Published:Updated:

ஸ்டான் ஸ்வாமி மரணம்... அழியாக்கறை.. ஆயுள் பழி!

ஸ்டான் ஸ்வாமி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டான் ஸ்வாமி

84 வயது ஸ்டான் ஸ்வாமியை சில தினங்களுக்கு முன்பு சிறையில் பரிசோதித்த மருத்துவக்குழு, ‘அவர் கை கால்கள் மோசமாக நடுங்குகின்றன.

ஸ்டான் ஸ்வாமி மரணம்... அழியாக்கறை.. ஆயுள் பழி!

84 வயது ஸ்டான் ஸ்வாமியை சில தினங்களுக்கு முன்பு சிறையில் பரிசோதித்த மருத்துவக்குழு, ‘அவர் கை கால்கள் மோசமாக நடுங்குகின்றன.

Published:Updated:
ஸ்டான் ஸ்வாமி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டான் ஸ்வாமி

“தங்களுக்குத் தொடர்பில்லாத பொய் வழக்குகளில் பழங்குடியினர் கைதுசெய்யப்படுவதை எதிர்த்து வாழ்நாள் முழுக்கப் போராடிய ஸ்டான் ஸ்வாமி, தனக்குத் தொடர்பில்லாத வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோது இறந்தது துயரம்’’ என வேதனைப்படுகிறார் வழக்கறிஞர் பீட்டர் மார்ஜின். ‘‘இது ஸ்டான் ஸ்வாமியின் மறைவு அல்ல. இந்தியாவில் நீதிமன்ற நடைமுறைகள் செத்துப்போய்விட்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறந்துவிட்டது. அதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என்று கொதிக்கிறார் மனித உரிமைச் செயற்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன். பீமா கோரேகாவ் வழக்கில் கைதுசெய்யப்பட்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டான் ஸ்வாமி, உடல்நலக் கோளாறுகளால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஜூலை 5-ம் தேதி இறந்தார். நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது இந்த மரணம்.

ஸ்டான் ஸ்வாமி மரணம்... அழியாக்கறை.. ஆயுள் பழி!

84 வயது ஸ்டான் ஸ்வாமியை சில தினங்களுக்கு முன்பு சிறையில் பரிசோதித்த மருத்துவக்குழு, ‘அவர் கை கால்கள் மோசமாக நடுங்குகின்றன. அவரால் இயல்பாகத் தண்ணீர் குடிக்க முடியாது. தனக்கான உணவைக் கைகளால் எடுத்துச் சாப்பிட முடியாது. கைத்தடி அல்லது சக்கர நாற்காலி உதவியின்றி நகர முடியாது. அவருக்கு இரண்டு காதுகளும் சுத்தமாகக் கேட்கவில்லை’ என அறிக்கை கொடுத்தது.

இவரைத்தான் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் குழுவுடன் இணைந்து வன்முறை சதித்திட்டங்களை அரங்கேற்றினார், நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயன்றார் எனப் பல்வேறு குற்றங்களைச் சாட்டி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் எனப்படும் UAPA சட்டத்தில் கைதுசெய்தது தேசியப் புலனாய்வு அமைப்பு.

மராட்டிய பேஷ்வா படைகளை, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் படையிலிருந்த தலித்துகள் வெற்றிகொண்ட இடம், மகாராஷ்டிர மாநிலத்தின் பீமா கோரேகாவ். இதன் 200-வது ஆண்டு விழாவில் கலவரங்கள் நடைபெற்றன. இதை தேசவிரோத நடவடிக்கையாகக் கருதி, தேசியப் புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது. 2018-ம் ஆண்டு முதல் கைதுப்படலம் தொடங்கியது. சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என்று பலர் குறிவைக்கப்பட்டனர். சுரேந்திர காட்லிங், ரோமா வில்சன், மகேஷ் ராவத், ஷோமா சென், வரவர ராவ், சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, அருண் ஃபெரைரா என்று பலர் UAPA சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தப் பட்டியலில் 15-வது நபராகக் கைதுசெய்யப்பட்டார், பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி. தான் ஒருமுறைகூட பீமா கோரேகாவ் சென்றதில்லை என அவர் பலமுறை சொல்லியும் பயனில்லை. இந்தியாவில் UAPA சட்டத்தில் கைதான மிக மூத்த நபர் ஸ்டான் ஸ்வாமிதான்.

‘‘எனக்கு இங்கு நடந்துகொண்டிருப்பவை, எனக்கு மட்டுமே பிரத்யேகமாக நடப்பவை அல்ல. இந்தியா முழுக்க இது நடந்துகொண்டிருக்கிறது. அறிவுசார் தளத்தில் செயல்படுபவர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், போராளிகள் எனப் பலர் சிறைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்த காரியம், அதிகார வர்க்கத்தின் துஷ்பிரயோகங்களைக் கேள்வி கேட்டதுதான். இதில் என்னையும் இணைத்துக்கொண்டதில், நான் பெருமைப்படுகிறேன். நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. இந்த விளையாட்டுக்கான விலை எதுவாயினும் அதை நான் கொடுக்கத் தயார்.’’

கைதாவதற்கு இரண்டு தினங்கள் முன்பு ஸ்டான் பேசிய வார்த்தைகள் இவை. ‘அர்பன் நக்சல்’, ‘ஆன்ட்டி நேஷனல்’ என்றெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பாதிரியார் ஸ்டான் லூர்துசாமி, திருச்சி அருகேயுள்ள விரகலூரில் பிறந்தவர். இறையியலும் சமூகவியலும் படித்த பாதிரியாரான இவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் அடையாளமாக மாறினார். ஆதிவாசிகள் இவரைக் கொண்டாடுவதற்குக் காரணங்கள் இல்லாமலும் இல்லை. ஜார்க்கண்டில் போலிக் குற்றச்சாட்டுகளில் சிறைப்பட்டு நிற்கும் ஆதிவாசிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார் ஸ்டான்.

ஜார்க்கண்டில் சுரங்கங்கள், தொழிற்சாலைகள், புதிய நகரங்கள், அணைகள் என உருவாக்கப்பட வேண்டிய சூழலில் பூர்வகுடிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அப்படி இடம்மாற்றப்பட்ட பழங்குடிகளுக்குச் சிறிதளவு இழப்பீட்டுத் தொகையே வழங்கப்பட்டது. தங்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டு, நியாயமான இழப்பீடுகள் எதுவுமின்றி கையறு நிலையில் இருக்கும் அந்த மனிதர்களின் பக்கம் நின்றவர் ஸ்டான் ஸ்வாமி. இவர்களின் நியாயமான இழப்பீட்டு உரிமை, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்காகப் போராடினார் ஸ்டான். குரலற்றவர்களின் குரலாக ஒலித்தவர். ‘‘நான் இது குறித்தெல்லாம் பேசாமல் இருக்கவே என்னைக் கைதுசெய்திருக்கிறார்கள்’’ என்றார் ஸ்டான்.

வாழ்வின் கடைசி காலங்களில், சில துணிகள், புத்தகங்கள், பாடல் கேசட்டுகள், ஒரு லேப்டாப் ஆகியவைதான் ஸ்டானின் சொத்தாக இருந்தன. ராஞ்சியின் ஓர் ஆசிரமத்தில் சிறிய அறையில் இருந்துவந்தார் ஸ்டான். சிறைக்குள் கொண்டுவரப்பட்டபோது, பார்க்கின்சன் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். சிறப்பு நீதிமன்றத்தில் முதன்முறை விசாரணைக்கு வந்தபோது, கை நடுக்கத்தின் காரணமாக அவரால் கையெழுத்திட முடியவில்லை. நீதிமன்றம் வேறு வழியின்றி கைநாட்டைத்தான் பெற்றது. முதுமையில் நோய்களால் பாதிக்கப்பட்டு சிறையில் தவித்தபோது, ஸ்டான் ஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் கேட்கப்பட்டது. ‘‘கொரோனா காலத்தைப் பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். இந்தக் காரணங்களையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை’’ என்றது தேசியப் புலனாய்வு அமைப்பு. இதை நீதிமன்றமும் ஏற்றது.

கைதுசெய்யப்பட்ட பிறகு ஒருநாள்கூட இவரைக் காவலில் எடுத்து தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரிக்கவில்லை. எதற்காக இவர் சிறையில் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலும் அவர்களிடம் இல்லை.

சிறையில் உடல்நிலை மோசமான நிலையில் ஸ்டான் ஸ்வாமி ஜாமீன் கேட்டார். நீதிமன்றத்தில் இதற்கு பதில் தர இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டது தேசியப் புலனாய்வு அமைப்பு. இந்தத் தாமதமும் சேர்ந்து அவரைக் கொன்றிருக்கிறது. அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல நீதிமன்றம் அனுமதித்தபோது, ‘‘எனக்குத் தேவை ஜாமீன்தான். அதைத் தர முடியாவிட்டால் என்னை மருத்துவமனைக்கு அனுப்பாதீர்கள். நான் சிறையில் இருந்தபடி செத்துப்போகிறேன்’’ என வேதனையுடன் சொன்னார் ஸ்டான் ஸ்வாமி. அந்த மருத்துவமனையிலேயே அவர் வாழ்வு முடிந்திருக்கிறது.

ஸ்டான் ஸ்வாமி மரணம்... அழியாக்கறை.. ஆயுள் பழி!

தடா, பொடா சட்டங்கள்போலவே UAPA சட்டமும் இந்தியாவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குரலெழுப்புகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ‘‘எதிர்க்குரல் எழுப்புவதும், அரசின் செயல்களுக்கு எதிராகப் போராடுவதும் ஜனநாயக உரிமைகள். இதைச் செய்பவர்களையே விரோதிகளாக நினைக்கிறது அரசு. இவர்களை UAPA சட்டத்தில் கைது செய்வதன் மூலம், எதிர்காலத்தில் யாரும் போராடும் எண்ணத்துடன் வீதிக்கு வரக் கூடாது என நினைக்கிறது மத்திய அரசு’’ என்கிறார்கள் அவர்கள்.

UAPA சட்டத்தில் கைதாகும் ஒருவருக்கு ஜாமீன் கிடைப்பதே கடினம். விசாரணை முடிய எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர் சிறையில் வாட வேண்டும். தேசியப் புலனாய்வு அமைப்பு எந்த விசாரணையையும் விரைந்து முடிப்பதில்லை. நீதிமன்றங்கள் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து ஜாமீன் கொடுக்கின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாமில் போராடிய அகில் கோகோய், டெல்லியில் போராடிய மாணவர்கள் மூன்று பேர் ஆகியோருக்குச் சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. பெங்களூரு கலவரத்தில் கைதான 115 பேர் விடுவிக்கப்பட்டார்கள். ஸ்டான் ஸ்வாமி போலவே இதே வழக்கில் கைதான வரவர ராவ் மருத்துவ ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில், 60 வயது தாண்டிய இன்னும் ஐந்து பேர் சிறையில்தான் இருக்கிறார்கள்.

‘எல்லாவற்றையும் தாண்டி ஒருவரின் பிறப்பிலும் இறப்பிலும் கண்ணியம் காக்கப்பட வேண்டும்’ என்பார் 80 வயதான வரவர ராவ். ஸ்டானுக்கு மறுக்கப்பட்ட கண்ணியமும் நியாயமும் மற்ற சிறைக் கைதிகளுக்காவது கிடைக்க வேண்டும். ‘நீதிமன்றங்கள்தான் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தன’ என ரத்தக் கறைகளை கைகழுவ நினைக்கிறது மத்திய அரசு. இது அழியாக்கறை. அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் இணைந்து சுமக்கப்போகும் ஆயுள் பழி. ஸ்டானின் மரணத்தின் கறைகளைச் சுமக்கப்போவது அரசுகள் மட்டுமல்ல, மௌனித்து இதைக் கடந்து செல்லும் ஒவ்வொரு இந்தியரும்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism