Election bannerElection banner
Published:Updated:

இல்லத்தரசிகளுக்கு ரூ.1,500, வருடத்துக்கு ஆறு சிலிண்டர்... - என்ன நினைக்கிறார்கள் ஹோம் மேக்கர்ஸ்?

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

பெண்களைப் பொறுத்தவரை கடன் என்பது மனச் சுமை. இல்லாமல் இருந்தால்கூட நிம்மதியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அது வீடோ, நாடோ...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எப்போதும் என் அம்மாவுக்கும், எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் செல்லம்மாவுக்கும் ஓர் அலைவரிசை ஒத்துப்போகும். சமயத்தில் என்னைத் துரத்திவிட்டுவிட்டு, வேலைகளையெல்லாம் மறந்து மணிக்கணக்கில் ஊர், உலக விஷயங்கள் அனைத்தையும் பேசுவார்கள். `உண்மையிலேயே என்னையும் சேர்த்துக்கங்க... ஒப்புக்குச் சப்பாணியா இருக்கேன்’ என்று சொன்னால்கூட அவர்களுக்கு என்னுடைய ஆர்வம் பிடிபடுவதில்லை.

வழக்கமாக காலை 7:00 மணிக்கு வரும் செல்லம்மா இன்று 6:35 மணிக்கெல்லாம் வந்து கதவைத் தட்டுகிறார். அம்மாவும் சொல்லிவைத்ததுபோல, அவர் வரவுக்காகவே காத்திருந்தவராக இரு கப் காபியுடன் வாசற்படியில் வந்து அமர்ந்தபடி, ``என்ன செல்லம்மா... இவ்ளோ சீக்கிரம்?’’ என்றபடி பார்க்க, அவரோ, ``எனக்குத்தானேம்மா காபி?’’ என்று அம்மா அமர்ந்திருக்கும் படிக்குக் கீழ்ப் படியில் சாய்ந்தபடி அமர்கிறார். `சரி... நம்மைச் சேர்த்துக்கத்தான் மாட்டாங்க. கவனிக்காதது மாதிரி அவங்க பேசுறதையாவது கேட்டுக்கொள்வோம்’ என போனில் எதையோ ஸ்க்ரால் செய்தபடி அவர்களை கவனிக்கத் தொடங்கினேன்.

இல்லத்தரசிகளுக்கு ரூ.1,500, வருடத்துக்கு ஆறு சிலிண்டர்... - என்ன நினைக்கிறார்கள் ஹோம் மேக்கர்ஸ்?
representative image

``யம்மா, கேட்டியா..., வருசத்துக்கு ஆறு சிலிண்டர் ஃப்ரீயாம். வழக்கமா நீ 10 சிலிண்டர் வாங்குவே... இனி நாலு வாங்கினாப் போதுமில்ல? எனக்கெல்லாம் பிரச்னையே இல்லை. இந்த ஆறே அல்வா மாதிரி...’’ என முகம் மலரச் சிரித்தார் செல்லம்மா.

அம்மா அதற்கும் மேலே போய், ``எல்லாருக்கும் 1,500 ரூவா தர்றாங்களாம்... எனக்குமா தருவாங்க?’’ என மேற்படி வந்த செய்திகளை ஊர்ஜிதம் செய்யக் காத்திருந்தார். செல்லம்மாவுக்குச் சிரிப்பு வந்தது. ``ஏம்மா... இந்த 1,500 ரூவாயவெச்சு நீ என்ன வாடகையா கட்டப் போறே... உனக்கெல்லாம் கொடுத்தா நாடு என்ன ஆகுறது... ஏற்கெனவே நம்ம நாட்டு பேர்ல 5 லட்சம் கோடி ரூவாய்க்கும் மேல கடன் இருக்காம். இப்ப உனக்கெதுக்கு காசுன்றேன்?” எனக் கிண்டலாகக் கேட்டார்.

``இதையேதான் உயிரோட இருந்தப்ப உங்கய்யாவும் கேப்பாரு... `உனக்கெதுக்கு காசு?’ன்னு. அப்புறம் பையன் கேட்க ஆரம்பிச்சான். இப்ப நீ கேக்குறே… ஏன், வீட்ல இருக்கவங்களுக்கு செலவே இருக்காதா?’’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார். செல்லம்மாவுக்கு சிரிப்புத் தாங்கவில்லை. “எம்மா... எனக்கு காசு கொடுத்தாலே எங்க வூட்டுக்காரன் குடிக்கத்தான் அதைச் செலவழிப்பான்னு அவங்களுக்கே தெரியும். இதுல உன்கிட்ட கொடுத்தா எப்படி வசூல் பண்ணணும்னு அவங்களுக்குத் தெரியாதா? ஏற்கெனவே பெட்ரோல் விலை அவசர நம்பர் மாதிரி நூறைத் தொடப்போகுதாம். இன்னும் விலை ஏறுனா உனக்கு சாப்பாடு இறங்குமா? அதான் சொன்னேன்... “ஆமா… அந்த காபி பொடி வாங்குறப்போ கொஞ்சம் சிக்கிரியை கலந்துதான் வாங்கேன்... சப்புன்னு இருக்கும்மா…’’ என அம்மாவின் காபியையும் சேர்த்து ஒரு வாங்கு வாங்கிக்கொண்டு தொடர்ந்துகொண்டிருந்தார்.

இங்கு யாருக்கும் எதுவும் தெரியாமல் இல்லை. ஆனால், தெரிந்தாலும் தன் வேலையை மட்டும் பார்க்கும்படி பழக்கிவிடப்பட்டிருக்கிறார்கள். அது, `கொடுக்கிறதை வெச்சுக்க... கேள்வி கேட்காதே!’ என்பதுபோலத்தான் இருக்கிறது. முதலில் தேர்தல் வாக்குறுதிகளை இவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் நாம் பேசிக்கொண்டிருப்பதே நையாண்டித்தனமான ஒன்றாகத்தான் தோன்றுகிறது. இதில் , இந்த வாக்குறுதி எங்கிருந்து பிறந்தது, யாருக்கு உரிமை என்பதுதான் இப்போது மிக அதிகமாக வைரலாகிக்கொண்டிருக்கும் பேச்சு. கிட்டத்தட்ட இது ஒரு மடைமாற்றும் யுக்தியாகவே இருக்கிறது. `இப்போ யார் சொன்னா என்ன... முதல்ல இந்த 1,500 ரூபாய் எதற்கு... இப்போ யார் இதைக் கேட்டா?’ என்பதுதான் பொதுக்குரலாக முதலில் எழுந்திருக்க வேண்டும்.

`மீனை வாங்கித் தருவதைவிட, மீன் பிடிக்கும் வித்தையைக் கற்று தருவது நல்லது’ என்று ஒரு பழமொழியைச் சொல்வார்கள். அறிக்கை என்பது அப்படியானதாக அமைய வேண்டும். ஏதோ மீனைப் பிடிக்க புழுவைக் காட்டும் கதையாக எங்களுக்கே ஆப்பாக அது மாறக் கூடாது. அரசிடம் பணமே இல்லாத நிலையில், இந்தப் பரிவர்த்தனைக்கு அரசிடம் எதாவது வழி இருக்கிறதா என்பது பற்றி அரசு அது குறித்து ஓர் அறிவிப்பையும் அறிவித்திருந்தால் மக்கள் பணம், மக்களுக்காகச் செலவிடப்படுவதில் எங்களுக்கும் ஓர் அறிவுறுத்தல் இருக்கும். பெண்களைப் பொறுத்தவரை கடன் என்பது மனச் சுமை. இல்லாமல் இருந்தால்கூட நிம்மதியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். அது வீடோ, நாடோ... சுமக்கப்போவது மக்கள்தான் எனும்போது இந்த வாக்குறுதி, என் வீட்டு பட்ஜெட்டில் மாதம் 1,500 ரூபாயை அரசுக்குக் கொடுத்து, பின் அதையே என் உரிமைப் பணம் எனும் வகையில் பெறுவது நகைப்பாகவே தோன்றுகிறது. முதலில் இந்தத் திட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் நாடுகளில் இருப்பதுதான்.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

ஆனால், நம் நாட்டில் இது சாத்தியமே இல்லை என்பது பொதுப்படையாகவே தெரிகிறது. அப்படியிருக்க, மய்யத்தில் உருவாகி, பின் திராவிடத்தில் உள்வாங்கப்பட்டு, இப்போது அறிக்கையாக மாறியதாகப் பலரும் சொல்லும் இந்த அறிக்கைக்கு உரிமை கொண்டாடுவதே அபத்தமானதுதான். ஒரே மாநிலத்திலிருந்து எடுக்கப்பட்டாலும் சரி... கண்டம் தாண்டி கிடைக்கப் பெற்றாலும் சரி... இது இந்தியாவில் உருவான திட்டம் அல்ல என்பதும், முதலில் இங்கு பொருந்தாத திட்டம் என்பதும்தான் பெரும்பாலானவர்களின் குமுறலாக இருக்கிறது. நான் இதைச் சொல்வதால் எந்தக் கட்சியின் மீதும் விருப்போ, வெறுப்போ எனக்கில்லை. இதைப் பல பொருளாதார ஆய்வாளர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

 திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கை

ஒரு பெண்ணுக்கு, குறிப்பாக `இல்லத்தரசி’ என அரசு சொல்லும் அடைமொழிக்குள் யார் வருவார்கள் என்பதுகூட உறுதியானது இல்லை. அப்படி அனைவருக்கும் அள்ளிவீசும் நிலையிலும் நம் நிலைமை இல்லை. உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் கேட்பாரின்றி அப்படியே இருக்க, பெண்களுக்குச் சன்மானம் வழங்க யாருக்கும்கூட அவசியம் இல்லை. எந்த ஓர் ஆணுக்கும் இப்படிச் சன்மானங்களை இவர்கள் அறிவிப்பார்களா எனக் கேட்டால், `ஆண்கள் சம்பாதிக்கும் நிலையில் இருப்பதால், அவர்களுக்கு அவசியப்படாது’ எனச் சொல்வார்கள். அப்படி அரசின் ஊக்கத்தொகை, உரிமைத்தொகை, சம்பளம் என இலவச யுக்திகளை நிறுத்திவிட்டு ஏன் இங்கு பெண்களை பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தமாக உயர்த்த முடியவில்லை என யோசிக்கத் தொடங்க வேண்டும். கம்யூனிஸ்ட் நாடுகளைப் போன்று இங்கு வீதிக்கு ஒரு பொது சமுதாயக்கூடம், சமையல் என்பதெல்லாம் சாத்தியமா? அப்படி ஏதேனும் அமைக்க முடிந்தால், வெறும் சமைப்பதை மட்டும் முழு நேர வேலையாகக் கொண்ட பல இல்லத்தரசிகளுக்கு பெரிய அளவில் நேரமும் மனமும் விரிவாகும்.

அப்படி சமுதாயக்கூடம் உருவாக்கப்பட்டால் பொருள்களில்கூட ஏற்றத் தாழ்வுகள் குறையும் . பத்தாயிரம் சம்பாதிப்பவரும், ஒரு லட்சம் சம்பாதிப்பவரும் ஒரே உணவை உண்ணும் அளவுக்கு எல்லாவற்றிலும் மாற்றங்கள் உருவாகும். ஆர்கானிக் ஒரு விலை, ஏற்றுமதி செய்யப்பட்டது ஒரு விலை, விதையற்றது ஒரு விலை எனப் பல பாகுபாடு இங்கு பொருளாதார ஏற்றத் தாழ்வால்தானே உருவானது? அப்படி ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் சரிசெய்ய முடிந்தால் மட்டுமே உங்கள் உபரித்தொகை எல்லாம் எங்களுக்கு ஏற்பாகும், இல்லையேல், நிச்சயம் கவர்ச்சி வித்தை மட்டுமே இது. எதுவும் சாத்தியப்படாத, சாதிய வெறிகொண்ட நிலைமை நிலவும் சூழலில், `இது எங்கள் பணம்... அதை எங்களுக்குத் தர அவசியமில்லை. எங்கள் ஓட்டுக்கு விலை இல்லை’ என்பதை மட்டுமே அழுத்திச் சொல்ல முடிகிறது. அது செல்லம்மாவோ... என் அம்மாவோ… இருவரின் முடிவும் அதுவாகவே இருந்துகொண்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு