Published:Updated:

வொர்க் ஃப்ரம் ஹோம்... எதிர்காலம் எப்படி இருக்கும்?

வொர்க் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
News
வொர்க் ஃப்ரம் ஹோம்

வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கும் பணியாளர்களின் `ஓய்வு எடுக்கும் உரிமை' பற்றி முதலில் அக்கறை எடுத்திருக்கும் நாடு, போர்ச்சுகல்.

கொரோனா, லாக்டௌன் போன்றவற்றுடன் சேர்ந்து நமக்கு அறிமுகமான இன்னொரு வாசகம், `வொர்க் ஃப்ரம் ஹோம்.' கடந்த இரண்டு ஆண்டுகளில் வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி ஏராளமான ஜோக்குகள், வாட்ஸ்அப் பார்வர்டுகள் வந்துவிட்டன. உலகெங்கும் இருக்கும் பணியாளர்களில் 31 சதவிகிதம் பேர் கொரோனா காலத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்கின்றனர். இந்தியாவில் பல லட்சம் பேர் இதைச் செய்வதாகத் தகவல்கள் சொல்கின்றன. `இத்தனை லட்சம் பேர் ஈடுபட்டிருக்கும் இந்த வேலை தொடர்பாக அரசு ஏதேனும் நெறிமுறைகள், சட்டங்கள் கொண்டுவந்திருக்கிறதா' என்றால், `இல்லை' என்பதுதான் பதில்.

2021 ஜனவரியில் மத்திய அரசு ஓர் உத்தரவு வெளியிட்டது. `வொர்க் ஃப்ரம் ஹோம் வேலை நேரம் மற்றும் வேலை தொடர்பான இதர நிபந்தனைகள் பற்றி நிர்வாகமும் ஊழியரும் பரஸ்பரம் பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும்' என்பதே அந்த உத்தரவு. இதைத் தவிர அரசு எதையும் செய்யவில்லை. டிசம்பரில்தான், வொர்க் ஃப்ரம் ஹோமை முறைப்படுத்த மத்திய தொழிலாளர் நலத்துறை ஒரு சட்டம் கொண்டு வரப்போவதாகத் தகவல் வெளியானது. வேலை நேரம், மின் கட்டணம் மற்றும் இணையக் கட்டணம் தருவது, வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பதற்குத் தேவையான ஃபர்னிச்சர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இந்தச் சட்டம் இருக்குமாம். ஆனால், இது எப்போது கொண்டு வரப்படும் என்று தீர்மானமாக எதையும் அரசு தெரிவிக்கவில்லை.

வொர்க் ஃப்ரம் ஹோம்... எதிர்காலம் எப்படி இருக்கும்?

வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பது ஒரு வகையில் சந்தோஷம்; ஒருவகையில் சங்கடம். குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு வேலை செய்யலாம் என்பது சந்தோஷம். குறிப்பாக குழந்தைகளைப் பராமரிக்கும் இளம் அம்மாக்களுக்கு இதில் பெரும் திருப்தி. ஆனால், `அலுவலகத்தில் பார்த்ததைவிடக் கூடுதலாக வேலை பார்க்கிறேன்' என்று நிறைய பேர் கூறுகிறார்கள். காலையில் அலுவலகம் சென்றபிறகு நடக்கும் மீட்டிங், இப்போதெல்லாம் அதிகாலையிலேயே முடிந்துவிடுகிறது. மாலையில் வேலை நேரம் முடிந்ததும் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டு வீடு திரும்புவதுபோல இப்போது விடுபட முடிவதில்லை. எந்த நேரத்திலும் அழைப்பு வருகிறது. நிறைய பேரின் தூங்கும் நேரம் குறைந்திருக்கிறது. முன்பைவிட குடும்பத்துடன் நேரம் செலவிடுவது சுருங்கிவிட்டதாகப் பலர் ஆதங்கத்துடன் சொல்கிறார்கள். வொர்க் ஃப்ரம் ஹோம் ஏற்படுத்தும் மன அழுத்தங்கள் பற்றிப் பல நாடுகளில் ஆய்வுகள் நடந்துவருகின்றன.

வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கும் பணியாளர்களின் `ஓய்வு எடுக்கும் உரிமை' பற்றி முதலில் அக்கறை எடுத்திருக்கும் நாடு, போர்ச்சுகல். நவம்பரில் இதற்கான சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, மிக அவசரமான சூழல் தவிர மற்ற நேரங்களில் அலுவலக வேலை நேரம் தாண்டிப் பணியாளர்களைத் தொடர்பு கொள்வதோ, மெசேஜ் அனுப்புவதோ கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். வீட்டிலிருந்து பணியாற்றுவதற்குத் தேவையான உபகரணங்களைக் கொடுக்க வேண்டும். பணியாளர்களுக்குக் கூடுதலாக ஆகும் இன்டர்நெட் மற்றும் மின்கட்டணச் செலவைக் கொடுக்க வேண்டும். அலுவலகச் சூழலை அனுபவிக்காமல் தனிமைப்பட்டு இருப்பதைத் தவிர்க்க, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது மேலதிகாரிகளைச் சந்திக்க வேண்டும். ``பணியாளர்கள் தங்கள் வேலைக்கும் வாழ்க்கைக்குமான சமநிலையை இந்தப் புதிய சூழலில் பேண வேண்டியுள்ளது. அதற்காகவே இந்தச் சட்டம்'' என்கிறார், போர்ச்சுகல் தொழிலாளர் நல அமைச்சர் அனா மென்டெஸ் கோடின்ஹோ.

வொர்க் ஃப்ரம் ஹோம்... எதிர்காலம் எப்படி இருக்கும்?

சில ஐரோப்பிய நாடுகளில் வொர்க் ஃப்ரம் ஹோம் தொடர்பாக ஏற்கெனவே சட்டங்கள் இருக்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வேலை நேரத்தைத் தாண்டி இதர நேரங்களில் அலுவலகம் மெயில்கள், மெசேஜ்கள் போன்றவற்றுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா கால வொர்க் ஃப்ரம் ஹோம் கலாசாரம் அமலுக்கு வந்தபோது, `வழக்கமாக அலுவலகம் வந்து வேலை செய்வது தொடர்பான அனைத்து விதிகளும் வீட்டிலிருந்தே வேலை செய்வோருக்கும் பொருந்தும்' என அறிவித்தது இங்கிலாந்து. `வீட்டிலிருந்து வேலை செய்தாலும், இயல்பான வேலை நேரத்தைத் தாண்டிக் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியதில்லை' என அறிவித்தது அயர்லாந்து.

உலகெங்கும் இருக்கும் நடைமுறை போலவே இந்தியாவிலும் ஐ.டி மற்றும் ஐ.டி சேவை நிறுவனங்கள் பலவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களில் பெரும்பாலானோரை வீட்டிலிருந்தே வேலை செய்யப் பணித்துள்ளன. சிலர் பாதி நாள்கள் வீட்டிலிருந்தும், மீதி நாள்கள் அலுவலகம் வந்தும் பணியாற்றுகிறார்கள். இந்த ஜனவரியில் எல்லோரும் அலுவலகம் திரும்பக்கூடும் என்று பல நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில், கொரோனா தனது புதிய உருமாற்றமான ஒமைக்ரானை அறிமுகம் செய்திருக்கிறது. எனவே, வொர்க் ஃப்ரம் ஹோம் இன்னும் சில மாதங்களுக்கு இங்கு நீடிக்கும் என்பதே யதார்த்தம்.

சில நிறுவனங்களுக்கு இந்தப் புது நடைமுறை வசதியாகவும் இருக்கிறது. அலுவலகங்கள் சுருங்கிவிட்டன. அலுவலகப் பராமரிப்பு, மின் கட்டணம், தண்ணீர்ச் செலவு, போக்குவரத்துச் செலவு கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதனால் மிச்சம் பிடிக்கும் சில நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களுக்கு லேப்டாப், இணையவசதி என்று செய்துகொடுத்திருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் தன் பணியாளர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் போனஸ் என ஆயிரம் டாலர் சமீபத்தில் அளித்திருக்கிறது.

வொர்க் ஃப்ரம் ஹோம்... எதிர்காலம் எப்படி இருக்கும்?

பணியாளர்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியாக இருக்கிறது. அவசரமாகத் தயாராகி, சமைத்து எடுத்துக்கொண்டு, டிராஃபிக் நெரிசலில் சிக்கி ஆபீஸ் போக வேண்டியதில்லை. சிலர் இந்த இடைப்பட்ட காலத்தில் வேறொரு நிறுவனத்துடன் பேசி பார்ட் டைம் வேலை, ஃப்ரீலான்சிங் வேலை எனக் கூடுதலாகச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இரண்டு நிறுவனங்களுக்கு வேலை பார்ப்பது பலருக்கும் தப்பாகவே தோன்றவில்லை.

அட்லாசியன் நிறுவனம் செய்த ஓர் ஆய்வின்படி, உலக அளவில் வொர்க் ஃப்ரம் ஹோமை அதிகம் விரும்புவது இந்தியர்கள்தான். 94 சதவிகிதம் பேர் இது பிடிப்பதாகச் சொல்கிறார்கள். 57 சதவிகிதம் பேர் இதற்கு ஏற்றபடி தங்கள் வீடுகளில் வசதிகளைச் செய்திருக்கிறார்கள். உலகிலேயே வொர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறைக்கு எளிதில் தங்களைப் பழக்கிக்கொண்டது இந்தியர்கள்தான்.

இந்தப் புத்தியல்பு பெண்களுக்கும் வயது முதிர்ந்த பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஒரு விமர்சனமும் வைக்கப்படுகிறது. கொரோனா அச்சம் இடையில் நீங்கியிருந்த நாள்களில், மற்றவர்கள் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டனர். பல நிறுவனங்கள் பெண்களையும், 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களையும் தொடர்ந்து வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யச் சொல்லின. ``நேரடியாகக் கண்ணில் படும் ஊழியர்களின் பணியை மட்டுமே உயர் அதிகாரிகள் கவனிப்பார்கள். எங்கள் பணி இரண்டாம்பட்சமாகப் பார்க்கப்படும். இது எங்கள் பணி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய இரண்டையுமே பாதிக்கும்'' என்கிறார்கள் இவர்கள்.

எந்த மாற்றமும் முதலில் பாதிப்பது பெண்களைத்தான் என்பதே வேதனை.