Published:Updated:

இதெல்லாம் ரொம்பத் தவறுங்க கொரோனா!

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

நல்லவளா, கெட்டவளா?

இதெல்லாம் ரொம்பத் தவறுங்க கொரோனா!

நல்லவளா, கெட்டவளா?

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

காயத்ரி சித்தார்த்

டியே கொரோனா... உன்னைத்தான். என்ன, விழிக்கிறாய்... `நான் பெண்ணென்று உன்னிடம் யார் சொன்னார்கள்?’ என்கிறாயா... எட்டு மாதங்களாக உலகம் முழுக்க இத்தனை பேர் ஆராய்ச்சி செய்தும், உன் குணமென்ன, நீ எப்போது என்ன செய்வாய், யாரிடம் சினப்பாய் யாரை சிநேகிப்பாய் என்று ஒன்றுமே புரிந்துகொள்ள முடியவில்லையென்றால்... நீ பெண்ணல்லாமல் வேறு யார்? பார்க்க பூ போல வேறு இருக்கிறாயே!

எனக்கு நினைவிருக்கிறது... சைனாக்காரர்களைப் பிடிக்காமல் நீ உலகம் சுற்றக் கிளம்பி இந்தியா வந்து சேர்ந்தபோது சகலமும் நின்றுபோனது. தினமும் வீட்டுக்கு பேப்பர் போடும் பையன்கள் போல... அதிகாலையில் கிளம்பிப் போய், நள்ளிரவில் ஓட்டைப் பிரிந்து இறங்கும் திருடன் போல... சத்தமில்லாமல் வீடு திரும்பும் என் கணவரின் முகத்தை நானும் பிள்ளைகளும் தெளிவாகப் பார்த்தது, முதல் லாக்டௌன் ஆரம்பமான அந்த நாளில்தான். அவரும் பிள்ளைகளும் 21 நாள்கள் வீட்டிலேயே இருந்ததுகூட ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், தப்பு என் மேல்தான். நான் மட்டும் பாவம் பார்த்து, வரிந்து கட்டிக்கொண்டு நாளொரு வடையும் பொழுதொரு பஜ்ஜியும் வேளைக்கு நாலு காபியுமாகச் செய்து கொடுக்காமல் இருந்திருந்தால்... இப்போது இவ்வளவு அவஸ்தை இல்லை.

அப்படியென்ன அவஸ்தை என்கிறாயா? என்னை நன்றாகப் பார்... எப்படிப் பெருத்துவிட்டேன். 6 மாதத்தில் 7 கிலோ அதிகரித்துவிட்டேன். அவர்களுக்கு சமைத்துக்கொடுத்து நீ எப்படிப் பெருத்தாய் என்று கேட்காதே.

இதெல்லாம் ரொம்பத் தவறுங்க கொரோனா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினமும் காலையில் இட்லி சுட்டால் தேசியக்கொடி போல, ரெட் சட்னி, ஒயிட் சட்னி, கிரீன் சட்னி என்று மூவண்ணத்தில் அரைக்க வேண்டியிருக்கிறது. எங்களுடைய பாரம்பர்ய பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான, முதல்நாள் குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்துத் திரும்பக் கொதிக்க வைத்து, மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சுண்ட வைத்துப் புழங்கும் பழக்கமே உன்னால் வழக்கொழிந்துவிட்டது. ஆளுக்கொரு கணினி, அலைபேசி என நாளெல்லாம் பழி கிடந்து சப்புக்கொட்டி சாப்பிட்டே நாக்கு நாலடி வளர்ந்துவிட்டதால், `இன்னிக்கும் அதே குழம்பென்றால் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று போர்க்கொடி தூக்குகிறார்கள். வேளாவேளைக்கு விதவிதமாகச் சமைத்துப் போட்டுவிட்டு, மிச்சம் மீதியைத் தூக்கிக் குப்பையிலா கொட்ட முடியும்!

இப்போது யோசித்தால், நான்தான் ரொம்பவும் மடச்சாம்பிராணி யாக இருந்துவிட்டேன் என்று தோன்றுகிறது. ஆனால், என் தோழி களெல்லாம் விவரமானவர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ரேஷ்மி இருக்கிறாளே.. அவள் லாக்டெளன் வந்த அன்றே க்ஷேத்ராடனம் கிளம்புபவள் போல சித்ரான்ன ரெடிமிக்ஸ் வகை களும் புளிக்காய்ச்சல், எள்ளுப் பொடி, கொள்ளுப் பொடி, தோசை மாவு எனத் தயாரித்து வைத்து நிம்மதியாக செல்போனும் வெப் சீரிஸும் ரிமோட்டுமாக செட்டிலாகிவிட்டாள். போதாக்குறைக்கு, திருப்பூரில் ஒரு கார்மென்ட்ஸில் ‘சமைக்க முடியாது, போடா’ என்றெழுதிய டி-ஷர்ட் வேறு ஆர்டர் கொடுத்திருக்கிறாளாம்

இன்னொருத்தி வினிதா, அவள் என்ன செய்தாள் தெரியுமா? பாவம் அவள் கட்சிக்காரர், ச்சே... கணவர் அப்படியென்ன கேட்டுவிட்டார் அவளிடம்? `ஏம்மா மீட்டிங்ல க்ளையன்ட் கிட்ட பேசிட்டிருக்கப்ப வந்து இந்த வெங்காயத்த உரிச்சுத்தாங்கன்னு நீட்டறயே... அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பார்’னுதான் கேட்டாராம். அரைமணி நேரம் கழித்து இவள்போய், `இந்தப் பாட்டில்ல இருக்கறது என்ன எண்ணெய்ங்க? வாசமே இல்ல...’ என்றபடி மூக்குக்கு நேராய் கோடாலித் தைலத்தை நீட்டியிருக்கிறாள். அவர் பதறியடித்து வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கற்பூரம், டெட்டால், ஃபினாயில், பெட்ரோல் என்று எல்லாவற்றையும் காண்பித்தும் `வாசமே தெரியல’ என்று சாதித்திருக்கிறாள். அப்புறமென்ன... உன் புண்ணியத்தில் அடுத்த 14 நாள்கள் ராஜபோக வாழ்க்கை தான். உட்கார்ந்த இடத்தில் டீயும் காபியும் வேளாவேளைக்கு சாப்பாடுமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை அவள் இனி வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டாள்.

ஆனால், ஒரு விஷயத்துக்காக உனக்கு நாங்கள் நன்றி சொல்லியே தீர வேண்டும். இத்தனை வருடங்களாக இல்லாமல் இந்த லாக்டௌனில்தான் நாங்கள் வீட்டிலேயே `பரோட்டா’ செய்யக் கற்றுக்கொண்டோம். முதலில் வறட்டி போலவும், அடுத்த முறை ரொட்டி போலவும் வந்தாலும் மூன்றாம் முறை கிட்டத்தட்ட பரோட்டோவை செய்தே காட்டிவிட்டோம். அதிலும் நாங்கள் செய்தது, ‘மைதா கெடுதல். கோதுமை நல்லது’ என்ற விழிப்புணர்வோடு கோதுமை மாவில் அரைலிட்டர் எண்ணெயும் வெண்ணெயும் குழைத்துப் பிசைந்த ஆரோக்கிய பரோட்டாவாக்கும். அதைச் செய்யாது போயிருந்தால், `லாக்டௌனில் வீட்டிலேயே பரோட்டா செய்யாத ஒரே இல்லத்தரசி' என்று வரலாறு என்னைப் பழித்திருக்கும்.

யூடியூபில் இத்தனை சமையல் சேனல்கள் இருப்பதே உன்னால்தான் தெரியவந்தது. என் தோழிகளும்கூட இப்போது விதவிதமாய் சேனல்களைத் தொடங்கியிருக்கிறார்கள். ரேஷ்மி’ஸ் சிக்கன்... ச்சே... கிச்சன், சத்யாவின் சமையலறை, அமலாவின் அடுப்பங்கரை, யம்மி மம்மி சமையல், மாமியாரின் சீக்ரெட் ரெசிப்பீஸ் என்று விதவிதமான பெயர்களில் தோழிகளின் யூடியூப் சேனல் லிங்க்குகள் வந்து குவிகின்றன. எல்லோரது சேனலுக்கும் சப்ஸ்கிரைப் செய்து வீடியோக்களுக்கு மாற்றி மாற்றி லைக் செய்து, கமென்ட் செய்து, மண்டை குழம்பிப் போய் வீடியோ போட்டவர்களுக்கே மீண்டும் ஷேர் செய்து... எனப் பெரும்பொழுது கழிகிறது.

இவற்றுக்கு நடுவில் திடீரென்று உத்வேகம் வந்து, நானும் யூடியூப் சேனலை தொடங்கியே விட்டேன். தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்களுக்கான ரெசிப்பீஸ் போட்டு கோலாகலமான திறப்புவிழா நடத்தத் திட்டம். அதற்காக, முதன்முதலாகப் பொரி உருண்டை செய்யப்போய் அது உருண்டே வராமல் அடம்பிடித்ததால், தட்டில் கொட்டி அழுத்தி துண்டுகள் போட்டு ‘பொரி சதுரம்’, `பொரி அறுங்கோணம்’ என்று ஏதோ ஒரு பெயரில் வெளியிடலாமென்று இருக்கிறேன். பேச்சிலர்களையும் கவரும்விதமாக, `க்வாரன்டீன் குக்கிங்’ என்று டிரெண்டியாக சேனலுக்கு பெயர் வைத்திருக்கிறேன். சமைக்கத் தெரிகிறதோ, இல்லையோ... வீடியோவில் சொல்வதற்கான ஸ்லோகம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று தோழிகள் சொன்னதால் இந்த மந்திர ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன்.

`உங்களுக்கு இது பிடிச்சிருந்தா... சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. மறக்காம, கீழ இருக்கற பெல் பட்டனை க்ளிக் பண்ணுங்க.'