கட்டுரைகள்
Published:Updated:

`இதயம் என்பது ரோஜாவானால்...’

`இதயம் என்பது ரோஜாவானால்...’
பிரீமியம் ஸ்டோரி
News
`இதயம் என்பது ரோஜாவானால்...’

‘பொருள்களின் மீதான பற்றை விடுங்கள். செல்வமோ, அதிகாரமோ மனிதனை அடிமைப்படுத்திவிடாது

ஓவியங்களால் புகழ்பெற்றவர் லியனார்டோ டாவின்சி. ஒருமுறை அவர் அமைதியும் சாந்தமும் தவழும் இயேசு பிரானின் முகத்தை வண்ணத்தில் தீட்டுவதற்கு ஒரு மாடலைத் தேடினார்.

மிகுந்த முயற்சிக்குப் பிறகு ஓர் இளைஞனைக் கண்டெடுத்த டாவின்சி, அவனை மாதிரியாக வைத்து இயேசுவை வரைந்து விட்டார். ஆனால், யூதாஸை வரைவதற்கு வன்மம் நிழலாடும் முகம் தேவைப்பட்டது. பல காலம் தேடியும் கிடைக்கவில்லை.

ஒரு நாள், அவர் எதிர்பார்த்ததுபோன்ற வன்மமும் துரோகமும் வெளிப்படும் முகத்தைக் கண்டார். அந்த மனிதனை அழைத்துவந்து ஓவியம் தீட்டத் தயாரானார். அப்போது அவருக்கு சந்தேகம்.

‘‘உன்னை இதற்கு முன்பு எங்கோ பார்த்ததுபோல் உள்ளதே...’’ என்றார் டாவின்சி. ‘‘நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவை வரைவதற்கு மாடலாக வந்து நின்றவன் நான்தான்’’ என்றான் அந்த ‘யூதாஸ்.’

இதயத்தில் அழகிய எண்ணங்கள் அரும்பிய இளமைக்காலத்தில் அவன் முகத்தில் இயேசுவின் சாயலும், எண்ணம் சீர்கெட்டுப்போன இப்போது அவன் முகத்தில் யூதாஸின் சாயலும் தானாகவே வந்துவிட்டது. ஒருவனை இயேசுவாக்குவதும் யூதாஸாக்குவதும் எண்ணங்களே.

`இதயம் என்பது ரோஜாவானால்...’

`இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்’ என்பது, கவிஞர் வாலியின் வரிகள்!

‘பொருள்களை நினைப்பதால் பற்று உண்டாகிறது. பற்று, ஆசையாகப் பரிணமிக்கிறது. ஆசை, சினமாக வடிவெடுக்கும். சினத் தால் மனக்குழப்பம் உண்டாகிறது. குழப்பத்தால் நினைவின்மை ஏற்படுகிறது. இதன் விளைவு, புத்தி நாசம் அடைகிறது. புத்தி நாசத்தால் மனிதன் அழிகிறான்!’ என்கிறது கீதை.

ஆக, எண்ணம் மாசுபட நம்முள் இருக்கும் பற்று - ஆசை ஆகியவையே முழுமுதற் காரணமாகின்றன!

`பற்று’ என்றதும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அதுவொரு மழைக்காலம். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ருக்மிணியை அழைத்த கண்ணன், ``மறுகரையில் இருக்கும் துர்வாசரிடம் இந்த நிவேதனப் பொருளைக் கொடுத்துவிட்டு வா!’’ என்றார்.

`வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறதே...’ என்று தயங்கினாள் ருக்மிணி. ‘`நதிக்கரையில் நின்று, `கண்ணன் நித்ய பிரம்மசாரி என்பது உண்மையானால், நதியே வழிவிடு’ என்று சொல். நதி வழி விடும்!’’ என்றார் பகவான். அவர் சொன்னபடியே செய்தாள். நதி விரைவாக வழிவிட்டது.

மறுகரையை அடைந்து, துர்வாசரிடம் நிவேதனப் பிரசாதத்தைத் தந்தாள். அன்புடன் அதை வாங்கி ஆன்ம நிறைவுடன் உண்டார் முனிவர். வரும்போது வழி விட்ட நதி மீண்டும் பிரவாகமாய்ப் பொங்கிப் புரண்டது. இப்போது என்ன செய்வது என்று யோசித்த ருக்மிணியிடம், ‘`துர்வாசர் நித்ய உபவாசி என்பது உண்மையானால் நதியே வழிவிடு என்று சொல்’’ என்றார் முனிவர்.

அப்படியே செய்து வீடு திரும்பினாள். எனினும் அவளுக்குள் திகைப்பு. தன்னுடன் இல்லறம் நடத்தும் கண்ணன் தன்னை நித்ய பிரம்மசாரி என்கிறார். தான் கொடுத்த நிவேதனத்தை உண்டு முடித்துவிட்டு தான் ஒரு நித்ய உபவாசி என்கிறார் துர்வாசர். அது எப்படி சாத்தியம் என்ற திகைப்பு அவளுக்குள்.

`இதயம் என்பது ரோஜாவானால்...’

இந்தச் சந்தேகத்தைக் கண்ணனிடமே கேட்டாள். ‘`எங்கள் இருவருக்கும் எவற்றின் மீதும் பற்றில்லை. அதனால்தான் இல்லறத்தில் நான் இருந்தாலும் பிரம்மசாரியனாய் இருக்கிறேன். தினமும் உண்டாலும் துர்வாசர் உபவாசியாகவே இருக்கிறார்!’’ என்றார் கண்ணன்.

‘பொருள்களின் மீதான பற்றை விடுங்கள். செல்வமோ, அதிகாரமோ மனிதனை அடிமைப்படுத்திவிடாது. அவற்றின் மீதிருக்கும் நீங்காத ஒட்டுதல்தான் ஒருவனை நிரந்தர அடிமையாக்கிவிடுகிறது’ என்றார் புத்தர்.

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து சென்றது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருவன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. வெள்ளம் அதிகரித்தது. அவன் நடு ஆற்றில் போராடிக் கொண்டிருந்தான்.

கரையில் நின்றிருந்த நண்பர்கள் கத்தினார்கள்... ‘‘நண்பா! கம்பளி மூட்டையை இழுத்துக்கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறினான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விட மாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறிவிடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் இறைத்தன்மை பெற்று விடுகிறார்கள்!