
மூன்று வருடங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று வந்த ஆதீனத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
ஆன்மிகத்தில் ஞானப்பால், அரசியலில் ஜிகர்தண்டா- மதுரை ஆதீனம். ஆனால் இப்போது எந்தச் சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் சைலன்டாக இருக்கிறார். அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து அவரிடமிருந்து அறிக்கை வந்தபோதுதான் ‘என்னதான் ஆச்சு மதுரை ஆதினத்துக்கு?’ என்று விசாரிக்க ஆரம்பித்தேன்.
மூன்று வருடங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று வந்த ஆதீனத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் குறைத்துக்கொண்டார். கடந்த ஆண்டு இறுதியில் மடத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கொரோனா அபாயத்தால் வயதானவர்களைச் சந்திக்கக்கூடாது என்பதால் அவருக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் வி.ஐ.பிகள் உட்பட யாரும் அவரைச் சந்திக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இளைய ஆதீனத்தை நியமிக்க ஆதீனம் மேற்கொண்ட முயற்சிகளே அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தின.

தொடக்கத்தில், சேலத்தைச் சேர்ந்த சீடர் ஒருவரின் 10 வயது மகனை இளைய ஆதீனமாக அறிவித்தார். அப்போது அது சர்ச்சையானது. சில நாள்களில் அந்தச் சிறுவன் மடத்திலிருந்து விரட்டப்பட்டார். அதன்பிறகு, ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு மூத்த சீடரை இளைய ஆதீனமாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், நித்யானந்தாவை பிடதி ஆசிரமத்தில் சந்தித்துப் பேசினார், நித்யானந்தாவை இளைய ஆதினமாக நியமிக்கவும் அது சர்ச்சையாகி, நீதிமன்றம் வரை சென்றது. நித்தியானந்தாவுக்குப் பிறகு, திருவாவடுதுறை மடத்தில் பணியாற்றிய தம்பிரான் ஒருவரை அழைத்து வந்து இளைய ஆதீனமாக அறிவித்தார். ஆனால், அவர் கொஞ்சநாளில் சொல்லாமல் கிளம்பிவிட்டார். அதற்குப் பின்னால், பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் என்பவரை இளைய ஆதீனமாக நியமித்தார். திருநாவுக்கரசர் சைவத்திருமறை படிக்காதவர்; எந்த மடத்திலும் தம்பிரானாக இருந்த அனுபவம் இல்லாதவர்; அது மட்டுமல்லாமல் அவர் வெளிநாட்டில் சராசரி மனிதரைப்போல வலம் வந்தவர் என்று புகார்கள் கிளம்ப, அவரும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினார். அதற்குப்பிறகு திருவாவடுதுறையில் இருந்த சுந்தரமூர்த்தி தம்பிரானை கடந்த ஆண்டு முறைப்படி இளைய ஆதீனமாக அறிவித்தார். இதுவரை பிரச்னைகள் இல்லை. ஆனால் இதற்கு முன்னால் ஏற்பட்ட பிரச்னைகளால் ஆதீனம் தளர்ந்துவிட்டார் என்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் ஆதீனத்துக்குச் சொந்தமான 1,500 ஏக்கர் விவசாய நிலம் பக்தர் ஒருவருக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. அந்த பக்தர் தங்க, மடத்தின் ஒரு பகுதியையும் குத்தகைக்கு விட்டார்கள். ஆனால், அதை அவர் தங்கும் விடுதியாகவே நடத்தத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அந்தக் குத்தகைக் காரருக்கும் ஆதீனத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. சமீபத்தில் அந்தக் குத்தகைதாரர், மடத்தில் இருந்த விநாயகர் சிலையை எடுத்துச்சென்றுவிட்டார் என்று ஆதீனம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது.

இன்னொருபுறம் நித்யானந்தாவும் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தார், உச்சமாக, மடத்தின் அருகிலேயே நிலத்தை விலைக்கு வாங்கி ஆசிரமம் கட்டும் வேலையையும் தொடங்கினார் நித்யானந்தா. இதுவும் ஆதீனத்துக்கு பெரும் மனபாதிப்பை உருவாக்கியது. இந்தச்சூழலில் நித்யானந்தா மீதான வழக்குகளால் அவர் கைலாசாவுக்கு எஸ்கேப்பாகிவிட கொஞ்சம் நிம்மதியடைந்தார்.
ஆதீனத்தைத் தொடர்புகொண்டும் கிடைக்காததால், மடத்தின் வழக்கறிஞர் ஜெயச்சந்திரனிடம் பேசினேன்.
‘`சந்நிதானத்துக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லை என்பது உண்மைதான். சுவாசப் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துவருகிறார். ஊரடங்கால் அவர் பக்தர்களைச் சந்திக்கவில்லை. மற்றபடி நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் சந்நிதானம் கவனித்து வருகிறார். மடத்தின் கணக்குகளை சரி பார்க்கிறார். வழக்கமாக மடத்தில் நடக்கும் அன்றாடப்பணிகள், பூஜைகள் தடையில்லாமல் நடந்துவருகின்றன. இளைய ஆதீனம் பூஜைகளைச் செய்துவருகிறார். கொரோனா ஊரடங்கில் முழுமையான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சந்நிதானம் மக்களுக்கு அருளாசி வழங்க வருவார்’’ என்றார்.
ஊரடங்கு தளர்ந்த நிலையில் மதுரை ஆதீனம் ஊர் குலுங்க வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.