Published:Updated:

பெண் விவகாரத்தில் படுகொலை... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய கொலையாளிகள்...

படுகொலை
பிரீமியம் ஸ்டோரி
படுகொலை

பின்னணியில் விருதுநகர் வி.ஐ.பி?

பெண் விவகாரத்தில் படுகொலை... மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய கொலையாளிகள்...

பின்னணியில் விருதுநகர் வி.ஐ.பி?

Published:Updated:
படுகொலை
பிரீமியம் ஸ்டோரி
படுகொலை

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ‘தற்கொலை’ என முடித்துவைக்கப்பட்ட வழக்கை, மீண்டும் தோண்டியெடுத்து குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளனர் தனிப்படை போலீஸார். அடுத்தகட்டமாக வழக்கின் பின்னணியிலுள்ள அரசியல் வி.ஐ.பி-யை நோக்கியும் விசாரணை வளையத்தை வீசியிருப்பதால், தென்மாவட்ட அரசியலே அரண்டுகிடக்கிறது!

2019-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் எண்ணெய்க்காப்பு மண்டபத்தில், திருத்தங்கல்லைச் சேர்ந்த காளிராஜன் என்பவரின் உடல் அழுகியநிலையில் கண்டெடுக்கப்பட்டது. உட்கார்ந்த நிலையிலிருந்த காளிராஜனின் உடலை மீட்ட போலீஸ், ‘சந்தேக மரணம்’ என வழக்கு பதிவுசெய்தது. கடைசியில் ‘தற்கொலை வழக்காக’ முடித்துவைக்கப்பட்டது.

காளிராஜன்
காளிராஜன்

தற்போது இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பித்திருக்கும் தனிப்படை போலீஸார், காளிராஜன் கொலை வழக்கில் ஐந்து பேரைக் கைது செய்திருக்கிறார்கள். இது குறித்துப் பேசுகிற தனிப்படை போலீஸார், “கடந்த சில வருடங்களில் நடந்த சந்தேக மரணங்கள் மற்றும் கண்டுபிடிக்கப்படாத வழக்குகளின் தற்போதைய நிலை பற்றி விசாரணை நடத்த, இரண்டு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார் தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க். அந்த வரிசையில், காளிராஜன் வழக்கில் எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராஜபாளையம் பெரியகடை பஜாரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரிடம் விசாரணை நடத்தினோம். இதில், தானும் தன் நண்பர்களான ராமசாமி, பொன்ராஜ், ஆறுதல் ராஜா ஆகியோரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் அழகர்சாமி. பெண் விவகாரம் காரணமாக அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்தக் கொலையில் கருத்தப்பாண்டி என்பவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததால், ஐவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றவர்கள், கொலைக்கான காரணம் பற்றி விவரித்தார்கள்.

பாலாஜி
பாலாஜி

“கொலையான காளிராஜனும் கைதுசெய்யப்பட்டிருக்கும் கருத்தப்பாண்டியும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் வி.ஐ.பி-யின் நெருங்கிய வட்டத்தில் இருந்துவந்திருக்கின்றனர். இந்தப் பழக்கத்தின் அடிப்படையில், அடிக்கடி கருத்தப்பாண்டி வீட்டுக்குச் சென்றுவந்த காளிராஜனுக்கு, அவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கருத்தப்பாண்டி, தன் நண்பர்களை அழைத்துச் சென்று காளிராஜனை அடித்து ஊரைவிட்டே விரட்டியிருக்கிறார். சில காலம் திருப்பூருக்குச் சென்று தங்கியிருந்த காளிராஜன், மறுபடியும் விருதுநகருக்கு வந்து, கருத்தப்பாண்டியின் மனைவியோடு தொடர்புவைத்திருக்கிறார். கோபமடைந்த கருத்தப்பாண்டியும் கூட்டாளிகளும் காளிராஜனை ஊருக்கு ஒதுக்குப்புறமான கிருஷ்ணன் கோயில் பகுதிக்குக் கூட்டிச் சென்று நெஞ்சிலேயே மிதித்திருக்கிறார்கள். இதில், நெஞ்சு எலும்பு முறிந்து அந்த இடத்திலேயே காளிராஜன் இறந்திருக்கிறார். பிணத்தைத் தூக்கி வந்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் திருமுக்குளம் எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் உட்கார்ந்த நிலையில் வைத்து, பிணத்தின்மீது விஷத்தைத் தெளித்து, பாட்டிலையும் அங்கேயே போட்டுவிட்டு தற்கொலைபோல செட்டப் செய்து தப்பிச்சென்றுவிட்டார்கள். மறு விசாரணையில் இவையனைத்தும் தெரியவந்ததால், கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.

இதற்கிடையே, காளிராஜனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்போதே போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் அவரின் தந்தை மாரியப்பன். அந்தப் புகாரில், ‘2019 பிப்ரவரி 18-ம் தேதி, ஒரு வழக்கு விசாரணைக்காகத் திருப்பூரிலிருந்து விருதுநகர் நீதிமன்றத்துக்கு வந்தான் என் மகன். 20-ம் தேதி மறுபடியும் திருப்பூருக்குப் போய்விட்டான். அங்கிருந்து என்னிடம் செல்போனிலும் பேசினான். இந்த நிலையில், அவன் மறுபடியும் எதற்காக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தான் என்பதில் மர்மம் இருக்கிறது. அது பற்றியும் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த மனுவை விசாரித்த அப்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் ஆய்வாளரான பாலாஜி, காளிராஜன் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கை முடித்துவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் வி.ஐ.பி இருப்பதாக அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்்போது அந்த அரசியல் வி.ஐ.பி-க்கு மறுபடியும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.

அழகர்சாமி, ராமசாமி, பொன்ராஜ், ஆறுதல் ராஜா, கருத்தப்பாண்டி
அழகர்சாமி, ராமசாமி, பொன்ராஜ், ஆறுதல் ராஜா, கருத்தப்பாண்டி

இது பற்றி விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகரனிடம் கேட்டோம். ‘‘கருத்தப்பாண்டியின் மனைவியுடன் காளிராஜன் நெருக்கமாகப் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், திட்டமிட்டே இந்தக் கொலையைச் செய்துவிட்டு, தற்கொலைபோல நாடகமாடியிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு உண்மையைக் கண்டுபிடித்து ஐந்து பேரையும் சிறையில் அடைத்திருக்கிறோம். எந்தவொரு வழக்கிலும் அடுத்தகட்டத்துக்கு நகர்வதற்கு, ஆதாரம் தேவை. அப்படி எதுவும் கிடைக்காவிட்டால் வழக்கை முடித்துவிடுவார்கள். இந்த வழக்கு அரசியல்ரீதியான அழுத்தம் காரணமாக முடித்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தால், அப்போதைய காவல்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கருத்தப்பாண்டியைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் தீவிரம் காட்டிவருகிறார்கள். அவர் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட அரசியல் வி.ஐ.பி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதனால், அந்த அரசியல் பிரமுகர் இப்போதே பதற்றத்துடன் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அந்த அரசியல் பிரமுகரின் மீது பார்வையைக் கூர்மையாக்கியிருக்கிறது போலீஸ்.

இருட்டில் நடப்பவையெல்லாம் எப்படியும் வெளிச்சத்துக்கு வந்துதானே ஆக வேண்டும்!