Published:Updated:

ஆன்லைன் அடிமைகளா இளைஞர்கள்?

ஆன்லைன் அடிமைகளா இளைஞர்கள்?
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் அடிமைகளா இளைஞர்கள்?

இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், கடந்த 30 ஆண்டுகளில் குடும்ப அமைப்பு மாறியிருக்கிறது.

ஆன்லைன் அடிமைகளா இளைஞர்கள்?

இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், கடந்த 30 ஆண்டுகளில் குடும்ப அமைப்பு மாறியிருக்கிறது.

Published:Updated:
ஆன்லைன் அடிமைகளா இளைஞர்கள்?
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன் அடிமைகளா இளைஞர்கள்?

Sapiens Lab என்ற மனநல ஆய்வு மையம், Mental Health Million என்ற திட்டத்தின் மூலம் The Mental State of the World என்ற மனநலன் சார்ந்த ஆய்வை ஒவ்வோர் ஆண்டும் மேற்கொண்டுவருகிறது. சமீபத்தில் வெளியாகியிருக்கும் அதன் முடிவுகள், 18 முதல் 24 வயது வரையிலான இளையோரின் மனநலன் சார்ந்து அதிர்ச்சியளிக்கும் தகவல்களைத் தருகின்றன. ‘ஸ்மார்ட் போன் மற்றும் இணையம் சார்ந்த அதீதப் பயன்பாடு, இளையோர் மனநலனில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய இதே வயதினருடன் ஒப்பிடும்போது, இந்தத் தலைமுறை இளையோர் மகிழ்ச்சியாக இல்லை’ என்கிறது இந்த ஆய்வு. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்த ஆய்வில் அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்தவர்கள் இந்தியர்கள் என்பது இங்கு கவனத்துக்குரியது; கவலைக்குரியதும்கூட.

ஆன்லைன் அடிமைகளா இளைஞர்கள்?

‘உலகம் முழுவதும் 10-19 வயதில் உள்ள வளரிளம் பருவத்தினரில் ஏழில் ஒருவர் மனநலப் பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறார். குறிப்பாக, தெற்காசிய நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது’ என்ற யுனிசெஃப்பின் ‘உலகக் குழந்தைகளின் நிலை 2021’ அறிக்கை மேலும் அதிர்ச்சியூட்டுகிறது.

“இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், கடந்த 30 ஆண்டுகளில் குடும்ப அமைப்பு மாறியிருக்கிறது. கூட்டுக்குடும்பத்திலிருந்து உடைந்துவந்த முதல் தலைமுறைப் பெற்றோர்கள் உருவாகியிருக்கிறார்கள். 1990-களுக்குப் பிறகு உருவான இந்தத் தலைமுறையினர் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக வளரவேண்டும் என்று நினைத்து அவர்களை வீட்டுக்குள் அடைத்துவிடுகிறார்கள். இதனால் பள்ளி முடித்து, கல்லூரிக்கு வரும் வயதில் முதல்முறையாகச் சமூகத்தைத் தனியாக அவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. எந்தப் பிரச்னையும் இன்றி, கேட்ட எல்லாமும் கிடைக்கப் பெற்று வளர்ந்த அந்தக் குழந்தைகளுக்கு இது பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கிறது; அவர்கள் சுயத்தைக் கடுமையாக பாதிக்கிறது. சிறு பிரச்னை, ஏமாற்றம், தோல்வி போன்றவற்றை அவர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. பக்குவமாக அணுகும் திறன் இல்லாததால், நிதானம் இழந்துவிடுகிறார்கள். எனவே, உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே எல்லாவற்றையும் யோசித்து, தற்கொலை வரை போகிறார்கள்; சிலர் போதைக்கு அடிமையாகிறார்கள்” என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

ஆன்லைன் அடிமைகளா இளைஞர்கள்?

ஸ்மார்ட்போன் பயன்பாடு உளவியலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசும் சிவபாலன், “எந்தச் சமூக உறவுமே இன்றி, தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இன்றைய இளைஞர்களில் பலருக்கு ஸ்மார்ட்போன், சமூகவலைதளங்கள் எல்லாம் அவர்களுடைய சுயத்தைப் போலியாகக் கட்டமைக்க உதவுகின்றன. அதில் கிடைக்கும் அங்கீகாரம் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது; குழந்தைகள் இன்று வளரும் சூழலில், ஸ்மார்ட்போன்களின் அதீதப் பயன்பாடும் அவர்களின் மனநலனில் கடுமையாகத் தாக்கம் செலுத்துகிறது. மற்றொரு புறம், சமூகத்தில் முன்னெடுக்கப்படும் நீட் தேர்வு போன்ற அம்சங்களும் இளையோரின் மனநலப் பிரச்னைகளுக்குப் பங்களிக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. இப்படிப் பல்வேறு அடுக்குகளால் அமைந்த இந்தப் பிரச்னையை அரசாங்கம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் உள்ளடக்கிய கவுன்சலிங் குழுவை உருவாக்குவதிலிருந்து இப்பிரச்னைக்கான தீர்வைத் தொடங்க வேண்டும்!” என்கிறார்.

இளையோர் அதிகம் புழங்கும் இன்ஸ்டாகிராமில் மனநல மேம்பாட்டைப் பயிற்றுவிக்கும் ஏராளமான பக்கங்கள் செயல்படுகின்றன. மனநல மருத்துவர்கள், தெரபிஸ்ட்கள் ஆகியோர் அன்றாடத்தை எதிர்கொள்ளப் பயிற்சிகள், வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். அது இளையோரிடம் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

ஆன்லைன் அடிமைகளா இளைஞர்கள்?

“கொரோனா காலகட்டத்தில் கடுமையான மனஅழுத்தம் எனக்கு ஏற்பட்டது. தெரபிஸ்ட்டைப் பார்ப்பது என்று முடிவெடுத்தபோது, ‘அதெல்லாம் வேண்டாம்... உனக்கு ஒன்றுமில்லை’ என்று வீட்டில் தடுத்துவிட்டார்கள். பிறகு, யாருக்கும் தெரியாமல் தொடர் தேடலில் தெரபிஸ்ட் ஒருவரைக் கண்டுபிடித்து கவுன்சலிங் பெற்றேன். அது நிலைமையைச் சமாளிக்க ஓரளவு உதவியது. ஆனால், சீரான இடைவெளியில் மனஅழுத்தம், பதற்றம் தொடர்ந்துவந்தன. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் என்னைக் கடுமையாக பாதித்தது. ஏற்கெனவே உள்ள சிக்கல்கள், எதிர்காலம் குறித்த அச்சம் உள்ளிட்டவை என்னை உடையச் செய்தன. உடனடியாக மனநல மருத்துவரைப் பார்த்து சிகிச்சை பெற்றேன்; நீண்ட நாள்களுக்குப் பிறகு இதை வீட்டில் தெரியப்படுத்தியபோது திட்டுதான் விழுந்தது. முந்தைய, அதாவது எங்கள் பெற்றோர் தலைமுறையைவிட எங்கள் தலைமுறையினரிடம் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. உதவி தேவை என்று உணர்ந்தால் தெரபிஸ்ட், மனநல மருத்துவர்களை நாடிச் செல்லும் அளவுக்குப் பிரச்னை குறித்த புரிதல் எங்கள் தலைமுறையினரிடம் வளர்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்” என்கிறார் ஹேமா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது).

‘இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் மனநலப் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர், அவர்களில் 80 முதல் 90 சதவிகிதம் பேர் வரை அதற்கு எந்த வகையான மருத்துவ உதவியையும் நாடியிருக்கவில்லை’ என்கிறது The Indian Journal of Psychiatry ஆய்விதழ். இந்த எண்ணிக்கை அதிர்ச்சி தருவதாக உள்ளது. மத்திய சுகாதார பட்ஜெட்டில், வெறும் 0.05 சதவிகிதம் மட்டுமே மனநலம் சார்ந்த செலவினங்களுக்கு ஒதுக்கப்படுவது இந்தியாவில் மனநலப் பிரச்னைகளை அரசாங்கம் எவ்வளவு மேம்போக்காக அணுகுகிறது என்பதை உணர்த்துகிறது.

முகமது சஃபி
முகமது சஃபி
சிவபாலன்
சிவபாலன்
ஆர்.ஜெயந்தி
ஆர்.ஜெயந்தி

“இந்திய மக்கள்தொகைக்கு எண்ணிக்கையில் வெறும் பத்தாயிரத் துக்குள்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை நானூறாக இருக்கிறது. அரசுப் பணியில் இருக்கும் என்னைப் போன்ற கிளினிக்கல் சைக்காலஜிஸ்டுகள் பத்துப் பேர் இருப்போம். இந்திய மனநலத்துறை இருநூறு ஆண்டுகளைத் தாண்டிய வரலாற்றைக் கொண்டிருந்தாலும், அரசாங்கம் இரண்டாம்பட்ச அணுகுமுறையையே தொடர்ந்துவருகிறது” என இந்திய மனநலத்துறையின் நிலையைச் சுட்டிக்காட்டுகிறார், தேனி மருத்துவக் கல்லூரியில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்டாகப் பணியாற்றும் முகமது சஃபி.

தமிழ்நாட்டின் 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் ‘கண்ணாடி இழை கம்பி வடம்’ மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத் நெட் திட்டத்தை சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றப்போகும் திட்டம் இது. கட்டற்ற இணையமும், கட்டுப்பாடில்லாத அதீதப் பயன்பாடும் இளையோர் மட்டுமன்றி, அனைத்து வயதினரின் உடல்-மன ஆரோக்கியத்தில் ஏற்கெனவே ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகளை இது மேலும் தீவிரமடையச் செய்துவிடாத வகையில் இணையப் பயன்பாட்டு நெறிமுறையை மக்களிடம் அரசாங்கம் உருவாக்க வேண்டும்!

*****

மீளும் வழிகள்

இளைஞர்களிடம் தீவிரமடைந்துவரும் அதிதீவிர இணையப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் முதல்முறையாகச் சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இணையதள சார்பு நிலை மீட்பு மையத்தை (Internet De Addiction Centre) 2021 டிசம்பர் 13 அன்று, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறார் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெயந்தி.

“இணையத்துக்கு அடிமையாதல் என்பது ஆன்லைன் விளையாட்டுகள், ஆன்லைன் சூதாட்டம், ஆபாசப் படங்கள் பார்ப்பது போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. மற்ற போதைப் பழக்கங்களைப் போலவே, தீவிர இணைய அடிமைத்தனத்திலும் கல்வி, வேலை, குடும்பம், சமூகத்தில் பழகுதலில் பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்பு போன்ற அனைத்தும் ஏற்படலாம். இப்படிப்பட்டவர்களுக்கு இதிலிருந்து மீள உளவியல் சிகிச்சையும், சில சமயங்களில் மருந்துகளும் தேவைப்படுகின்றன. வீட்டில், அலுவலகத்தில் என எங்கும் இதுபோன்ற அறிகுறிகள் உடையவர்களை நாம் எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும். மனநலப் பிரச்னைகளுக்கு மருத்துவ உதவியை நாடுவதில் தவறில்லை என்பதை இயல்பாக்கி, அவர்களுக்கு நாம் உதவ முன்வர வேண்டும். இங்கு சிகிச்சைக்கு வரும் தனிநபர்களை மதிப்பீடு செய்து, அவர்கள் நோயின் தீவிரம் ஆய்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்குக் குழு உளவியல் சிகிச்சை, இசை சிகிச்சை, கலை சிகிச்சை மற்றும் பிற வகையான பொழுதுபோக்குகளை சென்னை சமூக சேவை பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வழங்குகின்றனர். குடும்பம் மற்றும் நண்பர்களுடனான பிணைப்பை வலுப்படுத்துவதிலும் அவர்களுக்கு உதவுகின்றனர்.

இந்த மையத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மருத்துவ ஆலோசனை, மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று முற்றிலும் குணமடைந்து மீண்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன். மனநல ஆரோக்கியம் சார்ந்த புரிதலைக் குழந்தைகளிடம் கொண்டுசெல்ல பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒருங்கிணைக்க இருக்கிறோம். குழந்தைகள் தங்கள் வாழ்வின் முக்கியமான காலகட்டத்தை இணைய அடிமைத்தனத்துக்கு இழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சமாதானப்படுத்த கையில் செல்போனைத் திணிப்பதைப் பெற்றோர்கள் கைவிடத் தொடங்கும்போது இப்பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கான வழி நமக்குத் தெரிய ஆரம்பிக்கும்’’ என்கிறார் ஜெயந்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism