்கு அவசரமா பாத்ரூம் வந்தது. நான் பட்ட அவஸ்தையைப் பார்த்துட்டு அவ, ‘அம்மா கவலைப்படாதீங்க... எங்கேயாவது பாத்ரூம் இருக்கானு பார்க்க லாம். உங்களுக்கு பாத்ரூம் வரக்கூடாதுன்னு நான் ப்ரே பண்ணிக்கிறேன்’னு சொன்னபோது எனக்கு ரொம்பவே வருத்தமாயிடுச்சு.

டாய்லெட் பிரச்னை... பேசக்கூடாத விஷயமா?

இதுக்கு மேலயும் இந்தப் பிரச்னையில அலட்சியமா இருக்கக் கூடாது, உடனே டாக்டரை பார்த்து ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு முடி வெடுக்க வெச்ச தருணம் அது தான்’’ என்பவர் குடல், இரைப்பை மருத்து வரை சந்தித்து, தனக்கிருப்பது `இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் பாதிப்பு' என்பதை உறுதி செய்திருக்கிறார்.

``இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம் லயே ரெண்டு வகை இருக்கு. ஒரு வகையில மலச்சிக்கலும் இன்னொன் றுல வயிற்றுப்போக்கும் இருக்கும். ஏன் மலச்சிக்கல் வருது, ஏன் பேதி யாகுதுன்னு கேட்டா அதுக்கு `போஸ்ச்சர்' (Posture )னு சொல்லப்படற நம்ம தோற்றப் பாங்கு, சாப்பாடு, அதனால ஏற்படற அலர்ஜினு எதுவேணா காரணமா இருக்கலாம். ஒருநாளைக்கு மூணு, நாலு முறைக்கு மேல பாத்ரூம் போனாலோ, அடிக்கடி மலச்சிக்கலால அவதிப்பட்டாலோ அது ஐபிஎஸ் அறிகுறியா இருக்கலாம். தெரிஞ்சவங்க, தெரியாதவங்கனு பலரும் ஆளாளுக்கு கைவைத்தியம் சொல்வாங்க. ஆனா, அது ஐபிஎஸ் பிரச்னையா இருக்கவே வாய்ப்புகள் அதிகம். பாத்ரூம் சம்பந்தப்பட்ட பிரச்னை வருஷக்கணக்கா உங்களுக்கு இருந்தா நீங்க நிச்சயம் டாக்டரை பார்க்கணும், அது ஐபிஎஸ்தானானு தெரிஞ்சு ட்ரீட்மென்ட் எடுக்கணும்.

இந்தப் பிரச்னையை உறுதி செய்யறதுக்குன்னு எந்த டெஸ்ட்டும் கிடையாது. டாக்டருடைய அட்வைஸ்படி டயட்டீஷியனை சந்திச்சேன். அவங்க சொன்ன உணவு முறையைப் பின்பற்றினது மட்டு மல்லாம, நானும் நிறைய ரிசர்ச் பண்ணினேன். எனக்கு பால், தயிர் எதுவும் ஏத்துக்காது. சின்ன வயசு லேருந்து எனக்கு இந்தப் பிரச்னை இருக்கிறதால, ஒவ்வொருமுறை பேதியாகும்போதும், ‘மோர் சாதம் சாப்பிடு, தயிர் சாதம் சாப்பிடு’ன்னு அம்மா ஊட்டிவிடுவாங்க. ஆனா எனக்குப் பிரச்னையே மோர், தயிர், வெண்ணெய், நெய்தான். ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சதும் முதல்கட்டமா பால் பொருள் களைத் தவிர்த்துட்டு முழுமையான தாவர உணவுகளுக்கு மாறினேன். ஆறே மாசத்துல வித்தியாசம் தெரிய ஆரம்பிச்சது. முழுமை யான வீகன் டயட்டுக்கு மாறினேன். என் ஸ்கின் ஹெல்த்தும் இம்ப்ரூவ் ஆச்சு.

