Published:Updated:

பெல்லி... அழகியும் அரக்கனும்

பெல்லி
பிரீமியம் ஸ்டோரி
பெல்லி

புத்துயிர்ப்பு

பெல்லி... அழகியும் அரக்கனும்

புத்துயிர்ப்பு

Published:Updated:
பெல்லி
பிரீமியம் ஸ்டோரி
பெல்லி

வால்ட் டிஸ்னி தயாரிப்பில் எம்மா வாட்ஸன், பெல்லியாக நடித்து இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘பியூட்டி அண்டு தி பீஸ்ட்' பலத்த வரவேற்பைப் பெற்றது. இதே வால்ட் டிஸ்னி, இதே கதையை 1991-ம் ஆண்டு, அனிமேஷன் படமாக எடுத்து இதேபோன்ற வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஒரு கதையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது என்ன நிகழ்கிறது? கதை மாறுகிறதா? நாம் மாற்றினாலொழிய ஒரு கதையால் தானாக மாற முடியாது அல்லவா? அப்படியானால், மாறுவது கதையா அல்லது அதைச் சொல்லும் நாமா? இல்லை, இரண்டுமேவா?

‘பியூட்டி அண்டு தி பீஸ்ட்’ கதையின் வயது கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகள் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். வாய்வழிக்கதையாக மட்டுமே இருந்த இதற்கு முதன்முதலில் எழுத்து வடிவம் கொடுத்து பதிப்பித்தவர், பிரெஞ்சு எழுத்தாளரான காப்ரியல் சூசன். இவருடைய நூல் 1740-ம் ஆண்டு வெளிவந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கதையின்படி, செல்வசெழிப்புள்ள ஒரு குடும்பத்தில் இளைய குழந்தையாக பெல்லி பிறக்கிறாள். ஒருநாள் தந்தையின் கப்பல்கள் நடுக்கடலில் கவிழ்ந்துவிடுகின்றன. ஒன்று மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டது. அதையாவது மீட்போம் என்று அப்பா விரைகிறார். `வரும்போது உங்களுக்கு என்ன வாங்கி வரட்டும்' என்று தன் குழந்தைகளிடம் கேட்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்கிறார்கள். `அபூர்வ வகை ரோஜா பூ எதையேனும் காண நேர்ந்தால் கொண்டு வா அப்பா' என்கிறாள் பெல்லி.

பெல்லி
பெல்லி

கப்பலைக் கண்டுபிடித்துவிடுகிறார் அப்பா. ஆனால், அவர் கண்முன்னால் புயல் மூண்டு அதையும் கவிழ்த்துவிடுகிறது. எப்படியோ தப்பி, பாழடைந்த மாளிகை ஒன்றில் ஒதுங்குகிறார். புயல் ஓய்ந்து கிளம்பும்போது தோட்டத்தில் ஒரு ரோஜா மலர்ந்திருப்பதைக் கண்டு பெல்லிக்காக அதைப் பறித்துக்கொண்டு போகிறார். அது அரக்கனின் மாளிகை. அவர் பறித்தது அரக்கனின் ரோஜாவை. `என்ன துணிச்சல் இருந்தால் இப்படிச் செய்வாய்' என்று கோபத்தோடு அவரை சிறைபிடிக்கிறான் அரக்கன். அவருக்கு ஆறு குழந்தைகள் இருப்பதை அறிந்ததும், `சரி நீ போய் உன் குழந்தைகளில் ஒன்றை அனுப்பி வை' என்கிறான். சொல் பேச்சு கேட்கும் நல்ல பெண் பெல்லி மட்டும்தான் என்பதால் அவள் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரக்கனுக்குப் பெல்லியைப் பிடித்துவிடுகிறது. `என்னை மணந்து கொள்' என்று தினமும் அவளை நச்சரிக்கிறான். பல திருப்பங்களுக்குப் பிறகு அரக்கன், ஓர் இளவரசன் என்பது தெரியவருகிறது. இளவரசனின் சாபம் விலகுகிறது. இருவரும் இணைகிறார்கள்.

ழான் மேரி லெப்ரின்ஸ் என்பவர் 15 ஆண்டுகள் கழித்து இதே கதையை மீண்டும் எழுதினார். இதில் பெல்லி, ஓர் அரசருக்கும் தேவதைக்கும் குழந்தையாகப் பிறக்கிறார். வழக்கத்துக்கு விரோதமான இந்த உறவால் பெல்லி துயரங்களை அனுபவிக்கிறார். இன்னொருபக்கம், சபிக்கப்பட்ட ஓர் இளவரசன் அரக்கனாக மாறுகிறான். `உன் கடந்த காலம் குறித்து தெரிந்திராத ஒரு பெண் உன்னை அரக்கனாகவே ஏற்றுக் காதலித்து மணம் புரிந்துகொண்டால் உன் சாபம் விலகும்' என்று சொல்லப்படுகிறது. `அப்படியொரு பெண் கிடைக்கப் போவதில்லை' என்று விரக்தியோடு மாளிகையில் விழுந்துகிடக்கிறான் அரக்கன். ஆனால், அங்கு வந்து சேரும் பெல்லி நாளடைவில் அரக்கனை மீண்டும் இளவரசனாக மாற்றி, அவனையே மணந்துகொள்கிறாள்.

`ஒரேயொரு ரோஜா போதும் அப்பா' என்று கேட்ட எனக்கு அவர் ஏன் அரக்கனைப் பரிசளிக்கவேண்டும்?

பல்வேறு கிளைக் கதைகளோடு நாலாபக்கமும் விரியும் முதல் கதையைவிட, இரண்டாவது கதைக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. முதல் முறையாக விமர்சனபூர்வமாகப் பெல்லி அணுகப்பட்டதும் இந்தக் கதையில்தான். அழகிய பெல்லி - முரட்டுத்தனமான அரக்கன் என்னும் எதிரெதிர் பிம்பங்கள் காதலில் விழுவது ஒரு நிரந்தர படிமமாகவே கதைகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் மாறிப்போனது. ஆண் முரட்டுத்தனமாக நடந்துகொள்வான். அவனுக்குக் கோபம் மூள்வது இயல்பானது. கோபம் வந்தால் அவன் தனக்கு அருகில் இருப்பவர்களையும் தனக்கு நெருக்கமானவர்களையும் சேர்த்துத் தாக்குவான். காதல், நேசம், பரிவு, நிதானம், கருணை எதுவும் அவனுக்குப் புரியாது. இது அவன் தவறல்ல; அவன் இயல்பு அப்படி. இவ்வாறு அவன் படைக்கப்பட்டிருக்கிறான். அல்லது இப்படி மாறும்படி சபிக்கப்பட்டிருக்கிறான்.

ஓர் அரக்கனை மனிதனாக்குவது பெண்ணின் கடமை. அவள் எல்லா வகையிலும் அரக்கனுக்கு நேரெதிர் குணநலன்களைப் பெற்றவளாக இருக்க வேண்டும். அரக்கன் அருவருப்பூட்டும் வடிவில் இருக்கிறானா... அப்படியானால் பெல்லி ஆகச் சிறந்த அழகியாக இருக்க வேண்டும். அரக்கனின் புலன்களைத் தூண்டிவிடும் புற அழகு மட்டும் போதாது. அவனை நேசிக்கும் அளவுக்கு அவள் அகம் அழகியதாக, பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும். அரக்கன் வெளிப்படுத்தும் ஒரே உணர்வு, மூர்க்கத்தனம். பெல்லியோ அன்பும் பண்பும் நிறைந்தவள். அச்சமூட்டும் அரக்கனின் தோற்றத்தைக் கடந்து அவன் உள்ளத்தை நோக்கும் திறன் பெற்றவை அவள் கண்கள். அவனுடைய குத்திக்கிழிக்கும் விரல் நகங்களையும் கூர்மையான பற்களையும் தலையில் முளைத்துள்ள கொம்புகளையும் கண்டு அவள் அஞ்சி ஓடவில்லை. மாறாக, ஒரு சவாலாகக் கருதி அவனை மாற்ற உறுதிபூணுகிறாள். `அப்பா, அரக்கன் என்று தெரிந்தும் என்னை ஏன் அவனிடம் அனுப்பிவைக்கிறாய்?' என்று பெல்லி கேட்பதில்லை.

அது அவள் இயல்பல்ல. அரக்கனாக இருந்தால் என்ன? அப்பா அவனையல்லவா கை காட்டியிருக்கிறார்? என் எதிர்காலத்தை நானே எப்படி முடிவு செய்ய வேண்டும்? அதுவும் எனக்கான ஆண் துணையை நானே எப்படித் தேர்வு செய்துகொள்ள முடியும்? ஓர் அழகிய இளவரசனின் கரங்களைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் அடிக்கடி ரகசியமாகக் கனவு காண்பது உண்மைதான். அந்த இளவரசன் எப்படி இருப்பான், அவனுடனான என் வாழ்க்கை எப்படி அமையும் என்பதையெல்லாம்கூட நான் கற்பனை செய்துவைத்திருக்கிறேன்.

பெல்லி
பெல்லி

`பெல்லி, காட்டுக்கு மத்தியில் ஒரு மாளிகை இருக்கும். அங்கே உனக்கான ஒருவர் காத்திருக்கிறார்' என்று அப்பா சொன்னபோது, ஒருவேளை அப்பா பார்த்துவைத்திருக்கும் நபர் என் இளவரசனாக இருக்குமோ என்று மனம் துடித்தது உண்மை. ஆனால், நான் கண்டது அரக்கனை. அதிர்ந்துபோனேன். தன் கப்பலை இழந்த சோகத்தில் அப்பா என் கனவுக் கப்பலையும் கோபத்தோடு கவிழ்த்துப் போட்டுவிட்டாரா? இவனைத்தான் அவர் எனக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறாரா? `ஒரேயொரு ரோஜா போதும் அப்பா' என்று கேட்ட எனக்கு அவர் ஏன் அரக்கனைப் பரிசளிக்க வேண்டும்?

ஒரு கதைக்குள் கட்டுண்டு கிடக்கும் என்னாலேயே முட்டி மோதி இந்த மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறது என்றால், நிஜத்தில் வாழும் உங்களால் நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியாதா என்ன?

ஆனால், பெல்லி விரைவில் தன்னைத் தேற்றிக்கொண்டாள். இப்படியே கிடந்து வெம்பிக்கொண்டிருப்பதைவிட அரக்கனை மனிதனாக மாற்றுவது சுலபமாக இருக்கக் கூடும் அல்லவா? விதிக்கப்பட்டதை விரும்புவதுதானே ஒரு பெண்ணின் இயல்பு?

1991-ம் ஆண்டு, டிஸ்னியின் பெல்லி இப்படித்தான் இருந்தாள். ஆனால், பெல்லியாக வந்த எம்மா வாட்ஸனிடம் சில மாற்றங்கள் தென்படுகின்றன. இளம் வயதிலிருந்தே இந்த பெல்லிக்குப் புதிய இயந்திரங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் இருக்கிறது. எதிர்கால உலகை இயந்திரங்களே ஆளப்போகின்றன என்பது பெல்லிக்குத் தெரிந்திருக்கிறது. துணி துவைக்கும் இயந்திரம் ஒன்றை அவள் உருவாக்குகிறாள். ஆண்களைப் போலன்றி இயந்திரங்கள் பெண்களை வீட்டுப் பணிகளிலிருந்து விடுவிக்கின்றன என்பதை பெல்லி அறிவாள். அழுக்குத் துணிகளை அதற்குள் வீசியெறிந்துவிட்டு, புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு வாசிக்கிறாள்.

மீண்டும் ஆண்களைப் போலன்றி, நான் மிச்சம்பிடிக்கும் நேரம் என்னுடையது மட்டுமே என்று கருதாமல், படிக்கத் தெரியாத ஒரு சிறுமிக்கு எழுத்து சொல்லிக்கொடுக்கிறாள். தீய நோக்கம்கொண்ட ஒருவன் பெல்லியை ஓயாமல் சுற்றி வந்துகொண்டே இருக்கிறான். `என்னால் உன்னை ஏற்க முடியாது' என்று திடமாக மறுக்கிறாள் பெல்லி.

ஒருநாள் அப்பாவின் வேண்டுகோளை ஏற்று மாளிகைக்குச் செல்கிறாள். அரக்கனைக் கண்டவுடன் மாடியிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தோடு கிடைக்கும் துணிகளை இணைத்து கயிறொன்றை உருவாக்குகிறாள். ஆனால், தப்பமுடியவில்லை. பெல்லியால் ஈர்க்கப்படும் அரக்கன் ஒருநாள் தற்செயலாக அவளைத் தன் நூலகத்துக்கு அழைத்துச் செல்கிறான். வானளவு உயர்ந்து நிற்கும் புத்தக அலமாரிகளைக் கண்டு ஆச்சர்யத்தில் கண்களை விரிக்கும் பெல்லி, `நீ படிக்கவும் செய்வாயா' என்று அரக்கனிடம் கேட்கிறாள். `தான் இருப்பது சிறையல்ல, அரக்கன் அப்படி யொன்றும் மூர்க்கனல்ல' என்பது அவளுக்குச் சிறிது சிறிதாகப் புரிகிறது. அரக்கனும் அவளும் ஒரு மாலைப்பொழுதில் ஷேக்ஸ்பியர் குறித்து உரையாடுகிறார்கள்.

பெல்லி வெறும் அழகி மட்டுமல்ல, புத்திசாலியும்கூட என்பதை அரக்கன் உணர்கிறான். அரக்கனை மனிதனாக மாற்றும் நோக்கத்தோடு அல்ல, அவனை அரக்கனாகவே ஏற்று காதலிக்கத் தொடங்குகிறாள் பெல்லி. தோற்றத்தில் அரக்கனைப் போலிருக்கும் ஒருவன் உள்ளுக்குள்ளும் அப்படித்தான் இருந்தாக வேண்டும் என்று அவசியமில்லை என்பதை பெல்லி உணர்கிறாள். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு இருவரும் இணைகிறார்கள்.

பெண்ணிய நோக்கில் காணும்போது இந்த வடிவத்திலும்கூட சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்கிறார்கள் விமர்சகர்கள். சுயமாகச் சிந்திக்கக்கூடியவளாக, துணிச்சல் மிக்கவளாக இருந்தும் பெல்லியால் தன் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இயலவில்லை. தன்னைச் சிறைபிடித்த அரக்கனையே காதலிக்கும் நிலைக்கு அவள் தள்ளப்படுகிறாள். அப்பா - அரக்கன் இருவரையும் அவள் ‘புரிந்துகொண்டு' நடக்கவேண்டியிருக்கிறது. இளம் வயதில் பெல்லி ஒரு கண்டுபிடிப்பாளராக இருக்கிறாள் என்றாலும், பெண்களுக்கான இயந்திரம் ஒன்றையே அவளால் கண்டுபிடிக்க முடிகிறது.

ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் ஆதார முரணைத்தான் பெல்லியும் எதிர்கொள்கிறார். கால ஓட்டத்தில் அறிவியலும் தொழில்நுட்பமும் வளரும்போது, சிந்தனைகள் வளரும்போது பெல்லியையும் சில ஆரோக்கியமான மாற்றங்கள் தழுவிக்கொள்கின்றன. ஆனால், அதற்கு அவர் 4000 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

இதற்கே இத்தனை காலம் என்றால், அமைப் பின் அடிப்படையை எப்போது மாற்றுவது? `மலைக்காதீர்கள்' என்கிறார் பெல்லி.

ஒரு கதைக்குள் கட்டுண்டு கிடக்கும் என்னா லேயே முட்டி மோதி இந்த மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறது என்றால், நிஜத்தில் வாழும் உங்களால் நீங்கள் விரும்பியதைச் செய்ய முடியாதா என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism