தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மொழிக்குரிய தனித்துவத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் அது மொழிக்கு நாம் செய்யும் துரோகம்!

நாகபூஷணி கருப்பையா
பிரீமியம் ஸ்டோரி
News
நாகபூஷணி கருப்பையா

இலங்கை அறிவிப்பாளர் நாகபூஷணி கருப்பையா

 - நிகமுனி

சர்வதேசங்களில் வாழும் தமிழர்களால் இன்றுவரை விரும்பப்படுவது, இலங்கை வானொலி. ஆசியாவின் முதல் வானொலி ஒலிபரப்பு நிலையம் என்ற பெருமை பெற்றது. சிறந்த ஒலிபரப்பாளர்களை உருவாக்கிய பெருமையும் இலங்கை வானொலிக்கு உண்டு. குறிப்பாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவை மூலம் தமிழ் நாட்டில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து நம் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள், தங்களது தனித்துவமான பாணியாலும், சிறப்பான தமிழ் உச்சரிப்பாலும் நேயர்களை வசப் படுத்தியவர்கள். ‘உங்கள் கே.எஸ்.ராஜா’, ‘அன்புத்தோழி ராஜேஸ்வரி சண்முகம்’, ‘உங்கள் அன்பு அறிவிப்பாளன் பி.ஹெச்.அப்துல் ஹமீது’ என இந்த வரிசையில் மற்றொருவர்... நாகபூஷணி கருப்பையா.

இலங்கை வானொலியின் முதன்மை ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் நாகபூஷணி. இலங்கையில் வசிக்கும் அவரிடம், அவள் விகடனுக்காகப் பேசினோம்...

‘`இலங்கை வானொலி 98-வது வயதில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இலங்கை வானொலிக்கென்று தனித்துவமும், அதன் காரணமாகத் தனிப்பெருமையும் உண்டு. ஒலிபரப்புத் துறையின் ஜாம்பவான்கள் என இன்றுவரை புகழப்படும் பலர், இலங்கை வானொலியைச் சார்ந்தவர்களே. மூத்தவர் களின் அடியொற்றி, காலத்தின் தேவைக்கேற்ப சில மாற்றங்களையும் உள்வாங்கியபடி இலங்கை வானொலியின் வெற்றிப்பயணம் தொடர்கிறது’’ என்று தன் தாய்வீடு பற்றிப் பேசிய நாகபூஷணி, அதில் தன் அறிமுகம் மற்றும் அனுபவம் பற்றித் தொடர்ந்தார்.

மொழிக்குரிய தனித்துவத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் 
அது மொழிக்கு நாம் செய்யும் துரோகம்!

‘`பள்ளிப் பருவத்திலேயே எனக்கு எழுத்திலும் வாசிப்பிலும் நிறைய நாட்ட மிருந்தது. பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு பல்கலைக்கழகச் சேர்க்கைக்குக் காத்திருந்த போது, வானொலிக்கும் பத்திரிகைக்கும் ஆக்கங்கள் எழுதுவேன். வானொலியில் என் எழுத்து ஒலிபரப்பாகும்போது ஏற்படும் பரவசம், அதுபற்றி அனைவரும் என்னைப் பாராட்டிப் பேசும்போது ஏற்படும் பெருமிதம் எல்லாம் எனக்குள் வானொலி மீதான அதீத ஈடுபாட்டை ஏற்படுத்திவிட்டது. அந்த ஈடுபாடுதான் வானொலிப் பிரவேசத்துக்கு வழிவகுத்தது’’ என்றவர், வானொலி நிகழ்ச்சிகளில் தனக்குப் புகழ்பெற்றுத் தந்த தன் மொழியாள்கை பற்றிப் பகிர்ந்தார்.

‘`நம் சிந்தனைகளை, உணர்வுகளை வெளிப் படுத்தும் கருவி மொழி. வானொலியில் அந்த மொழியைக் கொண்டு நாம் ஆயிரக்கணக்கான நேயர்களுடன் இணையும் போது அதைக் கவனமாகக் கையாள வேண்டியது எத்துணை அவசியமோ அத்துணை அவசியம் அதை சுவைபட மொழிதலும், பிழையறப் பேசுதலும். மேலும், செம்மொழியாகிய நம் தமிழ் மொழிக்கு உயிர் மூச்சு, உச்சரிப்பு.

ஓர் அறிவிப்பாளரின் திறமையும் தனித்துவமும் அவரது சிறந்த மொழிப் பிரயோகத்தின் மூலமே வெளிப்படும் என்பது எனது கருத்து. எனவே சொல் பிழை, பொருட்பிழை தவிர்த்து உரிய உச்சரிப்போடு அறிவிப்புப் பணியை செய்யும்போது அது வரவேற் பும் பாராட்டுக்கும் பெறு கிறது. அத்தகு ஒலிபரப்பு சூழலில், பாசறையில் இருந்த படியால்தான் நேயர்களின் அன்புக்குப் பாத்திரமான வளாயிருக்கிறேன்.உலகளா விய ரீதியில் பிரசித்தி பெற்ற உங்கள் சஞ்சிகையிலும் இடம்பிடித்திருக்கிறேன். இதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படித்தான் நான் வளர்ந்தேன். அப்படி என் குரலுக்கு, பிழையற்ற மொழிக்கு, சுவாரஸ்யமான பேச்சுக்கு, சுத்தமான உச்சரிப்புக்குக் கிடைத்த ரசிக நேயர்கள், இன்றுவரை என்னிடம் அந்த நேசம் குறையாமல் இருக் கிறார்கள் என்பது சந்தோஷமாக இருக்கிறது. குறிப்பாக, ‘தமிழமுதம்’ எனும் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சியை கொழும்பு சர்வதேச வானொலியில் நான் வழங்கியபோது ரசிகர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகள் மறக்க முடியாதவை.

அறிவிப்பாளர் ஒரு கலைஞராக மட்டுமன்றி நல்ல ரசிகராகவும் இருக்கும்போது, நேயர்களின் ரசனை யறிந்து பாடல்களை வழங்க முடியும்’’ என்று சொல்லும் நாகபூஷணி, வானொலி அறிவிப்பாளராக மட்டுமன்றி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் மிளிர்கிறார்.

‘`வானொலி என் தாய்வீடாக என்னை வளர்த்தது. தொலைக்காட்சி ஒரு பள்ளிக்கூடமாகக் கற்றுத்தந்தது’’ என்பவர், இன்றைய சில தொகுப்பாளர்கள் மொழியில் கவனம் செலுத்துவதில்லை என்பது பற்றிக் குறிப்பிடும்போது, ‘`சில தமிழ் தொகுப்பாளர்களின் உச்சரிப்பு வருந்தத்தக்கதாகவே உள்ளது. திருத்தப்படவேண்டியது அவசியம்.

மொழிக்குரிய தனித்துவத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் அது மொழிக்கும், அது சார்ந்த துறைக்கும் நாம் செய்யும் துரோகம். அறியாமல், தெரியாமல் உச்சரிப்புப் பிழைகள், மொழிப் பிழைகள் செய்பவர்கள், உரிய பயிற்சி பெற்று தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்’’ என்று அக்கறையான ஆசிரியராகச் சொல் பவருக்கு, நடிப்புக்கும் அழைப்பு வந்திருக்கிறது.

மொழிக்குரிய தனித்துவத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் 
அது மொழிக்கு நாம் செய்யும் துரோகம்!

‘`வானொலி நாடகங்கள் பல வற்றில் என் குரல் பெரு விருப்பத் தோடு நடித்திருக்கிறது. ஒருமுறை தமிழ்ச்சங்க மேடையில் ‘அகலிகை’யாக நடித்தேன். பல விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கு அழைப்பு வந்தது. ஆனாலும், அதில் எனக்கு ஈடுபாடு குறைவு என்பதால் மறுத்து விட்டேன்’’ என்பவர், சிறந்த வானொலி மற்றும் தொலைக் காட்சி அறிவிப்பாளருக்கான தேசிய விருது, சிறந்த வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப் பாளருக்கான விருது மற்றும் சாகித்ய விருதினைப் பெற்றிருக்கிறார்.

‘`மலேசியா கோலாலம்பூரில் நடந்த ‘தீபாராகா’ சர்வதேச பாட்டெழுதும் போட்டியில் நான் இயற்றிய பாடலுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. வானொலிக்குக் கூட பல பாடல்கள் எழுதியிருக் கிறேன், ‘நெற்றிக்கண்’ என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட் டிருக்கிறேன். சில பக்திப்பாடல்களும் எழுதியதுண்டு. தமிழ்மொழிக்கே புகழ் அனைத்தும்’’ என்கிறார் தன்னடக்கத்துடன்.