Published:Updated:

இரு நாட்டு தமிழ் மீனவர்களை மோதவிடும் இலங்கை அரசு! - பறிபோன படகுகள்... கண்ணீர்விடும் மீனவர்கள்...

மீனவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மீனவர்கள்

கடந்த ஜனவரி 27-ம் தேதி கடலுக்குச் சென்ற யாழ்ப்பாணம் மீனவர்கள் இருவரின் உடல்கள் வடமராட்சிப் பகுதியில் கரை ஒதுங்கின.

இரு நாட்டு தமிழ் மீனவர்களை மோதவிடும் இலங்கை அரசு! - பறிபோன படகுகள்... கண்ணீர்விடும் மீனவர்கள்...

கடந்த ஜனவரி 27-ம் தேதி கடலுக்குச் சென்ற யாழ்ப்பாணம் மீனவர்கள் இருவரின் உடல்கள் வடமராட்சிப் பகுதியில் கரை ஒதுங்கின.

Published:Updated:
மீனவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மீனவர்கள்

இலங்கை அரசு பறிமுதல் செய்துவைத்திருக்கும் தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகள் ஒவ்வொன்றாக ஏலம்விடப்படுவதைப் பார்த்து, கண்ணீர் வடிக்கிறார்கள் தமிழக மீனவர்கள். பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கிய ஏலம் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கிடையே வரும் மார்ச் 11-ம் தேதி கச்சத்தீவில் நடைபெறவிருக்கும் அந்தோணியார் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழக மீனவர்களுக்குத் தடை விதித்ததுடன், “எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை, நம் மீனவர்களே தாக்கலாம்” என்று வெறுப்பைக் கக்கியிருக்கிறார் இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இதுநாள்வரை தமிழக மீனவர்கள் Vs இலங்கை கடற்படை என்றிருந்த மோதலை, இப்போது தமிழக Vs ஈழத்தமிழ் மீனவர்கள் மோதலாக திசைதிருப்பியிருக்கிறது இலங்கை அரசு! என்னதான் நடக்கிறது மன்னார் வளைகுடாவில்?

கடந்த ஜனவரி 27-ம் தேதி கடலுக்குச் சென்ற யாழ்ப்பாணம் மீனவர்கள் இருவரின் உடல்கள் வடமராட்சிப் பகுதியில் கரை ஒதுங்கின. இவர்களின் மர்ம மரணத்துக்கு தமிழக மீனவர்கள்தான் காரணம் என்று கூறி, யாழ்ப்பாணம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிப்ரவரி 4 அன்று இலங்கை சுதந்திர தினத்தைப் புறக்கணித்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினார்கள். இதையடுத்தே, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 விசைப் படகுகளை ஏலம்விடுவதாக அறிவித்தது இலங்கை அரசு. தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கும் இந்தச் சம்பவங்கள் இரு நாட்டுத் தமிழ் மீனவர்களையும் எதிரெதிராக நிறுத்தியிருக்கிறது.

இரு நாட்டு தமிழ் மீனவர்களை மோதவிடும் இலங்கை அரசு! - பறிபோன படகுகள்... கண்ணீர்விடும் மீனவர்கள்...
இரு நாட்டு தமிழ் மீனவர்களை மோதவிடும் இலங்கை அரசு! - பறிபோன படகுகள்... கண்ணீர்விடும் மீனவர்கள்...

இலங்கை மீனவர்கள் சொல்வது என்ன?

இத்தகைய அசாதாரணமான சூழலில்தான் இலங்கை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியத்திடம் பேசினோம். ``ஜனவரி 23-ம் தேதிதான் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதாக அறிவித்தது. அறிவிப்பு வெளியான சில தினங்களில் கடலுக்குச் சென்ற எங்கள் இரு மீனவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதால், இதற்குக் காரணம் தமிழக மீனவர்கள்தான் என்று இங்குள்ள சில மீனவர் அமைப்பினர் கருதுகிறார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதுதான் எங்களது கோபத்துக்குக் காரணம். ஒருகாலத்தில் இரு நாட்டு மீனவர்களுமே எல்லை தாண்டி, ஒற்றுமையுடன்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். என்றைக்குத் தமிழக மீனவர்கள் பாரம்பர்ய முறையைக் கைவிட்டு, இழுவை வலை மீன்பிடி முறைக்கு மாறினார்களோ அன்றைக்கே பிரச்னை தொடங்கியது. இழுவை வலை மீன்பிடியால், எங்கள் பகுதி மீன்வளம் பாதிக்கப்படுகிறது. இந்தப் போக்கு நீடித்தால் கடலையே நம்பியிருக்கும் எங்களின் 50,000 வடமாகாணக் குடும்பங்களின் நிலை என்னவாகும்?” என்றார் கோபமாக.

இரு நாட்டு தமிழ் மீனவர்களை மோதவிடும் இலங்கை அரசு! - பறிபோன படகுகள்... கண்ணீர்விடும் மீனவர்கள்...
இரு நாட்டு தமிழ் மீனவர்களை மோதவிடும் இலங்கை அரசு! - பறிபோன படகுகள்... கண்ணீர்விடும் மீனவர்கள்...

தமிழக மீனவர்களின் பதில் என்ன?

இலங்கை தமிழ் மீனவர்களின் குற்றச்சாட்டை “அபாண்டம்” என்கிறார் ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சேசு. அவர் நம்மிடம், ``எங்கள் படகுகளை ஏலம்விடுவது இலங்கை அரசாங்கம்தான்... நாங்கள் ஏன் ஈழத்தமிழ் மீனவர்கள்மீது கோபம்கொள்ள வேண்டும்? அதேசமயம், தமிழக மீனவர்களால்தான் இலங்கை மீனவர்கள் இருவர் உயிரிழந்தார்கள் என்று கூறுவது அபாண்டம். ஜனவரி 24-ம் தேதி இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள், நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்களைத் தாக்கி இரண்டரை லட்சம் மதிப்பிலான பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஒருவேளை அவர்கள் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம். வேண்டுமென்றே எங்கள்மீது பழி சுமத்தி, இரு நாட்டு தமிழ் மீனவர்களையும் மோதவிட்டிருக்கிறார்கள்” என்றவரிடம் எல்லை தாண்டும் விவகாரம் பற்றிக் கேட்டோம்...

``சர்வதேச கடல் சட்டத்தின்படி, ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்குமான கடல் எல்லைப்பகுதி 200 நாட்டிகல் மைல் தொலைவுக்கு இருக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு வெறும் 12 நாட்டிகல் மைல்தான் இருக்கிறது. இதில் எல்லையை நாங்கள் எப்படி கணிப்பது? இந்தியா, கச்சத்தீவை தாரை வார்த்ததால் எங்களின் பாரம்பர்ய எல்லைப்பகுதியும் இலங்கைக்குப் பறிபோய்விட்டது. தமிழக மீனவர்கள் யாரும் முதலாளிகள் இல்லை; அன்றாடங்காய்ச்சிகள்... ஒரு படகை நம்பி 50 குடும்பங்கள் இருக்கின்றன. எல்லை தாண்டினால் சிங்களக் கடற்படை சுடும் என்பது எங்களுக்கும் தெரியும்... சாவோம் எனத் தெரிந்தும் வேறு வாழ்வாதாரம் இல்லாததால்தான் மீன்பிடிக்கச் செல்கிறோம். நாங்கள் எல்லை தாண்டக் கூடாது என்றால் கச்சத்தீவை முதலில் மீட்டுக்கொடுங்கள்!” என்றார் ஆவேசமாக.

சுப்பிரமணியம்
சுப்பிரமணியம்
சேசு
சேசு

இழுவை வலை குற்றச்சாட்டு பற்றி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமிரேட்டிடம் கேட்டோம். ``நாங்களும் ஆரம்பத்தில் பாரம்பர்ய முறையில்தான் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். கால ஓட்டத்தில் இந்திய அரசுதான் விசைப்படகுகளையும், இழுவை வலை மீன்பிடியையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த மீன்பிடி முறைக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருக்கின்றன. இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்... நாங்கள் மொத்தமாகவே ஆண்டுக்குச் சராசரியாக 70-80 நாள்கள்தான் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறோம். மேலும், இந்திய அரசு விதிக்கும் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்தில் நாங்கள் கடலுக்குச் செல்வதில்லை. ஆனால், இலங்கையில் இந்தத் தடைக்காலம் இல்லை. அதேபோல, இழுவை வலைக்கு அங்கு தடை இருந்தாலும் யாழ்ப்பாணம், குருநகர், மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இழுவை வலைகொண்டு மீன்பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார் சூடாக.

ஏற்கெனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், இலங்கையில் நடக்கும் படகுகள் ஏலத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்த சூழலில், வழக்கம்போல மத்திய அரசுத் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, படகுகளை இழந்த மீனவர்களுக்கு ஒன்றரை லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர். தேவை, தற்காலிக நிவாரணம் மட்டுமல்ல... நிரந்தரத் தீர்வு!