கட்டுரைகள்
Published:Updated:

உயில் பதிவு செய்வது... ஏன் அவசியம்?

உயில்
பிரீமியம் ஸ்டோரி
News
உயில்

உயில் எழுதவில்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள்

ஒருவர் தனக்குச் சொந்தமான செல்வங்களை (Wealth) உயில் எழுதி வைப்பது மிக முக்கியம். அப்படிச் செய்யும்பட்சத்தில் மட்டுமே அவருக்குப் பிறகு அவரின் குடும்பத்தினர், வாரிசுகள் இடையே பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்கும்.

உயில் என்பது ஒருவர் தனது செல்வங்களைத் தன் இறப்புக்குப் பிறகு தனது விருப்பப்படி பிரித்துக் கொடுப்பதற்கான ஓர் எழுத்துபூர்வமான, சட்டப்படியான அறிவிப்பு. இந்த முறையில் ஒருவர் தனது விருப்பத்துக்கு ஏற்ப தான் சம்பாதித்த செல்வங்களை (ரொக்கப் பணம், தங்கம், வைர நகைகள், சொத்துகள்) தன் அன்புக்கு உரியவர்களுக்கு எழுதி வைக்கலாம்.

உயில் பதிவு செய்வது... ஏன் அவசியம்?

உயில் எழுதவில்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள்

சொத்துகளைப் பிரித்து உயில் எழுதாவிட்டால், சம்பந்தப்பட்டவர் விரும்பியபடி குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறமுடியாது. தனிப்பட்ட நபர் சட்டத்தின்படி சொத்துகள், வாரிசுகளுக்கு சட்டப்படி பிரித்து விநியோகம் செய்யப்படும்.வாரிசுகள் இடையே ஏற்படக்கூடிய தகராறுகளின் காரணமாக நீதிமன்றம் செல்ல நேரிடும்.

இறந்தவர் ஓர் உயிலை உருவாக்கியிருந்தால், அவரது சொத்துகள் மற்றும் செல்வங்களை அவரது விருப்பப்படி யார் யாருக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறாரோ அவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். உயில் இல்லை என்றால் அனைத்துச் செல்வங்களும் அவரின் சட்டப்படியான வாரிசுகளுக்கு மட்டுமே பிரித்துக் கொடுக்கப்படும்.

உயில் எழுதுவது எப்படி?

முதலில் ஒருவர் தனது பெயரில் உள்ள அசையும் பொருள்கள், அசையாத பொருள்கள் ஆகியவற்றின் தெளிவான பட்டியலை உருவாக்க வேண்டும்.

எந்தச் சொத்தை, யாருக்கு, எவ்வாறு பிரித்து வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இரண்டு சாட்சிகள் கையெழுத்து முக்கியம். அவர்கள் உயில் மூலம் பலன் அடையாதவர்களாக இருக்க வேண்டும்.

உயிலைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்வது கட்டாயமில்லை. ஆனால், அப்படிச் செய்வதன் மூலம், அதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும். மேலும், உயிலில் மருத்துவர் மற்றும் வழக்கறிஞரின் சாட்சியைப் பெறுவதும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும். உயிலை ஒருவர் காகிதத்தில் கைப்படக்கூட எழுதலாம்; அவருக்காக மற்றொருவரும் எழுதலாம்.

ஆர். வெங்கடேஷ்
ஆர். வெங்கடேஷ்

உயிலை நிறைவேற்றும்போது...

உயிலில் குறிப்பிடப்படும் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு நபரை நியமிக்க முடியும். அந்த நபரின் பெயர் மற்றும் முழு விவரங்களையும் உயிலில் குறிப்பிட வேண்டும்.

ஒரு தனிநபரின் மறைவுக்குப் பின் அவரின் சட்டபூர்வ வாரிசுகள், இறந்தவரின் சொத்துகள்மீதான உரிமை கோரல் கடிதத்துடன் வங்கி, வைப்புத்தொகை, காப்பீட்டு நிறுவன அதிகாரிகளை அணுகும்போது இறப்புச்சான்றிதழ், சட்டப்படியான வாரிசு சான்றிதழ் அவசியம்.

உயில் பதிவு செய்வது... ஏன் அவசியம்?

நாமினி என்பவர் யார்?

ஒருவர் தனது வங்கிக்கணக்கு அல்லது முதலீட்டுக்கணக்கில், அவரின் மறைவுக்குப் பின் அவருடைய பணத்தை யாருக்கு, அல்லது யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்புக்கு யாரைப் பரிந்துரைத்திருக்கிறாரோ அவரே நியமனதாரர் (Nominee). அவர் உரிமையாளரின் பணத்திற்குப் பாதுகாவலர் மட்டுமே; வேறு எந்த உரிமையும் இல்லை. நியமனதாரர் யார் என்று குறிப்பிடப்படவில்லை எனில் இறந்தவரின் சட்டபூர்வ வாரிசுதாரர்கள் தங்களது பணத்தைப் பெறுவதற்கு நேரம், பணம் ஆகியவற்றைச் செலவழிக்கவேண்டி வரும். பொதுவாக, வாரிசுதாரரையே நாமினியாக நியமிப்பது பல சிக்கல்களைத் தவிர்க்கும்.

உயில்... முக்கியமான உரிமை ஆவணம்!