Published:Updated:

சீனத் தூதர் வந்ததால், கைதுசெய்யப்பட்டார்களா தமிழக மீனவர்கள்? - கொந்தளிக்கும் மீனவ அமைப்பினர்...

மீனவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மீனவர்கள்

எல்லை தாண்டிச் செல்வதாகச் சொல்வதில் உண்மை இல்லை. அதே சமயம், தமிழக மீனவர்களை, இலங்கைத் தமிழ் மீனவர்கள் எதிர்ப்பது உண்மைதான்

வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று கடலைவிட அதிக கொந்தளிப்பில் இருக்கின்றன ராமநாதபுர மாவட்ட கடலோர கிராமங்கள்! கடந்த வாரம் ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளிலிருந்து சென்ற 55 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்ற 13 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பத்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கும் நிலையில் இதுவரை மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.

டிசம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, எல்லை கடந்துவந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களைக் கைதுசெய்துள்ளது. இந்தச் சம்பவத்தால் கொந்தளித்துப்போயிருக்கும் ஒட்டுமொத்த மீனவர்கள், தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். ராமநாதபுரம் தி.மு.க எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், மீனவர் குடும்பங்களைச் சந்தித்து, 6 லட்சம் ரூபாயை வழங்க வந்தபோது, ‘‘எங்களுக்குப் பணம் வேண்டாம், சிறையில் இருப்பவர்களை மீட்டுத்தாருங்கள்’’ என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மறுத்துவிட்டார்கள். “மீனவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்” என்று கனிமொழி, நவாஸ்கனி உள்ளிட்ட தமிழக எம்பி-க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறார்கள். “ஆனாலும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் சுணக்கம்காட்டுகிறது” என்று குமுறுகிறார்கள் மீனவ அமைப்பினர்.

சீனத் தூதர் வந்ததால், கைதுசெய்யப்பட்டார்களா தமிழக மீனவர்கள்? - கொந்தளிக்கும் மீனவ அமைப்பினர்...

இது பற்றி போராட்டக் களத்திலிருந்தபடியே நம்மிடம் பேசிய ராமேஸ்வரம் விசைப்படகு சங்கத் தலைவர் என்.ஜே.போஸ், ‘‘கடந்த 40 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 500-க்கும் அதிகமானோர் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கான படகுகளை இழந்துள்ளனர். விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவதுடன், நாங்கள் அமைதியான முறையில் மீன்பிடிக்க இரண்டு அரசுகளும், இரண்டு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

‘‘எல்லை தாண்டி வருவதால்தான் இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’ என்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சேசுராஜாவிடம் கேட்டோம். ‘‘எல்லை தாண்டிச் செல்வதாகச் சொல்வதில் உண்மை இல்லை. அதே சமயம், தமிழக மீனவர்களை, இலங்கைத் தமிழ் மீனவர்கள் எதிர்ப்பது உண்மைதான். இரு தரப்பு மீனவர்கள் பலமுறை பேசிப்பார்த்தும் எங்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. டிசம்பர் 17-ம் தேதி சீனத் தூதர் மன்னார் கடற் கரைப் பகுதிக்கு வந்து ஆய்வு செய்திருக்கிறார். அங்குள்ள தமிழ் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார்கள். அவர் வந்து சென்ற மறுநாளே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழக மீனவர் களுக்கு எதிராக இலங்கைத் தமிழ் மீனவர்களைத் தூண்டிவிடுகிறார்களோ என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மீனவர்களையும் படகுகளையும் மத்திய அரசு மீட்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.

சீனத் தூதர் வந்ததால், கைதுசெய்யப்பட்டார்களா தமிழக மீனவர்கள்? - கொந்தளிக்கும் மீனவ அமைப்பினர்...

தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சே.சின்னத்தம்பி சொல்லும் கருத்துகள் கவனிக்கத்தக்கவை... ‘‘இதற்கு முன்பு ஒருமுறை பாகிஸ்தான் தூதர் யாழ்ப்பாணம் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய அரசு, தற்போது சீனத் தூதர் இந்திய கடல் எல்லைப்பகுதி வரை வந்து ஆய்வுசெய்ததைக் கண்டிக்கவில்லை. மத்திய மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தமன் ரூபலா தமிழக மீனவர்களின் பிரச்னைகளை நன்கு புரிந்துகொள்ளக்கூடியவர். ஆனால், மீன்வளத்துறை இணை அமைச்சரான தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன், மீனவர்கள் பிரச்னைகளில் ஆர்வம்காட்டுவதில்லை. அவரைச் சந்திக்கச் சென்றால் அனுமதி கிடைப்பதில்லை. சொல்லப்போனால், முருகன்தான் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைப் பற்றி மத்திய அரசிடம் சொல்லியிருக்க வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவேனாந்தா விடுத்துள்ள அறிக்கை தமிழக மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதில், ‘யுத்தத்தால் அனைத்தையும் இழந்து, தற்போது தொழிலில் ஈடுபட்டுவரும் வடக்குப் பகுதி கடல் தொழிலாளர்களை மீண்டும் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுவதைத் தமிழக மீனவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்திய மீனவர்களால் கடல்வளம் அழிக்கப்படுகிறது என்பதற்கு, கைதுசெய்யப்பட்டவர்களின் படகுகளில் இருந்த டன்கணக்கான இறால் குஞ்சுகளே சாட்சி. இப்படி தினமும் இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளால் இலங்கை கடல்வளத்தை அழிக்கிறார்கள். மீனவர்களின் வலைகளையும் அறுத்துவிடுகிறார்கள். தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அதேசமயம், பறிமுதல் செய்த படகுகளைத் திரும்பத் தர மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

என்.ஜே.போஸ் - சேசுராஜா, சே.சின்னத்தம்பி
என்.ஜே.போஸ் - சேசுராஜா, சே.சின்னத்தம்பி

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், டிசம்பர் 22-ம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். டிசம்பர் 31-ம் தேதிக்குள் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லையென்றால், புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்துசெய்துவிட்டு, 2022, ஜனவரி 1-ம் தேதி அனைத்து மீனவர்களும் தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

நீண்டகாலமாக நீடிக்கும் தீர்க்கப்படாத பிரச்னை இது. நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களைக் காவு வாங்கிய பிரச்னையும்கூட. இரு நாட்டின் அரசுப் பிரநிதிகளும், மீனவர் பிரதிநிதிகளும் அமர்ந்து பேசி சுமுகமான தீர்வுகாண வேண்டும். இதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்வது மட்டுமல்லாமல்... குஜராத் மீனவர்களும், தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை உணர்ந்து உண்மையான அக்கறையுடன் செயல்பட வேண்டும்!