Published:Updated:

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

கஞ்சா
பிரீமியம் ஸ்டோரி
கஞ்சா

தி.மு.க அரசு அமைந்த பிறகு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ‘கஞ்சா ஆபரேஷன் 1.0’ என்ற நடவடிக்கையை எடுத்தது காவல்துறை.

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

தி.மு.க அரசு அமைந்த பிறகு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ‘கஞ்சா ஆபரேஷன் 1.0’ என்ற நடவடிக்கையை எடுத்தது காவல்துறை.

Published:Updated:
கஞ்சா
பிரீமியம் ஸ்டோரி
கஞ்சா

சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதைபதைக்கவைத்தது. அந்த வீடியோவில், தஞ்சாவூர் ‘சிவகங்கை பூங்கா’ அருகே சில சிறுவர்கள் கஞ்சா போதை தலைக்கேறி கன்னா பின்னாவென்று தகராறு செய்துகொண்டே செல்கின்றனர். போதையின் உச்சத்தில், அங்குள்ள பானிபூரி கடைக்காரரை வெறித்தனமாகத் தாக்குகின்றனர். அருகில் பழக்கடை வைத்திருக்கும் ஒருவரைப் பழங்களைக்கொண்டு தாக்குகிறார்கள். துளிப் பதற்றமில்லை அவர்களிடம். கஞ்சா தரும் அதீத வன்முறை உணர்ச்சியை அவர்களிடம் பார்க்க முடிகிறது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ‘தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு இருக்கிறதா... இந்த போதை கலாசாரத்துக்கு ஒரு முடிவே இல்லையா... காவல்துறை என்ன வேடிக்கை பார்க்கிறதா?’ என்று கொதிக்கிறார்கள் பொதுமக்கள்!

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வன்முறைத் தாக்குதல், கொலை, கொள்ளை என இருபதுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் கொடூரமாக அரங்கேறியிருக்கின்றன. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா போதையால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரிப்பது தொடர்பாக நமது ஜூ.வி-யில் தொடர்ந்து எழுதிவருகிறோம். சினிமா பாணியில் ஆபரேஷன்களுக்குப் பெயரிட்டு, கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடுவதாகச் சொன்னாலும், குற்றங்களின் எண்ணிக்கை கொஞ்சமும் குறைந்தபாடில்லை. தமிழ்நாட்டின் எந்த நகரத்திலும், யார் நினைத்தாலும், ஒரு மணி நேரத்தில் மிக எளிதாக கஞ்சா வாங்க முடியும் என்பதுதான் கள யதார்த்தம்.

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

தி.மு.க அரசு அமைந்த பிறகு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ‘கஞ்சா ஆபரேஷன் 1.0’ என்ற நடவடிக்கையை எடுத்தது காவல்துறை. டிசம்பர் 6, 2021-ல் தொடங்கிய இந்த ஆபரேஷன், ஒரு மாத காலம் நடத்தப்பட்டு, 2.35 கோடி மதிப்பிலான 2,299 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. 1,221 பேர் கைதும் செய்யப்பட்டனர். ஆனாலும் கஞ்சா விற்பனை வழக்கம்போல படு ஜோராக நடந்துவந்தது. முதல்வர் அலுவலகத்திலிருந்து கொடுக்கப்பட்ட தொடர் அறிவுறுத்தல்களால் கடந்த மார்ச் 28-ம் தேதி, மீண்டும் `ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ நடவடிக்கையை அறிவித்தார் டி.ஜி.பி சைலேந்திரபாபு. ‘கஞ்சா, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைதுசெய்வது, போதைப் பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது, ஆந்திர மாநிலத்தில் கஞ்சாப் பயிரை ஒழிக்க ஆந்திர காவல்துறையுடன் கூட்டு நடவடிக்கை எடுப்பது’ உள்ளிட்ட திட்டங்களுடன் ஆபரேஷன் தொடங்கியது. 3,562 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 2,423 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், மாநிலம் முழுவதும் மீண்டும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. கூடவே வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. காவல்துறையின் இரண்டு கஞ்சா ஆபரேஷன்களும், கஞ்சா குற்ற உலகைக் கொஞ்சம்கூட அசைத்துப் பார்க்கவில்லை என்பதையே சமீபகாலச் சம்பவங்கள் உணர்த்துகின்றன!

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

200 ரூபாய்க்காகக் கொலை!

மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர், ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜோதிமுத்து. இவர், கடந்த ஜூன் 6-ம் தேதி வைகை ஆற்றுப் பகுதியில் நடந்து சென்றபோது, கஞ்சா போதையிலிருந்த இளைஞர்கள் ஐந்து பேர் வழிமறித்து, கத்தியைக் காட்டி அவரிடம் பணம் கேட்டிருக்கிறார்கள். தன்னிடமிருந்த 200 ரூபாயை அவர் தர மறுத்திருக்கிறார். ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள், ஜோதிமுத்துவைக் கத்தியால் குத்திவிட்டு 200 ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனர். குற்றுயிராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிமுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக, ஐந்து பேரைக் கைது செய்திருக்கிறது மதுரை காவல்துறை. இவர்களில் நான்கு பேர் 16 வயதுக்கும் கீழுள்ள சிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

அதேபோல தஞ்சாவூர் அருகேயுள்ள கரந்தையில், மளிகைக்கடை நடத்திவந்த செந்தில்வேலிடமும் பணப் பறிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. அதில் அவர் உயிர் பறிபோயிருக்கிறது. கடந்த ஜூன் 9-ம் தேதி, அவரது கடைக்கு வந்த கஞ்சா போதை இளைஞர்கள், அரிவாளைக் காட்டிப் பணம் கேட்டிருக்கிறார்கள். அவர் பணம் தர மறுத்ததும், ஆத்திரத்தில் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியிருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்வேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த 19, 22 வயதான இரண்டு இளைஞர்களைக் காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

மிரட்டல்... வழிப்பறி... தாக்குதல்!

ஜூன் 15-ம் தேதி, தாம்பரத்தை அடுத்திருக்கும் சேலையூர் பகுதியிலுள்ள ஓர் உணவகத்திலும் கஞ்சா போதை இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பிடிக்க பொதுமக்கள் முயன்றபோது, காரில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட ஐந்து இளைஞர்களைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ். விசாரணையில், இந்த ஐவரும் இதற்கு முன்பே கஞ்சா போதையில் ஆயுதங்களைக் காட்டி, தொடர் வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

கரூர் அருகிலுள்ள வெங்கமேடு பகுதியில், கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு, பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதீத கஞ்சா போதையில், அந்த வழியாகச் செல்லும் பெண்களையும், பொதுமக்களையும் தாக்க முயன்றிருக்கிறார்கள். வெகுண்டெழுந்த பொதுமக்கள் ஒன்றுகூடியதும், போதைக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. கடந்த ஜூலை 1-ம் தேதி, மன்னார்குடி பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையிலிருந்த இரண்டு இளைஞர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டிருக்கிறார்கள். பேருந்து நிலையத்தில் கடைவைத்திருக்கும் ரெங்கமணி என்பவர் அந்த இளைஞர்களைக் கண்டித்திருக்கிறார். சிறிது நேரத்தில், தங்கள் சகாக்களுடன் திரும்பி வந்த போதை இளைஞர்கள், ரெங்கமணியை பீர் பாட்டில் மற்றும் கட்டைகளால் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். பலத்த காயமடைந்த ரெங்கமணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இந்தச் சம்பவங்களெல்லாம் சொற்பமான உதாரணங்கள்தான். இதுபோல, தினம்தோறும் குற்றச்செயல்களும், வன்முறைச் சம்பவங்களும் கஞ்சா போதையால் தமிழ்நாடெங்கும் நடைபெற்றுவருகின்றன.

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

கஞ்சா ரூட்... மாணவர்கள்தான் மெயின் டார்கெட்!

‘போலீஸ் கெடுபிடிகளைத் தாண்டி தமிழ்நாட்டுக்குள் கஞ்சா எப்படி வருகிறது?’ என்று சில நேர்மையான காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். “தேனி மாவட்டப் பகுதியில் விளைவிக்கப்படும் கஞ்சா முதல் தரமானது. அது பெரும்பாலும் மும்பை வழியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிவிடுகிறது. தமிழ்நாட்டில் விற்கப்படும் கஞ்சாவில், 90 சதவிகிதம் ஆந்திராவிலிருந்தும், ஒடிசாவிலிருந்தும்தான் வருகிறது. வட தமிழகத்துக்கு சென்னையும், தென் தமிழகத்துக்கு திருச்சி, திண்டுக்கல், தேனி ஏரியாக்களும் குடோன் பாயின்ட்டுகளாக இருக்கின்றன. இந்த பாயின்ட்டுகளிலிருந்துதான் மற்ற மாவட்டங்களுக்கு கஞ்சா சப்ளை ஆகிறது. பெரும்பாலும் ரயில் மூலம்தான் தமிழ்நாட்டுக்குள் கஞ்சா வருகிறது. அதே ரயில் மூலம்தான் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பத்திலிருந்து இருபது கிலோ வரையிலான சரக்குகள் மட்டுமே பேருந்து, லாரி, கார்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆந்திராவில் கிடைக்கும் இரண்டாம் தர கஞ்சாவின் 10 கிலோ பண்டல், 75,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒடிசாவிலிருந்து வரும் மூன்றாம் தர கஞ்சாவின் 10 கிலோ பண்டல் 50,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. கிலோக் கணக்கில் வாங்கி, 5 மற்றும் 10 கிராம் பொட்டலங்களாக மாற்றுகிறார்கள். இந்தப் பொட்டலங்கள் 200 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் ஐந்து பெரிய குழுக்கள்தான் கஞ்சா விற்பனையைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. இவர்களின் முக்கிய டார்கெட்டே பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான்.

மற்றவர்களுக்கு 200 ரூபாய்க்கு விற்கப்படும் கஞ்சாப் பொட்டலம், மாணவர்களுக்கு ‘சலுகை’ விலையில் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாணவர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கிவிட்டால், அதன் மூலம் ஒரு நிலையான வியாபாரம் நீண்டநாள்களுக்குக் கிடைக்கும் என்பதே அதற்குக் காரணம். ஒரு தொழில் முதலீடாகவே, மாணவர்களிடம் கஞ்சாப் பழக்கத்தை இந்தக் கும்பல் திட்டமிட்டு உருவாக்குகிறது. இதுவரை போலீஸால் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் கூலிக்கு வேலை பார்ப்பவர்கள்தான். பெரிய முதலைகள் இன்னும் சிக்கவில்லை. வார, மாத, வருடக் கணக்கு மாமூல்களைப் பெற்றுக்கொண்டு, காவல்துறைக்குள்ளும் சில கறுப்பு ஆடுகள் அவர்களுடன் கைகோப்பதால், கஞ்சா சப்ளையில் மூளையாகச் செயல்படும் எவரும் சிக்குவதில்லை. காவல்துறை மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்தால், அந்த கஞ்சா வியாபாரிகளிடமே பேசி, கணக்கு காட்டுவதற்கு மூன்றாம் தர கஞ்சா பண்டல்களை வாங்கி, கண்துடைப்புக் கணக்குக்கு கைதுசெய்து ஃபைலை முடித்துவிடுவார்கள்” என்றனர்.

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

“போன் பண்ணுங்க ப்ரோ... டோர் டெலிவரி உண்டு!”

கஞ்சா எப்படி விற்கப்படுகிறது என்பதை அறிய, சென்னையில் கஞ்சா விற்பனை நடைபெறும் ஒருசில பகுதிகளுக்கு நேரில் சென்றோம். ‘புதியவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதில்லை. ஏற்கெனவே வாங்கியவர்களின் அறிமுகத்தோடு வாருங்கள்’ என்கிற பதிலே கிடைத்தது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களின் அறிமுகத்துடன் மீண்டும் கஞ்சா கும்பலை போனில் தொடர்புகொண்டோம். ‘பொது இடமாக ஒரு இடத்தைச் சொல்லுங்க’ என்றனர். இடத்தைச் சொன்னதும் அடுத்த 40 நிமிடங்களில், ஸ்கூட்டியில் வந்த இளைஞர் ஒருவர், கஞ்சா பொட்டலத்தை நம் கையில் திணித்தார். “பொட்டலத்துக்கு 500 ரூபாய், டெலிவரி சார்ஜ் 150 ரூபாய்” என்றார்.

“ஒரு பொட்டலம் 150 ரூபாய்தானே?” என்று நாம் கேட்க, “முன்ன மாதிரி இல்லை ப்ரோ. போலீஸ் கெடுபிடி ஜாஸ்தியா இருக்கு. ரிஸ்க் டபுள்... ரேட்டும் டபுள்” என்றவர், “நம்ம கஸ்டமர் ஆகிட்டீங்க. நெக்ஸ்ட் டைம் போன் பண்ணுங்க ப்ரோ... வீட்டுக்கே டோர் டெலிவரி பண்ணிடுறேன்” என்றார். பொது இடத்தில் கஞ்சாவை சப்ளை செய்வதற்கு முன்னதாக, அந்த இடத்துக்கு முன்கூட்டியே வந்து ஒருவர் நோட்டமிடுகிறார். ‘போலீஸார் யாராவது மஃப்டியில் இருக்கிறார்களா... கஞ்சா கேட்ட நபர் வேறு யாருடனாவது பேசுகிறாரா?’ என்பதையெல்லாம் நோட்டம்விட்டு, ‘பார்ட்டி க்ளீன்’ என்று வாட்ஸ்அப்பில் சிக்னல் கிடைத்த பிறகே, டெலிவரி ஆள் கஸ்டமரை நெருங்குகிறார். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், வெகு டீசன்ட்டான இளைஞர்கள் பலர் ஏதோ ஃபுட் டெலிவரி செய்வதுபோல இந்தத் தொழிலை எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்துவருகின்றனர்.

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

கஞ்சா விற்பனையில் காவலர்கள்?

இந்த கஞ்சா வியாபாரத்துக்கு, சில காவலர்களும் உடந்தையாக இருப்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம். கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில், முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் திலீப்குமார் என்பவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில், “ரயில்வே டி.எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் சக்திவேல், சைபர் க்ரைம் பிரிவில் பணிபுரியும் காவலர் செல்வக்குமார் ஆகிய இரண்டு பேரும்தான் கஞ்சா கொடுத்தார்கள்” என்றார் திலீப்குமார். ரயில்வே நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவைத்தான் விற்பனை செய்திருக்கிறார்கள். தற்போது, இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். “இதுவும் ஓர் உதாரணம் மட்டுமே. தமிழ்நாடு முழுக்க நடக்கும் கஞ்சா வியாபாரத்தில், சின்னதாகவும் பெரிதாகவும் பல காவலர்களின் ஒத்துழைப்பு இருப்பதே இந்த அளவுக்கு கஞ்சா புரையோடிப் போயிருப்பதற்கு முக்கியமான காரணம். அதைச் சரிசெய்யாமல் ஒருபோதும் கஞ்சாவை, அது தொடர்பான குற்றச் சங்கிலித் தொடர்பை அறுக்கவே முடியாது” என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மகேஷ் குமார் அகர்வால்
மகேஷ் குமார் அகர்வால்

இது தொடர்பாக, காவல்துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து போதைத் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி மகேஷ் குமார் அகர்வாலிடம் பேசினோம். “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் தடைசெய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும், கண்காணிப்பும் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. ரயில் நிலையங்களில் கூடுதல் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆந்திர காவல்துறையினருடன் ஒன்றுசேர்ந்து கஞ்சா கடத்துவதைத் தடுக்கவும், ஆந்திராவில் கஞ்சா பயிரிடப்படுவதை ஒழிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

‘கஞ்சா வேட்டை’ என போலீஸ் நடத்திய ஆபரேஷன்கள் போதிய பலன் தரவில்லை என்பது கண்கூடு. உண்மையில் கஞ்சா கும்பல்கள்தான் தமிழ்நாட்டு இளைஞர்களை வேட்டையாடிவருகின்றன. “ஆபரேஷன்களால் நடந்தது என்ன... கஞ்சா ரேட் கூடியிருக்கிறது... போலீஸுக்குக் கொடுக்கவேண்டிய கமிஷன் கூடியிருக்கிறது... அவ்வளவுதான்” என்று விமர்சிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள். போதை இளைஞர்கள் பெருகுவதையும், அவர்களால் குற்றங்களும் வன்முறையும் பெருகுவதையும் தடுக்க நிஜ ஆக்‌ஷனில் காவல்துறை எப்போது இறங்கப்போகிறது?

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

திரைப்படங்களில் கஞ்சா காட்சிகள் கூடாது!

இளைஞர்களிடம் கஞ்சா பயன்பாடு அதிகரிப்பது குறித்து மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசினோம். “அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு பொருள் சமுதாயத்தில் இவ்வளவு எளிதாகக் கிடைப்பதே, பயன்பாடு அதிகரிக்க முக்கியக் காரணம். குறுகிய காலம் கஞ்சா பயன்படுத்துபவர்களைப் பொறுத்தவரை ஆபத்தான செயல்களைச் செய்வது, குற்றச்செயல்களில் ஈடுபடுவது, மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பது போன்ற செயலில் ஈடுபடுவார்கள். நீண்ட நாள்களாக கஞ்சா பயன்படுத்துபவர்கள் மனச்சிதைவு ஏற்பட்டு எதன்மீதும் நாட்டமில்லாமல் போய்விடுவார்கள். அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வெளியே கொண்டுவர முடியும். இன்றைய சினிமாக்களிலும், ஓடிடி-யிலும், கஞ்சா பயன்படுத்தும் காட்சிகள் ‘குளோரிஃபை’ செய்து காட்டப்படுகின்றன. அது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்படுத்துவதன் தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இளைஞர்களை வேட்டையாடும் கஞ்சா! - வேடிக்கை பார்க்கும் காவல்துறை!

மாணவர்கள் கையில் ‘கூல் லிப்’ எனும் பேராபத்து!

சமீபகாலமாக, பள்ளி மாணவர்கள் மத்தியில் ‘கூல் லிப்’ என்கிற புதுவகை குட்கா பயன்பாடு வேகமாக அதிகரித்துவருகிறது. இந்த ‘கூல் லிப்’ 30 ரூபாய் முதல், போலீஸ் கெடுபிடி அதிகமுள்ள ஏரியாக்களில் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நம்மிடம் பேசிய சென்னை காவல் ஆய்வாளர்கள் சிலர், “ஸ்ட்ராபெர்ரி, மின்ட் உள்ளிட்ட பல்வேறு ஃப்ளேவர்களிலும் ‘கூல் லிப்’ இருப்பதால், புகையிலை வாடை தெரிவதில்லை. தொடக்கத்தில் கெத்துக்காகப் பயன்படுத்தும் மாணவர்கள், பின்னாளில் ‘கூல் லிப்’ போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். போதை பத்தாது என ஒரே நேரத்தில் நான்கு, ஐந்து ‘கூல் லிப்’களைப் பயன்படுத்தும் மாணவர்களும் இருக்கிறார்கள். இந்த போதையும் போதாத நிலையை அவர்கள் அடையும்போது, கஞ்சாப் பழக்கத்துக்கு மாறுகிறார்கள். கூல் லிப், புகையிலை வகையைச் சார்ந்தது என்பதால் அதை, சட்டம்-ஒழுங்கு போலீஸ்தான் கவனிக்கிறது. கூல் லிப்பை போதைப் பொருளாக (Narcotics Drugs) அறிவித்தால் மட்டுமே போதை தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்றனர்.