Published:Updated:

டெய்லி மேக்கப் போடலாம்னுதான் மீடியாவுக்கு வந்தேன்!

லலிதா
பிரீமியம் ஸ்டோரி
லலிதா

ஸ்டாண்டு அப் காமெடியன் லலிதா

டெய்லி மேக்கப் போடலாம்னுதான் மீடியாவுக்கு வந்தேன்!

ஸ்டாண்டு அப் காமெடியன் லலிதா

Published:Updated:
லலிதா
பிரீமியம் ஸ்டோரி
லலிதா

“நான் ஒரு மேக்கப் விரும்பி! டெய்லி விதவிதமா காஸ்டியூம் போடலாம், ஹேர்ஸ்டைல் பண்ணலாம், மேக்கப் போடலாம்னுதான் மீடியாவுக்கு வந்தேன்” - வித்தியாச இன்ட்ரோ கொடுக்கிறார் மணப்பாறையைச் சேர்ந்த லலிதா பரமேஸ்வரி. ஏழு ஆண்டு களாகப் பட்டிமன்றம், ஸ்டாண்டு அப் காமெடி, டிவி ஷோக்களில் கலக்கி வருகிறார்.

“ஸ்கூல்ல படிச்சவரைக்கும் ஸ்டேஜ் ஏறுனதே இல்ல. இன்னிக்கு நீதான் திருக்குறள் சொல்லணும்னு சொன்னாலே கைகாலெல்லாம் நடுங்கும். தமிழ் உச்சரிப்பும் அவ்ளோ சரியா இருக்காது. கல்லூரியில என் தமிழாசிரியர் பழனிதுரைதான் நான் பாடங்களை வாசிக்கிறதைக் கேட்டுட்டு குரலும் உச்சரிப்பும் நல்லா இருக்குன்னு சொல்லி மேடைகள்ல பேச ஊக்கப்படுத்தினாரு. கேப்டன் டிவி `அசத்தல் அரங்கம்' நிகழ்ச்சியின் ஆடிஷன்ல கலந்துக்க அவரே ஃபார்ம் வாங்கிட்டு வந்து, கூட்டிட்டுப் போனாரு.

அம்மாவும் கூட வந்திருந்தாங்க. நான் ஸ்டேஜ்ல பேசுனதுக்கு அவங்க கீழே உட்கார்ந்து கவுன்டர் குடுத்திட்டு இருந்தாங்க. அதைப் பார்த்துட்டு எங்க ரெண்டு பேரையும் அதே நிகழ்ச்சியில

எதிர் எதிர் தலைப்புல பேச வெச்சாங்க. அதுல பேசினபோது, ‘மனுஷனும் மனுஷனும் மோதிக்கிட்டா சண்டை நடக்கும். ஊரும் ஊரும் மோதிக்கிட்டா கலவரம் நடக்கும். நாடும் நாடும் மோதிக்கிட்டா பெரிய போர் நடக்கும். ஆனா, கண்ணும் கண்ணும் மோதிக்கிட்டா நெருப்பு பறக்கும்’னு சொன்னேன். எதிர்ல இருந்து என் அம்மா, `இப்போ செருப்பு பறக்கும் பாரு!'ன்னு ஒரு கவுன்டர் போட்டாங்க. அது செமயா வொர்க் அவுட் ஆச்சு. அதுக்குப் பிறகுதான் மேடையில பேசலாம்னு நம்பிக்கை வந்துச்சு” - ஃபிளாஷ்பேக் பகிர்ந்தவர் படிப்பில் கோல்டு மெடலிஸ்ட்டாம்.

டெய்லி மேக்கப் போடலாம்னுதான் மீடியாவுக்கு வந்தேன்!

“புதுயுகம் சேனல்ல `யாவரும் கேளிர்' நிகழ்ச்சியில பேசினதுக்கு அப்புறம் எனக்கு நிறைய பட்டிமன்ற வாய்ப்புகள் வந்துச்சு. காமெடி ஜங்ஷன்ல கலந்துக்க சன் டிவியிலிருந்து அழைப்பு வந்துச்சு. எனக்கு காமெடியெல்லாம் வராது. சீரியஸா பேசி எத்தனை பேரை வேணும்னாலும் அழ வைப்பேன். என்னால சிரிக்க வைக்க முடியாதுன்னு சொன்னேன். வந்து பேசுங்க... பார்த்துக்கலாம்னு சொன்னாங்க. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஜோக்ஸை எல்லாம் கொஞ்சம் மெருகேற்றிப் பேசினேன். 50 எபிசோட்ஸ் பண்ணினேன். கலைஞர் டிவியில `தில்லு முல்லு' காமெடி ஷோவுல் 120 எபிஸோடு பண்ணியிருக்கேன்” என்பவர் ஐ.பி.எம், ஏர் இந்தியாவில் கிடைத்த பணிகளையெல்லாம் உதறிவிட்டு மைக் பிடித்திருக்கிறார். தற்போது இரண்டு வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறாராம்.

பட்டிமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றைப் பகிர்ந்தார் லலிதா.

“எங்க அக்கா வீட்டுக்காரர் மாதிரி குடுத்து வெச்சவரு யாருமே இல்ல. வீட்ல நாங்க ஏழு பெண் குழந்தைங்க. என் மூத்த அக்கா இட்லி அவிச்சு வெச்சா, இரண்டாவது அக்கா மல்லிச்சட்னி அரைச்சு வெப்பா, மூணாவது அக்கா தக்காளிச்சட்னி வெப்பா, நான் தேங்காய்ச் சட்னி வெச்சா, என் தங்கச்சி மாமாவுக்கு தட்டுல இட்லியை வெச்சுப் பரிமாறுவா’ன்னு சொல்வேன். மேடையில இருந்து இறங்கும்போதே ‘எப்படியாவது உங்க வீட்டுக்கு மாப்பிளையா வந்திடணும். உங்க வீட்ல இன்னும் எத்தனை பேரு கல்யாணம் ஆகாம இருக்காங்க. ஜாதகத்தை மட்டும் கொடுங்க’ன்னு சீரியஸா கேப்பாங்க” எனச் சிரிக்கும் லலிதா, தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கு மறக்காமல் நன்றி சொல் கிறார்.

“பட்டிமன்றம், டிவி ஷோ எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு. அங்க பேசினா நான் சந்தோஷமா இருக்கேன்றதாலதான் இந்த வேலையைப் பார்க்குறேன். எனக்குப் போதும்னு தோணுற வரைக்கும் பேசுவேன்”

- நிறைவாக வருகின்றன வார்த்தைகள்.