Published:Updated:

பணிச்சுமை... மன உளைச்சல்... தற்கொலை எண்ணம்... கவலைக்குள்ளாகும் பெண் காவலர்களின் நிலை!

பெண் காவலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண் காவலர்கள்

காவல்துறைக்கு என்று சொல்லப்பட்ட விதிமுறைகளும், சொல்லப்படாத விதிமுறைகளும் இருக்கின்றன. ஒருசில இடங்களில் தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பணிச்சுமை... மன உளைச்சல்... தற்கொலை எண்ணம்... கவலைக்குள்ளாகும் பெண் காவலர்களின் நிலை!

காவல்துறைக்கு என்று சொல்லப்பட்ட விதிமுறைகளும், சொல்லப்படாத விதிமுறைகளும் இருக்கின்றன. ஒருசில இடங்களில் தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

Published:Updated:
பெண் காவலர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பெண் காவலர்கள்

சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு டி.எஸ்.பி சந்தியா, தமிழக டி.ஜி.பி-க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், `சட்டம்-ஒழுங்குப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள மனஅழுத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனக்கு உடல்நலப் பிரச்னையும் உள்ளது. பணிச்சுமையால் ஏற்பட்டுள்ள மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என் மனநிலை இருக்கிறது. பணியிட மாறுதல் வழங்கி என்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள ஒரு காவலருக்கே தற்கொலை எண்ணம் உண்டாகும் நிலை இருக்கிறது என்றால், மற்ற பெண் காவலர்களின் நிலை என்ன? காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்...

பின்விளைவுகள் குறித்த அச்சத்திலும், பணியிலிருக்கும் காரணத்தாலும் முதலில் பேசவே பலரும் தயங்கினர். தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகே சிலர் பேச முற்பட்டனர். முதலில் நம்மிடம் பேசிய பெண் கான்ஸ்டபிள் ஒருவர், ``இந்த வேலை எப்படி இருக்கப்போகிறது என்பது காவலர் பயிற்சியின்போதே ஓரளவுக்குப் புரிந்துவிட்டது. ஆனால், நாம் நினைத்ததையும் தாண்டி இங்கே பல்வேறு விஷயங்கள் நடக்கும். நமக்கு விடுப்பு வழங்குவதிலிருந்து எல்லா முடிவுகளையும் எடுப்பது நம் மூத்த அதிகாரிகள்தான். அவர்கள் நினைத்தால் மட்டுமே எதுவும் நடக்கும். ஒருமுறை எஸ்.ஐ ஒருவரை நான் எதிர்த்து பேசிவிட்டேன். அடுத்து அவர் அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகும் வரையான காலங்களில், நான் பட்ட துன்பங்களைச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. காவலர்களுக்குக் குறிப்பிட்ட பணி நேரம் என்பது கிடையாது. எங்காவது காவலுக்காக மணிக்கணக்கில் நிற்க வேண்டும் என்றால், ஏன் எதற்கு என்று கேட்காமல் நின்றுதான் ஆக வேண்டும். பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற அடுத்த இரண்டு மணி நேரத்தில் மீண்டும் பணிக்கு அழைப்பார்கள். முடியாது என்று சொல்ல முடியாது. எங்களின் மூத்த அதிகாரிகளை அவர்களின் உயரதிகாரிகள் கண்டிக்கும்போது, அந்தக் கோபத்தை தவறே செய்யாத எங்களின் மீதுதான் வெளிப்படுத்து வார்கள். பலர் முன்னிலையில், மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் திட்டுவார்கள். அதைத்தான் தாங்கிக்கொள்ளவே முடியாது” என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார்.

பணிச்சுமை... மன உளைச்சல்... தற்கொலை எண்ணம்... கவலைக்குள்ளாகும் பெண் காவலர்களின் நிலை!

அடுத்ததாக நம்மிடம் பேசிய பெண் காவல் ஆய்வாளர் ஒருவர், ``நான் பணிக்குச் சேர்ந்த புதிதில் எனக்குத் தலைமை அதிகாரியாக இருந்தவர், எனக்குக் கூடுதல் வேலைகளைக் கொடுத்துக்கொண்டேயிருந்தார். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கடுமையாக வசைமொழியில் திட்டுவார். புதிதாகப் பணிக்குச் சேர்ந்திருந்த என்னிடம் ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறார் என்று புரியாமல் பல நாள்கள் மனதுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்தேன். ஒருநாள் அவர் என்னைக் கடந்துபோகும்போது கவனக்குறைவால் நான் சல்யூட் அடிக்காததால்தான் என்னை இப்படிப் படுத்துகிறார் என்று பல மாதங்களுக்குப் பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. இந்தச் சின்னக் காரணத்துக்காகவா நான் பல மாதங்கள் பழிவாங்கப்பட்டேன் என அதிர்ந்துபோனேன். இது சிறிய உதாரணம்தான். இதுபோல வெளியில் சொல்ல முடியாத எத்தனையோ துன்பங்கள், இங்கு சர்வ சாதாரணமாக அன்றாடம் பெண் காவலர்களுக்கு நடந்துகொண்டிருக்கிறது” என்றார் வருத்தத்துடன்.

வேறொரு பெண் கான்ஸ்டபிள், ``ஒருமுறை என் மூத்த அதிகாரி, எனக்குப் பாலியல்ரீதியான தொல்லை கொடுத்தார். வேறு வழியின்றி, இந்த விவகாரத்தை உயரதிகாரியிடம் எடுத்துச் சென்றேன். ‘சரி வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று என்னைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். அடுத்த சில தினங்களில் டிரான்ஸ்ஃபர் வந்தது. அவருக்கு இல்லை, எனக்கு. காவல்துறையில் நடக்கும் இப்படியான பிரச்னைகள் குறித்துப் பெண் காவலர்கள் உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்கும்போது, அது சரிசெய்யப்படுவதற்கு பதிலாகப் புகார் கொடுக்கும் பெண்களுக்கேதான் மீண்டும் பாதிப்பு வருகிறது” என்றார் விரக்தியாக.

இது தொடர்பாக ஓய்வுபெற்ற டி.ஜி.பி திலகவதி ஐ.பி.எஸ்-ஸிடம் பேசினோம். ``காவல்துறைக்கு என்று சொல்லப்பட்ட விதிமுறைகளும், சொல்லப்படாத விதிமுறைகளும் இருக்கின்றன. ஒருசில இடங்களில் தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பாதிக்கப்படும் பெண்கள், தைரியமாக வெளியில் வந்து புகார் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கான உரிமையையும் சுயமரியாதையையும் அவர்கள் யாருக்காகவும் ஒருபோதும் விட்டுத்தரக் கூடாது. கடந்த 2003-ம் ஆண்டு ‘பெண் காவலர் நலம் பேணுதல்’ என்ற துறை, பெண் காவலர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்தத் துறையின் முதல் மற்றும் கடைசி அதிகாரி நான்தான். நான் துறை மாறிய பிறகு, அந்தத் துறையும் அப்படியே காணாமல்போனது. தமிழக காவல்துறை மீண்டும் அந்தத் துறையைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். பெண் காவலர்களின் நலனை உறுதிசெய்வது அவசியம் மட்டுமல்ல, அது நம் கடமையும்கூட” என்றார்.

டி.ஜி.பி திலகவதி
டி.ஜி.பி திலகவதி

இதற்கு என்னதான் தீர்வு எனச் சில பெண் காவலர்களிடம் கேட்டோம். “பெண்களுக்கு எல்லாத் துறைகளிலுமே இந்தப் பிரச்னை இருந்துவருகிறது. பெண்கள் என்றதும் ஆண் அதிகாரிகளுக்கு ஒன்று அலட்சியம் வருகிறது அல்லது ஈகோ வருகிறது. உளவியல்ரீதியாக இதில் மாற்றம் நிகழ வேண்டும். ‘காவலர் நலத்துறை’ என ஒரு துறை காவலர்களின் குறைகளைக் கேட்பதற்கும், அதற்குத் தீர்வு காணவும் செயல்பட்டுவருகிறது. ஆனால், அந்தத் துறையிலும் ஆண்கள்தான் உயரதிகாரிகளாக இருக்கின்றனர். பெண் காவலர்கள் அங்கு சென்று தங்கள் குறைகளைச் சொல்வதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே, மீண்டும் ‘பெண் காவலர் நலம் பேணுதல்’ துறையைச் செயல்படுத்தி, பெண் காவலர்களின் நலனை உறுதிசெய்ய வேண்டும்’’ என்றனர்.

பெண் காவலர்களின் பணிச்சூழல், உடலியல் சார்ந்த அடிப்படை வசதிகள், மனநலம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism