Published:Updated:

மாத்தியோசி: அசோகர் மரம் நட்ட கதையும் ஆறு முறை வெட்டிய மரமும்!

போதி மரம்
பிரீமியம் ஸ்டோரி
News
போதி மரம்

புத்தர் காலத்துக்குப் பின் இதுவரை 6 முறை போதி மரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

‘அசோகர் சாலைகளில் மரங்களை நட்டார்.’

- இந்த வரியைப் படிக்காமல் யாரும் பள்ளிப் படிப்பைத் தாண்டியிருக்க முடியாது. சரி, அசோகர் ஏன் மரங்களை நட்டார்? இப்போது உள்ளதைப்போல அப்போதும் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடை உமிழும் தொழிற்சாலைகளும், வாகனங்களும் இருந்தனவா..? காட்டின் பரப்பளவு அதிகமாகவும் மக்கள் வசிக்கும் நாட்டின் பரப்பளவு குறைவாகவும் இருந்த அந்தச் சமயத்தில் ஏன் அசோகர் மரங்களை நட வேண்டும்?

இதற்கான விடை புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவில்தான் எனக்குக் கிடைத்தது. பீஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புத்த கயாவுக்குப் புறப்பட்டேன். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால், பேருந்து கிடைக்கவில்லை. காய்கறிகள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் ஏறினேன். என்னைப் போலவே, இன்னும் சிலரும் அந்த வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.

அதுவரை அமைதியாக இருந்த வானம் பொத்துக்கொண்டு ஊற்றத் தொடங்கியது. வட இந்தியாவில் மழையும் பனியும் மிகத் தீவிரமாக இருக்கும். பாதித் தூரம் வந்ததும் மழை விட்டுவிட்டது. சாலையோரம் இருந்த கடையில் தேநீருக்கு வண்டியை நிறுத்தினார்கள். அந்த நள்ளிரவு நேரத்திலும் ‘ஆலு சப்பாத்தியை’ சிலர் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் வண்டி கிளம்பியது. பாட்னாவுக்கும் புத்த கயாவுக்கும் சுமார் 100 கி.மீ தூரம். ஊர்ந்து ஊர்ந்து 5 மணி நேரத்தில் வந்து சேர்ந்தோம்.

மாத்தியோசி: அசோகர் மரம் நட்ட கதையும் ஆறு முறை வெட்டிய மரமும்!

புத்த கயாவுக்குள் நுழைந்தவுடன் புதிய நாட்டுக்குள் நுழைந்ததுபோல இருந்தது. ஊர் முழுக்கப் பளீர் என இருந்தது. அழுக்கடைந்த வறுமை கொண்ட பீஹார் மாநிலத்தின் முகம் மாறியிருந்தது. சாலைகள் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் இருந்தன.

சுற்றுலாத் தலங்களுக்கு உரிய வகையில் ஏராளமான விடுதிகள் இருந்தன. தேடிப்பிடித்து, ஓர் அறையில் சென்று படுத்த சில மணி நேரங்களில் புத்த மதத்தவர் பாடும் ‘இதயச் சூத்திரம்’ மெள்ள ஒலிக்கத் தொடங்கியது.

“ஒரு காலத்தில் புத்த விஹார்கள் நிறைந்திருந்தன. இதனால் அந்தப் பகுதிக்கு விஹார் என்று பெயர் உருவானது. காலப்போக்கில் அது பீஹார் என்று உருமாறிவிட்டது’’ என்று ஓஷோ சொல்லியதை நினைத்துக்கொண்டே தெருவில் இறங்கி நடந்தேன்.

மகாபோதி ஆலயத்தை நோக்கிச் செல்லும் வழி எங்கும் கடைகள். ஜப்பான், சீனா, திபெத், தாய்லாந்து… என வெளிநாட்டு மஞ்சள் முகங்கள்தான் அதிகம் தென்பட்டன. புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு வந்து செல்வது வாழ்நாளில் முக்கியக் கடமைகளில் ஒன்று.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெளிர் சிவப்பு, அடர் சிவப்பு… எனப் பல வண்ண ஆடைகள் அணிந்த புத்த துறவிகள் புன்னகை பூத்தபடி கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

மகா போதி ஆலயத்தில் புத்தர் தங்கத்தில் ஜொலித்தார். ஆலயத்தைக் காட்டிலும் போதி மரம் என்று அழைக்கப்படும் புத்த ஞானம் பெற்ற அரச மரத்தைச் சுற்றி ஏராளமான துறவிகள் தியானத்தில் அமர்ந்திருந்தார்கள்.

புத்தர் காலத்துக்குப் பின் இதுவரை 6 முறை போதி மரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

புத்த மதத்தின் மீது கோபம் கொண்ட மன்னன் ஒருவன் முதல் முறையாகப் போதி மரத்தை வெட்டி எறிந்திருக்கிறான். இப்படியெல்லாம் நடக்கும் எனத் தெரிந்து, கி.மு 288-ம் ஆண்டில் அசோகர் தன் மகள் சங்கமித்திரை மூலமாக, போதி மரத்தின் கிளைக் கன்றை, தமிழ்நாடு வழியாக இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கிளை மரத்திலிருந்து, கிளை கொண்டு வந்து மீண்டும், அந்த இடத்தில் வளர்த்தார்கள். இப்படியாக ஒவ்வொரு முறையும் வெட்ட மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் போதிமரம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

1950-ம் ஆண்டு உலகின் முக்கியமான இடங்களுக்குப் போதி மரத்தின் கிளைகள் அனுப்பப்பட்டன. அதில் ஒரு கிளை சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞானச் சபை (The Theosophical Society) வளாகத்தில் நடப்பட்டது. இப்போது, ஓங்கி வளர்ந்து நிற்கிறது.

புத்தர் ஏன் ஞானத்தைத் தேடி கயாவுக்கு வந்தார் என்ற கதைக்குள் தலைச்சுற்றிவிடும். அவ்வளவு புனைகதைகள். “நோயாளியைப் பார்த்தார், இறந்த உடலைப் பார்த்தார்” எனப் பல காரணங்கள் பள்ளி புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன. ஆனால், உண்மை அதுவல்ல. தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் உள்ளதைப்போல இரண்டு அரசுகளுக்கு ஏற்பட்ட தண்ணீர்ப் பிரச்னை. அதைப் பற்றி மற்றொரு முறை சொல்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2,500 ஆண்டுகளுக்கு முன்பு சித்தார்த்தன் ஞானம் பெற்று புத்தராகப் புத்தொளி பெற்ற மண்ணை முத்தமிட்டுச் சென்றார் ஒரு துறவி.

ஆலயத்தின் வளாகத்திலிருந்த மரத்தடியில் அமர்ந்தபோது, அருகில் ஒரு புத்த துறவி வந்து உட்கார்ந்தவர், “நீங்கள் தென்னிந்தியாவா?’’ என்று பேச்சைத் தொடங்கினார்.

சென்னை அடையாறில் உள்ள போதி மரம்...
சென்னை அடையாறில் உள்ள போதி மரம்...

“ஆம், தமிழ்நாடு; சென்னை” என்றோம். “புத்த மதம் செழித்து வளர்ந்த பூமியும் ஜென் புத்த மார்க்கத்தை உலகிற்குக் கொடுத்த போதி தர்மர் வாழ்ந்த காஞ்சிபுரத்துக்குப் பக்கத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். அப்படித்தானே!’’

சரளமான ஆங்கிலத்தில் பேசினார். துறவியாகும் முன்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்ததாக மட்டும் சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்டு,

மெல்லிய குரலில் உரையாடலைத் தொடர்ந்தார்.

“புத்தர் சொல்லிய வழியில் நடந்தால், இந்த உலகம் முழுக்க மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். பொறுமையும் சகிப்புத்தன்மையும் மறந்துவிட்ட மனிதர்களுக்குப் புத்தர் காட்டிய வழி கசக்கத்தானே செய்யும்’’ என்று சிரித்தவரிடம், “அசோகர் ஏன் மரங்களை நட்டார்?” என்று கேட்டேன்.

“புத்தர் மறைந்த பிறகு அவர் போதனைகள், திரிபீடகம் (மூன்று கூடைகள்) என்ற நூலில் தொகுக்கப்பட்டன. புத்த வழிகாட்டியவற்றில்

அட்ட சீலம் என்ற எண்வகை வழிகள் முக்கியமானவை...

1. நல்ல நம்பிக்கை: உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம்: சினத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்ல மொழி: பயனற்றதும், கடுமையானதும் பொய்யானதுமான சொற்களைக் கூறாதிருத்தல்.

4. நற்செய்கை: பிறரைத் துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறித் தவறாமல் இருத்தல். நன்மையான செயல்களைச் செய்தல்.

5. நல்வாழ்க்கை: நேர்மையான முறையில் வாழ்தல்.

6. நன்முயற்சி: தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி: துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம்: குறிக்கோளை அடைய மனம் ஒருவழிப்பட்டுச் சிந்தித்தல்.

இந்த எட்டுப் போதனைகளில் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் உள்ளது.

நற்செய்கை என்பதில்தான், சக உயிர்களுக்கும் கால்நடைகளுக்கும் உதவி செய்யும்பொருட்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாகப் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள், ஒரு மரத்தை நட்டு அதை ஐந்து ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் எனப் புத்தர் பெருமான் அருளியுள்ளார். ஒரு மனிதன் இந்த உலகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், அதற்காகப் பெரிய முயற்சிகள் செய்ய வேண்டியதில்லை. தன் அருகில் ஒரு மரத்தை நட்டு வளர்த்தாலே, அது உன்னதமான செயல். புத்தர் பிறந்ததும் மரத்தடியில்தான். அவருக்கு ஞானம் கிடைத்ததும் மரத்தடியில்தான். அவர் இவ்வுலகிலிருந்து விடை பெற்றதும் மரத்தடியில்தான். எனவேதான் மரம் நடுதல் புத்த மார்க்கத்தில் அறமாக இருக்கிறது. மரம் வளர்ப்பு அன்பின் அடையாளம். புத்தரையே மறந்து வரும் தேசத்தில் மரம் வளர்ப்பு மட்டும் எப்படி வளரும்?’’ என்று சிரித்தபடியே பேசிய துறவி மேலும் பேசத்தொடங்கினார்.

“கலிங்கத்துப் போரில் ரத்தக் கறைபடிந்திருந்த அசோகர், அகிம்சை வழியில் நடக்கப் புத்த மதத்துக்கு மாறினார். புத்தரின் கொள்கையை உலகம் முழுக்கப் பரப்ப வேண்டும் என்ற பேரார்வம் கொண்டிருந்தார். நாடு முழுக்க அன்னசத்திரம் கட்டினார். புத்த வழியில் மரங்களை நடத் திட்டமிட்டார். சாலையின் இரு பக்கங்களிலும் அந்த மரங்களை நட்டார். காரணம், அந்தக் காலத்தில் மனிதர்கள் நடைப்பயணமாகத்தான் சென்றார்கள். வசதியுள்ளவர்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் பயணித்தார்கள். மனிதர்களுக்கும் மாடு, குதிரைகளுக்கும் வெயில் கொடுமை தெரியாமல் இருக்கவே மரங்களை நட செய்தார்.

மரம் நடுவதை ஒரு இயக்கமாகவே அசோகர் செய்தார். உலகில் முதல் கால்நடை மருத்துவ மனையை உருவாக்கியவரும் அசோகர்தான்.

இவர் காலத்துக்குப் பிறகு, மரம் நடுதல் என்பது சடங்குபோல மாறிவிட்டது.

உங்களுக்குப் புத்தரையும் சக மனிதர்களையும் பிடிக்கும் என்றால், ஒரே ஒரு மரத்தையாவது நட்டு வளருங்கள். மரம் வளர்ப்பின் அவசியத்தையும் புத்த மத பொருளாதாரத்தைப் பற்றியும் ‘சிறியதே அழகானது’ (Small Is Beautiful ) நூலில் இ.எஃப். ஷூமாஸர் விரிவாக எழுதியுள்ளார். வாய்ப்பிருந்தால் படியுங்கள்; தெளியுங்கள்… மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த வயதான துறவியின் அன்பு வேண்டுகோள்” எனச் சொன்னவர் புத்த மரபுபடி இரு கரம் கூப்பி வணங்கிவிட்டு, போதி மரத்தை நோக்கி நடந்து சென்றார்.

‘பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்

பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்

பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்கு சமம்

பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்’

- என்ற விருட்ச ஆயுர்வேதத்தின் வரிகள் அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தன.