Published:Updated:

சவுதியில் பணிப்பெண் வேலை; தாயைத் தொடர்புகொள்ளக்கூட முடியாமல் தவித்த மகன்! -உதவிய எல்லை தாண்டிய அன்பு

மீட்கப்பட்ட சுமதி
மீட்கப்பட்ட சுமதி

மிகப்பெரிய பரப்பளவுகொண்ட ஒரு நாட்டில், எத்தனையோ லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்ற ஒரு தேசத்தில் ஒரு குறிப்பிட்ட பெண்மணி எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிவது அத்தனை சுலபமான பணி அல்ல.

``சவுதி அரேபியாவில் வீட்டு பணிப்பெண் வேலைக்காகச் சென்ற என் தாயாரைக் கடந்த மூன்று ஆண்டு காலமாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. என் தாயார் எங்கே இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார், அவர் இருக்கிறாரா இல்லையா என்று எதுவுமே தெரியாத நிலையில் நானும் எங்கள் குடும்பத்தாரும் மிகுந்த கவலையில் இருக்கிறோம். எத்தனையோ பேரைச் சந்தித்து எங்கள் தாயாரைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பிவைக்க ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள் என்று பலமுறை கேட்டுவிட்டோம். ஆனாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த முயற்சி எந்தவிதத்திலும் ஓரடிகூட நகராமல் அப்படியே நிற்கிறது. உங்களால் முடிந்ததைச் செய்து என் தாயார் சவுதி அரேபியாவில் பத்திரமாக இருக்கிறாரா என்பதையாவது அறிந்து சொல்ல முடியுமா?" ஓர் இளைஞரிடமிருந்து அழைப்பு வருகிறது ஃபிர்தோஸ் பாஷாவுக்கு.

அழைத்தவரின் பெயர் சரத்குமார். திருவண்ணாமலை மாவட்டத்தின் தண்டாரம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த வழவச்சனூர் என்ற சிறிய கிராமத்திலிருந்து அழைத்திருக்கிறார்.

சிக்கல் என்னவென்றால் சரத்குமார் என்ற அந்த இளைஞர் தொடர்புகொண்டது அமீரகத்தில் பணிபுரியும் மன்னார்குடியைச் சேர்ந்த ஃபிர்தோஸ் பாஷாவை. கொரோனா காலகட்டத்தில் ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்ப இந்தியத் தூதரகத்தோடு இணைந்து செயல்பட்ட சமூக ஆர்வலரான பாஷா, அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்தின் செயலாளர் மற்றும் அய்மான் அமைப்பின் சமூகநலச் செயலாளர். 'நடக்கவே முடியாது' என்று கைவிடப்பட்ட பலவற்றையும்கூட தனது விடா முயற்சியால் சாதித்திருப்பவர் பாஷா. அவருடைய தொடர்பு எண்ணைத்தான் யார் மூலமாகவோ பெற்றிருக்கிறார் சரத்குமார்.

தமிழகத்தில் இருப்பவருக்கு சவுதி அரேபியாவும் சரி, அமீரகமும் சரி ஒரே நாடுதானே? ஆகவேதான் நம்பிக்கையோடு சரத்குமார் பாஷாவை அணுகியிருந்திருக்கிறார்.

இன்னொரு நாட்டில், அதுவும் மிகப்பெரிய பரப்பளவுகொண்ட ஒரு நாட்டில் எத்தனையோ லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்ற ஒரு தேசத்தில் ஒரு குறிப்பிட்ட பெண்மணி எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிவது அத்தனை சுலபமான பணி அல்ல. மேலும், பாஷா இருப்பதோ அமீரகத்தில். தேடுதல் நடத்தப்பட வேண்டிய அண்டை நாடான சவுதி அரேபியாவில் நேரடியாகச் சென்று இந்தியத் தூதரகத்தை தொடர்புகொள்வதற்கு இந்தப் பெரும் தொற்றுக் காலகட்டத்தில் எந்த வாய்ப்புமே இல்லை என்கிற நிலை. ஆனாலும் தன் முயற்சியில் ஈடுபடத் தொடங்குகிறார்.

`சவுதி அரேபியாவில் பணிப் பெண்ணாகப் பணிபுரிவதற்கான ஏதேனும் அடையாள அட்டையோ பிற ஆவணங்களோ இருக்கிறதா?' என்று சரத்குமாரிடம் கேட்டபோது, 'கடவுச்சீட்டு ஒன்று தவிர்த்து வேறு எந்த ஆதாரமும் இல்லை' என்ற பதில் பாஷாவைக் கொஞ்சம் தயங்கச் செய்கிறது.

சுமதி
சுமதி

என்றாலும் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு அமீரகத்தில் இருக்கும் இந்தியத் தூதரகத்திலிருந்து தொடர்பு எண்ணைப் பெற்று, ரியாதில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரகத்தின் உயரதிகாரியைத் தொடர்புகொள்கிறார். அதன் பின்னர் அவரது அனுமதியோடு 'வாட்ஸ்அப்' வழியாகவும், தொலைபேசி வாயிலாகவும் அணுகுகிறார் அவர்.

கடவுச்சீட்டை அனுப்பிவைத்து, ``நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பணிப்பெண் வேலைக்கு வந்த சுமதி என்ற நடுத்தர வயதுப் பெண்மணியை எவ்வாறேனும் கண்டுபிடித்து தாயகத்துக்கு அனுப்ப முடியுமா?" என்று கேள்வி வைக்கிறார்.

வழக்கம்போலவே ஆரம்பத்தில் மந்தநிலையிலேயே பதில் கிடைக்கிறது. அமீரகமாக இருந்திருந்தால் நேரடியாகச் சென்று உரிய அதிகாரிகளைச் சந்தித்து, 'என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?' என்று கேட்கும் வாய்ப்பு இருந்திருக்கும்.

இருந்தாலும் தொடர்ந்து 'வாட்ஸ்அப்' வழியாக என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார் பாஷா. தொடர்ந்து, இந்தியத் தூதரக சவுதி அரேபியா அதிகாரிகளோடு தொடர்புகொண்டு தேடுதல் வேட்டை தொடங்குகிறது.

இந்தத் தேடுதல் என்பது கிட்டத்தட்ட பெருமணல் வெளியில் காணாமல்போன சிறு மோதிரத்தைத் தேடுவதுபோல மிகக் கடினமானது என்றபோதும் ரியாத் இந்தியத் தூதரகமும் கவனத்தோடு களத்தில் இறங்குகிறது.

ஒரு வார அவகாசத்துக்குள்ளாகவே சுமதி என்ற அந்தப் பெண், ரியாதில் அஜிஸியா என்ற இடத்தில் இருக்கும் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார் என்று அடையாளம் காட்டுகிறது இந்தியத் தூதரகம். இதுதான் மனம் தளராமல் முயற்சியை முன்னெடுத்த பாஷாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி

அதைத் தொடர்ந்து சுமதியின் மகனான சரத்குமாரிடம் பேசி அவரது தாயார் நலமாக இருப்பதைத் தெரியப்படுத்தினார் பாஷா. அந்தச் செய்தியே தனது தாய் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் அன்றாடம் மன உளைச்சலோடு வாழ்ந்துகொண்டிருந்த அந்த இளைஞருக்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது.

``எப்படியேனும் என் தாயார் சுமதியைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பி வைத்துவிட முடியுமா?" என்று கண்ணீரோடு அவர் வேண்டுகோள்வைக்கிறார்.

இதுவரை நடந்ததே பெரிய விஷயம். இனி அங்கிருந்து அவரைத் தாயகம் அழைத்துச் செல்வது என்றால் எந்த அளவுக்கு அது நடைமுறை சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், பணிப்பெண் வேலைக்குச் சென்றவரை, தாயகம் திருப்பி அனுப்ப வேண்டுமென்றால் எந்த இடத்துக்குப் பணிக்குச் சென்றிருக்கிறாரோ அந்தப் பணியிடத்தின் உரிமையாளர் தனக்குத் தடையேதும் இல்லை என்று சான்றிதழ் வழங்கினால் மட்டுமே தாயகம் செல்வது நடக்கும். அதாவது சுமதி பணிபுரியும் வீட்டின் உரிமையாளர் சுமதியைத் தாயகம் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்

'அது நடக்குமா?' என்று உறுதியாகச் சொல்ல இயலாது என்றாலும், பாஷா மீண்டும் இந்தியத் தூதரகத்தைத் தொலைபேசியில் அணுக, அவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்வதாக வாக்களிக்கிறார்கள். அந்த வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு பாஷா தனது 'ட்விட்டர்' மூலமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், ரியாதில் இருக்கும் இந்தியத் தூதுவருக்கும் சுமதி என்ற பெண் சவுதி அரேபியாவில் ரியாதிலிருந்து தாயகம் செல்ல இயலாமல் தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும் அவரை உடனே தாயகம் அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் கோரிக்கையை முன்வைக்கிறார்.

இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, இந்தியத் தூதரகம் பணியைத் தொடங்குகிறது. சுமதியின் வீட்டு உரிமையாளர் யார் என்பது கண்டறியப்பட்டு, அவர் மூலமாக சுமதியைத் தாயகம் திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் ரியாத் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு அரங்கேறுகின்றன.

'எல்லாம் சரியாகிவிட்டது இனி சுமதியைத் திருப்பி அனுப்புவது மட்டும்தான் மிச்சம்' என்று இந்திய தூதரகம் பாஷாவுக்குத் தகவல் தெரிவிக்கிறது.

ஆனால் சுமதி தாயகம் திரும்ப திட்டமிடப்பட்ட நாள்களில் கொரோனா காரணமாக விமான நிலையம் மூடப்படுகிறது. அதன் பின்னர் விமான நிலையம் திறந்து அவர் தாயகம் வர வழிகள் திறக்கும்போது சென்னைக்கு நேரடி விமானம் இல்லை என்பதால், ஜித்தாவிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானச் சீட்டை இந்தியத் தூதரகம் உறுதி செய்துவிட்டு, 'ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானச் சீட்டை எடுத்துவிடுவீர்களா?' என்று கேள்வி எழுப்புகிறது. உடனே பாஷா, சரத்குமாரிடம் தகவல் தெரிவித்து அதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கிறார்.

எல்லாம் சரியாகி, தாயகம் திரும்பிவிடுவார் என்ற மகிழ்ச்சியில் சரத்குமார் இருக்கும்போது, 'எக்ஸிட் விசா' என்று சொல்லப்படும் சவுதி அரேபியாவைவிட்டு வெளியேறுவதற்கான அனுமதியில் கையெழுத்திட வேண்டிய வீட்டு உரிமையாளர் வெளிநாடு சென்றுவிடுகிறார்.

சவுதியில் பணிப்பெண் வேலை; தாயைத் தொடர்புகொள்ளக்கூட முடியாமல் தவித்த மகன்! -உதவிய எல்லை தாண்டிய அன்பு

சவுதியில் சர்வதேச விமானப் பயணங்கள் தடைசெய்யப்பட்டதால் அவர் திரும்பி வருவதற்கான சூழல் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. இதனால் துவண்டு போய்விடுகிறார் சரத்குமார்.

என்றபோதும், இது போன்ற பொதுநலப் பணிகளில், எல்லாமே உடனடியாக நினைப்பதுபோல் நடந்துவிடுவதில்லை என்று அனுபவத்தைக் கற்றறிந்த பாஷா, சரத்குமாருக்கு ஆறுதல் கூறி விரைவில் அவர் தாயகம் திரும்ப தன்னால் ஆனதைச் செய்வேன் என்று உறுதியளித்திருக்கிறார்.

அதன் பின்னரும் இந்திய தூதரகத்திடம் தொடர்ச்சியாக 'வாட்ஸ்அப்' வழியாகப் பேசி, "என்ன நடக்கிறது... எப்போது அவர் தாயகம் செல்வார்?" என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் வெளிநாடு போயிருந்த வீட்டு உரிமையாளர் சவுதி அரேபியாவுக்குத் திரும்பிய உடனேயே, சுமதி சவுதி அரேபியாவைவிட்டு வெளியேறுவதற்கான படிவங்களில் கையெழுத்திடப்படுகிறது.

'எக்ஸிட் விசா' கிடைத்தவுடன் இந்தியத் தூதரகம் பாஷாவுக்கு தகவல் தொடர்பு செய்ய அதன் பின்னர் எல்லாம் வெகு வேகமாக நடந்து முடிந்திருக்கிறது. சென்னைக்கு நேரடியாக விமானம்‌ இல்லாததால் ஷார்ஜா வழியாக ஒரு வகையாக ஏப்ரல் 13-ம் தேதி புறப்பட்டு ஏப்ரல் 14-ம் தேதி சென்னை வந்து சேர்ந்திருக்கிறார் சுமதி.

நான்கு ஆண்டுக்காலமாகத் தன் குடும்பத்தாரோடு மட்டுமன்றி, புறவுலகத்துடனும் எந்தத் தொடர்பும் இல்லாமல் தாயகம் திரும்ப வருவோமா இல்லையா என்ற கேள்விக்குறியோடு, அன்றாடம் அழுது வீங்கிய கண்களோடு படுத்து உறங்கிய சுமதி என்ற அந்தப் பெண்மணி தாயகம் திரும்பியதும் நன்றியோடு பாஷாவைத் தொடர்புகொண்டிருக்கிறார்.

`தன்னைப்போலவே இன்னும் ஏராளமானோர் அடையாளம் தெரியாமல் அல்லல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர்களையும் காப்பாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்ததோடு தன் குடும்பத்தோடு தான் மீண்டும் இணைவதற்குக் காரணமான பாஷாவுக்கு நெகிழ்ந்து நன்றி கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக மன்னார்குடி ஃபிர்தோஸ் பாஷாவை நாம் தொடர்புகொண்டோம். இந்தச் சம்பவத்தை பற்றிக் கேட்டபோது, ``எல்லாப் புகழும் இறைவனுக்கே!" என்று தொடங்கியவர், "சவுதி இந்தியத் தூதரகமும் இந்திய வெளியுறவுத் துறையும் தனது கோரிக்கைக்கு செவிமடுத்து இத்தனை தூரம் இறங்கி செயல்படாமல் போயிருந்தால், ஒருவேளை சுமதி தாயகம் திரும்பியிருக்க வாய்ப்பே இருந்திருக்காது. இதில் எனது பங்கு என்பது தொடர்ச்சியாக இந்திய தூதரகத்திடம் என்ன நடக்கிறது என்பதை கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது மட்டும்தான். என்னைப் பொறுத்தவரையில் ஒரு சமூக ஊழியனாக நான் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இதைக் கருதுகிறேன். மனிதர்களுக்குள் எல்லோருக்குமே மதம், இனம் கடந்து புலம்பெயர்ந்து வசிக்கின்ற இடங்களில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முடிந்த வரையிலும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் அவர்களுக்கு நான் உதவிவந்திருக்கிறேன்.

தேவைப்படும்போதெல்லாம் நிதி உதவியும், பொருளுதவியும் செய்வதற்கு நல்ல நண்பர்களும், அமைப்பு சார்ந்த நண்பர்களும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். அமீரகத்தில் இயங்கும் இந்தியத் தூதரகமும், அதன் அதிகாரிகளும் எப்போதும் நான் வைக்கின்ற கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்துச் செயல்படுத்துகிறார்கள். அவர்கள் மூலமாகவே சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியத் தூதரகத்துக்கு என்னைப் பற்றித் தெரியவந்திருக்கிறது. அதன் காரணமாகவே நடக்கவே நடக்காது என்று நினைக்கின்ற காரியங்களெல்லாம் கூட மிக இலகுவாக நடந்து முடிந்து விடுகின்றன. இதற்கெல்லாம் அந்த இறைவனின் கருணையும் ஒரு காரணம் என்று நான் முழுமையாக நம்புகிறேன். சகோதரி சுமதி தன் குடும்பத்தோடு இணைந்துவிட்ட மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இதுபோல இன்னும் எத்தனையோ சகோதரிகள், சகோதரர்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான என்னுடைய சேவை தடையின்றித் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய பிராத்தனை" என்கிறார் பாஷா.

பாஷாவுக்கு வாழ்த்துகளைத் தெரியப்படுத்தி விடைபெற்றோம்!

- ஆசிப் மீரான்

அடுத்த கட்டுரைக்கு