Published:Updated:

`சாத்தான்குளத்துல கிடைச்ச நீதி, ஸ்டெர்லைட் போராளிகளுக்கும் ஏன் கிடைக்கல?' - ஸ்னோலின் அம்மா

ஸ்னோலினின் தாயார் வனிதா
ஸ்னோலினின் தாயார் வனிதா

``இன்னைக்கு ஸ்னோலின் பிறந்தநாள். ஸ்டெர்லைட் ஆலை இங்கிருந்து வெளியேறும் நாள்தான், என் மகளோட உயிருக்கு நீதி கிடைக்கும் நாள். அப்போ என் மக பிறந்தநாளை சந்தோஷமா கொண்டாடுவேன்'' - ஸ்னோலின் அம்மா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த 2018-ல் மக்கள் 100 நாள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 100-வது நாளான மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அந்த இரண்டு பெண்களில் 18 வயதான ஸ்னோலின், வாயில் சுடப்பட்டு உயிரிழந்தார்.

ஸ்னோலின்
ஸ்னோலின்

இரக்கமில்லாமல் வாயில் சுடப்பட்டு உயிரிழந்த ஸ்னோலினின் இறப்பு கொடூரமானது எனப் பல தலைவர்களும் அரசுக்கு எதிராகக் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

``காப்பர் உனக்கு... கேன்சர் எனக்கா? ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியிலிருந்து அப்புறப்படுத்து" என உரக்கக் குரல் எழுப்பி கறுப்புக்கொடி ஏந்தி போராட்டக்களத்தில் முன் நின்ற ஸ்னோனிலின் பிறந்தநாள் இன்று.

தூத்துக்குடி லயன்ஸ்டவுனில் உள்ள ஸ்னோலினின் இல்லத்தில் அவர் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்பகுதியிலுள்ள தேவாலயத்தில் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது. பிறந்தநாள் விழாவில் ஸ்னோலினின் தோழிகள், உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஸ்னோலினின் கல்லறையில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த அவரின் அம்மா வனிதாவிடம் பேசினோம்.

ஸ்னோலின் கல்லறையில் பிரார்த்தனை செய்யும் வனிதா
ஸ்னோலின் கல்லறையில் பிரார்த்தனை செய்யும் வனிதா

``என் செல்ல மகள் ஸ்னோவின் 20வது பிறந்தநாள். இப்ப உயிரோட இருந்திருந்தா அவ ஆசைப்பட்ட மாதிரியே வக்கீல் படிப்புல ரெண்டாவது வருசம் படிச்சிக்கிட்டிருந்திருப்பா. `எம்மா... போராட்டத்துக்கு கைக்குழந்தைகள தூக்கிக்கிட்டு அக்காமார்கள் வர்றாங்க. மெதுமெதுவா நடந்து பாட்டிமார்கள்கூட வர்றாங்க. எல்லாரும் ஒண்ணா சேர்ந்துதான் போராட்டத்துக்குப் போறோம். மக்கள் சக்தியெல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டதுனால போராட்டத்துல நிச்சயம் வெற்றிதான்மா. இனி ஸ்டெர்லைட் கம்பெனிய மூடிடுவாங்க பாருங்க.

இயேசப்பாட்ட நான் வேண்டிக்கிட்டது இன்னிக்கே நடந்துடும். போராட்டம் முடிஞ்சு வர்றதுக்கு சாயங்காலம் ஆயிடும். வீட்ல இருந்து டிவியில எங்க போராட்டத்தைப் பாருங்க. எனக்காகக் காத்திருக்காம சாப்பிடுங்க'னு சொல்லி என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் செஞ்சுட்டுப் போனா ஸ்னோ. ஆனா, துப்பாக்கியால சுட்டதுல வாயில ஓட்டை விழுந்து ரத்தம் வழிஞ்சி உயிரில்லாத உடம்பாதான் என் செல்லத்தைப் பார்த்தேன். அவ என்னை விட்டுப் போயி ரெண்டு வருசம் ஆனாலும், என்னால அதுலயிருந்து மீண்டு வர முடியல.

ஸ்னோலின் தாயார் வனிதா
ஸ்னோலின் தாயார் வனிதா

ஸ்னோவின் ஞாபகம் எப்போ வந்தாலும், உடனே ஜெபமாலையைக் கையில எடுத்துக்கிட்டு வாடியில (கல்லறைத் தோட்டம்) உள்ள அவளோட கல்லறைக்குப் போயி உட்கார்ந்திடுவேன். மனசுக்கு எப்போ நிம்மதி கிடைக்குதோ அப்போ கிளம்பி வீட்டுக்கு வருவேன். மகளின் ஒவ்வொரு பிறந்தநாளையும் வீட்ல கேக் வெட்டி சந்தோசமா கொண்டாடுவோம். சர்ச் தெருவுல உள்ள ஏழை தாத்தா, பாட்டிமார்களுக்கு அவளோட உண்டியல் பணத்துல இருந்து எடுத்து ஏதாவது வாங்கிக் கொடுப்பா.

இந்த ஊரு மக்கள் நலனுக்காக, அந்த ஸ்டெர்லைட்டை ஊரைவிட்டு விரட்ட போராட்டத்துல உயிரிழந்த 13 உயிர்கள்ல என் மகளும் ஒருத்தி. இன்னைக்குக் காலையில 7 மணிக்கெல்லாம் கல்லறைக்கு வந்து சுத்தப்படுத்தி மாலைகள் போட்டு, அவளுக்குப் பிடிச்ச ரோசாப்பூ, சாக்லேட் வச்சு ஜெபிச்சேன். சர்ச்சுலயும் குடும்பத்தோட ஜெபம் செஞ்சோம். அவளோட படத்துக்கு முன்னால கேக் வெட்டிக் கொண்டாடினோம்.

ஸ்னோலின்
ஸ்னோலின்

எப்பவுமே முதல் துண்டு கேக்கை எனக்குத்தான் ஆசையா ஊட்டிவிடுவா. ஆனா, இப்போ கேக் ஊட்ட என் செல்லம் இல்லன்னு நினைக்கும்போது மனசு தாங்கல. பிறந்தநாளும் அதுவுமா அழக்கூடாதுன்னுதான் அழுகையைக் கட்டுப்படுத்திட்டு இருக்கேன். எந்த ஆலையை மூடிட ஊர் மக்களோட சேர்ந்து போராட்டத்துல கலந்துகிட்டு உயிரைக் கொடுத்தாளோ, அதே ஸ்டெர்லைட் ஆலை இங்கிருந்து வெளியேறும் நாள்தான், என் மகளோட உயிருக்கு நீதி கிடைக்கும் நாள். அப்போ என் மக பிறந்தநாளை சந்தோஷமா கொண்டாடுவேன்.

`ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதி இல்லை, தமிழக அரசின் உத்தரவே தொடரும்'னு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்துல சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்கள் மத்தியில மகிழ்ச்சியை ஏற்படுத்திச்சு. ஆனாலும், அந்தத் தீர்ப்பு தற்காலிகமானதுதான் என்பதுதான் உண்மை. இந்த தீர்ப்பையும் எதிர்த்து ஆலைத்தரப்பு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செஞ்சிருக்கு. தமிழக அரசு தன்னோட வாதங்களை வலிமையா முன்வைக்கணும். ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதுடன், தமிழகத்தில் இனி எந்த தாமிர உருக்காலைகளுக்கும் அனுமதி அளிக்கிறதில்லைனு அரசும் கொள்கை முடிவு எடுக்கணும்.

ஸ்னோலின்
ஸ்னோலின்

துப்பாக்கிச்சூடு சம்பந்தமா விசாரணை மேற்கொண்டு வரும் `ஒருநபர் விசாரணை ஆணையம்’ விசாரணையைத் தொடங்கி ரெண்டு வருஷமாச்சு. இன்னும் முழுமையா முடிக்கலை. சாத்தான்குளத்துல போலீஸ் ஸ்டேஷன்ல தந்தை, மகன் உயிரிழந்த சில நாள்கள்லேயே சம்பந்தப்பட்ட போலீஸை கைது செய்து சிறையில அடைச்சாங்க. ஆனா, துப்பாக்கிச்சூடு வழக்குல எந்த முன்னேற்றமும் இல்ல. ரெண்டு உயிர்களுக்குக் கிடைக்கிற நீதி, 13 உயிர்களுக்குக் கிடைக்காதா?" என்றார்.

ஸ்னோலினின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி இளைஞர் ஒன்றிணைந்து `ஸ்னோலின் நினைவு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி இலவச கருத்தரங்க’த்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அடுத்த கட்டுரைக்கு