Published:Updated:

மீண்டும் கடலில் மீனவர் ரத்தம்!

மீண்டும் கடலில் மீனவர் ரத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் கடலில் மீனவர் ரத்தம்!

தொப்புள்கொடி அறுக்கப்பட்ட காயம் மறைவதற்குள் தந்தையை இழந்த அந்தக் குழந்தையைச் சுமந்துகொண்டு பித்துப்பிடித்த மாதிரி அமர்ந்திருக்கிறார் 21 வயது விஜயலட்சுமி.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் தப்பி யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்தவர் சாம்சன் டார்வின். முகாமில் உடனிருந்த தலைமன்னார் விஜயலட்சுமியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அந்தக் காதலுக்குச் சாட்சியாக 20 நாள்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி மகிழக்கூட வாய்க்கவில்லை சாம்சனுக்கு. நண்பர்களோடு மீன்பிடித் தொழிலுக்குப்போன சாம்சனைக் கடலில் தள்ளிக் கொன்றிருக்கிறது இலங்கைக் கடற்படை. தொப்புள்கொடி அறுக்கப்பட்ட காயம் மறைவதற்குள் தந்தையை இழந்த அந்தக் குழந்தையைச் சுமந்துகொண்டு பித்துப்பிடித்த மாதிரி அமர்ந்திருக்கிறார் 21 வயது விஜயலட்சுமி.

மீண்டும் கடலில் மீனவர் ரத்தம்!

‘‘சின்னவயசுல இருந்தே குடும்பப்பாசம் தெரியாம ஹாஸ்டல்ல வளர்ந்தவரு. ‘நம்ம பிள்ளைக்கு அந்த நிலை வரக்கூடாது லெட்சுமி’ன்னு அடிக்கடி சொல்வார். கிடைக்குற வேலைக்குப் போனார். கொரோனா நேரத்துல எந்த வேலையும் இல்லாம ரொம்ப சிரமப்பட்டோம். ‘கடலுக்கு வர்றியா’ன்னு கேட்டப்போ, ‘இதுக்காவது கூப்பிடுறாங்களே... போயிட்டு வாரேன்’னு குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுத்துட்டுப் போனாரு. அந்த மனுஷனை இப்படிப் பொட்டலமா கட்டிக் கொடுத்துட்டாங்களே” என்று கதறும் விஜயலட்சுமிக்கு ஆறுதல் சொல்ல யாருக்கும் வார்த்தைகளில்லை.

மீண்டும் கடலில் மீனவர் ரத்தம்!

சிறுகுடிசையொன்றில் வசிக்கும் வயதான பெற்றோருக்கும் உடல்நலம் குன்றிய தங்கைக்கும் நம்பிக்கையாக இருந்தார் மெசியாஸ். இலங்கைக் கடற்படையின் வெறித்தனமான தாக்குதலுக்கு பலியாகிவிட்டார். நிலைகுலைந்து நிற்கிறது குடும்பம்.

இலங்கைக் கடற்படை மீண்டும் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டுள்ளார்கள். ராமேஸ்வரம் தீவே அதிர்ச்சியிலும் ஆவேசத்திலும் உறைந்திருக்கிறது.

மீண்டும் கடலில் மீனவர் ரத்தம்!

கடந்த 18-ம் தேதி கோட்டைப்பட்டினத்தில் இருந்து பிரான்சிஸ் கோவா என்பவரின் விசைப்படகில் சாம்சன் டார்வின், தங்கச்சிமடம் மெசியாஸ், வட்டான்வலசை நாகராஜன், தாத்தனேந்தல் செந்தில்குமார் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களின் படகைச் சிறைபிடித்த இலங்கைக் கடற்படை, தங்கள் கப்பலுக்கு அருகிலேயே அதை நிறுத்தி வைத்திருந்தது. கடும் கடல் சீற்றத்தால் மீன்பிடிப் படகின் பின்பகுதி கடற்படையின் கப்பல்மீது மோத, கப்பல் சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கைக் கடற்படை வீரர்கள், படகில் இருந்த மீனவர்களைக் கொடூரமாகத் தாக்கினர். மீன்பிடிப் படகின்மீது கப்பலை விட்டு மோதி மூழ்கடித்துள்ளனர். மீனவர்களும் படகோடு மூழ்கிப்போனார்கள்.

மீண்டும் கடலில் மீனவர் ரத்தம்!

குறித்த நேரத்தில் கரைக்குத் திரும்பாத மீனவர்களைத் தேடி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்குள் இறங்கினார்கள். இந்தியக் கடலோரக் காவல்படையும் மீனவர்களைத் தேட, நடந்ததைச் சொல்லாமல் அலைக்கழித்தது இலங்கைக் கடற்படை. இறுதியில், கடலில் மூழ்கிய நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அறிவித்தது. அவர்களின் உடல்களில் ரத்தக்காயங்களும் தீக்காயங்களும் இருந்ததை அறிந்த மீனவர்கள், மீனவர்களை அடித்து, எரித்துத் துன்புறுத்திக் கொலை செய்த இலங்கைக் கடற்படையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்வதுடன், மீனவர்களின் உடலை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக இரண்டு சம்பவங்களைத் தாண்டி ரத்தம் பார்க்காத கடலில் மீண்டும் குருதி. ஏன்?

மீண்டும் கடலில் மீனவர் ரத்தம்!

வேதாரண்யம் தொடங்கி ராமேஸ்வரம் வரையிலான மீனவர்களைப் பொறுத்தவரை, இலங்கை எல்லைக்குள் போகாமல் மீன்பிடிப்பதென்பது உண்மையில் இயலாத காரியம்தான். கடற்பரப்பும் தொழில்நுட்பமும் அப்படி. “83 கி.மீ நீளம், 48 கி.மீ அகலம் கொண்டது பாக் நீரிணை. இதுல பல பகுதிகள்ல மீன்பிடிக்க முடியாது. வெறும் 45 கி.மீ பரப்புக்குள்ளயே ரெண்டு நாட்டுத் தமிழ் மீனவர்களும் மீன்பிடிக்க வேண்டிய நிலை. இதுதான் அடிப்படைப் பிரச்னை. நம்மால அவங்க வாழ்வாதாரம் பாதிக்கப்படுறதா இலங்கை மீனவர்கள் சொல்றாங்க. அவங்க கொடுக்கிற அழுத்தத்தால இலங்கைக் கடற்படை நம் மீனவர்களை வஞ்சம் வச்சு அடிக்குது” என்று வருந்துகிறார் இந்தியா - இலங்கை நிரபராதி மீனவர் கூட்டமைப்பின் தமிழகப் பிரதிநிதி யு.அருளானந்தம்.

1990 முதல் 2009 வரை 83 தமிழக மீனவர்கள் காணாமல்போயுள்ளார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை கண்டறிய முடியவில்லை. தாக்குதலும் இறப்பும் துயரென்றால், காணாமல்போவது பெருந்துயர். அரசின் உதவிகள்கூட குறிப்பிட்ட காலத்துக்குக் கிடைக்காது. என்றேனும் வருவார் என்ற எதிர்பார்ப்பிலும் வறுமையிலும் பல தாய்களும் மனைவி மக்களும் தமிழகக் கடலோரப் பரப்பில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அருளானந்தம், சேசுராஜ்
அருளானந்தம், சேசுராஜ்

‘‘1983-ல தொடங்கி 2014 வரை 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்காங்க. நூற்றுக்கணக்கான படகுகளைப் பறிமுதல் செஞ்சு எங்க வாழ்வாதாரத்தைப் பறிச்சிருக்காங்க. எல்லாப் பிரச்னைகளையும் தாங்கிக்கிட்டு வருஷத்துக்கு 80 நாள்கள் மட்டும்தான் மீன்பிடிக்க கடலுக்குள்ள இறங்குறோம். அப்பவும்கூட எங்களை நிம்மதியா தொழில் செய்ய விடாம விரட்டுது இலங்கைக் கடற்படை. மத்திய மாநில அரசுகள் எங்க வாழ்வாதாரத்தையும் உயிரையும் காப்பாத்த நடவடிக்கை எடுக்கணும், நாலு மீனவர்களுக்கும் என்ன நேர்ந்ததுன்னு எங்களுக்குத் தெரியணும்” என்று ஆவேசமாகிறார் விசைப்படகுகள் மீனவர் சங்க மாவட்டத் தலைவர் சேசுராஜ்.

‘இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இலங்கை மீனவர்களின் அழுத்தமே காரணம்’ என்ற தமிழக மீனவர்களின் குற்றச்சாட்டை யாழ் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜ தலைவர் அன்னலிங்கம் அன்னராசாவிடம் வைத்து விளக்கம் கேட்டேன்.

“நாலு மீனவர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எங்கள் மக்களுக்கு பிரச்னை வந்த போது ஆதரித்து அடைக்கலம் தந்தது தமிழ்நாடுதான். அதை நாங்கள் மறக்கமாட்டோம். அதேநேரம் எங்கள் பிரச்னையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பு கிறோம். 30 வருடங்கள் கழித்து இப்போதுதான் எங்கள் மக்கள் கடற்தொழில் செய்றாங்க. பெரும்பாலும் சிறு பைபர் படகுகள் மூலமாகவே தொழில் செய்கிறோம். வெறும் 5 சதவிகிதம் பேர்தான் ஆழ்கடலுக்குப் போய் தொழில் செய்றாங்க. எல்லோருக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட எங்கள் அரசு வசதி செய்துதரவில்லை.

இந்தச் சூழல்ல, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தித் தொழில் செய்யும் தமிழ்நாட்டு மீனவ முதலாளிகள் கடல் வளத்தை மொத்தமா அழிக்கிறாங்க. அவங்களால நாங்க பாதிக்கப்படுறோம். அவங்க பயன்படுத்துற இழுவலைப் படகுகளாலதான் எங்களுக்குப் பிரச்னை. இதைத்தீர்க்க 2009-ல் பேச்சுவார்த்தை நடத்தி சிலமுடிவுகள் எடுத்தோம். ஆனா அவங்க அதுபடி நடக்கல. தமிழ்நாட்டுப் படகு முதலாளிகள் இழுவை மடி மீன்பிடிப்பை நிறுத்தினால் மட்டுமே இரு நாட்டு மீனவர்களும் நிம்மதியா தொழில் செய்யமுடியும்” என்கிறார் அவர்.

பிரச்னைகளைப் பேசித் தீர்க்கலாம். ஆனால் அப்பாவி மீனவர்களின் உயிர்கள் பலியாகக்கூடாது.

என்னவானது ஆழ்கடல் மீன்பிடித்திட்டம்?

பாக் ஜலசந்தி கடற்பரப்பில் மீன்பிடிக்கும் மீனவர்கள் ஒருநாள் கடலில் தங்கித் தொழில் செய்து திரும்புவார்கள். கடற்பரப்பு குறுகலாக இருப்பதால் இலங்கைக் கடற்படை அத்துமீறுகிறது. இந்த நிலைக்கு மாற்றாக, மத்திய மாநில அரசுகள் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் ஒன்றை மூன்றாண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தார்கள். இத்திட்டத்தின்படி மன்னார் வளைகுடாப் பகுதி ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க மீனவர்களுக்கு வசதி உருவாகும் என்றும், 80 லட்ச ரூபாய் படகுக்கு மீனவர்கள் 8 லட்சம் மட்டும் முதலீடு செய்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டது. 200 மீனவர்கள் அத்திட்டத்தில் படகுபெற விண்ணப்பித்தார்கள். ஆனால் இதுவரை வெறும் 30 பேருக்கு மட்டுமே படகு வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது படகின் விலை 1.2 கோடிக்கு மேல் உயர்ந்துவிட்டதால் மீனவர்கள் செய்ய வேண்டிய முதலீடும் உயர்ந்துவிட்டது. அதனால் பலர் அத்திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை. மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தைக் காலத்திற்கேற்றவாறு முறைப்படுத்தி மீனவர்களின் சுமையைக் குறைத்தால் ஓரளவுக்கு இலங்கையின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள்!