Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு! - முடிவா... சதியா..?

ஸ்டெர்லைட் ஆலை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டெர்லைட் ஆலை

வேதாந்தாவின் இந்த விளம்பரத்தில் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும் முயற்சிதான் இது

ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு! - முடிவா... சதியா..?

வேதாந்தாவின் இந்த விளம்பரத்தில் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும் முயற்சிதான் இது

Published:Updated:
ஸ்டெர்லைட் ஆலை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டெர்லைட் ஆலை

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் உக்கிரப் பார்வைக்குள்ளான ஸ்டெர்லைட் ஆலை இப்போது விற்பனைக்கு வந்திருக்கும் அறிவிப்பைப் பார்த்து மகிழ்ச்சியடைவதா, சந்தேகப்படுவதா என்று தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்!

ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு! - முடிவா... சதியா..?

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான, மே 22-ல் போலீஸார் நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து (மே 26-ல்) ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

மீண்டும் ஆலையைத் திறக்க நீதிமன்றங்கள் மூலம் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. ஆலைக்கு எதிரான உள்ளூர் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு மனநிலை கொஞ்சம்கூட குறையாததால், இனி தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை நடத்தவே முடியாது என முடிவு செய்த நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு! - முடிவா... சதியா..?

இதற்கான அறிவிப்பை நாளிதழ்களில் (20.06.2022) விளம்பரமாகவே வெளியிட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஸ்டெர்லைட் தொழிற்சாலையிலுள்ள தாமிர உருக்கு வளாகம், கந்தக அமிலத் தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட 10 பிரிவுகள் விற்பனைக்கு இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த ஆலையை வாங்கும் திறன் படைத்தோர் வரும் ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது பற்றி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “வேதாந்தாவின் இந்த விளம்பரத்தில் சூழ்ச்சி இருக்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்தும் முயற்சிதான் இது. ஆலை விற்பனை செய்வது குறித்து அரசு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. மற்றொரு பினாமி கம்பெனியின் பெயரில் மீண்டும் ஆலையில் காப்பர் உற்பத்தியைத் தொடங்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம். ஸ்டெர்லைட் மட்டுமல்ல, எந்த ஒரு பெயரிலும் காப்பர் உற்பத்தி தொழிற்சாலையை மீண்டும் இந்த மண்ணில் இயங்க அனுமதிக்க மாட்டோம். ‘ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க மாட்டோம்’ என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை முதல்வரும், இந்தத் தொகுதியின் எம்.பி கனிமொழியும் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

மெய்யநாதன்
மெய்யநாதன்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் பேசினோம். “ஸ்டெர்லைட் ஆலையில் விதிகளை மீறி அதிகப்படியான காப்பர் உற்பத்தியால் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு என்பதுதான் முக்கியப் பிரச்னை. இதைப் பலவிதங்களில் விசாரித்து மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உறுதிசெய்த பிறகே ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அவர்களின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கிறது. வழக்கை நடத்தினால் தீர்ப்பு பாதகமாக வரலாம் என்று நினைத்த ஆலை நிர்வாகம், ‘ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்கிறோம்’ எனக் கூறி பினாமியாக வேறு நபர்களுக்குப் பங்குகளை மாற்றிவிட்டு, ‘நாங்கள் புதிதாக ஆலையை வாங்கியிருக்கிறோம். சட்டவிதிகளைப் பின்பற்றி நடப்போம். விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம்’ எனக் கூறி மீண்டும் உற்பத்தியைத் தொடங்கும் கார்ப்பரேட் தந்திரம்தான் இது. இந்த ஆலை அமைந்திருக்கும் இடம் தமிழ்நாடு அரசின் சிப்காட்டுக்குச் சொந்தமானது. தமிழ்நாடு அரசே அரசாணை வெளியிட்டு மூடியிருக்கும் நிலையில், அரசின் அனுமதியைப் பெறாமல் எப்படி விற்பனை முடிவுக்குச் செல்ல முடியும்?” என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்துறையின் துணைத் தலைவர் வினோத்திடம் பேசினோம். “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையிலும்கூட சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து தற்போதுவரை பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டுவருகிறோம். கொரோனா காலகட்டத்திலும் சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான ஆக்சிஜனைத் தயாரித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங் களுக்கு இலவசமாக வழங்கினோம். தவிர, ரூ.50 கோடி மதிப்பில் பிற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். இருப்பினும், நான்கு ஆண்டுகளாக எந்த வருவாயும் கிடைக்காததை கவனத்தில்கொண்டு, ஆலை நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் முடிவுதான் இது. ஆலை விற்பனை நடவடிக்கையையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளவிருக்கிறோம்” என்றார்.

வாஞ்சிநாதன், கிருஷ்ணமூர்த்தி, செந்தில்ராஜ்
வாஞ்சிநாதன், கிருஷ்ணமூர்த்தி, செந்தில்ராஜ்

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், “ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வது குறித்த எந்தத் தகவலையும் ஆலைத் தரப்பு, மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தவில்லை. இது குறித்த அறிக்கையை, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் அமைச்சர் மெய்யநாதனிடம் பேசினோம். “வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை, எதிர்காலத்தில் திறப்பதற்கான வாய்ப்பே இல்லை. அரசு இதில் உறுதியாக இருக்கிறது. ஆலையை விற்க முன்வந்ததே மக்களுக்கும் அரசுக்கும் கிடைத்த வெற்றிதான். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் காப்பர் அல்லாத வேறு ஓர் ஆலை அமைக்கப் பரிசீலனை செய்யப்படும்” என்றார்.