Published:Updated:

எரிபொருளும் இல்லை... அரசிடம் திட்டமும் இல்லை... முழுமையாக முடங்குகிறதா இலங்கை?

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

எரிபொருள் இல்லாததால், சைக்கிள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

எரிபொருளும் இல்லை... அரசிடம் திட்டமும் இல்லை... முழுமையாக முடங்குகிறதா இலங்கை?

எரிபொருள் இல்லாததால், சைக்கிள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

அண்டை நாடான இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே செல்கிறது. பொருளாதார நெருக்கடியும், போராட்டங்களும் இலங்கையின் அடையாளங்களாக மாறிவிட்டன. எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை எட்டிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முன்பிருந்ததைவிட மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

என்ன நடக்கிறது இலங்கையில்? -எரிபொருளுக்குத் தடை!

ஜூன் 28 முதல் ஜூலை 10-ம் தேதி வரை, இலங்கையில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து, முப்படையினர், சுகாதாரம் உள்ளிட்ட சில துறைகளுக்கு மட்டுமே எரிபொருள் தரப்படுகிறது. அத்தியாவசிய சேவையாளர்களைத் தவிர மற்றவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யும்படி அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. சமையல் எரிவாயு எங்குமே கிடைப்பதில்லை.

எரிபொருளும் இல்லை... அரசிடம் திட்டமும் இல்லை... முழுமையாக முடங்குகிறதா இலங்கை?
எரிபொருளும் இல்லை... அரசிடம் திட்டமும் இல்லை... முழுமையாக முடங்குகிறதா இலங்கை?

தனியார் போக்குவரத்து முடங்கியிருக்கும் நிலையில், பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயங்கும் என்று அறிவித்திருந்தது அரசு. ஆனால், அரசுப் பேருந்துகள் மிகமிகக் குறைந்த அளவில்தான் இயங்குகின்றன. ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிவிட்டது. எரிபொருள் இல்லாததால் ரயில்கள் பாதி வழியிலேயே நின்றுபோன கதைகளும் இருக்கின்றன.

அரசுக்கு எதிராகக் கேள்வியெழுப்பும் பொதுமக்களை ராணுவத்தினர் தாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இலங்கை ராணுவ உயரதிகாரி ஒருவர், பெட்ரோல் நிலையத்துக்கு வந்த இளைஞரை எட்டி உதைக்கும் வீடியோ வைரலானது. ``ராணுவத்தினரின் அடாவடிகள் தொடர்ந்தால், மனிதாபிமான அடிப்படையில் இதுவரை உதவிவந்த உலக நாடுகள், இனி உதவ முன்வர மாட்டார்கள்’’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

மூடப்பட்ட பள்ளிகள்... ஒரு வேளை மட்டுமே உணவு!

போக்குவரத்து அறவே இல்லாததால், நகர்ப்பகுதிகளிலுள்ள பள்ளிகளை மூட உத்தரவிட்ட அரசு, கிராமப்புறத்தில் நடந்து செல்லும் தூரத்திலிருக்கும் பள்ளிகள் மட்டும் செயல்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், ஆசிரியர்கள் வர முடியாததால் அங்கும் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. ``இந்த நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுமா என்பது தெரியவில்லை. பிள்ளைகளுக்குக் கல்வி கிடைத்தால் வெளிநாட்டில் சென்றாவது பிழைத்துக்கொள்வார்கள். அதுவும் கிடைக்கவில்லை எனும்போது எதிர்காலத்தில் அவர்கள் என்னதான் செய்வார்கள்?’’ என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் புலம்புகிறார்கள்.

சமையல் எரிவாயு பற்றாக்குறை, அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றால், இரண்டு வேளை சாப்பிட்டுக்கொண்டிருந்த சில நடுத்தர வர்க்க குடும்பத்தினர், தற்போது ஒரு வேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள்.

எரிபொருளும் இல்லை... அரசிடம் திட்டமும் இல்லை... முழுமையாக முடங்குகிறதா இலங்கை?

``பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு வந்துவிட்டோம்!’’

எரிபொருள் இல்லாததால், சைக்கிள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிஷாந்த், ``கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 30,000 ரூபாய் (இலங்கை ரூபாய்) இருந்த சைக்கிளின் விலை, கடந்த வாரம் 57,000 ரூபாயைத் தொட்டது. எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்ட பிறகு, அது 85,000 ரூபாயாக மாறியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில், இவ்வளவு காலம் புழக்கத்தில் இல்லாத குதிரை வண்டிகள்கூட பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன’’ என்கிறார்.

இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில், தலைநகர் கொழும்பில் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. கோத்தபய, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு பதவி விலக வேண்டுமென அவை போராடுகின்றன. ``திருடர்களான இந்த ஆட்சியாளர்களோடு எனக்கு எவ்விதத் தொடர்புமில்லை. வெளிநாடுகளிடமிருந்து பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டது. நாடு பிச்சை எடுக்கும் நிலையிலிருப்பதால், நாட்டின் மதிப்புமிக்க சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. நாடு இந்த நிலைக்கு வந்த பிறகும், கோத்தபய அரசின் ஊழல் குறைந்தபாடில்லை’’ என்றிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா. கொழும்பிலுள்ள காலி முகத்திடலில், `கோத்தபய பதவி விலக வேண்டும்’ என்ற கோரிக்கையோடு பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

முடங்கும் நிலையில் நாடு?

அந்நியச் செலாவணியை அதிகரிக்க, ``வெளிநாடுவாழ் இலங்கை மக்கள் தங்கள் உறவினர்களுக்கு, முறைசாரா நிறுவனங்கள் மூலம் பணம் அனுப்பாமல், வங்கிகள் மூலம் பணம் அனுப்பி உதவ வேண்டும்’’ என்று அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ``ஜூலை 10-ம் தேதிக்குப் பிறகு, எரிபொருள், காஸ் ஆகியவற்றை முறையாக விநியோகிக்கத் திட்டம் வகுத்திருக்கிறோம்’’ என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.

அங்கிருக்கும் பத்திரிகையாளர்களோ, ``எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பாக ரஷ்யா, கத்தார் ஆகிய நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்கள் அமைச்சர்கள். ஏற்கெனவே வாங்கிய எரிபொருளுக்கே காசு கொடுக்கவில்லை என்பதால், மேற்கொண்டு எரிபொருள் அனுப்ப வெளிநாடுகள் யோசிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, ஜூலை 22-ம் தேதிதான் பெட்ரோல் இலங்கையை வந்தடையும் சூழல் நிலவுகிறது. அப்படியிருக்கையில், ஜூலை 10-க்கு பிறகு எப்படி இந்த நிலையைச் சரிசெய்வார்கள் என்பது தெரியவில்லை.

சஜித் பிரேமதாசா
சஜித் பிரேமதாசா

இலங்கையிலுள்ள 95 சதவிகித உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. உணவு டெலிவரி செய்யும் உபர் உள்ளிட்ட ஆப்கள் எப்போதும் `No Hotels Available’ என்றே சேதி சொல்கின்றன. அரிசி, பெட்ரோல் மட்டுமின்றி அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் விண்ணை முட்டியிருக்கின்றன. வியாபாரிகள் பலரும் நொடிந்து போய்விட்டனர். பொதுமக்கள் பலர் வேலை இழந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் சேவை தடைப்பட்டிருப்பதாலும், மருந்துத் தட்டுப்பாட்டாலும் உயிர்ப்பலிகள் ஏற்படுகின்றன. சுகாதாரத் துறை 90 சதவிகிதம் முடங்கிவிட்டது. இன்னும் சில வாரங்களில் மொத்த நாடுமே முடங்கிவிடும் சூழலே நிலவுகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் எந்தத் திட்டமுமில்லை. கிடைக்கும் நிதியுதவிகளை வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறது அரசு. அடுத்த என்னவாகும் என்பதை யூகிக்க மட்டுமல்ல, யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை’’ என்கிறார்கள் வேதனையுடன்.

மீண்டு வா இலங்கையே!