Published:Updated:

எழுந்தது மக்கள் புரட்சி... வீழ்ந்தது கோத்தபய அரசு! - இலங்கையில் அடுத்தது என்ன?

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் இருவரும் பதவி விலக வேண்டும், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்த அரசு பதவி ஏற்க வேண்டும்

எழுந்தது மக்கள் புரட்சி... வீழ்ந்தது கோத்தபய அரசு! - இலங்கையில் அடுத்தது என்ன?

அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் இருவரும் பதவி விலக வேண்டும், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்த அரசு பதவி ஏற்க வேண்டும்

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

`மக்கள் இனி வாழ வழியே இல்லை என்று உணரும்போது புரட்சி வெடிக்கும். அந்தப் பிரளயத்துக்கு முன்னால் அதிகாரம் சிதறிப்போகும்’ என்றார் ரஷ்யப் புரட்சி நாயகன் லெனின். அந்த வாக்கு வரலாறாகிக்கொண்டிருக்கிறது இலங்கையில். அந்தப் புரட்சியையும் தாங்களே தலைமையேற்று நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் இலங்கை மக்கள்.

கடன் நெருக்கடி, கொரோனா அவசரநிலை, அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டால் கட்டுக்கடங்காத பொருளாதார வீழ்ச்சியை இலங்கை அரசாங்கம் சந்தித்திருக்க, இனியும் இதைப் பொறுக்க முடியாது எனப் பொங்கி எழுந்த மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினர். `கோத்தாவே வீட்டுக்குப் போ’ என்ற ஒற்றைக் கோஷத்தோடு எழுச்சி பெற்ற மக்கள் போராட்டம், மூன்று மாதங்களைக் கடந்தநிலையில் தற்போது மக்கள் புரட்சியாக உருப்பெற்றிருக்கிறது.

எழுந்தது மக்கள் புரட்சி... வீழ்ந்தது கோத்தபய அரசு! - இலங்கையில் அடுத்தது என்ன?

கட்டுக்கட்டாக பணம்... ரகசிய பதுங்குகுழி...

கடந்த சனிக்கிழமையன்று தலைநகர் கொழும்பை முற்றுகையிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், அதிபர் மாளிகையை நோக்கிப் படையெடுத்தனர். தடுப்புவேலி, தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீச்சு, துப்பாக்கிச்சூடு எதற்கும் அஞ்சாமல், மக்கள் கூட்டம் பெரும் ஆவேசத்துடன் கோத்தபய அரசுக்கு எதிராகக் குரலெழுப்பிக்கொண்டே தடுப்பு வேலிகளைத் தகர்த்தெறிந்தது. பாதுகாப்புப்படையினரையும் மீறி அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள் அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடும் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

அதிபர் மாளிகையைச் சோதனையிட்ட மக்கள் அங்கிருந்த ஒரு ரகசிய அறையின் அலமாரியில் கட்டுக்கட்டாகப் பணம் குவிந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பணத்தை எண்ணுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. மொத்தமாக எண்ணிய 1.78 கோடி ரூபாய் பணத்தை அப்படியே அதிபர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நேர்மையாக ஒப்படைத்தனர் போராட்டக்காரர்கள்.

எழுந்தது மக்கள் புரட்சி... வீழ்ந்தது கோத்தபய அரசு! - இலங்கையில் அடுத்தது என்ன?
எழுந்தது மக்கள் புரட்சி... வீழ்ந்தது கோத்தபய அரசு! - இலங்கையில் அடுத்தது என்ன?

அதைத் தொடர்ந்து, மற்றோர் அறையில் சந்தேகத்துக்கிடமாக இருந்த அலமாரியைச் சோதனையிட்ட போராட்டக்காரர்கள், அதில் ரகசியக் கதவுகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தக் கதவின் வழியாக உள்நுழைந்தால் லிஃப்ட் வசதிகளுடன் பூமிக்கடியில் செல்லும் பதுங்குகுழி அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த வழியாகத்தான் அதிபர் கோத்தபய தப்பித்துச் சென்றிருக்கக்கூடும் எனப் போராட்டக்காரர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால், அதிபர் கோத்தபய எங்கு தப்பிச் சென்றார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

முதன்முறையாகப் பதவி விலகப்போகும் அதிபர்...

