Election bannerElection banner
Published:Updated:

`கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது மாநிலங்களின் கடமை!’ - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

பியூஸ் கோயல்
பியூஸ் கோயல்

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், `மாநிலங்களில் ஆக்ஸிஜன் வீணாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 12 மாநிலங்களுக்கு 6,177 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்ஸிஜன் வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாகப் பரவிவருகிறது. இந்தநிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் உயிர்காக்கும் மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் , மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவையை மாநிலங்களே கட்டுக்குள்வைத்திருக்க வேண்டும்’’ என அறிவுறுத்தியிருக்கிறார்.

``மாநில அரசுகள் மருத்துவ ஆக்ஸிஜனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தேவைகளை மேலாண்மை செய்வது என்பது விநியோக மேலாண்மையைவிட மிக முக்கியமானது. கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது மாநிலங்களின் மிகப்பெரிய கடமை. அவர்களுடைய பொறுப்பை அவர்கள் முழுதாகச் செய்ய வேண்டும்” எனச் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார்.

கொரோனா
கொரோனா

மேலும் அவர், `கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், நாம் மிகப்பெரிய சவாலை சுகாதாரத்துறை கட்டமைப்பில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாங்கள் (மத்திய அரசு) எப்போதும் கொரோனாவை எதிர்த்துப் போராட மாநிலங்களுடன் துணையாக இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலங்களின் பொறுப்பு தேவையாக இருக்கிறது’ என்று கூறினார்.

பியூஸ் கோயல் மேலும், `மாநிலங்களில் ஆக்ஸிஜன் வீணாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்’ என்றார். கடந்த நான்கு நாள்களாக இந்தியா தினமும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளைப் பதிவு செய்துவருகிறது. அதற்கு முன்னர், ஒரு நாளைக்கு ஒரு லட்சமாக இருந்தது.

அதிகரித்துவரும் பாதிப்பால் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்புக்கு, குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சுகாதாரத்துறை பெரும் அழுத்தத்தில் உள்ளது.

கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர்கள் தங்களின் குடும்பத்தினருக்காகப் படுக்கைகள், முக்கியமான மருந்துகள், ஆக்ஸிஜன் போன்றவற்றைக் கேட்டு பதிவிட்டுவருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் இது போன்ற பதிவுகளால் குழப்பமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த வாரம், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மருத்துவ ஆக்ஸிஜனின் விநியோகத்தை அதிகரிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டனர்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

சனிக்கிழமையன்று, ஆக்ஸிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தாக்கரே எழுதிய கடிதத்துக்கு பதிலளித்த கோயல், ``அவர் இந்தப் பிரச்னையை அரசியலாக்குகிறார். முதல்வர் தாக்கரேவின் ஆக்ஸிஜனைப் பற்றிய குற்ற்சாட்டுகளைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்திய அரசு அனைத்துப் பங்குதாரர்களுடனும் ஒப்பந்தம் இட்டிருக்கிறது.

இந்தியாவில் அதிகபட்ச ஆக்ஸிஜன் உற்பத்தியை உறுதி செய்துவருகிறது. தற்போது 110% ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. மேலும் கிடைக்கக்கூடிய அனைத்து ஆக்ஸிஜனையும் தொழில்துறை பயன்பாட்டிலிருந்து மருத்துவப் பயன்பாட்டுக்குத் திருப்புகின்ற முயற்சியில் இருக்கிறோம்” என்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். மேலும் 6,177 மெட்ரிக் டன் அளவுக்கான ஆக்ஸிஜனை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 மாநிலங்களுக்கு வழங்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு