Published:Updated:

`கற்களால்தான் இந்தக் காயம் ஏற்பட்டதா..?' - எக்ஸ்ரே அறிக்கையைக் காட்டி கதறிய ஸ்ரீநகர் சிறுவனின் தந்தை

ராம் பிரசாத்

ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரின் பெல்லட் குண்டு தாக்குதலுக்குள்ளான சிறுவன் ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செப்டம்பர் 3-ம் தேதி உயிரிழந்தான்.

Asar
Asar

`` மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த என் மகன்மீது பாதுகாப்புப் படையினர் காரணமில்லாமல் தாக்குதல் நடத்தியுள்ளனர். முகம் மற்றும் கண்களில் பெல்லட் குண்டுகள் ஏற்படுத்திய காயங்கள் இருந்தன. நான் என்ன பேசி என்ன நடக்கப்போகிறது? இப்போது என் மகன் இல்லையே" எனக் கதறுகிறார் ஸ்ரீநகரைச் சேர்ந்த பிர்தோஸ் அகமது கான்.

Representation image
Representation image

ஆகஸ்ட் 4, 2019 அப்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒரு செயற்கையான பதற்றத்துக்கு ஆளானது. தீவிரவாத அச்சுறுத்தல் என்ற காரணத்தைக் காட்டி அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் மாநிலத்தைவிட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். காஷ்மீரின் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர். அம்மாநில அரசியல் தலைவர்கள் வீட்டைவிட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது.

இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடனான தொடர்பை முற்றிலும் இழந்து காணப்பட்டது. அதற்கு அடுத்த நாள் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். அப்போதுதான் இதற்கான காரணங்கள் தெரியவந்தது. காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவியது.

`என்னால் அவரது பயணம் திசைமாறிவிடக் கூடாது!' - கண்ணீர்வடிக்கும் தெருவோரப் பாடகி ராணுவின் மகள்

ஆகஸ்ட் 6-ம் தேதி மாலை வேளையில் ஸ்ரீநகரைச் சேர்ந்த சிறுவர்கள் தங்களது பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். 19 வயதான அசார் தன் நண்பர்களுடன் கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ வந்த பாதுகாப்புப் படை வாகனம் மைதானத்தின் அருகே நிறுத்தப்பட்டது.

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்மீது பெல்லட் குண்டுகளால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடினர். பிறகு, அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டது. அசார் தன் முகத்தில் பெல்லட் குண்டுகள் தாக்கியதை உணர்ந்தான். அவனது ஓட்டம் மெல்லத் தடைபட்டது. முகத்தில் வழிந்த குருதியும் அதனால் ஏற்பட்ட ரணமும் சிறுவனுக்குக் கடுமையான வலியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து சக நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.

Asar
Asar
The Wire

அசாரைத் தூக்கிக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு ஓடினர். முகத்தில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்ட அசார், “என் முகம் எப்படி இருக்கிறது. மருத்துவமனைக்கு வந்துவிட்டோமா... இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது? நான் உயிர் பிழைப்பேனா" எனத் தன் நண்பரிடம் கேட்டுள்ளார்.

அட்மிஷன் கார்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 'பெல்லட் குண்டுகளால் முகம் மற்றும் கண்களில் அதிகம் காயம் ஏற்பட்டிருக்கிறது' என அதில் பதிவு செய்திருந்தனர். பெமினா மருத்துவமனையில் சிறுவனுக்கு நடந்த அறுவை சிகிச்சையில், அவனது முகத்திலிருந்து 2 பெல்லட் குண்டுகளை அகற்றியுள்ளனர். இதன் பின்னர் Sher-e-Kashmir Institute of Medical Sciences மருத்துவனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவன், செப்டம்பர் 3-ம் தேதி உயிரிழந்துவிட்டார்.

கழுத்தை துளைத்த கம்பி... 4 மணி நேரம் ஆபரேஷன்..!- வாலிபருக்கு உயிர் கொடுத்த மதுரை அரசு மருத்துவர்கள்

செப்டம்பர் 4-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ஜம்மு - காஷ்மீர் ஏ.டி.ஜி.பி முனீர் அகமது கானிடம் சிறுவன் மரணம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தப் புகாரை அவர் முற்றிலுமாக மறுத்தார். அந்தச் சிறுவன் கல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தான். 'ஷெல்லிங் தாக்குதலால் அவன் காயமடைந்தான்' என உங்களுக்கு யார் கூறியது? பெல்லட் குண்டுகளால் அவனுக்குக் காயம் ஏற்படவில்லை என மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், `மருத்துவ அறிக்கை வரட்டும்; காயம் ஏற்பட்டது குறித்து அதில் தெரிவித்திருந்தால் அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்' என்றார்.

Asar X-Ray Report
Asar X-Ray Report

காவல் துறையினரின் இந்தப் பதில் அசாரின் தந்தையான பிர்தோஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர், ``கற்களால்தான் இந்தக் காயம் ஏற்பட்டதா?" என எக்ஸ்ரே அறிக்கையைக் காட்டி கேள்வியெழுப்பியுள்ளார். `` அந்த ரிப்போர்ட்டில், பெல்லட் குண்டுகளால் அசார் தாக்கப்பட்டிருப்பது தெரிகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் தாங்கள் செய்த குற்றத்தை மறைக்க ஒரு கதையைக் கட்டுகின்றனர். எல்லாம் கடவுளுக்குத் தெரியும். அசார் இறந்ததற்கான மருத்துவச் சான்றிதழ்களைக்கூட இன்னும் மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை" எனக் கலங்கிய கண்களுடன் பேசியிருக்கிறார். ஆங்கில ஊடகமான THE WIRE-ல் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.