Published:Updated:

சென்னை மழை: சமூக வலைதளங்களில் பரவும் போலிப் புகைப்படங்கள்! - உஷார் மக்களே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`சென்னை மழை' - போலிப் புகைப்படங்கள்
`சென்னை மழை' - போலிப் புகைப்படங்கள்

``சென்னை மழை குறித்த போலிப் புகைப்படங்கள் பரவுவதால், வெளியூர்களில் இருக்கும் சென்னைவாசிகளின் உறவினர்கள் பலரும் பதற்றமடையக்கூடும்.’’

சென்னையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அதீத கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது. முக்கியச் சாலைகளில்கூட தண்ணீர் தேங்கி நின்றதைக் காண முடிந்தது. இதையடுத்து முக்கியச் சாலைகளிலிருந்த தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றியது சென்னை மாநகராட்சி. இருந்தும் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், மக்கள் பலரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இந்த நிலையில், `சென்னை மழை' என்று சொல்லி ஏராளமான போலிப் புகைப்படங்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.

எஸ்.ஆர்.சேகர் பகிர்ந்த போலிப் புகைப்படம்
எஸ்.ஆர்.சேகர் பகிர்ந்த போலிப் புகைப்படம்
Tamil News Today: `தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!'

பா.ஜ.க-வின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ``விடியல் ஆட்சியில் ஒரே நாளில் நீச்சல்குளமான சென்னை'' என்று பதிவிட்டு, மழைநீர் தேங்கி நிற்கும் பகுதியில் மக்கள் குடிநீருக்காக வரிசையில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். ஆனால், இந்தப் புகைப்படம் 2017-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது. எஸ்.ஆர்.சேகரைத் தொடர்ந்து பல பா.ஜ.க உறுப்பினர்களும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துவந்தனர். தொடர்ந்து தி.மு.க-வைச் சேர்ந்த பலரும், ``மழை பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போதுகூட, தவறான தகவல்களைப் பரப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறது பா.ஜ.க'' என்று பதிவிட்டுவருகின்றனர்.

2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டு, நம் விகடன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது வாட்ஸ்அப்பில் பரவிவருகிறது. அந்த வீடியோவை பகிரும் பலரும், ``2015-ம் ஆண்டைப்போலவே, தற்போதும் சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் மூழ்கிவிட்டது'' என்று பகிர்ந்துவருகின்றனர். அதேபோல `தத்தளிக்கும் சென்னை உயர் நீதிமன்றம்' என்று சொல்லி பழைய வீடியோ ஒன்றும் தற்போது வாட்ஸ்அப்பில் சுற்றிவருகிறது.

மேலும், 2015 வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களும், காணொலிகளும் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. வர்தா உள்ளிட்ட புயல்களின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் ஃபேஸ்புக் தளத்தில் சிலர் பதிவிட்டுவருகின்றனர்.

விகடன் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்
விகடன் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்

இதற்கிடையில், `சென்னை வெள்ளத்தை மோடி பார்வையிட்டார்' என்று எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றையும் சிலர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். 2015 வெள்ளத்தின்போதும் இதே எடிட் செய்யப்பட்ட போலிப் புகைப்படம் பரவியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சென்னை மழை’ எனப் பரப்பப்படும் போலி புகைப்படங்கள் குறித்து, ``மழையால் சென்னைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து மிக மோசமான பாதிப்பைச் சென்னை சந்தித்திருப்பதாகக் காட்டுகிறார்கள். இதனால், வெளியூர்களில் இருக்கும் சென்னைவாசிகளின் உறவினர்கள் பலரும் பதற்றமடையக்கூடும். தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க வேண்டுமானால், இது போன்று வரும் செய்திகளை யாரும் ஃபார்வர்டு செய்யாமல் இருக்க வேண்டும். யாரோ திட்டமிட்டு பழைய புகைப்படங்களைப் பரப்ப, அதை நம்பிப் பலரும் ஃபார்வர்டு செய்கிறோம். பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட பின்னரே அதை அடுத்தவர்களுக்கு அனுப்பவேண்டும்'' என்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர்.

சென்னை மழை - மெரினா கடற்கரை
சென்னை மழை - மெரினா கடற்கரை
ராகேஷ் பெ
மழை பெய்தாலே அஞ்ச வேண்டுமா... சென்னை மழை சொல்லும் செய்தி என்ன?

``அரசியல் கட்சிகள் சென்னை மழையைவைத்து, போலிச் செய்திகளைப் பரப்பி அரசியல் செய்கின்றனர். இதனால் மக்கள் குழம்பிப்போய் நிற்கிறார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும், மழை பாதிப்பால் தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிகளைச் செய்துதர வேண்டும்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு