Published:Updated:

தோல்வியுற்ற தலைவன்!

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

- நிலாந்தன்

தோல்வியுற்ற தலைவன்!

- நிலாந்தன்

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

வெல்ல முடியாத ஒரு போரை வென்றெடுத்த படைத்துறைச் செயலர் என்பதுதான் கோத்தபய ராஜபக்‌சவின் அடிப்படைத் தகுதி. அவர் தன்னை எப்பொழுதும் ஒரு படைத்துறை ஆளுமையாகவே கருதினார். பாரம்பரிய சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதில் பெருமைப்பட்டார். அது மட்டுமல்ல, தன் சகோதரர்களிடமிருந்தும் தன்னை அவர் வேறுபடுத்திக் காட்டினார். வழமையான சிங்கள அரசியல்வாதிகளைப் போல அவர் வேட்டி அணிவதில்லை. தன் வயதை மறைத்துத் தலைக்கு டை பூசுவதும் இல்லை. தமது குடும்பத்தின் வம்சச் சின்னமான குரக்கன் நிறச் சால்வையை அணிவதில்லை. அவர் பதவியேற்ற அன்று அவருடைய மூத்த தமையன் சமல் ராஜபக்ச ஒரு பேழையில் அந்தச் சால்வையை வைத்துப் பரிசாக வழங்கினார். ஆனால், கோத்தபய அந்தச் சின்னத்தை அணிய விரும்பவில்லை.

இவ்வாறாக தன்னை ஒரு வித்தியாசமான தலைவராகக் கட்டமைக்க முற்பட்ட ஒருவருடைய ஆட்சிக்காலம் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் மிகவும் அபகீர்த்திக்குரியதாக முடிவுக்கு வருகிறது. எந்த மக்களுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்ததாகப் பெருமைப்பட்டுக்கொண்டாரோ, அந்த மக்களுக்கு பயந்து எங்கேயோ ஒரு மறைவிடத்தில் ஓடி ஒளிய வேண்டிய நிலை. யுத்தத்தை வென்று கொடுத்தவர் தோல்வியுற்ற ஒரு தலைவனாகப் பதவி விலகுகிறார். ஒரு பௌர்ணமி நாளில் தான் பதவியிலிருந்து விலகுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க
ரணில் விக்கிரமசிங்க

கொழும்பில் உள்ள மேற்கத்தியத் தூதரகங்கள் மற்றும் ஐ.நா அலுவலகம் போன்றன, வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் பக்கம் நிற்கின்றன. குறிப்பாக அமெரிக்கத் தூதரின் ட்விட்டர் பதிவுகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உற்சாகமூட்டின. சில விமர்சகர்கள் கூறுவது போல, மேற்கத்திய நாடுகளும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் அந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தின என்பதல்ல இதன் பொருள். அது நெருக்கடி தாளாமல் வீதிக்கு வந்த மக்கள் கூட்டம். இயல்பாகத் திரண்ட மக்கள் கூட்டம். ஆனால் இந்தத் தன்னெழுச்சிப் போராட்டத்தின் கனிகளை கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்புவரை ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டார். இனி இறுதியிலும் இறுதியாக இந்த மக்கள் எழுச்சிகளின் கனிகளை மேற்கு நாடுகளே அதிகம் சுவைக்கப்போகின்றனவா? ஏனெனில் கத்தியின்றி, ரத்தமின்றி, தேர்தல் இன்றி ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவருகிறது.

மார்ச் 31-ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாகப் போராடிவரும் மக்கள் தங்கள் முதல் கட்ட வெற்றியைப் பெற்றுவிட்டார்கள். அதன் அடுத்த கட்டம் பொருளாதார நெருக்கடியை எப்படித் தீர்ப்பது என்பது. ஏனெனில், ராஜபக்சக்களை அகற்றினால் மட்டும் பொருளாதாரம் திடீரென்று நிமிர்ந்துவிடாது. பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு, இறந்த காலத்தின் தவறுகளில் இருந்து பாடம் கற்ற தலைவர்கள் தேவை.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்துக்குள் பொருத்தமான தலைவர்கள் இல்லை. அதனால்தான் மக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். நாடாளுமன்றத்துக்குள் மட்டுமல்ல, வெளியே ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் மக்கள் மத்தியிலும் தலைவர்கள் யாரும் உறுதியாக மேலெழவில்லை. மூன்று மாத காலத்துக்கும் மேலான மக்கள் எழுச்சிகளின் பின்னணியில் பல்வேறு அமைப்புகள் உண்டு. அதிதீவிர வலதுசாரிகளில் தொடங்கி அதிதீவிர இடதுசாரிகள், லிபரல்கள் என்று எல்லாத் தரப்பும் உண்டு. குறிப்பாக ஜே.வி.பி-யின் மாணவர் அமைப்பும், ஜே.வி.பி-யில் இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்பும் அங்கு தீவிரமாகச் செயல்படுகின்றன. இந்த எல்லாத் தரப்புகளையும் ஒருங்கிணைக்கும் தலைமைத்துவம் கிடையாது. ராஜபக்சக்களுக்கு எதிரானது என்ற ஒரு மையத்தில் மேற்படி அமைப்புகள் யாவும் ஒன்றிணைகின்றன. எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் மையக் கட்டமைப்பு எதுவும் கிடையாது.

தோல்வியுற்ற தலைவன்!

இப்போராட்டங்களின் பின்னணியில் நிற்கும் இடதுசாரி மரபில் வந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வெளிப்படையாகத் தலைமை தாங்கத் தயங்குகிறார்கள். ஜே.வி.பி-யின் இரண்டு ஆயுதப் போராட்டங்கள், தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் என்று மொத்தம் மூன்று ஆயுதப் போராட்டங்களை கடந்த அரை நூற்றாண்டுக் காலப் பகுதிக்குள் இலங்கைத் தீவு குரூரமாகத் தோற்கடித்திருக்கிறது. அதனால் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தும் இடதுசாரி மரபில் வந்த அமைப்புகள் வெளிப்படையாகத் தலைமை தாங்கத் தயங்குகின்றன. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் அவ்வாறு இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றும் வளர்ச்சிகளை ரசிக்கப்போவதில்லை.

நாடாளுமன்றத்துக்குள்ளும் ராஜபக்சக்களுக்கு எதிராக ஒரு பலமான அணியைத் திரட்டவல்ல தலைமைகள் கிடையாது. நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் தலைமை தாங்க யாருமில்லை. இந்தத் தலைமைத்துவ வெற்றிடம்தான் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் ஆக்கியது. இப்பொழுது, கரு ஜெயசூரிய போன்ற முதியவர்களை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வர எத்தனிப்பதும் அதனால்தான்.

எனவே, ஒரு புதிய மக்கள் ஆணையைப் பெற்ற நாடாளு மன்றத்துக்கான தேர்தலை வரும் ஆண்டின் தொடக்கத்தில் வைக்க வேண்டும் என்ற விடயத்தில் எதிர்க்கட்சிகள் ஓரளவுக்கு இணங்கியிருக்கின்றன. அதற்கிடையில் ஓர் இடைக்கால ஏற்பாடாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற விடயத்திலும் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடக்கூடும்.

ஆனால், சர்வகட்சி அரசாங்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கெனவே அவர்கள் நாடாளுமன்றத்தின் வாசலில் ‘ஹொரு கோகம' என்ற ஒரு கிராமத்தை அமைத்துப் போராடியிருக்கிறார்கள். சிங்களத்தில் ‘ஹொரு' என்றால் திருடர்கள் என்று பொருள். ‘நாடாளு மன்றத்தில் உள்ள திருடர்கள் வீட்டுக்குப் போகவேண்டும்' என்ற கோரிக்கை அது. கோத்தபய வீட்டுக்குப் போய்விட்டால் அடுத்தது நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்களை வீட்டுக்கு அனுப்புவதா? நாடாளு மன்றத்துக்கு வெளியே மக்கள் அதிகார மையங்களை உருவாக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி கூறுகிறது. ஆர்ப்பாட்டக் காரர்களிடம் நடைமுறைச் சாத்தியமான இறுதி இலக்குகள் இல்லை என்ற விமர்சனமும் உண்டு.

பொருளாதார நெருக்கடிக்கு ஆட்களை மாற்றுவது மட்டும் சர்வரோக நிவாரணி அல்ல என்பதனை உலகளாவிய அனுபவம் நிரூபித்திருக்கிறது. கிரேக்கத்தில் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டபொழுது ஐந்து ஆண்டுகளுக்குள் ஏழு தடவை அரசாங்கம் மாற்றப்பட்டது. அர்ஜென்டினாவில் ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்து தடவை ஆட்சி மாறியது. நிதி அமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். இலங்கைத் தீவில் கடந்த 23 மாதங்களுக்குள் நான்கு நிதியமைச்சர்கள் மாறியிருக்கிறார்கள். அமைச்சரவை ஒரு தடவை முழுமையாகவும், எட்டுத் தடவை பகுதியளவும் மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மக்கள் அடித்தே கொன்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் வீடுகளும் சொத்துகளும் எரித்தழிக்கப்பட்டிருக்கின்றன.

கோத்தபய ராஜபக்‌ச
கோத்தபய ராஜபக்‌ச

எனினும் நாடாளுமன்றத்தில் பலமாகக் காணப்படும் ராஜபக்சக்களின் தாமரை மொட்டு கட்சியானது எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து ஓர் இடைக்கால ஏற்பாட்டுக்குப் போகத் தயாரில்லை. அதனால்தான் கடந்த மூன்று மாத காலமாக நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியானது அரசியல் மியூசிக்கல் சேர் விளையாட்டை நடத்திவருகிறது. இந்த மியூசிக்கல் சேரில் கடைசியாக அமர்த்தப்பட்டவர்தான் ரணில்.

அவர் பதவிக்கு வந்த பின்னரும் நிலைமை மாறவில்லை, நெருக்கடிகள் மேலும் அதிகமாயின. அதன் விளைவாக கோபமடைந்த மக்கள், ராஜபக்சக்களின் மியூசிக்கல் சேர் விளையாட்டில் சேர்ந்து விளையாடிய குற்றத்துக்காக ரணில் விக்கிரமசிங்கவின் பாரம்பரிய வீட்டை, அவர் சேகரித்த நூல்களோடு சேர்த்துக் கொளுத்திவிட்டார்கள். கோத்தபயவுடன் சேர்ந்து ரணிலையும் ‘போ' என்கிறார்கள். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தையும் அவருடைய அலுவலகத்தையும் மக்கள் பிடித்து வைத்திருக்கிறார்கள். கோத்தபய பதவி விலகும்வரை அங்கிருந்து போகப்போவதில்லை என்று அறிவித்து விட்டார்கள். அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள். மக்களுடைய தன்னெழுச்சிப் போராட்டங்களால் இப்பொழுது நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இல்லாத நிலை தோன்றியிருக்கிறது.

பன்னாட்டு நாணய நிதியத்துடனான உரையாடல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பின்னணியில், நாட்டில் அரசாங்கம் அற்ற ஒரு நிலைமை தோன்றியிருப்பது உதவிகள் பெறுவதை மேலும் தாமதப்படுத்தும். இனி வரக்கூடிய புதிய தலைவர்கள் முதலாவதாக குறைந்தபட்சம் இடைக்காலத்துக்காவது ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேற்கு நாடுகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். அதுவரையிலும் பொருத்தமான உதவிகள் கிடைப்பது தாமதமாகும். அதாவது நெருக்கடி உடனடிக்குத் தணியாது என்று பொருள்.