இதற்கிடையில், சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், `அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் இருவரும் பதவி விலக வேண்டும், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்த அரசு பதவி ஏற்க வேண்டும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.

என்ன நடந்தாலும் பதவியைவிட்டு விலக மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்த கோத்தபய ராஜபக்சேயும் பதவி விலக முன்வந்திருப்பதாக சபாநாயகர் தெரிவித்திருக்கிறார். இது பற்றிப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ``அதிபர் கோத்தபய என்னைத் தொடர்புகொண்டு, வரும் ஜூலை 13-ம் தேதி பதவியை ராஜினாமா செய்யப்போவதாகக் கூறினார்” எனத் தெரிவித்திருக்கிறார். இது நடக்கும் பட்சத்தில், இலங்கை வரலாற்றில் பதவியில் இருக்கும்போது விலகும் முதல் அதிபராக கோத்தபய இருப்பார்.

எழுந்தது மக்கள் புரட்சி... வீழ்ந்தது கோத்தபய அரசு! - இலங்கையில் அடுத்தது என்ன?
எழுந்தது மக்கள் புரட்சி... வீழ்ந்தது கோத்தபய அரசு! - இலங்கையில் அடுத்தது என்ன?

யார் அடுத்த அதிபர்?

அதிபர், பிரதமர் இருவரும் பதவி விலக முன்வந்திருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசை அமைக்கவிருப்பதாக எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடைக்கால அரசு அமைந்த ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, பொருளாதார நெருக்கடி ஓரளவுக்குத் தணியும் தறுவாயில் முறையாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவும் எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன.

இலங்கை அரசியல் சட்டப்படி அதிபர் பதவி விலகினால், இடைக்கால அதிபராகப் பிரதமர் செயல்படுவார். ஆனால் தற்போது இருவரும் பதவி விலகும் நிலையில், அந்நாட்டின் சபாநாயகரே இடைக்கால அரசின் அதிபராகப் பொறுப்பேற்பார். சபாநாயகர் அபேவர்தன ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லையெனில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அதிபராக நியமிக்கப்படலாம். எப்படியிருப்பினும் இதற்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். அதேசமயம், `எங்களுக்கு நாடாளுமன்றத்தில் 113 எம்.பி-க்களின் ஆதரவு இருப்பதால், நாங்களே ஆட்சியமைக்க முடியும்’ என்று சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதால் யார் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பார் என்பதில் குழப்பம் நீடித்துவருகிறது.

பொருளாதார நெருக்கடியோடு சேர்ந்து, அரசியல் நெருக்கடியிலும் சிக்கித் திணறுகிறது இலங்கை. விடியல் பிறக்கட்டும்...!

சுற்றுலாத் தலமான அதிபர் மாளிகை!

இதுவரை வெயிலிலும் குளிரிலும் கடுமையாகப் போராடிவந்த மக்கள், சிறிது இளைப்பாறல்போல அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது முதல் பல வேடிக்கைச் சம்பவங்களையும் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றனர். அதிபர் மாளிகையின் சமையலறைக்குச் சென்று சமைத்து உண்டும், அதிபரின் மெத்தைகளில் படுத்து உருண்டும், குத்துச்சண்டை போட்டும் மகிழ்ந்தனர். பெரும்பகுதியினர் நீச்சல் குளத்தில் மூழ்கி, ‘டைவ்’ அடித்து சாகசங்களில் ஈடுபட்டனர். சிலர் பியானோ வாசித்தார்கள். ஹாலில் இருந்த டி.வி-யில் தாங்கள் போராடும் காட்சிகளை நேரலையில் பார்க்கும் வீடியோக்களைப் பகிர்ந்து உற்சாகமடைந்தனர். வேடிக்கையின் உச்சமாக, அதிபர் என்றும் பாராமல் கோத்தபயவின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் இன்பாக்ஸுக்குள் சென்று, `சார் வீட்டுல சின்ன பின் சார்ஜர் இல்லையா?’ எனக் கேள்வி கேட்கும் ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களைச் சிரிப்பில் ஆழ்த்தியிருக்கிறது!