Published:Updated:

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி!

புகார்
பிரீமியம் ஸ்டோரி
புகார்

- பங்குச் சந்தை வர்த்தகம்... யூடியூப் மார்கெட்டிங்... 18 வங்கிக் கணக்குகள்...

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி!

- பங்குச் சந்தை வர்த்தகம்... யூடியூப் மார்கெட்டிங்... 18 வங்கிக் கணக்குகள்...

Published:Updated:
புகார்
பிரீமியம் ஸ்டோரி
புகார்

சீட்டு மோசடி, அதிக வட்டி தருவதாக மோசடி, இரிடியம் மோசடி... இந்த வரிசையில் அந்நியச் செலாவணி வர்த்தகம், பங்குச் சந்தை, பிட்காயின், கிரிப்டோகரன்சி ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறேன் பேர்வழி என்று தமிழகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் வரை ஒருவர் மோசடி செய்துவிட்டார் என்று புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி!

கோவையைச் சேர்ந்தவர் விமல்குமார். ‘மிஸ்டர் மனி’ (Mr.Money) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் விமல்குமார், ஆல்பா ஃபோரெக்ஸ் மார்க்கெட் என்ற நிறுவனத்தையும் நடத்திவருகிறார். அந்நியச் செலாவணி வர்த்தகம், பங்குச் சந்தை, பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தவர், பலரிடம் அவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாயை வசூலித்திருக்கிறார். அப்படி வாங்கிய தொகையைத்தான் திருப்பித் தராமல் கடந்த ஆண்டு தலைமறைவாகிவிட்டார்.

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி!

இவர்களில் ஏமாந்தவர்களில் ஒருவரான தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரசேகர் நம்மிடம், ‘‘நான் ஃபைனான்ஸ் தொழில் செய்துவருகிறேன். `ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், ஓராண்டில் 1.8 லட்சம் ரூபாய் கொடுப்பேன்’ என்று விமல் சொன்னார். அதனால், அவரிடம் முதலில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஐந்து மாதங்களுக்குப் பணம் சரியாக வந்தது. அதை நம்பி நகையை அடகுவைத்தும், என் மருமகனுடன் இணைந்து 60 லட்சம் ரூபாயைத் திரட்டியும் தஞ்சாவூரில் விமலின் நிறுவனத்துக்கு புரோக்கராக இருந்த ராஜா என்பவர் மூலம் கொடுத்தோம். கடந்த ஓராண்டாகப் பணம் வருவதில்லை. தாலி செயின் உட்பட அனைத்து நகையையும் கழற்றிக் கொடுத்த என் மனைவி, பணம் வராத விரக்தியில் உடல்நலமின்றி சமீபத்தில் இறந்துவிட்டார்’’ என்றார் கண்ணீருடன்!

விமல் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ள சில முதலீட்டாளர்கள் கூறுகையில், ‘‘விமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.பி-க்களை (Introduction Broker) நியமிப்பார். ஐ.பி-க்கள் டார்கெட்டை நிறைவேற்றினால் வெளிநாட்டுப் பயணம், உயர்ரக கார்கள் என்று பரிசுகளை அறிவிப்பார். தஞ்சாவூரில் மட்டுமே சுமார் 150 பேர் 55 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்கள். மதுரையில் 100 பேர், திருநெல்வேலியில் 50 பேர், காரைக்குடியில் 100 பேர், பரமக்குடியில் 200 பேர் முதலீடு செய்துள்ளார்கள். ஆன்லைன் மூலம் முதலீடு செய்தவர்களையும் கணக்கிட்டால், அவரிடம் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். மொத்தம் 18 வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை நடந்துள்ளது. ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 15 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை நடந்துள்ளது. எனவே, மோசடித் தொகை 300 கோடி ரூபாயைத் தொடும். கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக விமல் இது போன்ற மோசடியில் ஈடுபடுவதாகப் புகார் உள்ளது. இவர் ஓராண்டுக்கு முன்பே தலைமறைவாகிவிட்டாலும், யூடியூப் வீடியோவில் பேசிவருவதால் அப்போதே யாரும் புகார் அளிக்கவில்லை. அவர் பணம் தருவதை முற்றிலும் நிறுத்திய பிறகே கடந்த சில மாதங்களாகப் பலரும் அவர்மீது காவல்துறையில் புகார் அளித்துவருகிறார்கள்’’ என்றார்கள்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

விமல்குமாரின் நிறுவனத்தில் ஐ.பி-யாக இருந்த புஞ்சை புளியம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் நம்மிடம், ‘‘ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து, நானும் அவரது நிறுவனத்தில் புரோக்கராக இணைந்தேன். ஒரு வங்கிக் கணக்கை மட்டும் பயன்படுத்தினால் பிரச்னை வரும் என்று சொல்லி, 10-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் திறந்தார். என் பெயரில் இரண்டு வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன. விமல் யாருக்கு, எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்று சொல்வாரோ அந்தப் பணத்தை அனுப்பிவிடுவோம். என் வங்கிக் கணக்கில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்குப் பரிவர்த்தனை நடந்திருப்பதால், விமலால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் பலரும் என்னை மிரட்டிவருகிறார்கள்’’ என்றார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி பாலகுமாரனிடம் பேசினோம். ‘‘விமல் தனது நிறுவனத்தை லண்டனில் பதிவுசெய்துள்ளார். பரிவர்த்தனை நடந்ததாகக் கூறப்படும் ஆவணங்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் சம்மன் அனுப்பியும் விமல் விசாரணைக்கு வரவில்லை. விசாரணைக்காக அவரது அலுவலகத்துக்குச் சென்ற போலீஸார்மீதும் வழக்கு தொடர்கிறார். விரைவில் அவர்மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அருண்குமார்
அருண்குமார்

விமல்குமார் எங்கே இருக்கிறார் என்று விசாரித்தபோது சென்னை, மும்பை, வெளிநாடு என்று பல்வேறு இடங்களைச் சொன்னார்கள். தினமும் யூடியூபில் வீடியோக்களைப் பதிவேற்றும் விமலை, நீண்ட தேடுதலுக்குப் பிறகு தொடர்புகொண்டு பேசினோம்... ‘‘நான் தலைமறைவாக இல்லை. என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன். பலருக்கு வட்டியுடன், அசல் தொகையையும் கொடுத்திருக்கிறேன். குறிப்பிட்ட சிலர் உள்நோக்கத்துடன் பிரச்னை செய்கிறார்கள். என்மீது புகார் கொடுத்தவர்கள் பலரும் ஏற்கெனவே அசல் பணத்தை எடுத்துவிட்டார்கள். சில வங்கிகள் பணத்தை ஹோல்ட் செய்து வைத்துள்ளன. என் பெயரைச் சொல்லி சில ஐ.பி-க்கள் பணத்தை அடித்துவிட்டார்கள். போலீஸார் லஞ்சம் கேட்டு மிரட்டுவதால், அவர்கள்மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்’’ என்றார்.

முதலீட்டாளர்களிடம் விமல் அடிக்கடி, “முட்டாள்கள்தான் அலுவலகத்தில் எட்டு மணி நேரம் வேலை செய்வார்கள்” என்று சொல்வாராம். இப்போது அவரிடம் முதலீடு செய்தவர்களையே முட்டாள்கள் ஆக்கிவிட்டார் விமல்!