Published:Updated:

அணிலோடு விளையாடி... அணிலோடு உறவாடி

ஹரில்
பிரீமியம் ஸ்டோரி
ஹரில்

குட்டியா இருந்தப்ப என் உள்ளங்கைலதான் தூங்குவான். கதகதப்புக்காக என் சட்டைக்குள்ள ரெஸ்ட் எடுப்பான்

அணிலோடு விளையாடி... அணிலோடு உறவாடி

குட்டியா இருந்தப்ப என் உள்ளங்கைலதான் தூங்குவான். கதகதப்புக்காக என் சட்டைக்குள்ள ரெஸ்ட் எடுப்பான்

Published:Updated:
ஹரில்
பிரீமியம் ஸ்டோரி
ஹரில்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிய ஒரு காலை வேளை அது. பைக்கிலிருந்து இறங்கிய அந்த இளைஞரின் தோள்பட்டையில், அணில் அமர்ந்திருந்தது. ‘பாஸ்... பாஸ்... உங்க மேல அணில்’ என்று அருகில் இருந்தவர்கள் பதறியபடி சொல்ல, ‘‘இது நான் வளர்க்கிற அணில்தான்’’ என்று சிரித்தபடி பதில் அளித்தார் அவர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரில் என்கிற இளைஞர்தான் அந்த அணிற்பிள்ளையை வளர்த்துவருபவர். ஹரிலும், அணிலும் 24 மணி நேரமும் இணைபிரியா தோஸ்துகள்.

“எங்களோட பூர்வீகம் கேரளா. தாத்தா காலத்துல கோவை வந்து செட்டில் ஆகிட்டோம். சின்ன வயசுல இருந்து நாய், பூனை, கிளி வளர்த்திருக்கேன். காலேஜ் முடிச்சுட்டு ஒரு ஐ.டி கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தேன். லாக்டௌனால வீட்ல இருந்தேதான் வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப ஓட்டு வீட்ல கூட்டுல இருந்து கீழ விழுந்து ஒரு அணிற்பிள்ளை நடக்க முடியாம சிரமப்பட்டுட்டு இருந்துச்சு. அதைப் பார்த்துட்டு வீட்ல இருந்தவங்க என்னமோ ஏதோன்னு சத்தம் போட்டாங்க. மனுஷ வாசம் பட்டுட்டா அணிலை, அதோட அம்மா சேர்த்துக்காதுன்னு சொன்னாங்க. அதனால, ஒரு துணில சுத்தி கூட்டுப் பக்கம் வெச்சேன். ஆனா, அதோட அம்மா வரல. அதுக்கப்புறம்தான் நான் பார்த்துக்க ஆரம்பிச்சேன். கீழ விழுந்ததுல, அதோட வலது விரல் நகம் போயிருந்துச்சு. இடது காலும் நொண்டி நொண்டிதான் நடந்துட்டு இருந்துச்சு. முன்னாடி நான் கீழ விழுந்து எலும்பு உடைஞ்சிருந்தப்ப, எண்ணெய் வைத்தியம்தான் பார்த்தோம். அந்த எண்ணெய அணிலுக்குத் தடவினேன். மூணே நாள்ல ரெடியாகிட்டான்.

அணிலோடு விளையாடி... அணிலோடு உறவாடி

அப்பப்ப ஒரு மாதிரி சத்தம் போடும். ‘சரி, பசிக்குது போல’ன்னு சத்துமாவை அரைச்சு விரல் நுனில வெச்சு ஊட்டினேன். சாப்பாடு உள்ள போனவுடனே சுறுசுறுப்பாகிட்டான். நல்லா விளையாண்டான். கொஞ்ச நாள் கழிச்சு, ஒரு மாமரத்துல ஏத்தி விட்டேன். எவ்ளோ ஸ்பீடுல ஏறினானோ, அதைவிட டபுள் மடங்கு ஸ்பீடுல இறங்கி என் தோள்பட்டைல உக்காந்துட்டான். அதுக்கப்புறம் ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணுனப்பவும் இதேதான் நடந்துச்சு. சரி நம்மளோடவே இருக்கட்டுமேன்னு இவனுக்கு ‘அப்பு’ன்னு பேரு வெச்சேன்.

குட்டியா இருந்தப்ப என் உள்ளங்கைலதான் தூங்குவான். கதகதப்புக்காக என் சட்டைக்குள்ள ரெஸ்ட் எடுப்பான். நைட் தூங்கறப்ப போர்வைக்குள்ள வந்து என் நெஞ்சு மேலதான் தூங்குவான். குப்புற படுத்தா என் முதுகுல தூங்குவான். பைக்ல எங்க போனாலும் கூட வருவான். ஒருகட்டத்துல ஐ.டி வேலைய விட்டுட்டு கார்ப்பென்டர் வேலைல இறங்கிட்டேன். எங்க குடும்பமே கார்ப்பென்டர் வேலைல இருந்ததனால, எனக்கும் அது தெரியும். அப்ப ஒருமுறை ஹார்டுவேர் கடைக்கு பொருள் வாங்கப் போனப்ப, அங்க இருந்த பெரிய நாய் கால் உயரத்துக்குக் குதிச்சுது. அப்ப பயந்துபோய், நாயைத் தாண்டிக் கீழ குதிச்சு ஓடிட்டான்.

அணிலோடு விளையாடி... அணிலோடு உறவாடி
அணிலோடு விளையாடி... அணிலோடு உறவாடி

எனக்குப் பதற்றம் ஆகிடுச்சு. ரெண்டரை மணி நேரம் தேடினேன், கிடைக்கல. அந்த இடத்துல இருந்து ஆறு கடை தாண்டி ஒரு காலி இடம் இருக்கும். கொஞ்சம் மரங்கள் இருந்துச்சு. அங்க போயிருப்பான்னு நினைச்சேன். நைட் தூக்கமே வரல. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. தினமும் அந்த வழியா போய், அவன் இருக்கானான்னு தேடுவேன். கிடைக்கல. ‘சரி, கொஞ்சம் பெருசாகிட்டான். தனியா பிழைச்சுக்குவான்’னு மனசைத் தேத்திக்கிட்டேன். ஆறு நாள் கழிச்சு அந்த ஹார்டுவேர் கடைக்காரர் போன் பண்ணி, ‘தம்பி, உன்னோட அணில் ரொம்ப அலப்பறை பண்ணுது. வாசல் தெளிச்சுட்டு இருந்தவங்க மேல ஏறினதுல அவர் பதறி, பக்கெட் எல்லாம் கீழ போட்டு ஓடிட்டாரு. பேக்கரில டீ சாப்பிட்டு இருந்தவரு மேலயும் ஏறி, அவரு பதறி கண்ணாடி கிளாஸை உடைச்சு ஒரே பஞ்சாயத்தா இருக்கு. கொஞ்சம் வா’ன்னு கூப்பிட்டார்.

அங்க போனப்புறம் ஒரு குடோன்லதான் இருக்கான்னு சொன்னாங்க. வீட்ல நான் விசில் அடிச்சா வந்துடுவான். அங்கயும் ரெண்டு தடவை விசில் அடிச்சேன். எங்க இருந்து வந்தான்னே தெரியல. சடசடன்னு தோள் மேல ஏறிட்டான். வீட்டுக்கு வந்துட்டோம். எங்க வீட்ல எங்கங்க சாப்பாடு கிடைக்கும்னு அவனுக்குத் தெரியும். அந்த எல்லா இடத்துக்கும் ஓடிட்டே இருந்தான். அப்பதான் ஆறு நாளா சரியா சாப்பிடலை, பசின்னு தெரிஞ்சுது. மாதுளை, ஆப்பிள் எல்லாம் கொடுத்தேன். ஆக்டிவாகிட்டான். இப்பவரை அதே மாதிரி ஆறு தடவை வெளிய போயிருக்கான். அதிகபட்சம் மூணு நாள்தான். அப்புறம் அவனா தேடி வந்துடுவான்.

அணிலோடு விளையாடி... அணிலோடு உறவாடி
அணிலோடு விளையாடி... அணிலோடு உறவாடி

நாம சாப்பிடற தோசை, சப்பாத்தி, பூரி எல்லாம் ருசிச்சு சாப்பிடுவான். எண்ணெய்ப் பதார்த்தம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். கெட்டி சட்னினா ரொம்ப உசுரு. நகம் ஷார்ப்பா இருக்கும், பல்லும் துருதுருன்னு இருக்கறதால, எதைப் பார்த்தாலும் கடிச்சுப் பார்ப்பான். என் உடம்பு முழுசும் அங்கங்க கஜினி சூர்யா மாதிரி காயம் இருக்கும். சிலர் நகத்தை வெட்டிவிடுன்னு சொல்லுவாங்க. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். நம்மளோட சுகத்துக்காக அதோட இயல்பை மாத்தக் கூடாது. நகம்தான் அதுக்கு பலம். என்னதான் நம்மகூட இருந்தாலும், அதை சுதந்திரமா விடணும். போற வழில பசி வந்தா ஏதாவது கடைல கடலை மிட்டாய் வாங்கி நாம ஒரு கடி கடிச்சுட்டுக் கொடுத்தா, ஜாலியா சாப்பிட்டுட்டே வருவான். சில சமயம் திராட்சை வாங்கிக் கொடுப்பேன். எந்தப் பறவை, விலங்குகளையும் நாம வலுக்கட்டாயப்படுத்தி வளர்க்க முடியாது. அவனுக்குப் பிடிச்சவரை எங்ககூட இருக்கலாம். அவனுக்குத் தேவையான எல்லாத்தையும் பண்ணிக் கொடுப்பேன். அவனோட பெரிய நம்பிக்கை நான்தான். அந்த நம்பிக்கைய கடைசி வரை காப்பாத்துவேன்’’ என்றார் உறுதியான குரலில்.

லைஃப் இஸ் பியூட்டிஃபுல்..!