நிறைய பேருக்கு ஐபிஎஸ் பாதிப்பு இருக்கு. ஆனா, அது பத்தி வெளியே பேசறதுல பலருக்கும் தயக்கம் இருக்கு. யார் வீட்டுக்கோ சாப்பிடப் போறோம்... சாப்பிட்டு முடிச்சதும் பாத்ரூம் யூஸ் பண்ணணும்னு கேட்கறதே தர்மசங்கடமானதுதான். உங்க லைஃப் ஸ்டைலை மாத்திக்கிறதுதான் இதுல பிரதானம். உங்களுக்கு ஏத்துக்காத உணவு களைத் தவிர்த்துடணும். உங்களுக்கு எது ஏத்துக்கும், எது ஏத்துக்காதுனு நீங்கதான் அனுபவரீதியில கண்டுபிடிக்கணும். ஃபுட் டைரி வெச்சுக் குறிப்புகள் எடுக்கணும். உணவுப்பழக்கம் மட்டுமில்லை, வேற காரணங்களும் இந்தப் பிரச்னையை தீவிரமாக்கலாம். உதாரணத்துக்கு டைட்டான ஜீன்ஸ், டைட்டான பிரா போடும்போது உங்க வயிற்றுத் தசைகள் அழுத்தப்படும். அதனால அடிமுதுகுல அழுத்தம் கூடும். அதன் காரணமா வயிறு மற்றும் சிறுகுடல் பகுதிகளை சுத்தியுள்ள தசைகள் இறுகி பாத்ரூம் பிரச்னை வரும்.

 விஜயலட்சுமி விக்ரம்
விஜயலட்சுமி விக்ரம்

நான் இன்னிவரைக்கும் லூசான பிளவுஸ் தான் போடறேன். ஹைஹீல்ஸ் போடறதும் ஆபத்துதான். அடிமுதுகுல வலி வந்து பாத்ரூம் பிரச்னையில போய் நிற்கும். அதனால நான் ஷூஸ்தான் போடுவேன். புடவைக்கு ஷூஸ் போடறது என் ஸ்டைல்னு சொல்லிப்பேன்’’ என்று சிரிப்பவர் இந்தப் பிரச்னையிலிருந்து மீண்டதன் பின்னணியில் கணவரின் முழு ஆதரவு இருப்பதையும் குறிப்பிடுகிறார்.

‘`அவசரமா ஃபிளைட்டுக்கு கிளம்ப வேண்டியிருக்கும். அப்பதான் எனக்கு பாத்ரூம் வருதுனு ஓடுவேன். என் கணவர் ஒருநாளும் கோபப்பட்டதோ, டென்ஷன் ஆனதோ இல்லை. என் வலியைப் புரிஞ்சுகிட்டு துணையா நின்னார். அடுத்தவங்க சப்போர்ட் பண்றாங்களோ இல்லையோ, கவலைப் படாதீங்க... உங்க உடம்பை நீங்கதான் பார்த்துக்கணும்’’ - ஆரோக்கியத்தின் அவசியம் உணர்த்தி முடிக்கிறார் விஜி.

டாய்லெட் பிரச்னை... பேசக்கூடாத விஷயமா?

உலக அளவில் ஐபிஎஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 சதவிகிதம்.

இந்தியாவில் அந்த பாதிப்பு 4.2 சதவிகிதம். அவர்களில் 10 முதல் 20 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவ உதவியை நாடுபவர்கள்.

ஆண்களோடு ஒப்பிடும்போது ஐபிஎஸ் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம்.

Source: IBS Global Impact Report 2018

அருள்பிரகாஷ்
அருள்பிரகாஷ்

ஆயுள் முழுவதும் கூடவே இருக்கும்!

‘`ஐபிஎஸ் என்பது ஒரு நோயே இல்லை. உயிரைப் பறிக்கிற பிரச்னையும் இல்லை. இது உங்களுடன் வாழ்நாள் முழுவதும் இருக்கும். சிகிச்சைகள், வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ லாம்...’’ நம்பிக்கை வார்த்தைகளோடு தொடங்குகிறார் சென்னையைச் சேர்ந்த, குடல்நல மருத்துவர் அருள்பிரகாஷ்.

‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ என்பதை இப்போது ‘ஃபங்ஷனல் பவல் டிஸார்டர்’ (Functional Bowel Disorder) என்று மாற்றியிருக்கிறார்கள். எல்லா விஷயங்களுக்கும் படபடப்பாகிறவர்கள், எல்லாவற்றையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்கிறவர்கள் என மனிதர்களில் இரண்டு பிரிவினர் உண்டு. முதல் வகையினரை ‘டைப் ஏ பர்சனாலிட்டி’ என்போம். அவர்களுக்கு இந்த ஐபிஎஸ் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகம். டென்ஷனாவது, நாக்கு வறண்டுபோவது, அடிக்கடி சிறுநீர் வருவது, வயிறு கலக்கும் உணர்வு என ஒருவர் பதற்றத்தில் இருக்கும்போது உணர்கிற பல அறிகுறிகளையும் இந்தப் பிரச்னை உள்ளவர்கள் எப்போதுமே உணர்வார்கள். இவர்களுக்கு சிறுகுடல் மிகவும் சென்சிட்டிவ்வாக இருக்கும். உங்களையும் அறியாமல் உங்கள் சிறுகுடல் சென்சிட்டிவ்வாக இருப்பதற்கு மூளை பொறுப்பேற்க முடியாது. எனவே, இதை மனநலத்துடன் தொடர்புடைய பாதிப்பாகவும் அணுக முடியாது.

எப்போதும் வயிறு உப்புசமாகவே இருப்பதாகச் சொல்கிற ஒரு நபருக்கு வேறெதையும் யோசிக்காமல் ‘ஐபிஎஸ்’ என முடிவு செய்து, சிகிச்சை அளிக்க முடியாது. வயிற்று உப்புசத்துக்கு வயிற்றிலுள்ள கட்டிகூட காரணமாக இருக்கலாம். பால் மற்றும் பால் பொருள்கள் சாப்பிடும்போது அறிகுறிகள் ஏற்படுகின்றன என்றால் அதையும் ஐபிஎஸ் என்று சொல்லிவிட முடியாது. அது ‘பால் ஒவ்வாமை’யாகவே கணக்கிடப்பட்டு, பால் பொருள்களைத் தவிர்ப்பதுதான் ஆலோசனையாக வழங்கப்படும். எனவே குடல் பகுதியில் புண்களோ, கிருமிகளோ, வேறு பிரச்னைகளோ இல்லை என்பதை எண்டாஸ்கோப்பி, கலோனாஸ்கோப்பி பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திய பிறகுதான் அறிகுறிகளுக்கு காரணம் ஐபிஎஸ்தானா என்ற முடிவுக்கே வர முடியும்.

இந்தப் பிரச்னையில் அறிகுறிகளுக்கேற்பவே சிகிச்சை அளிக்கப்படும். உதாரணத்துக்கு அடிக்கடி மலம் கழிப்பவர்களுக்கு அதைத் தடுப்பதற்கான மருந்துகள், வயிற்று உப்புசம் உள்ளவர்களுக்கு அதற்கான மருந்துகள் என சிகிச்சைகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கப்படும். இவர்களுக்கு ‘ லோ ஃபாட்மேப்’ (Low-FODMAP) டயட் பரிந்துரைக்கப்படும்’’ என்கிறார் டாக்டர் அருள்பிரகாஷ்.

பவித்ரா
பவித்ரா

அதென்ன `லோ ஃபாட்மேப்’ டயட்..?

‘`Fermentable Oligosaccharides, Disaccharides, Monosaccharides, and Polyols என்பதன் சுருக்கமே `FODMAP'. இது ஒருவகையான கார்போ ஹைட்ரேட் சங்கிலித்தொடர். இவை எல்லாமே வேறுவேறு வகையான கார்போ ஹைட்ரேட்டுகள் தான். இந்தவகையான கார்போ ஹைட்ரேட்டுகளை எடுக்கும்போது சிறுகுடலில் உள்ள நுண்ணு யிரியை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும். அதனால் செரிமானம் சிக்க லாகும். அதனால்தான் ஐபிஎஸ் பாதிப்புள்ளவர்களுக்கு இந்த வகை கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்க்கச் சொல்கிறோம்.

பெரும்பாலான காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு என சைவ உணவுகள் அனைத்திலும் இது இருக்கும். உதாரணத்துக்கு காலிஃபிளவர், முட்டைகோஸ், புரொக்கோலி, மஷ்ரூம், வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், எலுமிச்சை, கிவி உள்ளிட்ட பழங்கள் போன்றவற்றைத் தவிர்க்கச் சொல்வோம். குளுட்டன் உள்ள பார்லி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்டவற்றையும் பால், சீஸ், வெண்ணெய், பனீர் என பால் உணவுகளையும் தவிர்க்கச் சொல்வோம்.இதையடுத்து 3 - 8 வாரங்களில் குடல்பகுதி மெள்ள மெள்ள ஆறத் தொடங்கும். அப்போது எதையெல்லாம் தவிர்க்கச் சொன்னோமோ, அதையெல்லாம் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துவோம்.

ஒருவேளை மீண்டும் பிரச்னை வருவது தெரிந் தால் மறுபடி சில நாள்களுக்கு அதை நிறுத்தச் சொல்லி மீண்டும் தொடங்குவோம். இப்படி விட்டுவிட்டு முயற்சி செய்யும்போது உடலானது மெதுவாக அந்த உணவுகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும். பாதிப்புள்ளவர்கள் என்ன சாப்பிடு கிறார்கள், எதைச் சாப்பிட்டால் பிரச்னை தீவிர மாகிறது என்பதைக் கண்காணிக்க உணவு டைரி ஒன்றைப் பின்பற்றச் சொல்வோம். ‘எலிமினேஷன் டயட்’ என்றும் சொல்லப்படுகிற `லோ ஃபாட்மேப் டயட்'டை எடைக்குறைப்புக்காகப் பலரும் பின்பற்றுகிறார்கள். இந்த டயட்டை பின்பற்றும்போது நுண்ணூட்டச்சத்து

களைப் பெருமளவில் இழப்பார்கள் என்பதால் அவர் களுக்கு அந்தச் சத்துகளை சப்ளிமென்ட் வடிவில் கொடுப்போம். எனவே எடைக்குறைப்புக்கு இது சரியான டயட் முறையல்ல’’ - எச்சரித்து முடிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் பவித்ரா.

****

வாசகர் அனுபவங்கள்

இயற்கை உபாதையை வெளியேற்றுவதை ஏதோ அவமானத்துக்குரிய குற்றச்செயலாகப் பார்க்கும், பரிகசிக்கும் சமூகம் பற்றிய கருத்தை உங்களுடைய சொந்த அனுபவங்களுடன் பகிருங்கள்... என `அவள் விகடன் ஃபேஸ்புக்' பக்கத்தில் கேட்டிருந்தோம். சில வாசகர்களின் கருத்துகள்...

Valli Subbiah

நம் ஊரின் மிகப்பெரிய பிரச்னை டாய்லெட். அதுவும் பெண்களை மிகவும் டென்ஷன் ஆக்கும் ஒரு விஷயம்.பயணம் செய்யும்போது நல்ல டாய்லெட் வசதிகள் வழி நெடுக இல்லாததால் தண்ணீர் குடிப்பது தவிர்த்து விடுகிறோம். அதேபோல கண்டிப்பாக வழியில் எந்த உணவும் வாங்கி உண்பதில்லை. பாதுகாப்பான, வயிற்றுக்குத் தொந்தரவு இல்லாத வீட்டு உணவுகளையே எடுத்துக்கொள்வோம்.

ஒருமுறை பயணம் இருப்பதையே மறந்து, இளநீர் குடித்துவிட்டு (ஒரு மணி நேர பயணம்தான்) ஊர் போய் சேர்ந்ததும் முதலில் டாய்லெட் தேடி அலைந்த அனுபவமும் மறக்க முடியாதது. இந்த நிலையில் கட்டணக்கழிப்பிடங்கள் மோசமாக இருப்பதை விவரிக்க முடியாது.

Saraswathy Padmanaban

நெடுந்தூர பேருந்து பயணத்தில் இந்த அவஸ்தையை பெண்கள் சங்கடம், ப்ளஸ் சங்கோஜத்துடன் சந்திப்பது நிஜமே. சமீபத்தில் இது மாதிரியான ஓர் அனுபவம்.

வயதான பெண்மணி ஒருவர் வழிநில்லா பேருந்தில் பயணம் மேற்கொண்டார். நள்ளிரவில் அடக்க முடியாத அவஸ்தை. ஓட்டுநரிடம் சென்று பேருந்தை சிறிது ஓரம் கட்டி நிறுத்துமாறு கேட்க... அவரோ, `கொஞ்சம் பொறுங்க... இலவச கழிப்பறை வசதி இருக்குமிடம் அருகில் உள்ளது. அங்கு நிறுத்துகிறேன்' என்று அரைமணி நேரத்துக்குப் பேருந்தை ஓட்டிக்கொண்டு ஓர் இலவச கழிப்பறை முன் நிறுத்தினார்.

ஓட்டுநர் நல்லெண்ணத்துடன் அவ்வாறு நடந்து கொண்டாலும் அந்தப் பெண் அனுபவித்த அவஸ்தை யைக் காண சகிக்க முடியவில்லை. நான் நெடுந்தூர பயணத்தில் அதிகம் தண்ணீர் அருந்துவதையும் வெளி உணவுகளை உண்பதையும் தவிர்ப்பேன்.

Shamshudeen P

வெளிநாட்டில் இருப்பதுபோல் நெடுஞ்சாலைகளில் ஒவ்வோர் இரண்டு கிலோமீட்டருக்கும் ஒன்று அல்லது இரண்டு பயோ டாய்லெட் வசதியைக் கட்டணமின்றி மிகுந்த பராமரிப்புடனும், சுகாதாரத்துடனும் அரசு அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் சுத்தமான பயோ டாய்லெட் அவசியம். சிலர் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் டாய்லெட் வசதி இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், அங்கு முறையான பாதுகாப்பும் சுத்தமும் கடைப் பிடிக்கப்படுவதில்லை.

SP Gopala Krishnan

இது கூச்சப்பட வேண்டிய விஷயம் அல்ல... சமூகப் பிரச்னை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism