தொடர்கள்
சினிமா
Published:Updated:

ட்விட்டரின் எதிர்காலம் என்ன?

ட்விட்டரின் எதிர்காலம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
ட்விட்டரின் எதிர்காலம் என்ன?

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற இதர தளங்கள் விளம்பரம் மூலம் பெரிய அளவில் வருவாய் ஈட்டுகின்றன. ட்விட்டரால் அதைச் செய்ய முடியவில்லை.

சோஷியல் மீடியா பொழுதுபோக்குவதற்குத்தான் என்ற விதியை மாற்றியமைத்த பெருமை ட்விட்டருக்கு உண்டு. பிரபலங்கள் பலரும் அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் களமாகத் தனி அந்தஸ்தை அது பெற்றது. ‘இன்று இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுகிறேன்' என்று பிரதமர் மோடி ட்விட்டரில்தான் அறிவிக்கிறார். எங்கோ ஒரு வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட இந்தியர், ட்விட்டர் மூலமே அங்கிருக்கும் தூதரகத்தைத் தொடர்புகொண்டு உதவி கேட்கிறார். திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களின் புதுப்பட அறிவிப்பிலிருந்து விவாகரத்து வரை ட்விட்டர் மூலமே சொல்கிறார்கள். இப்படி பிரேக்கிங் நியூஸ் தருவதிலிருந்து, ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி இயக்கம் நடத்துவது வரை ட்விட்டர் எல்லோருக்குமான வெளியாக இருக்கிறது.

‘நான் ட்விட்டரை விலைக்கு வாங்கப்போகிறேன்' என்று ட்விட்டர் மூலமே அறிவித்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இப்போது அதைத் தன்வசப்படுத்தி இருக்கிறார். ‘‘லாபம் சம்பாதிப்பதற்காக நான் ட்விட்டரை வாங்கவில்லை. மனிதகுலத்துக்கு நன்மை செய்யவே வாங்குகிறேன். எல்லாவிதமான நம்பிக்கைகள் கொண்டவர்களும் ஆரோக்கியமாக விவாதம் நிகழ்த்தும் களமாக ட்விட்டர் இருக்கும்'' என்றிருக்கிறார் மஸ்க்.

ட்விட்டரின் எதிர்காலம் என்ன?

என்றாலும், ஒரு தேர்ந்த டெக் தொழிலதிபராக, எதிர்பாராத முடிவுகளை எடுக்கும் மனிதராக அறியப்படும் அவரின் நிர்வாகத்தில் ட்விட்டர் என்ன ஆகும் என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது.

எலான் மஸ்க் அடிக்கடி X என்ற செயலி பற்றிப் பேசிவருகிறார். சீனாவின் டென்சென்ட் நிறுவனம் WeChat என்ற செயலியை உருவாக்கியிருக்கிறது. சீன மக்களின் தினசரி வாழ்வில் கலந்துவிட்ட சோஷியல் மீடியா செயலி அது. அங்கு உரையாடலாம், ஷாப்பிங் செய்யலாம், உணவு ஆர்டர் செய்யலாம், டாக்ஸி புக் செய்யலாம், சினிமா டிக்கெட்டும் வாங்கலாம். கிட்டத்தட்ட அமேசானும் ஓலாவும் புக் மை ஷோவும் ஸ்விக்கியும் ஒன்றாகக் கலந்துவிட்ட இடம். WeChat போன்ற ஒன்றை சீனாவுக்கு வெளியே உருவாக்க வேண்டும் என்பது மஸ்கின் கனவு. ட்விட்டரின் எதிர்கால இடமாக அவர் அதை நினைக்கக்கூடும்.

கூடவே, ‘Bring back Vine?' என்ற கருத்துக் கணிப்பையும் ட்விட்டரிலேயே நடத்தினார் மஸ்க். வீடியோவுக்காக என்று கடந்த 2021-ம் ஆண்டு Vine செயலியை அறிமுகம் செய்தது ட்விட்டர். பயனாளிகள் இதில் வீடியோ உருவாக்கி ஷேர் செய்யலாம். இன்ஸ்டா ரீல்ஸுக்கெல்லாம் முன்னோடியான இது, எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. அதை மேம்படுத்த ட்விட்டர் நிறுவனம் எதுவும் செய்யவில்லை. இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சாட், ஃபேஸ்புக் எல்லாம் வீடியோவில் எங்கோ போய்விட்ட பிறகு, அவர்களுடன் மோத முடியாமல் இந்த சேவையை நிறுத்தியது ட்விட்டர்.

இதை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் ட்விட்டரை ‘வீடியோ ஃபர்ஸ்ட்' என்ற இலக்கை நோக்கி மஸ்க் கொண்டு போகக்கூடும். சோஷியல் மீடியா என்பது உரையாடல் களமாக இருந்தது மாறி, ஏற்கெனவே பல தளங்கள் வீடியோவைப் பார்க்கும் இடங்களாக மாறிவிட்டன. ட்விட்டரும் அதே பாதையில் போகலாம்.

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற இதர தளங்கள் விளம்பரம் மூலம் பெரிய அளவில் வருவாய் ஈட்டுகின்றன. ட்விட்டரால் அதைச் செய்ய முடியவில்லை. மற்ற சோஷியல் மீடியாக்களுடன் ஒப்பிடும்போது ட்விட்டரில் ஆடியன்ஸ் குறைவு. அதுவும் விளம்பரங்கள் குறைவாக வருவதற்குக் காரணம். ‘மதிப்புக்குரிய விளம்பரங்களின் களமாக ட்விட்டர் இருக்கும்' என்று மஸ்க் அறிவித்திருக்கிறார். பெரிய பெரிய பிராண்ட்களின் விளம்பரங்களை வாங்குவது, இன்னொரு பக்கம் புளூடிக் வாங்கியிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் பயனாளிகளிடம் மாதச்சந்தா வாங்குவது (இவர்கள் விளம்பரங்களே கண்ணில்படாதபடி ட்விட்டரைப் பயன்படுத்தலாம்) என்று பிசினஸ் மாடலை மஸ்க் யோசிக்கிறார்.

எல்லாவற்றையும் தாண்டி ட்விட்டரை பலரும் நேசிக்கக் காரணம், அதன் துணிச்சல். அமெரிக்க நிறுவனம்தான், ஆனால் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் பொய்யான ட்வீட்களையும், வன்முறையைத் தூண்டும்விதமான ட்வீட்களையும் பதிவிட்ட போது, அவரது அக்கவுன்ட்டையே தடை செய்தது ட்விட்டர் நிர்வாகம். இப்போது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதை வரவேற்றிருக்கிறார் ட்ரம்ப். விரைவில் அவர் அக்கவுன்ட்டை மஸ்க் செயல்பாட்டுக்குக் கொண்டு வரக்கூடும் எனத் தகவல்.

ட்விட்டரின் எதிர்காலம் என்ன?

இந்தியாவிலும் இப்படிப் பிரச்னை இருந்தது. குறிப்பிட்ட சிலரது பதிவுகளை நீக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டபோது, ‘வெளிப்படைத்தன்மை இல்லாமல் இப்படி உத்தரவிடுவது சரியில்லை' என்று அந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனது ட்விட்டர். அப்போது ட்விட்டருக்குப் போட்டியாக வேறொரு சோஷியல் மீடியாவை உருவாக்கி பிரபலப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களே பேசினார்கள். இன்னமும் அந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் துணிச்சல் எலான் மஸ்க் வந்தபிறகும் ட்விட்டருக்கு இருக்குமா, இத்தனை நாள் அது பயனாளிகளுக்குத் தந்த சுவாரசிய அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குமா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். ஆனால், இவைதான் ட்விட்டரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன.