Published:Updated:

எல்லா கோட்டையும் அழி... ஃபர்ஸ்ட்லருந்து சாப்பிடுறேன்!

- வனத்துறைக்கு ‘தண்ணி’ காட்டிய ரிவால்டோ!

பிரீமியம் ஸ்டோரி

மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண் யானை ஒன்று பல ஆண்டுகளாகவே சுற்றிவருகிறது. உள்ளூர் மக்களிடமும், சுற்றுலாப் பயணிகளிடமும் நட்புடன் பழகும் இந்த யானைக்கு `ரிவால்டோ’ என்று பெயரிட்டு, பலரும் உணவு தருவது வழக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூச்சுவிட சிரமப்பட்டுவருகிறது ரிவால்டோ.

இந்த யானையைத் தெப்பக்காட்டிலுள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்கு பிடித்துச் சென்று பராமரிக்கத் திட்டமிட்டது வனத்துறை. மூச்சுத்திணறல் பிரச்னை இருப்பதால், மயக்க ஊசி செலுத்தி பிடித்தால் யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதிய வனத் துறையினர், ரிவால்டோவுக்கு பிடித்தமான உணவு களை வழிநெடுக கொடுத்து, 15 கிலோமீட்டர் தூரம் நடக்கவைத்தே அழைத்துச் செல்லலாம் என்று சமயோசிதமாகத் திட்டமிட்டனர். அதன்படி சில நாள்களுக்கு முன்பு யானையை அழைத்துவரும் நடைப்பயணமும் தொடங்கியது.

எல்லா கோட்டையும் அழி... ஃபர்ஸ்ட்லருந்து சாப்பிடுறேன்!

ரிவால்டோவுக்கு பிடித்தமான வாழைத்தார், கரும்பு, அன்னாசிப்பழம், தர்பூசணி உள்ளிட்டவற்றை மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து யானையின் முன்னால் வீசினர். ரிவால்டோவும் பரவசத்துடன் இவற்றையெல்லாம் சுவைத்தபடியே வனத்துறையினரைப் பின்தொடர்ந்து மெல்ல நடக்கத் தொடங்கியது. இரவு பகலாக சுமார் இரண்டு நாள்களுக்கும் மேலாக யானையை மெதுவாக அழைத்துவந்தனர் வனத்துறையினர். “மயக்க ஊசியோ, கும்கி யானைகளோ இல்லாமல் ஒரு காட்டுயானையை இரண்டு நாள்களுக்கும் மேலாகக் கட்டுக்குள் வைத்திருப்பது நாட்டிலேயே இதுதான் முதன்முறை...” என்று ஆஹா ஓஹோ எனப் பலரும் வனத்துறையை மெச்சினர். இப்படியாக வயிறார சாப்பிட்டுக்கொண்டே 9 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து மரவகண்டி அணைக்கரையோரம் மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்தது ரிவால்டோ. வனத்துறையினரும் சற்றே ஓய்வெடுக்க நினைத்து, சிறிது நேரம் கண் அசந்தனர். மீண்டும் எழுந்து பார்த்தால் ரிவால்டோவைக் காணவில்லை. பதறிப்போன வனத்துறையினர், அக்கம் பக்கம் எங்கு தேடியும் யானை கிடைக்கவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு யானை ஓர் இடத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தால், முதல்நாள் பயணத்தைத் தொடங்கிய இடத்திலேயே, தும்பிக்கையை உற்சாகமாக ஆட்டியபடி நின்றுகொண்டிருந்தது ரிவால்டோ.

எல்லா கோட்டையும் அழி... ஃபர்ஸ்ட்லருந்து சாப்பிடுறேன்!

“கோட்டெல்லாம் அழி... ஃபர்ஸ்ட்லருந்து சாப்பிடுறேன்” என்ற புரோட்டா சூரி காமெடி கணக்காக, தும்பிக்கையை நீட்டிய யானை செல்லமாகப் பிளிறியபடியே உணவுகளைக் கேட்டது... “மூணு நாள், 50 பேர் சேர்ந்து ஒன்பது கிலோமீட்டர் தூரத்தைக் கஷ்டப்பட்டு நடக்கவெச்சு கூட்டிட்டுப்போனோம். ஒரு மணி நேரத்துல திரும்பவும் அதே இடத்துக்கு ரிட்டர்ன் வந்துடுச்சு. ஒரு லோடு வண்டி பழமும் கரும்பும் காலியானதுதான் மிச்சம்” என்று புலம்பிய வனத்துறையினர் தற்காலிகமாக ரிவால்டோவை முகாமுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டிருக்கிறார்களாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு